Store
  Store
  Store
  Store
  Store
  Store

காஷ்மீர் மாநிலத்தின் நிஜ மதம்

 இந்து மத வரலாற்று தொடர் 11

ந்து மதத்தின் உட்பிரிவுகளில் சைவ சமயம் தொன்மையானது மட்டுமல்ல ஆழமான பல கருத்துக்களையும் உள்ளடக்கியது என்பதை சென்ற அத்தியாயத்தில் சிறிது பார்த்தோம் அப்படிப் பார்க்கையில் சைவத்தில் காஷ்மீர் சைவம் என்று ஒரு பிரிவு இருப்பதையும் அறிந்து கொண்டோம்.  இமயச்சாரலில் தழைத்தோங்கி இருந்த காஷ்மீர சைவத்தின் முழுத்தன்மையையும் தென்பகுதி மக்களாகிய நாம் தெளிவாக அறிந்திருக்கவில்லை என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும்.  இதற்கு காரணம் வடக்கு தெற்கு வேறுபாடா சமயாச்சாரியார்களின் உபதேசத்தில் உள்ள குறைபாடா என்பது தெளிவாகத் தெரியவில்லை.  இருப்பினும் அக்குறைபாடை முடிந்தவரை களைவது நமது கடமையாகும்.

சரித்திர ஆய்வாளர்களால் கி.பி. 5-ம் நூற்றாண்டில் வாழ்ந்தவராக கருதப்படும் மகாகவி காளிதாஸ் தனது ரகுவம்ச காவியத்தில் காஷ்மீர் சந்தனத்தையும் தாமிரபரணி முத்துக்களையும் சிந்து நதியோர அழகிய மணல் திட்டுக்களையும் இமயமலையில் வளர்ந்து வான் தொட முயற்சிக்கும் தேவதாரு மரங்களையும் இன்னும் பல பாரத நாட்டின் இயற்கை எழிலையும் கவிச்சுவை சொட்ட சொட்ட பாடி உள்ளார்.  இவரும் காஷ்மீர் பகுதியை பிறப்பிடமாக கொண்டவர் பல காஷ்மீர் கவிஞர்கள் வடமொழியில் அறிவுச் செறிவும் கற்பனை வளமும் காவிய நளினமும் கொண்ட பல இலக்கியங்கள் படைத்துள்ளார்கள் இவர்களில் “பௌமகன்” என்ற கவிஞர் எழுதிய “ராவாணாச்சுனீயம்” என்ற நூலும் “பில்ஹனன்” எழுதிய விக்ரமாங்க தேவ சதம் எனும் காப்பியமும் “ஆனந்தவர்த்தனன்” எழுதிய “துணியாலோகம்” எனும் காவியமும் மிகவும் புகழ் பெற்றது ஆகும்.


 இப்படி இலக்கியத்தில் ஏற்றம் மிக பெற்றிருந்த காஷ்மீர் சைவ நெறியிலும் தழைத்தோங்கி இருந்தது.  இன்று துப்பாக்கிகளின் ஓசை கேட்கும் மலை முகடுகளிலும் சரிவுகளிலும் ஒரு காலத்தில் சிவ நாமமே எங்கும் ஒலித்து அந்த ஒலியில் காஷ்மீர் மக்கள் மட்டுமல்ல இந்தியாவின் வட பகுதி மக்கள் பெரும்பாலானவர்கள் அமைதியாகவும் ஆனந்தமாகவும் வாழ்ந்தனர்.  காலம் செய்த கோலம் சிவபெருமாளின் தவத்தை வேறுவிதமான கோஷங்கள் கலைத்தததினால் தான் இன்று பீரங்கிச் சத்தங்கள் மக்களின் காதுகளை மட்டுமல்ல இதயத்தையும் பிளக்கிறதோ என்னவோ.

