Store
  Store
  Store
  Store
  Store
  Store

அடிமை அமைச்சர்களும் அராஜக தலைவர்களும்

அரசியல் வகுப்பு  5

   மிழ் நாட்டினுடைய புகழ் வானம் வரைக்கும் எட்டியிருப்பதாக மகாகவி பாரதியார் சொல்கிறார்.  அவ்வளவு தூரம் எட்டி இருப்பதற்கு மூலக்காரணம் வள்ளுவனை தமிழ் தாய் ஈன்று எடுத்ததே ஆகும் என்று அவர் தீர்ப்பு சொல்கிறார்.  இது வெறும் புகழ்ச்சி அல்ல.  ஒரு கவிஞனின் அழகான கற்பனை மட்டுமல்ல சத்தியமான உண்மையுமாகும்.  இரண்டே வரியில் உலக மக்களுக்கு தேவையான அனைத்து கருத்துக்களையும் ஒரு மனிதன் சிந்தித்து வெளிப்படுத்தி இருக்கிறான் என்றால் அத்தகையவனை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

    மனிதர்கள் வாழ்வதற்கு பூமி அவசியம்.  அந்த பூமி குழப்பமில்லாமல் இருப்பதற்கு நல்ல அரசியல் தலைமை அவசியம்.  தலைமையில் இருப்பவன் கோணல் மனம் படைத்தவனாகவோ குறுக்கு புத்தி கொண்டவனாகவோ அமைந்துவிட்டால் சராசரி மனிதர்களின் பாடு மிகவும் திண்டாட்டமாகி விடும்.  இதுவரை உலகத்தில் நிகழ்ந்துள்ள அரசுக்கு எதிரான புரட்சிகள் அனைத்தும் தவறுதலான தலைமையை எதிர்த்தே நடைபெற்றதாகும்.  ஒரு மனிதனின் பிடிவாதத்தால் பேராசையால் பல உயிர்கள் காவு கொள்ளப்படுவது அரசியலில் மட்டுமே நடக்க கூடியதாகும்.  அதனால் தான் வள்ளுவர் பொறுப்புமிக்க அரசன் எப்படியெல்லலாம் இருக்க வேண்டுமென்று விளக்கம் தருகிறார்.


   முடியாட்சியை பற்றி விமர்சனம் செய்பவர்கள் ஒரு சட்டத்தை உருவாக்குவதும் அதை செயல் படுத்துவதும் அந்த சட்டத்தின் வழியில் நீதி வழங்குவதும் அரசன் ஒருவன் தான்.  இதனால் ஒரு தனி மனிதனின் விருப்பு வெறுப்புகளுக்கு தேசமே ஆட்பட வேண்டியுள்ளது.  ஆனால் மக்கள் ஆட்சியில் இத்தகைய குறைபாடுகள் இல்லை.  மக்கள் பிரதிநிதிகளின் கருத்துக்களை கேட்டே எந்த முடிவையும் எடுக்க வேண்டிய நிலை இருக்கும்.  தலைமை பொறுப்பில் இருப்பவர்கள் சர்வாதிகார மனப்போக்கில் செல்லாமல் தடுக்கப்படலாம்.  எனவே மன்னராட்சியை விட வேறு எந்த வகை ஆட்சியை விடவும் மக்களாட்சியே சிறந்தது என அழுத்தந்திருத்தமாக சொல்கிறார்கள்.

    இது மிகச் சரியான கருத்து போல் தான் நமக்கு தோன்றுகிறது.  சர்வதிகார நடைமுறையில் இருந்த பல நாட்டு மக்கள் நிலையை கவனித்து பார்க்கும் போது இக்கருத்தை மறுக்கும் துணிச்சல் எவருக்கும் வராது.  ஆனால் ஜனநாயகம் என்ற பெரியல் மெஜாரிட்டி பலத்தை கையில் வைத்துக் கொண்டு ஒரு கட்சி ஆட்சி நடத்துமே என்றால் அந்த கட்சியை சார்ந்த ஒவ்வொருவனும் குட்டி சர்வதிகாரிகளாக மாற வாய்ப்புண்டு.

