Store
  Store
  Store
  Store
  Store
  Store

வீட்டிற்க்குள் சிதை வைத்திருக்கும் மக்கள்


  மது தமிழ்நாட்டில் நம்பூதிரிகள் செய்யும் பூஜைகளுக்கும் சடங்குகளுக்கும் நல்ல மதிப்புண்டு

 சிலர் அவர்களால் பூஜைகள் நடத்தப்பட்டால் கைமேல் பலன் கிடைக்கும் என்று நம்புகிறார்கள்

 இந்த நம்பிக்கை சரியானதுதானா என்ற சந்தேகமும் சிலருக்கு உண்டு

நம்பூதிரிகள் பூஜையின் சிறப்பை பார்ப்பதற்கு முன்னால் அவர்களை பற்றியும் அவர்களது வாழ்க்கை முறை பற்றியும் பல சுவாரசியங்கள் உள்ளன.  அவற்றை சிறிது பார்ப்போம்.


   நம்பு என்றால் நம்பிக்கை.  திரி என்றால் வெளிச்சம்.  எனவே நம்பூதிரி என்ற பதம் நம்பிக்கையின் ஒளியென சொல்லப்படுகிறது. 

இவர்கள் மகாவிஷ்ணுவின் அவதாரமான பரசுராமனால் கேரளாவிற்கு அழைத்து வரப்பட்ட பிராமணர்கள் ஆவார்கள்.

 பல புதுமையான மரபுகளை இவர்கள் பின்பற்றுவதினால் உலக மானிடவியல் அறிஞர்கள் மனித இனக் குழுவில் நம்பூதிரிகளையும் குறிப்பிடத்தக்கவர்களாக கருதுகிறார்கள்.

 தாளமியும், பெரிபூளுசும் தங்களது குறிப்புகளில் நம்பூதிரிகளை பற்றி சொல்லியிருப்பதை பார்க்கும் போது கி.பி. முதலாம் நூற்றாண்டிலேயே இவர்கள் கேரள பகுதிகளில் வாழ்ந்து இருப்பதாக தெரிகிறது.

 சாளுக்கிய அரசர்கள் மறுமலர்ச்சி நூற்றாண்டில் பல பிராமணர்களின் சேர்க்கையால் நம்பூதிரி இனம் பெருகியதாக தெரிகிறது.  


 திப்பு சுல்தான் பதினெட்டாம் நூற்றாண்டில் மலபார் பகுதியை கைப்பற்றிய போது அங்கிருக்கும் மக்களை கட்டாயப்படுத்தி முஸ்லிம்களாக மாற்ற முயற்சித்தார்.

 அதற்கு மறுத்த மக்களின் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன.  பெண்களின் கற்புகள் சூறையாடப்பட்டன.  ஈழவர், நாயர் இன மக்கள் பயத்தின் காரணமாக மதம் மாறிய போதும் சமய பற்றுடைய நம்பூதிரிகள் திப்பு சுல்தானின் கட்டளையை ஏற்க மறுத்தனர். 

இதனால் அவர்கள் மலபார் பகுதிகளை விட்டுவிட்டு திருவிதாங்கூர் பகுதிகளில் சென்று குடியேறினர்.  இஸ்லாமியர்களாக மாறிய சிலர் நம்பூதிரிகளும் உண்டு.  இவர்கள் இப்போது அண்ணாடிகார் என்று அழைக்கப்படுகிறார்கள்.

நம்பூதிரிகளில் இரண்டு பிரிவினர் உண்டு.  மகாவிஷ்ணுவின் வராக அவதாரத்தை வழிபடும் பிரிவினர் பன்னீயூர் என்ற பகுதியை தலைமையிடமாக கொண்டு உள்னர்.

 இவர்களை  சாளுக்கிய மன்னர்கள் ஆதரித்தனர்.  சாளுக்கியர்களின் அரசு முத்திரை பன்றி என்பது குறிப்பிடத்தக்கதாகும். 

இன்னொரு சாரார் சோவூரை மையமாக கொண்டவர்கள்.  இவர்கள் சிவபெருமானை வழிபட்டார்கள்.  தமிழ் மூவேந்தர்களின் ஆதரவும் அரவணைப்பும் இவர்களுக்கு இருந்தது.

 நம்பூதிரி இனத்திற்குள் தம்பூராகால் ஆத்தியா ஷிகெடா, சாமான்னியா, சாதிமத்ரா என்று ஐந்து உட்பிரிவுகள் உள்ளன.

 இது தவிர வரம்பற்ற அதிகாரம் பெற்ற பிரிவினர் நம்பூதிரிபாடு என்றும் அழைக்கப்பட்டன.