காஷ்மீர் சைவம் என்பது இந்தியாவில் உள்ள மற்ற சைவப்பிரிவுகளில் இருந்து முற்றிலுமாக மாறுபட்டது என்று சொல்ல இயலாது என்றாலும் கூட அதில் பல சிறப்பு அம்சங்கள் மற்றவற்றை விட தனித்துவம் பெற்று மிளிர்கிறது என்பதை மறுக்க இயலாது.  கிறிஸ்துவ சகாப்தத்தின் தொடக்கம் முதல் கி.பி. 9-ம் நூற்றாண்டு வரை காஷ்மீர் மற்றும் அதை ஒட்டி உள்ள காந்தாரம் தற்போதைய ஆப்கானிஸ்தான் ஆகிய பகுதிகளில் மஹாயான புத்த சமயமே ஆட்சியில் இருந்தது எனலாம் அதன்பிறகு ஏற்பட்ட அரசியல் மற்றும் ஆன்மீக விழிப்புணர்வால் சிவவழிபாட்டின் ராஜ தானியாக காஷ்மீரம் விளங்கியது.


 தென்னாட்டு சைவ நெறிக்கு ஆகமங்கள் எப்படி மூல நூல்களாக இருக்கிறதோ அதே போன்றுதான் காஷ்மீர் சைவமும் தனது ஆதார நூல்களாக ஆகமங்கள் கொண்டுள்ளது.  “பகீகண்டருத்ரன்” என்ற சிவபெருமான் ஆகமங்களை துர்வாசகர்க்கும் அம்முனிவர் தனது புத்திரர்களான த்யம்பகர், அமர்தகர், ஸ்ரீகண்டர் ஆகிய முனி சிரேஷ்டர்களுக்கு உபதேசம் செய்ததாக மரபுவழியில் நம்பப்படுகிறது.  சுவச்சந்தம், மிருகேந்திரம், மாதங்க நேத்திரம், சுயாம்புவம், மாலினி விஜயம், ருத்ரயாமலம், விஞ்ஞான பைரவம் ஆகிய ஆகமங்கள் இச்சைவ நெறிக்கு ஊற்றுக்கண்களாக விளங்குகிறது.

இவை மட்டுமல்ல ஆகமங்கள் அனைத்திலும் உள்ள கருத்துக்களை தனக்குள் கொண்ட “வசுபுத்தர்” என்ற மஹா ஞானி உபதேசித்த “சிவசூத்திரம்” என்ற நூலும் காஷ்மீர் சைவ கோபுரத்தின் மணி விளக்காக திகழ்கிறது.  வசுபுத்தர் என்ற ஞான புருஷன் திருமூலர்க்கு 300 ஆண்டுகளுக்கு பிறகு வாழ்ந்தவர் என்று கருதப்படுகிறார்.  வரலாற்று முறைப்படியும் ஆன்மிக சம்பிரதாயத்தின் படியும் வசுபுத்தரே காஷ்மீர் சைவ நெறியின் முதல் ஆசிரியர் என்று கருதப்படுகிறார். இவர் சிவசூத்திரம் மட்டுமல்லாது ஸ்பண்டகாகை என்ற வேறு ஒரு நூலும் எழுதி உள்ளார் இதற்கு பலர் உரை எழுதி இருக்கிறார்கள்.  அந்த உரைகளில் “ராமசுந்தரர்” என்பவரை விவரித்து உரையும் “உள்பல வைணவன்” “சேமராஜன்” “ஸ்பண்டசந்தகம்” “ஸ்பண்டநிர்ணயம்” ஆகிய விளக்க உரைகள் குறிப்பிடத்தக்கது ஆகும்.


காஷ்மீர் சைவத்திற்கு திகாசாஸ்திரம், திகாசாசனம் என்று வேறு இரண்டு பெயர்களும் உண்டு.  இது மட்டுமல்லாது ரகசிய சம்பிரதாயம் திரயம்பக சம்பராதயம் என்ற பெயர்களும் இருந்தாலும் கூட பல நேரங்களில் இந்த மதம் திகா என்றே அழைக்கப்படுகிறது.  திகா என்ற சொல் சிவன், சக்தி, அணு ஆகிய மூன்றோ பதி, பசு, பாசம் ஆகிய வேறு மூன்றோ அல்லது சிவன், சக்தி, நரன் ஆகிய மூன்றோ குறிப்பிடுவதாக சொல்லப்படுகிறது.  ஆனாலும் வேறு ஒரு சாரார் பேதம், அபேதம், பேதா பேதம் ஆகிய மூன்றை குறிப்பதே திகா என்ற வார்த்தையின் உண்மைப்பொருள் என்கிறார்கள்.