  மேலும் தேசத்திற்கும் மக்களுக்கும் பயன்படாத பல திட்டங்கள் சுய லாபத்திற்காக நடைமுறை படுத்தப்படவும் வாய்ப்புண்டு.   அதிகார மையம் பரந்து விரியும் போது திட்டங்களை நிறைவேற்ற முடியாது.  சகல மட்டத்திலும் தலைக்கு தலை நாட்டாமை என்ற சூழல் உருவாகி லஞ்ச ஊழல் தலை விரித்தாடும் நிலையும் வரும்.  இதனால் அதிகாரம் அனைத்தையும் தன்னகத்தே கொண்ட ஒரு மனிதன் ஆட்சிக்கு வந்தால் தவறல்ல.  அது நல்ல நிகழ்வாகவே அமையும் என்று ஒரு சிலர் கருதவும் செய்கிறார்கள்.


    நமது நாட்டின் ஜனநாயக வரலாற்றில் இத்தகைய சம்பவங்கள் பல காலமாக நடந்து வருகிறது.  எப்பொழுதெல்லாம் தனிபெரும் மெஜாரிட்டிக்கு அதிகமான இடங்களை பெற்ற அரசு இந்தியாவில் அமைகிறதோ அப்பொழுதெல்லாம் ஜனநாயக வரம்புகள் மீறப்பட்டு சர்வதிகாரத்தை நோக்கி நாடு தள்ளப்பட்டிருக்கிறது.

 திராவிட பரிவார கட்சிகள் இன்று கூட மேடைகளில் நாங்கள் மிசாவை எதிர் கொண்டோம்.  ஜனநாயகத்திற்காக போராடி சிறை சென்றோம் என வீரா வேசத்தோடு பேசுவதை நாம் அடிக்கடி கேட்டு இருக்கிறோம்.  எப்போது எல்லாம் காங்கிரஷை எதிர்க்க வேண்டிய நிலை கலைஞருக்கு வருகிறதோ அப்போதெல்லாம் அவர் இப்படி பேசுவதை யாரும் மறக்க முடியாது.  காங்கிரஸ் விசுவாசிகள் பலர் எமர்ஜென்சி நடைமுறையில் இருந்த போது மட்டும் தான் நாட்டு நிர்வாகம் சீராக இருந்தது என இன்று கூட பெருமை படுவார்கள்.  அரசுக்கு எதிரான கருத்து கொண்ட பல வியாபாரிகள் எமர்ஜென்சி காலத்தை நினைத்து இப்போதும் பயப்படுவார்கள்.  இன்றைய இளைய தலை முறையினருக்கு தான் அதன் தாக்கம் என்னவென்று தெரியாது.

    1975-வது வருடம் ஜுலை மாதம் 25-ம் தேதி காலை எட்டு மணிக்கு இந்தியா முழுவதும் உள்ள வானொலி நிலையங்களில் எல்லா நிகழ்ச்சிகளும் திடிரென நிறுத்தப்படுகிறது.  நாட்டு பிரதமர் மக்களுக்கு அவசர செய்தி சொல்லப்போவதாக மீண்டும் மீண்டும் அறிவிக்கப்படுகிறது.  மக்கள் அனைவரின் மனதிலும் இனம் புரியாத பயம் தொற்றிக் கொள்கிறது.


  1962-லும் இதே போன்ற ஒரு நிலைதான் ஏற்ப்பட்டது.  நேருவோடு கை குலுக்கி கட்டிபிடித்து விடை பெற்று சென்ற சீனத்தலைவர் மாசேதுங் தனது இந்திய விஜயத்தின் சூடு ஆறுவதற்குள்ளேயே நம் நாட்டின் மீது போர் பிரகடனம் செய்தார்.  அதே போன்ற அபாய நிலை தான் மீண்டும் வந்துள்ளது என்பதே மக்களின் அச்சத்திற்கு காரணம்.