  நம்பூதிரி இனம் தங்களது தகுதியை உயர்த்தி கொள்ள தாங்கள் செய்யும் யாகங்களின் எண்ணிக்கையை அதிகரித்தனர். 


  யாகங்கள் செய்பவரை சோமயாசி, சோமாதி என்றும் அதனா எனும் பலிச் சடங்கை செய்பவர்களை ஆதித்திரி அக்னி கோத்திரி என்றும் அழைத்தனர்.

 இந்த மரபில் வந்தவர்களை தவிர வேறு எந்த நம்பூதிரியும் யாகங்களை செய்ய கூடாது என்பது இவர்களின் பொது விதியாகும்.

இந்தியாவில் வாழ்கின்ற பெருவாரியான பிராமணர்கள் தானம் பெறுபவர்களே ஆகும்.

 ஆனால் நம்பூதிரிகள் யாரிடமும் தானம் பெறமாட்டார்கள்.  அரசு வேலை செய்ய மாட்டார்கள், வியாபாரத்திலும் ஈடுபடமாட்டார்கள்.

 தங்களுக்கு சொந்தமான பெரும் நிலப்பரப்பில் தொழிலாளிகளின் துணையோடு வேளாண்மையை செய்தனர்.


  அதிக வருமானம் வரும்.  ஆலயங்கள் தவிர வேறு எந்த ஆலயத்திலும் பூசாரிகளாக கூட பணி செய்யமாட்டார்கள். ஆசிரியர் தொழிலை கௌரவமாக கருதினர்.

 இன்று கதை மாறி விட்டது.  எத்தனையோ அரசு குமாஸ்தாக்கள் நம்பூதிரிகள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

  திப்பு சுல்தான் காலத்திற்கு பிறகு தாய் மதம் திரும்பிய நம்பூதிரிகளும் சோதனைகளை எதிர்க் கொண்டு மலபார் பகுதிகளிலேயே வாழ்ந்து விட்ட நம்பூதிரிகளும் அதர்வண வேதத்தில் கரைக் கண்டவர்கள். 

மந்திர சாஸ்திரம் தாந்திரிக யோகம் இவற்றில் இவர்கள் பெற்று இருக்கும் அபார திறமை இன்று கூட மங்கி விடவில்லை.  


   தொடக்கக்கால நம்பூதிரிகளில் ஹம்ச, காசியப, பரத்வாஜ வாத்சய, கௌல்டின்ய, ஆந்திரி , தான்திரி ஆகிய ஏழு கோத்திரங்கள் இருந்தது.

  ஒரே கோத்திரத்தில் பிறந்தோருக்கும், தாய், தந்தை வழியில் உள்ள உறவினர்களுக்குள்ளும் திருமணம் செய்து கொள்ள முடியாது.

  திருமணத்திற்கு பிறகு மணப்பெண் தனது சுப கோத்திரத்தை விட்டு கணவனின் கோத்திரமாக ஆகிவிடுகிறாள்.

 நம்பூதிரிகளில் மூத்த மகன் மட்டுமே நம்பூதிரி பெண்ணை மண முடித்துக் கொண்டால் போதும்.

  மற்றவர்கள் நாயர் பெண்களை மணந்து கொள்ளலாம். 


 நமது திருமணங்கள் எல்லாம் வெறும் குடும்ப விழாக்கள் அல்ல.  தெரு அடைத்து பந்தல் போட்டு ஊரை அழைத்து விருந்து வைத்து கொண்டாடும் சமுதாய விழாவாகும்.

 அந்த காலத்தில் திருமணங்கள் பதினைந்து நாட்கள் வரை கூட நடந்து இருக்கிறது.

 இன்றைய பொருளாதார சூழ்நிலையில் ஒரு நாள் நடத்துவது கூட கஷ்டமாகி விட்டது.

ஆனால் நம்பூதிரிகள் கூடியமான வரை பத்து நாட்கள் வரை கூட திருமணங்களை நடத்துகிறார்கள்.

 திருமண சடங்கில் மிக முக்கியமானது ஆபாசன அக்னியாகும்.


  இந்த புனித தீ திருமணம் நடைபெறும் பத்து நாள் வரை தொடர்ந்து எரியும்.

  திருமணம் முடிந்த பிறகு நெருப்பின் ஒரு பகுதி ஒரு விளக்கில் எடுக்கப்பட்டு மணமக்களின் வாழ்நாள் வரை அணையாமல் பாதுகாக்கப்படும்.

 கணவன் மனைவி யாராவது இறந்து விட்டால் இந்த நெருப்பிலிருந்து தான் தீயை எடுத்து சிதைக்கு வைப்பார்கள்.