இது தவிர ஸ்பண்ட்ட நெறி, பிரதிய பிஞ்ஞா நெறி என்று இரு பெரும் உட்பிரிவும் காஷ்மீர் சைவத்தில் உள்ளது ஸ்பண்ட என்ற சொல் சிவபெருமானின் செயல்களால் ஏற்படும் அதிர்வை குறிப்பதாக சொல்கிறார்கள் வசுபுத்தர் இந்த சொல்லிற்கு மனோ தத்துவ அடிப்படையில் விளக்கம் தருகிறார் கோபம் இன்பம் ஆகிய உணர்ச்சிகளின் வெளிப்பாடாக ஏற்படும் ஆற்றல் துடிப்பு அதிர்வு ஆகியவைகளே ஸ்பண்ட்ட என்ற வார்த்தையில் உள்ள கருத்துக்களாகும் என அவர் கூறுவது கவனிக்கத் தக்கதாகும்.

மேலும் மூலாதாரத்தில் அடங்கி இருக்கும் குண்டலினி சக்தியை ஸ்பண்ட்ட என்ற சொல் சுட்டுவதாகவும் அவரே கூறுகிறார்.  யோக மார்க்கங்களான தியானம், ப்ரணாயமம் ஆகிய கருவிகள் துணையாக கொண்டு ஸ்வாதிஷ்ட்டானம், மணிபூரகம், அனாகதம், விசுத்தி, ஆஞ்ஞை முதலிய ஆதாரங்கள் வழியாக ஸ்பண்ட்ட என்ற குண்டலினியை தட்டி எழுப்பி பிரம்ம ரத்தினமாகிய சகஸ்ரத்தில் இணைத்ததை இச்சொல் என ஆழமான முறையில் குறிப்பிடுகிறார் இப்படி குண்டலினி சக்தியை எழுப்பி சிவத்தை அடைவதே ஸ்பண்ட்ட கோட்பாட்டின் முக்கியமான குறிக்கோளாகும்.  தமிழகத்தில் உள்ள சித்தர்களின் சித்தாந்தமும் இதே கோட்பாட்டை குறிப்பதை கருத்தில் கொள்ள வேண்டும்.  இறை ஐக்கிய நெறி என்பது நமது நாட்டைப் பொருத்தவரை பலவிதமான வார்த்தைகளில் சொல்லப்பட்டு இருந்தாலும் அடிப்படையில் எல்லாமே ஒன்று தான் என்பது நமக்கு நன்கு விளங்குகிறது.


ஸ்பண்ட்ட சித்தாந்தத்தின்படி சர்வ சுதந்திரம் உடைய பதியாகிய சிவன் தனது சுய சங்கல்பத்தால் தன்னிலிருந்து உலகினை உருவாக்கி தன் சார்பில் வேறாகத் தோன்றும்படி படைக்கிறான்.  அதாவது கண்ணாடியில் முகங்கள் வீடுகள் மரங்கள் கியவைகள் தெரிந்தாலும் கண்ணாடி அவற்றோடு எந்த உறவும் ஒட்டுதலும் இல்லாமல் தனித்து இருக்கிறதோ அதே போன்று சிவன் தனக்குள் எல்லாவற்றையும் கொண்டு இருந்தாலும் அவற்றிலிருந்து எல்லாம் எந்த பாதிப்பையும் அடையாமல் தனித்தன்மையோடு விளங்குகிறான்.  அதே நேரம் உயிர்கள் என்பது முழுவதும் சிவத்தன்மை உடையது ஆகும் ஆணவம், மாயை, மாயேயம், கர்மம் ஆகிய கட்டுக்களால் தனது சுய சிவத்தன்மையை உணராமல் அறியாமையில் முழ்கிக்கிடக்கின்றன.