 பிரதமர் இந்திராகாந்தி அம்மையார் வருத்தம் கொப்பளிக்கும் சோக குரலில் பேசினார்.  எதிர்க்கட்சிக்காரர்கள் நாட்டை கூறுப்போட சதி செய்கிறார்கள்.  நாடு மிகவும் அபாயகரமான நிலையில் உள்ளது.  இந்த நிலையை மாற்றவும், அரசியல் அமைப்பு சட்டத்தின் 352-ம் பிரிவு படி ஜனாதிபதி அவசர நிலையை பிரகடனப்படுத்தி உள்ளார்.  மக்கள் அனைவரும் அமைதி காத்து அரசுக்கு ஒத்துழைப்பு தரும்படி உருக்கமான வேண்டுகோள் விடுத்தார்.

    அப்போது நான் திருவனந்தபுரத்தின் ஒரு தனியார் மருத்துவமனையில் இருந்தேன்.  15- வயது பூர்த்தியான எனக்கு அவசர நிலையென்றால் என்னவென்று தெரியும்?  உயிருக்கு போராடும் நோயாளியை எமர்ஜென்சி வார்டில் வைத்திருப்பது போல இதுவும் ஒரு சங்கதி என்பதாகத் தான் என்னால் சிந்திக்க முடிந்தது.  ஆனால் இரண்டு நாளில் மருத்துவமனைக்கு தேவைப்பட்ட சில அத்தியாவசிய பொருட்கள் மிகத் தாமதமாக வரத்துவங்கின.  சில நாள் நோயாளிகளுக்கு கொடுக்கப்படும் பழங்கள் சரிவர கிடைக்காது.  செவிலியர்களிடம் கேட்டால் மிசா சட்டத்தில் இ. எம்.எஸ் நம்பூதிரிபாட் கைது செய்யப்பட்டுவிட்டார் ஊர் உள்ளே நிலைமை சகஜமாக இல்லை என்று சொன்னார்கள்.  அப்போது தான் முதல் முறையாக எமர்ஜென்சி என்றால் என்னவென்று புரிய ஆரம்பித்தது.


   அதன் பிறகு திருவனந்தபுரத்திலும் நான்குநேரியிலும் பல போலிஸ்காரர்கள் கடுமையான தடியடி நடத்தியதும் பல அப்பாவி இளைஞர்கள் காரணமே இல்லாமல் கைது செய்யப்பட்டதும் நேருக்கு நேராக பார்த்தேன்.  எனக்கு மிகவும் நெருக்கமான அதே நேரம் என்னை விட மூத்த ராகவன் என்ற கண்பார்வையற்ற நண்பர் கம்யூனிஸ்ட் கட்சியின் அனுதாபி என்ற ஒரே காரணத்திற்காக கைது செய்யப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டதை என்னால் மறக்கவே முடியாது.  போலிஸின் சித்திரவதை காரணமாக விடுதலையான சில மாதங்களிலேயே அவர் காலமாகி விட்டார் என்பது இன்னொரு சோகம்.

    உண்மையிலேயே எதிர்கட்சிகாரர்கள் சதி செய்ததினால் தான் இந்திராகாந்தி அம்மையார் அவசர நிலையை கொண்டு வந்தாரா?  என்றால் நிச்சயம் இல்லை.  காங்கிரஸ் அமைச்சரவை உறுதியான நிலையிலேயே பாராளுமன்றத்தில் இருந்தது.  75-ம் வருடம் குஜராத் சட்ட மன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி படு தோல்வியடைந்தது.  அந்த செய்தி வந்து கொண்டிருந்த அதே வேளையில் அதாவது ஜுன் மாதம் 13-ம் தேதி பிரதமர் இந்திரா காந்தி பாராளுமன்ற உறுப்பினராக ரேபராலி தொகுதியில் வெற்றி பெற்றது செல்லாது என்றும், முறைகேடாக தேர்தலில் நடந்து கொண்டதினால் அடுத்து வரும் ஆறு ஆண்டுகளுக்கு எந்த தேர்தலிலும் பங்கு பெற தடை விதித்து அலகாபாத் உயர்நீதி மன்றம் தீர்ப்பு வழங்கியதே அவசர நிலை பிரகடனத்திற்கு முக்கிய காரணமாகும்.


