Store
  Store
  Store
  Store
  Store
  Store

தமிழன் இனி திருவோடுதான் எடுக்க வேண்டும்


  மாணிக்கத்துக்கு மனசே சரியில்லை அஞ்சி வருஷமா நாத்து பறிக்க ஆளில்ல கரும்பு வெட்ட நாதியில்லைன்னு கிடந்தோம் இனியாவது கொஞ்சம் நிம்மதியா மூச்சி விடலாம்ன்னா அதுவும் முடியாது போலிருக்கேன்னு விசாரப்பட்டாரு

 காலங்காத்தால சுட்டக்கத்திக்கா மாதிரி மூஞ்சிக்கிடந்தா பொண்டாட்டி கண்டு பிடிக்க மாட்டாளா என்ன?

என்ன இப்போ உங்களுக்கு ஆயிபோச்சி விடிஞ்சும் விடியாம எறுமைச்சாணியை மோந்தவராட்டம் இருக்கீங்க என்னவா இருந்தாலும் சொல்லிடுங்க

 உள்ளேயே வச்சி அமுக்கி கிட்டா நெஞ்சு வெடிச்சிப் போகும் புள்ளக்குட்டிங்களை காப்பாத்த வேறு நாதி யாரு இருக்கா? அப்படின்னு கேட்டப்பிறகும் பதிலே பேசாமல் சாவடியில் வந்து உட்கார்ந்தார்

இவருக்கு முன்பே தலையில் துண்டு போட்டுக்கிட்டு காதோரமா சொருகி இருந்த பீடியை பற்ற வைத்து கொண்டு ராசமணியும் காத்தவராயனும் அங்கு இருந்தார்கள்

 மாணிக்கத்தை கண்டவுடன் என்ன மச்சான் கரும்பு வெட்டி ரோட்டுக்கரையில அட்டிப் போட்ட மாதிரியே கிடக்குது இன்னும் மில்லுக்கு அனுப்பலியா என்று காத்தவராயன் கேட்டார்

அட நீங்க ஒண்ணு மாமா வயித்தெரிச்சலை கிளப்புரீங்க கால்கடுக்க காத்திருந்து கட்டிங் ஆர்டரு வாங்கி நாயா பேயா அலைஞ்சி கூலிக்கு ஆள்பிடிச்சி வெட்டி கரைசேத்தா ஏத்திகிட்டு போயி மில்லுல சேர்க்க டிராய்ட்டர்காரன் வரலை இப்போ அப்போன்னு இழுத்தடிக்கிறான் என்ற மாணிக்கம் தானும் ஒரு பீடியை எடுத்து பற வைத்தார்

நம்ம கதைதான் கெட்டுப்போயி எத்தனையோ காலமாச்சே மண்ணை நம்பி வாழுரவன் பொழைப்பைத்தான் மண்ணுத்தின்ன விட்டுற்றாங்களே அதையேன் பேசி காலையில மனசக் கெடுக்குறீங்க என்று சொன்ன ராசாமணி 


காத்தவராயனை பார்த்து போற போக்க பார்த்தா நாம இனிமே வயலுக்கு போயி வேகாத வெயிலில் பாடுபட வேண்டாம்ன்னு தோணுது எல்லாமே இலசமா கிடைக்க பேகுதே அதைச் சொன்னேன் என்றார்

 மாணிக்கத்துக்கு சுரீரென்று கோபம் வந்தது சும்மா கிண்டல் பண்ணாதீங்க மணியண்ணே! இப்பக் கொடுத்துகிட்டு இருக்கிற இலவசத்தில எல்லாமே குட்டிச்சுவரா கெடக்கு 

இன்னும் என்னன்னா வருசையா இலவசம் வந்து கிட்டே இருக்கு இப்படியே போன உழைக்க நினைக்கிறவன் தூக்கில தொங்க வேண்டியதுதான் என்று படபடத்தார்

நீங்க சொல்லுறது நல்ல கதையா இருக்கே மலிவா அரிசிக் கொடுத்தா அது தப்பா?

கூறை வூடு மழை வந்தா ஒண்டிப்படுக்க கூட இடமில்ல  அத்தனையும் ஒழுகுதுன்னு அழுதவனுக்கு மச்சுவூடா கட்டிக் கொடுத்தா அது தப்பா?

 போனாப் போகுது வூட்டுக்குள்ளாற கிடந்து மூச்சு முட்டி சாகாம பராக்கா டி வி பாக்கட்டும்ன்னு கொடுத்தா அது தப்பா? ராசாமணி கிண்டலின் உச்சத்துக்கு போனார்

 அட சும்மா இருப்பா மணி மச்சான் வருத்தப்டுறதிலும் அர்த்தம் இருக்கு ஏழை பாழைங்களுக்கு வூடு கட்டி கொடுக்கிறது நல்ல காரியம்தான் யாரும் இல்லைன்னு சொல்லயில்ல
ஆனா இவுங்க செய்யுறது என்ன வூடு கட்ட 75 ஆயிரமோ ஒரு லச்சமோ தாராங்க அதிகாரிங்க கட்சிக்காரங்கன்னு வெட்டிப்போக கைக்கு வந்து சேர்றதை வைச்சி முழுசா 50 மூட்டை சிமெண்ட் வாங்க முடியாது என்றார் காத்தவராயன்

 சிமிண்ட் மூட்டையை விடுங்க மாமா அந்தப் பணத்த வைச்சி கொத்தனார் கூலி கொடுக்க முடியுமா?