அறியாமை என்பது உயிர்களிடத்தில் இல்லாமல் முற்றிலும் அழிந்துவிட்டால் ஜீவ ஈசுவர ஐக்கியம் ஏற்பட்டு விடும் இந்த ஐக்கியம் ஏற்பட ஜீவன்கள் ஒவ்வொன்றும் தியான வழியாகவும், யோகவழியாகவும் அயராது பாடுபடவேண்டும் ஆழ்ந்த தியானத்தாலும் கடினமான யோகாப்பியாசத்தாலும் உயிர்களை பற்றி உள்ள மும்மல கட்டுக்கள் உடைந்து பரிபூரண ஞானம் கைவரப்பெற்று பரமாத்மாவும் தானும் ஒன்றே என்ற அத்வைத உணர்ச்சி ஏற்பட்டு முக்திக்கு வித்திடும் என்பது ஸ்பண்ட்ட நெறியின் மையக் கோட்பாடாகும்.


 காஷ்மீர் சைவத்தின் இன்னொரு பிரிவான “ப்ரதிய பிஞ்ஞான” என்ற சித்தாந்தத்தை பார்ப்போம்.  ப்ரதியபிஞ்ஞான என்ற வார்த்தைக்கு தமிழில் நேரான பொருள் கொண்டால் அறிந்து கொள்ளுதல் நினைவு கூறுதல் என்று பொருள் வரும்.  வசுகுப்தரின் நேரடிச்சீடரான சோமானந்தர் என்பவர் எழுதிய “சிவதிருஷ்டி” என்ற நூலில் இச்சித்தாந்தத்தின் கொள்கைகள் விரிவாக கூறப்பட்டு உள்ளது.

 சோமானந்தர் சொல்கிறார் சிவன்.ஜெகத், நான் ஆகிய மூன்றும் ஒன்றே தான் வேறு வேறானது அல்ல என்பதை அனுபவ பூர்வமாக உணர்ந்து கொண்டவன் பந்த பாசக்கட்டுகளில் இருந்து முழுமையாக விடுதலை அடைகிறான் என்ற அவரின் கருத்து ஆன்மீக வாழ்வின் இறுதி வடிவாகும் என்பதை மாற்றுக் கருத்து கிடையாது.  சிவனும் தானும் ஒன்றென உணர்ந்த பிறகு அரிந்து கொள்வதற்கு உலகில் வேறு என்ன இருக்கிறது.  முதலில் நானும் சிவனும் ஒன்றுதான் என்பதை நம்புவதற்கு என்ன வழி இருக்கிறது அந்த வழி தெரிந்தால் தானே சிவனை அறிய முயற்சி செய்யலாம்.  என்ற கேள்விகளுக்கு எல்லாம் ப்ரதிபிஞ்ஞா நெறி விளக்கமான விடைத்தருகிறது.

ஒரு இளம் பெண் இருக்கிறாள் அவள் தனது தோழியின் மூலமாக ஒரு அழகிய வாலிபனைப் பற்றி அறிகிறாள்.  அந்த இளைஞனின் சுருள் சுருளான கேசம் மூன்றாம் பிறை போன்ற நெற்றி மங்கையரின் மனதை துளைத்து எடுக்கும் வீரத்திருப் பார்வை முருக்கி விட்ட மீசை தினவெடுத்து நிற்கும் கம்பீரமான தோள்கள் அகன்று விரிந்து திண்மையுடன் திகழும் மார்பு இன்னும் அவனின் பல்வேறு விதமான சௌந்தர்யங்களைப் பற்றியும் அறிவு விசாலத்தைப் பற்றியும் அறிந்து கண்ணால் காணாமலேயே அவனிடம் காதல் வசப்படுகிறாள்.


பார்க்காமலே பிறந்த பாசம் முழுமையான பரவசத்தை தருமா?  தராது அல்லவா வார்த்தைகளில் வர்ணனை செய்யப்பட்ட வாலிபனை நேரில் கண்டு மனமார பேசி நெஞ்சார தழுவி கொண்டால் தானே உடல் இன்பம் என்பது முழுமை பெறும் அதே போன்று தான் உயிர்களும் தன்னுள் தலைவனாக இருக்கின்ற சிவபெருமானை கண்ணாரக் கண்டு வாயாரப்பாடி பரவி மெய்யார திருவடிகளில் வீழ்ந்து இன்புற்றால் தானே வாழ்க்கை முழுமை அடையும்.