    உலகத்தின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசே இத்தகைய சர்வதிகார நடவடிக்கையை மேற்கொண்டது என்றால் குறையில்லாத ஆட்சி முறை என எதையுமே கூற இயலாது.  சிலர் திருமதி. காந்தி அவர்கள் அவசர நிலையை தான்தோன்றி தனமாக நடைமுறைப்படுத்தவில்லை.  முறைப்படி அமைச்சரவை ஒப்புதல் பெற்று தான் செய்தார் என சொல்கிறார்கள்.  அதாவது நடந்த தவறுக்கு இந்திரா அம்மையார் மட்டும் பொறுப்பல்ல என்று அவரை காப்பாற்ற முயற்சி செய்கிறார்கள்.  ஆனால் உண்மை நிலை அதுவல்ல.

    பிரதமர் இந்திரா காந்தி அவர்கள் தனது அமைச்சரவை சகாக்கள் எவரையுமே கலந்து ஆலோசிக்கவில்லை என்பதை விட அதற்கு அவசியமில்லை என்றே கருதினார்.  அப்போதைய ஜனாதிபதி பக்ரூதீன் அலிக்கு கூட கோப்பில் கையெழுத்து போடுவதற்கு சற்று முன்னர் தான் விஷயமே தெரியுமாம்.  உண்மையில் நாடு இக்கட்டான நிலையில் இருக்கிறது என்றால் அதற்கு எமர்ஜென்சி அவசியமென்றால் அரசியல் சட்டம் 352 மட்டுமே நடைமுறைப்படுத்தப்பட்டால் போதும்.  ஆனால் சட்ட விதி 359-ன் மூலம் சட்டத்தின் முன் எல்லோரும் சமம் என்ற நிலை மாற்றப்பட்டது.  21 மற்றும் 22-வது பிரிவின் படி யாருடைய தனிப்பட்ட வாழ்க்கையிலும் அரசாங்கம் தலையிடலாம் எனவும் விசாரணையில்லாமல் சிறையில் அடைக்கலாம் என்ற நிலையும் நடைமுறைக்கு வந்தது.  அத்தோடு மட்டுமல்ல அரசாங்க செயலால் பாதிப்படைந்தவர்கள் நீதி மன்றம் செல்ல கூட உரிமையில்லாது போனார்கள்.  ஜனநாயகத்தின் குரல்வளையை நெறித்து கொலை செய்வதில் திருமதி. காந்திக்கு இருந்த ஆர்வம் இதன் மூலம் தெளிவாக புரியும்.


    மக்களாட்சியோ, சர்வதிகார ஆட்சியோ எதுவாக இருந்தாலும் அதை முன் எடுத்து செல்லும் தலைவர்களின் மனபான்மைப்படியே அது நல்லரசாகவோ, மக்கள் விரோத அரசாகவோ அமையும் என்பது தான் இதுவரை அனுபவத்தில் கண்ட உண்மை.  அதனால் தான் வள்ளுவர், ஆட்சி செய்பவர் தெளிந்த அறிவு, நடுநிலை உணர்வும், பல்துறை ஞானமும் கொண்டவனாக இருக்க வேண்டும்.  அவனிடம் தயக்கமோ, மயக்கமோ இல்லாத செயல்திறன் அமைய வேண்டும்.  ஆயிரம் இடர்பாடுகள் வந்தாலும் அதை தவிர்த்து முன்னேறும் மனத்துணிச்சலும் வேண்டுமென சொல்கிறார்.

    கிரேக்க பேரறிஞரான பிளட்டோவும் சாணக்கியரும் கூட அரசன் வேறு அரசாங்கம் வேறு என்று சொல்கிறார்கள்.  ஆனால் வள்ளுவர் இவர்களிடமிருந்து முற்றிலும் வேறுபடுகிறார்.  அரசன் இல்லாத அரசாங்கம் வெறும் உடம்பு மட்டும் தான்.  அதே போல அரசாங்கம் இல்லாத அரசன் உடம்பற்ற உயிர் தான்.  உடலும் உயிரும் ஒன்றாக இருந்தால் தான் செயல்பாடு நடக்கும்.  அதனால்  அரசனும் அரசும் வேறு வேறானது அல்ல ஒன்றே தான் என்கிறார்.