 நம்பூதிரிகளின் குடும்பத்தில் மூத்த மகனுக்கு தான் சொத்துரிமை.  இளைவர்கள் சொத்துக்களை பாதுகாக்க மட்டுமே முடியும். 

குடும்பத்தில் மூத்தது பெண் என்றால் அவள் தான் நிலங்களின் அதிபதி.

 நம்பூதிரிகளால் மூன்று வகையான சுவீகாரம் எடுக்கப்படுகிறது.  

பத்து கை தத்து, சஞ்ச மட தத்து, குடி வழிச்ச தத்து என்பதாகும்.

 இதில் முதல் வகை சுவீகாரத்தில் குழந்தை தன்னை பெற்றோர்க்கும் வளர்த்தோர்க்கும் மரண சடங்கை செய்யலாம். 

இரண்டாவது வகையானது வளர்த்தவர்களுக்கு மட்டுமே செய்ய வேண்டும்.

 மூன்றாவது வகை கணவன் இல்லாத பெண் எடுக்கும் தத்து முறையாகும்.


  ஆரம்ப காலத்தில் நம்பூதிரிகளிடம் மிக கடுமையான தீண்டாமை பழக்கம் இருந்தது.

  நம்பூதிரிகள் நடக்கும் தெருவில் தாழ்ந்த ஜாதிக்காரர்கள் நடக்க கூடாது. நம்பூதிரிகளின் எதிரி ல் தாழ்ந்த ஜாதிப் பெண்கள் மார்பை மறைக்க கூடாது என்றெல்லாம் நடைமுறைகளை வைத்திருந்தனர்.

  இவர்களின் இந்த பைத்தியக்காரத்தனத்தை சுவாமி விவேகானந்தர் சுட்டி காட்டி இது மன நோயாளிகளின் நிலையென வன்மையாக கண்டிக்கிறார்.

 நம்பூதிரிகளால் ஈழவர், தீயர், பனிக்கர் போன்ற ஜாதியினர் அனுபவித்த தொல்லைகள் கணக்கில் அடங்காது.

 தாங்கள் தான் ஆளப்பிறந்தவர்கள் என்ற மமதை அக்கால நம்பூதிரிகளிடம் ஏராளமாக இருந்தது.

 நல்ல வேளை இன்று அவர்கள் ஓரளவு மாறிவிட்டார்கள்.  இல்லையென்றால் கால வேகத்தில் வாழும் தகுதியை அவர்கள் இழந்திருப்பார்கள்.

  நம்பூதிரிகளிடம் இன்னுமொரு விசித்திரமான பழக்கமுண்டு.

 குடும்பத்தில் யாராவது இறந்து விட்டால் அவர்களை மயானத்திற்கு கொண்டு போய் எறியூட்டமாட்டார்கள்.

வீட்டு வளாகத்திற்குள்ளேயே சிதை மூட்டி விடுவார்கள்.

 மரண படுக்கையில் ஒருவர் கிடக்கிறார் என்றால் முதலில் அவர் காதில் தைத்திரிய உபநிசதம் ஓதப்படும்.

 பின்னர் தர்ப்பையால் படுக்கை அமைக்கப்பட்டு கிடத்தப்படுவார்கள்.  தர்ப்பை படுக்கையில் தான் நம்பூதிரியின் உயிர் பிரிய வேண்டும் என்பது ஐதீகம்

.  தகன கிரிகைக்கு பிறகு அஸ்தியை தாழியில் இட்டு எறித்த இடத்திற்கு அருகிலேயே மூன்றாம் நாளில் புதைத்து விடுவார்கள். 

பொதுவாக நம்பூதிரிகள் வேதங்கள் குறிப்பிடும் சம்பிராயதங்களை வழுவாமல் பின்பற்றுவார்கள்.

 இதனால் அவர்கள் செய்யும் பூஜைகள் விரிவானதாகவும் மனதுக்கு இதம் அளிப்பதாகவும் இருக்கும்.

 மற்றப்படி அவர்கள் பூஜை செய்தால் மட்டும் தான் எல்லா காரியங்களும் உடனடியாக நடந்தேரும் என்பதெல்லாம் மூடநம்பிக்கையே தவிர வேறு எதுவும் இல்லை.

  மன ஒருமை பாட்டுடன் செருப்பு தைக்கும் தொழிலாளி பூஜை செய்தாலும் அது நல்ல பலனையே தரும்.

  நம்பூதிரிகள் தான் வேண்டும் என்ற அவசியம் இல்லை.

Contact Form

Name

Email *

Message *