காதல் செய்தி சொல்ல தோழி தேவை காலகாலனாக நிற்கும் நீலகண்டனின் அருள் விசாலத்தைச் சொல்ல குரு மொழி தேவை குருமொழியை கேட்டு அதை அனுபவப்படுத்தி பார்பவன் எவனோ அவனே பிறவிப் பெருங்கடலை நீந்திக் கடந்து ஜீவன் முக்தனாகுகிறான்.  இப்படி ஜீவன் முக்தன் ஆவதற்கு ஒவ்வொரு மனிதனும் சதா சர்வகாலமும் சிந்தையை சிவன் பால்வைத்து செயலையும் சிவச்செயலாகவே செய்யப்பட வேண்டுமென்று வற்புறுத்திகிறது காஷ்மீர் சைவத்தின் ப்ரதியாஞ்ஞா நெறி.

இதைப்பற்றி அபிநவபுத்தர் என்ற ஞானி தரும் விளக்கத்தை பார்ப்போம்.  தொன்றுதொட்டு சொல்லப்பட்டு வரும் கதைகளினாலும் அருள் அமுதை தாரை தாரையாக பொழியும் கவிதைகளாலும் அறிவை விசாலப்படுத்தும் தத்துவக் கோட்பாடுகளினாலும் தலைவனான சிவபெருமானின் சர்வவல்லமை அறியப்படுகிறது.  அப்படி அறிந்தவற்றை தைல தாரையாக சிந்தித்துக் கொண்டு தியானத்தில் ஈடுபடும் போது அருட்பெரும் ஜோதியான சிவதரிசனம் கிடைக்கப்பெற்று ஒவ்வொரு ஜீவனும் பசுபதியின் வடிவங்களே இல்லை இல்லை எல்லாமே பசுபதியே தான் என்ற உண்மை ஞானம் பிறக்கிறது இதை காஷ்மீர் சைவம் இன்னும் பலப்பல உதாராணங்களைக் காட்டி நம்மை சர்வேஸ்ரனிடம் அழைத்துச் செல்ல முயற்சிக்கிறது.


அண்ட சராசரத்தின் துவக்க நிலையும் முடிவு நிலையும் சிவம் என்று கருதப்படுகிறது.  அப்படி ஆதியும் அந்தமும் இல்லாத சிவபெருமானின் இயல்புகளை அனுத்தரம், சித்து, சுவாதந்திரியம், சம்வித்து, சைதன்யம், என்று பல அடைமொழி கொடுத்து சிறப்பிக்கிறது.  காஷ்மீர் சைவம் அனுத்தரம் என்ற வார்த்தைக்கு தனக்கு அப்பால் எதுவும் இல்லை என்று பொருள் சொல்லலாம்.  அதேபோல காலம், இடம், காரண காரியம் எல்லைகளை கடந்த தூய ஒளி பொருந்திய தன்மை இவற்றை சித்து என்ற வார்த்தை குறிக்கிறது.  தனது விருப்பப்படி செயல்படுவதற்கு எந்த தடைகளும் இல்லாமல் வரம்பற்ற விடுதலைத் தன்மையை இயல்பிலேயே கொண்டதை சுவாதந்தரியம் என்ற சொல் குறிக்கிறது.

தனக்கு இயல்பாகவே அமைந்த பேரொளி தன்மை என்கின்ற சுயபிரகாசத்தை குறிப்பதோடு அல்லாமல் விகல்பங்கள் அற்ற வேறுபாடுகள் இல்லாத ஞானத்தின் வடிவை சம்வித்து என்பது காட்டுகிறது.  சைதன்யம் என்பது ஆக்கும் சக்தி அழிக்கும் சக்தி, மறைக்கும் சக்தி, காக்கும் சக்தி, அருளும் சக்தி ஆகிய ஐவகைத் தன்மைகளையும் தனக்குள் கொண்ட சிவபெருமானின் கருணாவிலாசத்தை சுட்டிக் காட்டுகிறது.  இப்படி இறைவனின் தன்மைகளை முற்றும் உணர்ந்து பட்டியலிட்டு சொல்வதிலிருந்து காஷ்மீர் சைவத்தின் மெய்ப்பொருள் தத்துவ விளக்கம் ஆரம்பமாகிறது.