  பகைவர்களிடம் இருந்து மக்களின் உயிரையும் உடமைகளையும் பாதுகாக்கும் படை பலமும் பாதுகாப்பால் கிடைக்கும் அமைதி சூழலை பயன்படுத்தி ஒழுக்கம் தவறாது வாழும் குடிமக்களும் நாட்டினுடைய செழுமையை எடுத்து காட்டும் பொருள் பலமும் தக்க முறையில் அறிவுரை வழங்கி அரசாங்கத்தை வழி நடத்தும் அமைச்சர்களும் பகை பாராட்டாத அண்டை நாடுகளும் எதிரிகளால் எளிதில் அணுக முடியாத எல்லை பாதுகாப்புகளும் கொண்ட ஆறு அங்கங்களே ஒரு அரசனின் உண்மை உறுப்புகள் என்கிறார். 


  அரசாங்கத்தையும் அரசனையும் பாகுபடுத்தி பார்க்காமல் வள்ளுவர் ஒன்றாக கருதுவதற்கு காரணமே தலைமையில் இருப்பவர்களின் சுயத்தகுதிப்படி தான் அரசு இயங்கும் என்பது தான்.  நல்ல சட்ட திட்டங்கள் அமைந்த நாட்டில் கூட பொறுப்பற்ற தலைவர்கள் ஆட்சி நடத்தினால் மக்கள் துன்பமடைந்து தான் தீர வேண்டும்.  அதே நேரம் நல்லதொரு தலைவன் அமைந்து விட்டால் எந்த கேடுகளுமே கிடையாது.

அரசியலில் ஆர்வம் உள்ளவர்களும் அரசியல் வாதிகளும், கம்யூனிஸம், சோஸலிசம் என்ற கவர்ச்சிகரமான வார்த்தைகளை மிக அதிகமாக பயன்படுத்துவதை காணலாம்.  உண்மையிலேயே அந்த வார்த்தைகள் நல்ல கருத்தை உள்ளடக்கியவைகள் தான். அதே வேளை அக்கருத்துகளை நடைமுறைப்படுத்த முயற்சித்த பல நாடுகள் தோல்விகளையே சந்தித்திருக்கிறது.  அதற்கு முக்கிய காரணமென்ன?

    கம்யூனிஸத்தை போல் முதலாளித்துவம் என்ற கருத்து பலராலும் பாராட்டப்படவில்லை என்றாலும், இன்று கூட பல நாடுகளில் நடைமுறையில் உள்ளது.  திறமைசாலிகளின் செயலுக்கு ஊக்கம் வழங்குவதே முதலாளித்துவத்தின் குறிப்பிடத்தக்க பலம் என்று பலர் பாராட்டவும் செய்கிறார்கள்.  ஆனால் அந்த முதலாளித்துவம் பல நாடுகளில் தோற்று கொண்டே வருகிறது.  அதற்கு என்ன காரணம்?


    கம்யூனிஸமும் சரி, முதலாளித்துவமும் சரி மாற்றம் வளர்ச்சி என்பது வெளி பொருட்களிடமிருந்து வர வேண்டும் என்றே எதிர்பார்க்கின்றன.  ஆனால் உண்மை வெளிபொருட்களால் கிடைக்க கூடிய வளர்ச்சி நிரந்தரமானவைகள் அல்ல.  சாஸ்வதமாக நின்று பலன் தர கூடியதும் அல்ல.  மன கொதிப்பும், குழப்பமும் கொண்ட மனித கூட்டத்தால் உருவான சமூகம் எப்படி முன்னேற முடியும்.  ஆனால் நாம் மேலே சொன்ன இரண்டு அரசியல் சித்தாந்தங்களும் சமுதாய மாற்றத்தையே முதல் குறிக்கோளாக கொண்டதினால் தான் தோற்று போய் கொண்டு இருக்கின்றன.  தனிமனித மாற்றத்தையும் ஏற்படுத்த அவைகள் முயற்சித்து இருக்குமேயானால் நிச்சயம் தோல்விகளை கண்டு இருக்காது.  அதனால் தான் வள்ளுவர் அரசனின் தனிப்பட்ட இயல்பே அரசாங்கமாக பரிணமிக்கிறது என உறுதியாக நம்பினார்.