 இவுங்க தர்ற பணத்துக்கு ஆசைப்பட்டு வூடு கட்ட ஆறம்பிச்சா  வூட்டுவேலை முடியிறதுக்குள்ள மூச்சித் திணறிப் போகும் கம்பிவெலை செங்கல்லு வெலை மணலு வெலையெல்லாம் நினைச்சிப்பாக்கவே முடியலை என்ற மாணிக்கத்தை உற்றுப்பார்த்த ராசாமணி நமட்டுச்சிரிப்பு சிரித்து

 மணல் யாவாரம் செய்யுற செங்கல் சூளை வைச்சிருக்கிற எங்க கட்சிக்காரங்க எப்படி பொழைப்பை நடத்திறது நாலு இளிச்சவாயன் கிடைச்சாத்தான் மஞ்சக் குளிக்க முடியும் என்றார்

வாஸ்த்தவம்தான் 2 ரூபாய்க்கு வித்த செங்கல் இப்போ 7 ரூபாய் இப்படியே நாடு போனா ஒண்ணும் தாக்கு பிடிக்கமுடியாது என்ற மாணிக்கம் மீண்டும் தொடர்ந்தார்

இந்தக் கண்ராவியெல்லாம் முடிச்சிடலாம்ன்னு பாத்தா எதுவும் நடக்காது போல இன்னைக்கு புதுசா ஒரு பூதம் கிளம்பியிருக்கே

ஆளுக்கொரு ஆடு தலைக்கொரு மாடு தர்ராங்களாம் கொடுமக் கொடுமன்னு கோயிலுக்கு போனா அங்க பத்துக் கொடும தலைவிச்சிப் போட்டு ஆடியக் கதையாயிடுச்சி என்று முடித்தார்

  ஆத்தாடி அம்மோவ் தலைக்கு நாலு ஆடு கொடுத்தா மேச்சலுக்கு எங்கே போறது இருக்கிற நிலமெல்லாம் பிளாட் போட்டு வித்தாச்சி புல்லு மொளைக்க இடமில்ல இதுல கொடுக்கிற ஆட்டை பட்டினிபோட்டுத்தான் ஆவனும் என ராசாமணி நிஜமாகவே வருத்தப்பட்டார்

ஆட்டுக்கு இரையில்லைன்னுறது வேற சங்கதி ஒரு ஆடு ஒருநாளைக்கு தின்னுற தீனியை வளக்கிறதுக்கு ஒருமாசம் ஆகுமாம் இதனாலையே ஆட்டு உற்பத்தியை கொறைக்கனும் இல்லைன்னா பசுமைத்தாவரங்கள் அழிய ஆரம்பிச்சுடும் என்கிறாங்க இப்ப என்னடான்னா கதை தலகீழாகுது என்றார் மாணிக்கம்

 மலிவு விலை அரிசி தரமில்லை மாட்டுத் தீவினமாத்தான் போடணும் என்றாங்க இப்ப அவுங்களே மலிவா என்ன மலிவு? இலவசமாவே தாரேன் என்கிறாங்க

இது என்ன நியாயம்? ஓசிக்கு கொடுத்து மக்களை பிச்சக்காரங்களா  நினைக்கிறாங்கன்னும் சொன்னாங்க அவுங்க கொடுத்தா பிச்சை இவுங்க கொடுத்தா கவுரவமா எல்லாம் நம்ம தலையெழுத்து என்று தலையில் அடித்துக் கொன்டார் ராசாமணி

அட பல்லுத் தேக்கிற பல்பொடி முஞ்சில போடுற சோப்பு இப்படி எத்த வேணும்ன்னாலும் பிரீயா கொடுக்கட்டும்

 இம்புட்டையும் கொடுக்க பணமேது இப்பவே ஒண்ணேகால் லச்சம் கோடி கடன் இருக்காம் இந்தக் கண்றாவியில ஆடுமாடு பூனைன்னு ஓசிக்கு கொடுத்தா ஐஞ்சி வருஷத்தில ஒவ்வொறு பயலும் சட்டியேந்த வேண்டியதுதான் என்றார் காத்தவராயன்

முதல்ல ஓசியைக்காட்டி ஓட்டுக்கேட்டா உள்ளாற தூக்கிப் போடனும் இவுங்க லஞ்சம் வாங்கி கொழுத்துப் போறதுக்கு மக்களுக்கு லஞ்சம் கொடுக்கிறாங்க

கிரைண்டர் காத்தாடி இல்லைன்னு யாரு அழுதா ?ஒழுங்கா ஆறு குளத்தை செப்பனிட்டோம் உடம்பு சரியில்லைன்னா மக்களுக்கு நல்ல மருந்து கொடுத்தோமுன்னு யாரும் கிடையாது சுத்தக் களவாணிப் பொழைப்பு என்று காரித்துப்பிய மாணிக்கம்

ஒரு பீடி கொடுங்க மணியண்ணே நாம கண்ட சொகம் அதுதான் என்றார்

இந்த மானங்கெட்ட நாட்டில இருக்கிறதை விட நாண்டுக்கிட்டு சாகலாம் என்று முனுமுனுக்கவும் செய்தார்



Contact Form

Name

Email *

Message *