தனது வரம்பற்ற சக்தியாலும், கட்டுத்தளை இல்லாத விருப்பாற்றலினாலும் சிவபெருமான் தன்னிடமிருந்து உலகத்தை படைத்துள்ளார்.  அவனிடமிருந்து உருவாக்கம் பெற்ற இந்த உலகமானது அவனின் வேறாக கருதப்பட முடியாது.  இறைவன் தன்னை அனுபவிப்பவன், அனுபவிக்கப்படும் பொருள் என்று இரண்டாக வகைப்படுத்தி கொள்கிறான்.  இதனால் காஷ்மீர் சைவ தத்துவப் படி ஜீவனும் சிவனும் வேறானது அல்ல.  கட்டுக்குள் இருக்கும் போது ஜீவனாகவும் கட்டுத்தளைகளை கடந்து ஞான பிழம்பாக நிற்கும் போது சிவனாகவும் காட்சி தருகிறான்.

தானே உலகமானாலும் கூட தன்னிலிருந்து மாறுபட்டது போல் காட்சியளிக்கும் உலகம் 36 தத்துவங்களால் ஆனது.  சிவம், சக்தி, சதாசிவம், ஈஸ்வரம், சுத்த வித்தை, என்ற ஐந்தும் சுத்த தத்துவங்களாக கருதப்படுகிறது.  இந்த ஐந்தில் சிவ சக்தி தத்துவம் பரிணாமத்தின் ஆதாரமாக இருப்பினும் இருமை மாற்றம் என்று அதை கொள்வது கிடையாது.

தனது சுதந்திரமான சர்வ சக்தியினால் தனக்குள் அடங்கி கிடக்கும் பிரபஞ்சத்தை வெளிப்படும் படி சங்கல்பித்தவுடன் ஏற்படும் முதல் அதிர்வினை சிவ தத்துமாக கொள்கிறார்கள்.  எல்லாவிதமான தத்துவ மாற்றங்களுக்கும் அடிப்படையாக பிறக்கும் தூய ஞான நிலையான சுத்த சைதன்யம் சிவமாக வெளிப்படுகிறது.  சிவத்திலிருந்து வெளிப்படுகின்ற ஆற்றல் சக்தி தத்துவமாக உருமாற்றம் அடைகிறது.  பொதுப்படையாக இவ்விரு தத்துவங்களுக்கும் வேறுபாடு இல்லையென்றாலும் சூரியனையும் அதன் வெளிச்சத்தையும் பிரித்து பார்ப்பதை போல் சிவசக்தி தத்துவத்தை வேறுபடுத்தி பார்க்கலாமே தவிர அடிப்படையில் சிவமே சக்தியாகும் என்பதை மனதில் கொள்ளவேண்டும்.


ஆத்மாவும் அனாத்மாவும் தொடர்புறும் நிலையில் சதாசிவ தத்துவம் வெளிப்படுகிறது.  சதாசிவத்தின் சைதன்யம் தான் அறியப்படும் பொருளாக அனுபவப்படும் போது நாதுறு என்றும், நேயம் என்றும், இரண்டாக பிரிந்து இச்சை என்றும் விருப்பாற்றல் என்றும் மேம்பட்டு விளங்குகிறது.  காஷ்மீர் சைவத்தின் அடுத்ததாக சொல்லப்படும் ஈஸ்வர தத்துவம் ஞானத்தின் முழு ஆற்றலையும் தனக்குள் கொண்டதாகும்.  இறைவனின் அனைத்து கூறுகளையும் அனுபவித்து ஆத்மாவை அவனோடு சமுத்திரத்திற்குள் உப்பு பொம்மை கறைவதை போல் கரைந்து விடுவது இந்த தத்துவப்பிரிவின் சிகரமாகும்.  அடுத்ததாக உள்ள சுத்தவித்தை என்பது கிரியா சக்தியையும் பேதாபேத அனுபவித்தையும் ஒருமைபட்ட நிலையில் சித்தரித்து காட்டுவதாகும்.  சிவனுக்கும் ஜீவனுக்கும் உள்ள உண்மையான தொடர்பு சுத்த வித்தையில் தெளிவுபடுத்தபடுகிறது.