    நல்லோரை காப்பதும், தீயோரை தண்டனையின் மூலம் திருத்துவதும் ஒரு அரசனின் முக்கிய பணி, எல்லா இடங்களிலும் நல்லவர்களும் நன்மையும் மட்டுமே இருந்து விட்டால் அரசாங்கம் என்பது தேவையற்ற ஒன்றாகி விடுகிறது.  ஆனால் உலகத்தில் அன்று முதல் இன்று வரை நன்மையும் தீமையும் கலந்ததாகவே படைப்பு தொழில் இருந்து வருகிறது. 

தீமையை ஒழிப்பதற்கும் அதில் இருந்து தன்னை தற்காத்து கொள்வதற்கும் நன்மையானது போராடி வருகிறது.  எனவே முழுமையாக தீமை அழிக்கப்படும் வரை அரசாங்கம் என்பது தேவைப்படுகிறது.  தண்டனைகளின் மூலம் தீயதை திருத்தாவிட்டால் பெருகாமல் தடுக்கா விட்டால் காலப்போக்கில் அதர்மத்தின் கோரை பற்களுக்குள் தர்மம் அகப்பட்டு முற்றிலும் அழிந்து விடும்.  ஒழுங்காக ஒழுக்கமாக வாழ்வது மட்டும் தர்மம் என்று சொல்ல இயலாது.  அதர்மத்திற்கு எதிரான அறப்போராட்டத்தை நடத்துவது கூட ஒரு வகை தர்மம் தான்.  பயிரை காக்க வேண்டுமென்றால் களைகளை பிடுங்கி தான் ஆக வேண்டும்.


    அதனால் அரசன் என்பவன் குற்றத்தின் இயல்பு அறிந்து அது ஏற்படுத்தும் புறதாக்கத்தை அறிந்து மன தூய்மையுடனும் புறம் சாராத நடுநிலை இயல்புடனும் எதை எவர், எவ்வாறு செய்யினும் அதிலுள்ள உண்மையை உணர்ந்து செயல்பட கூடியவனாக நடவடிக்கை எடுப்பவனாக இருக்க வேண்டுமென வள்ளுவர் அபிப்பிராயப்படுகிறார்.  அதை விடுத்து மாபெரும் ஊழலில் மற்றவர் ஈடுபட்டால் ஒரு வித மனதுடனும் தனது உற்றார் ஈடுபட்டால் இன்னொரு வித மனதுடனும் செயல்படுபவனாக இருக்க கூடாது என்பது அவரின் உண்மையான நோக்கம்.

    நமது முன்னாள் பாரத பிரதமர் மொரார்ஜி தேசாய் குஜராத் மாநில முதல்வராக இருந்த போது அவரது ஒரே மகள் தான் மருத்துவ பரிச்சையை சரிவர எழுதவில்லை.  அதனால் தந்தையார் தனக்கு எதாவது உதவி செய்ய தலையிட வேண்டும் என மன்றாடி கேட்டு கொண்டார்.  ஆனால் திரு. தேசாய் தன்னால் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்ய முடியாது என மறுத்து விட்டார்.  கடைசியில் அவரது ஒரே மகள் தற்கொலை செய்து கொண்டார்.  அதற்கு நான் நேர்மையாக வாழ என் மகளை இழந்து தான் ஆக வேண்டும் என்றால் மகளை கொடுத்து நேர்மையை தான் காப்பாற்றுவேன் என மொராஜி தேசாய் சொன்னார்.  ஆனால் இன்று உள்ள தலைவர்களை சற்று எண்ணிப் பாருங்கள்.  தனது மகளுக்காகவும் மனைவிக்காகவும் மத்திய அரசிடம் கெஞ்சி கூத்தாடுகிறார்கள்.  இதனால் தான் வள்ளுவர் தனி மனித மேம்பாடை பேசுகிறார்.


    நீ நல்லவனா? கெட்டவனா? என்பதை அறிய உன் நண்பனை காட்டு சுலபமாக சொல்லி விடுகிறேன் என்ற கருத்து பரவலாக மக்களிடம் உண்டு.  மது வகைகளை தொட்டே பழக்கப்படாத ஒருவன் ஒரு முழு குடிகாரனுக்கு நண்பனாக இருக்க முடியாது.  சூதாட்டத்தில் அடிமையாகி போனவன் சீட்டாட்டத்தை அறியாதவனோடு நட்பு வைத்து கொள்ள முடியுமா?  அதே போலத்தான் ஒரு நல்ல அரசியல் தலைவனை சுற்றி திறமையான அமைச்சர்கள் இருப்பார்கள்.  அரசன் கொடுக்கும் பாராட்டுக்கும் பரிசுக்கும் வளைந்து கும்மிடு போடுபவர்கள் நல்ல அமைச்சர்களாகவும் இருக்க முடியாது.  அவர்களை அப்படி வைத்திருக்கும் அரசன் நிச்சயம் நல்லவனாகவும் முடியாது.

இன்றைய தமிழகத்தில் தேர்தல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு தான் ஆட்சி செய்கிறது என்றாலும் ஒரு குடும்ப ஆட்சி நடப்பதை யாரும் மறுக்க முடியாது. இந்த உண்மை  நாட்டின் கடை கோடியில் இருக்கும் மனிதனுக்கு தெரியும் போது நாடாளும் அமைச்சர்களுக்கு தெரியாதா என்ன?  ஆனால் அந்த அமைச்சர்கள் முதலமைச்சர் வீட்டில் பந்து விளையாடும் தலைவரின் பேரனுக்கு பந்து பொறுக்கி போடும் வேலையை பணிவுடன் செய்யும் போது இவர்களால் கவனிக்கப்படும் இலாக்களில் செயல்பாடு என்ன லட்சணத்தில் இருக்கும்.  தினசரி வந்து குவியும் பொது மக்களின் மனுக்கள் குப்பை கூடைக்கு போவதை தவிர வேறு என்ன ஆகும்.


ஒரு தலைவர் அறிந்தோ அறியாமலோ தவறுகள் செய்யலாம்.  அந்த தவறுக்கு அருகில் இருப்பவர்கள் துணை போகிறார்கள் என்றால் நிஜ குற்றவாளி அவர்கள் தான்.  குற்றம் செய்வதை விட குற்றம் நிகழ்வதற்கு உறுதுணையாக இருப்பது மிகப் பெரிய பாவமாகும்.  அத்தகைய பாவிகள் தான் இன்று நாட்டில் அமைச்சர்களாக பவனி வருகிறார்கள்.  தலைவனாக இருப்பவர்களின் தவறுகளை சுட்டி காட்டி திருத்த முயலாத அமைச்சர்கள் உள்ள நாடு தானாகவே கெட்டு விடும் என்று கூறும் வள்ளுவர் நல்ல அமைச்சர்களை கொண்ட அரசனை உள் பகையோ வெளிப்பகையோ வீழ்த்தி விட முடியாது எனவும் உறுதி தருகிறார்.

ஒரு மனிதனுடைய அறிவு கூர்மை சிறப்பாக இருக்கிறது என்றால் அவனுக்கு மிக தெளிவான சிந்தனை இருப்பதாக நாம் கருதுகிறோம்.  ஆனால் வள்ளுவர் அதை ஏற்று கொள்ளவில்லை.  ஒருவன் அறிவு திறத்திற்கு அவனை சூழ்ந்து இருக்கும் அனுபவசாலிகளே அதாவது நல்வழி காட்டுபவர்களே காரணம் என்கிறார்.  தலைமை பொறுப்பில் இருப்பவன் இந்த உண்மையை உணர்ந்து நடந்து கொண்டால் எல்லோருக்கும் நல்லது என்பதே அவரின் ஆழ்ந்த முடிவாகும்.