நாம் மேலே சொன்ன ஐந்து வகையான தத்துவங்களை சுத்த தத்துவங்கள் என்றும், மீதமுள்ள 31 வகை தத்துவங்களை அசுத்த தத்துவங்கள் என்றும் காஷ்மீர் சைவம் கருதுகிறது.  அத்தகைய அசுத்த தத்துவங்களின் படித்தரங்கள் என்னவென்பதை ஆராய்ந்து பார்த்தால் காஷ்மீர் சைவத்தின் முழுமையான வடிவம் நமக்கு கிடைத்துவிடும்.

சிவ அதிர்வினால் உருவான சக்தியின் ஒரு கூறு தான் “மாயை” எனப்படுவது உருவ வேறுபாடுகளுக்கும் பலவிதமான பொருட்களாக காட்சி தருவதற்கும் இறை சக்தியை பயன்பாட்டிற்கு கொண்டுவருவது தான் “மாயா ஆற்றல்” என்று சொல்லப்படுகிறது.  “மாயை” என்பது ஒளியாகவும் இருக்கிறது.  இருளாகவும் இருக்கிறது.  உயிர்களை இறைவன் பால்பக்தி பூர்வமாக நகர்த்தி செல்வது ஒளி மிகுந்த மாயையாகும்.  பந்த பாசக் கயிறுகளால் ஆத்மாக்களை இறுககட்டி ஜனன, மரண சாகரத்தை நோக்கி நகர்த்துவது இருள் மயமான மாயையாகும்.


உருவமேயில்லாத பரம்பொருளில் இருந்து உருவமுடைய பொருட்கள் உருவாக காரணமாக இருப்பது “மாயை”.  இது சித்துப் பொருளின் பௌதீக வடிவாகும்.  இத்தகைய மாயையில் இருந்து கலை, வித்தை, ராகம், காலம், நியதி ஆகிய ஐந்தும் தோன்றுவதாக காஷ்மீர சைவம் கருதுகிறது.

காஷ்மீர் சைவத்தின் மாயை என்பதில் முதலாவதாக சொல்லப்படும் “கலை” என்ற பதம் சாதாரணமாக இயல், இசை, நாடகத்தை சுட்டுவது அல்ல.  சைதன்யம் என்ற அனைத்தையும் படைக்கும் தன்மையின் சக்தியை குறைத்து செயல்தன்மைக்கு எல்லை வகுப்பதாகும்.  அதே போல் இரண்டாவதாக குறிக்கப்படும் “வித்தை” என்ற வார்த்தை வரம்பற்றதாகிய சிவப்பொருளின் முற்றும் உணரும் அறிவை எல்லை வகுத்து குறைவு செய்வதாகும்.  ராகம் என்ற மூன்றாவது சொல் சர்வ பூரணத்துவம் என்ற இயல்பினை நிறைவடையாமல் செய்து குறிப்பிட்ட பொருட்களின் மீது இச்சை கொள்ள செய்வதாகும்.  காலம் என்ற நான்காவது வார்த்தை நித்தியத்துவம் ஆகிய அழியாத் தன்மையை வரம்புக்கு உட்படுத்துவதாகும்.  நியதி என்ற ஐந்தாவது சொல் சுதந்திரதன்மையை எங்கும் வியாபித்து உள்ள உணர்வை கட்டுப்படுத்துவதாகும்.

இவ் ஐந்து மாயா சக்தி ஜீவாத்மாக்களின் சிவத்தன்மையை கட்டுப்படுத்தும் உறைகள் அல்லது சட்டைகள் என்று காஷ்மீர் சைவம் சொல்கிறது.  மேலும் இந்த ஐந்து தத்துவங்களால் உருவானதே புருஷன் என்றும் கருதுகிறது.  கபிலமுனிவர் சாங்கிய தத்துவத்தில் குறிப்பிடும் புருஷன் வேறு காஷ்மீர் சைவம் சொல்லும் புருஷன் வேறு என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும். 


  இறைவனின் தன்மை, உயிர்களின் இயல்பு ஆகியவற்றை மிக விரிவாக பேசும் காஷ்மீர் சைவம் பிறவிப் பெருங்கடலை கடந்து இறைவனின் பாதார விந்தத்தில் முற்றிலுமாக ஐக்கியமாகும் முக்தி நிலையை பற்றியும் விரிவான சிந்தனையை தருகிறது.  பொதுவாக இந்து மதத்தில் உள்ள சமய பிரிவுகளும் சரி, இந்தியாவில் தோன்றிய பௌத்தம், ஜைனம், உள்ளிட்ட வேறுமதங்களும் சரி மனிதன் முக்தி அடைவதற்கு “அவித்தை” என்ற அறியாமைதான் தடையாக இருப்பதாக கருதுகிறது.  அதேபோலவே காஷ்மீர் சைவத்திலும் குறைவுடையதும் எல்லைக்கு உட்பட்டதும் ஆகிய அறிவு தான் பந்தங்களுக்கு காரணம் என்பதை விளக்குகிறது.  எனவே அறிவுச் செயல்களின் ஆற்றல்களை குறைத்து ஆன்மீக ஞானத்துடன் கூடிய அறிவோடு உணர்வு கலந்த பக்தி வைராக்யத்தை பெறுவதே வீடுபேறுக்கு பெரும் உதவியாக அமையும் என்று கூறப்படுகிறது.

தென்பகுதியில் உள்ள சைவசித்தாந்த கூற்றுப்படிதான் காஷ்மீர் சைவமும் அஞ்ஞானத்திற்கு ஆணவமலமே காரணம் என்று அடித்து கூறுகிறது.  பிறப்பு முதல் ஆத்மாவுடன் கலந்து இருக்கும் ஆணவமலத்தை ஒழித்தால் தர்ன சிவ ஐக்கியம் ஏற்படும்.  ஆணவ மலம் என்பது மாயை, கர்மம், ஆணவம் ஆகிய மூன்றும் கலந்த ஒரு கலவையாகும்.  இது ஜீவன்களை அரிசியை மூடியிருக்கம் தவிடு, உமி, முளை, போன்று இறுகபற்றியுள்ளது.  தீட்டப்பட்ட அரிசி மீண்டும் முளைப்பதில்லை.  அதேபோன்று ஞான வேள்வியல் வாட்டப்பட்ட ஜீவன் மீண்டும் பிறப்பது இல்லை.

  மும்மலங்களை ஒழிப்பதே வாழ்க்கையின் நோக்கமாகும் என்று திருமந்திரம் சிவஞான சிந்தியா போன்ற நூல்கள் கூறுவது போலவே காஷ்மீர் சைவமும் கூறுகிறது.  மாயை என்ற பெரும் மயக்கத்திலிருந்து விடுபட்டு நீரோடு நீரும் பாலோடு பாலும் கலப்பது போல் பரமாத்மாவோடு ஜீவாத்மாக்களும் கலக்கவேண்டும் என்கிறார் காஷ்மீர் சைவ ஞானி அபிநவகுப்தர். 


 இவர் பரம்பொருளோடு இரண்டற கலந்துவிட்ட ஞானாத்மாக்களை பரமமுக்தர், அபரமுக்தர், ஜீவன்முக்தர் என்றெல்லாம் வகைப்படுத்தி கூறுகிறார்.  பரமமுக்தர், அபரமுக்தர் ஆகிய நிலையெல்லாம் மனிதன் உடலைவிடுத்து சூட்சம சரீரம் பெற்றபிறகு கிடைக்கும் வரமாகும்.

  ஜீவன் முக்தர் என்பது உயிரோடு வாழுகின்ற போதே சிவ சிந்தனையில் முழுமை பெற்றவர்களுக்கு கிடைக்கும் வரப்பிரசாதமாகும்.  செத்த பிறகு கிடைக்கும் சிவலோகத்தை விட உயிரோடு இருக்கும் பொழுதே கிடைக்கும் ஜீவன் முக்தர் நிலைதான் வாழ்வின் சிகரத்தை தொட்டதற்கு சாட்சியாகும்.  அதனால் தான் வாழும் போதே சிவனை அடைய வழிசொல்கிறது காஷ்மீர் சைவம்.



Contact Form

Name

Email *

Message *