தலைவராக இருப்பவர்களுக்கு ஆயிரம் திறமைகள் இருக்கலாம்.  பல நூறு விஷயங்களை உடனடியாக கிரகித்து கொள்ளும் நுட்பமும் இருக்கலாம்.  எவ்வளவு பெரிய சிக்கல் வந்தாலும் அதை நேர்த்தியாக தீர்த்து கொள்ளும் வழி வகைகளும் தெரிந்து இருக்கலாம்.  ஆனால் தர்மத்தின் வழியில் நிற்பது என்ற தலைமை பண்பு இல்லாது போனால் எது இருந்தும் எந்த பயனும் இல்லை.


  அறம் இல்லாத அரசோ அரசனோ இருந்தாலும் ஒன்று தான்.  இல்லாது அழிந்து போனாலும் ஒன்று தான்.  எனவே தலைமை பொறுப்பில் இருப்பவர்கள் அறவழியில் நிற்பதில் உறுதி கொண்டு தனது நிர்வாகத்தையும் நாட்டு மக்களையும் அந்த வழியில் நடத்துவது தலையாய பணியாகும் என்பது வள்ளுவரின் உறுதி மிகுந்த கொள்கையாகும்.

ஒரு குடும்ப தலைவனோ தலைவியோ பொறுப்பில்லாமல் தான் தோன்றி தனமாக நடந்தால் அந்த குடும்பம் விரைவில் அழிந்து விடும்.  எப்படியாவது பொருள் ஈட்ட வேண்டும், யார் குடும்பத்தை கெடுத்தாவது தான் சுகமாக வாழ வேண்டும் என நினைப்பவர்கள் அதிக நாட்கள் சிறப்பாக வாழ முடியாது என்பதை பல சம்பவங்களின் மூலம் நாம் அறிந்திருக்கிறோம். 

எவ்வளவு கஷ்டம் வந்தாலும் பிறருக்கு துன்பம் செய்து வாழ கூடாது என்ற உறுதி கொண்டவர்கள் ஒரு காலத்தில் இல்லையென்றாலும் வேறொரு காலத்தில் சிறப்படைவதையும் நாம் பார்த்திருக்கிறோம்.  ஆக ஒரு தனிப்பட்ட குடும்பத்தின் முன்னேற்றத்திற்கே தனிமனித ஒழுக்கம் என்பது அத்தியாவசியமாக இருக்கிறது.  அப்படியென்றால் ஒரு நாட்டினுடைய வளர்ச்சிக்கு நாட்டு தலைவனுடைய ஒழுக்கம் எவ்வளவு அவசியம் என்பதை நாம் உணர வேண்டும்.

நாளை முதல் எல்லோரும் ஒழுக்கமாக இருக்க வேண்டுமென சட்டம் போட்டு விட்டால் மட்டும் எந்த மாற்றமும் நடந்து விட முடியாது.  இது வரை அப்படி பிறப்பிக்கப்பட்ட சட்டங்கள் எல்லாமே புத்தகத்தில் தான் நீண்ட உறக்கத்தில் ஆழ்ந்து இருக்கிறது.

  உள் நாட்டு நிர்வாகத்தை சிறப்பாக செய்யும் அமெரிக்கா கூட அயல்நாட்டு உறவுகள் என்று வரும் போது இரக்கமே இல்லாத அரக்கர் போல் நடந்து கொள்வதற்கும், எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் அரசு நடத்திய சோவியத் ரஷ்யா சிதைந்து போனதற்கும், மக்கள் நலனை பற்றியே அக்கறையில்லாத இந்தியா அழிந்து கொண்டிருப்பதற்கு முக்கிய காரணம் தனிமனித ஒழுக்கம் என்பது இல்லாமல் போனதே ஆகும்.  அதனால் தான் எல்லா விதமான சமுதாய நோய்களுக்கும் நிரந்தர தீர்வு கண்டு சொல்லிய வள்ளுவன் அரசியலில் வெளி மாற்றம் என்பது அவசியமில்லாதது உள்மாற்றம் வந்தால் எல்லா மாற்றமும் நல்லபடியாகும் என்கிறார்.

 

Contact Form

Name

Email *

Message *