Store
  Store
  Store
  Store
  Store
  Store

ஜெயலலிதா செய்ய போவதில்லை!

   ஞ்சாயத்து மேடையில் பல்லை குத்திக் கொண்டியிருந்த நாராயணசுவாமி தான் முதலில் பேச துவங்கினார்

ஜப்பானில் குழந்தைகளுக்கு பள்ளிக்கூடம் போனால் பாட புத்தகம் எதுவும் தரமாட்டார்களாமே புத்தகம் இல்லை என்றால் பிள்ளைகள் எப்படி படிக்கும் அதிசயமாகத் தான் இருக்கிறது என்றார்

அதற்கு சபாரத்தினம் அந்த நாட்டில் குழந்தைகள் ஒரு குறிப்பிட்ட வயதை அடையும் வரை வடிவமைக்கப் பட்ட பாட புத்தகம் எதுவும் தரப்படுவதில்லை என்பது நிஜம் தான்

அதற்கு காரணம் இருக்கிறது குழந்தைகள் எதுவுமே ஆரம்பத்தில் கையை கட்டி உட்கார்ந்து படிக்க விரும்புவது இல்லை விளையாடுவதில் தான் அவைகளுக்கு ஆர்வம் இருக்கும் 


ஆனால் அப்படி விளையாடும் போதே ஒவ்வொரு குழந்தையும் தனித் தனி விளையாட்டைத் தான் ஆர்வமாக ஆடும் ஜப்பான் பள்ளிக்கூடங்களில் குழந்தைகள் எந்த வகையான விளையாட்டை தேர்ந்தெடுக்கின்றன என்பது உன்னிப்பாக கவனிக்கப் படுகிறது

பிறகு அது சம்பந்தப் பட்ட துறையிலேயே அந்த குழந்தை ஊக்கு விக்கப் படுகிறது அதன் பிறகு தான் ஆனா ஆவனா பாடம் எல்லாம் என்று பதில் சொன்னார்

இதை கேட்டுக் கொண்டிருந்த ஏகாம்பரம் அட என்னப்பா! நீங்க கண்ணுக்கு தெரியாத தேசத்தைப் பற்றி கதையளக்கிறீர்கள் நம்ம தமிழ் நாட்டில் கூட தான் இப்போது குழந்தைகள் பாட புத்தகம் இல்லாமல் படிக்கின்றன அது உங்கள் கண்ணுக்கு தெரியவில்லையா என்று கிண்டலாக கேட்டார்

நல்லா சொன்னிங்க சமசீர் கல்வியா சாதா கல்வியா என்று அரசாங்கமமும் நீதி மன்றமும் முடிவெடுப்பதற்குள் கல்வியாண்டே முடிந்துவிடும் போலிருக்கிறது என்று நாராயணசாமி உரையாடலை சூடு படுத்தினார் 


அண்ணே எந்த கல்வி என்பது ஒரு புறம் இருக்கட்டும் ஒரு அரசாங்கம் கொண்டு வந்த திட்டத்தை இன்னொறு அரசாங்கம் செயல் படுத்தினால் என்ன தவறு இதில் கவுரவ பிரச்சனை எதாவது இருக்கிறதா என்று சபாரத்தினம் ஏகாம்பரத்திடம் கேட்டார்

அதற்கு அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை நீ செய்ததை நான் செய்வதா அப்படி செய்தால் பெயரும் புகழும் உனக்குத்தானே கிடைக்கும்? எனக்கென்ன கிடைக்கும்? என்ற எண்ணம் தான் அடிப்படை காரணம் என்று பதில் சொன்னார் ஏகாம்பரம்

ஏகம்பரமே தொடர்ந்து பேசினார் ஒரு கட்சி ஆட்சியில் இருக்கும் போது பல திட்டங்களை தீட்டி செயல் படுவது இயற்கையானது தான்

அந்த திட்டங்களில் நல்லதும் இருக்கும் கெட்டதும் இருக்கும் ஆடம்பரமானவைகளும் இருக்கலாம்

அதை அதற்கு அடுத்ததாக ஆள வரும் கட்சி நல்லதை எடுத்துக் கொண்டு கெட்டதை மக்களுக்கு பயன் இல்லாததை கழித்துக் கட்டிவிடலாம் இது தான் நமது இந்தியாவின் பல மாநிலங்களில் இன்றும் நடைமுறையில் உள்ளது

1967 வரையில் நமது தமிழ் நாட்டிலும் இந்த பழக்கம் தான் நடைமுறையில் இருந்தது அதன் பிறகு வந்த திராவிட பரிவாரங்களின் ஆட்சியில் தான் இந்த துற்பாக்கிய நிலை ஆரம்பமானது அது தான் இப்போதும் நடக்கிறது

உதாரணமாக தனக்கு வேண்டப் பட்ட ஒருவரை மேல் சபை உறுப்பினராக ஆக்க முடியவில்லை என்பதற்காக மேல் சபையையே கலைத்தார் எம்.ஜி.ஆர்

அவர் கலைத்ததனால் கலைஞர் கொண்டுவர முயற்சிப்பார் அதற்குள் அவர் ஆட்சியையும் போய் விடும் அடுத்து வரும் அ.தி.மு.க அரசு அதை நிறுத்தும் இது தொடர்ந்து நடை பெரும் அவலம் என்று சொன்ன ஏகாம்பரம் நீண்ட பெரு மூச்சி விட்டார்

ஏகாம்பரம் அண்ணே நீங்க சொல்லுவது சரிதான் ஆனால் இந்த சமச்சீர் கல்வி விவகாரத்தில் இது மட்டும் தான் காரணம் என்று சொல்ல முடியாது வேறு பல காரணங்களும் இருப்பதாக சொல்கிறார்களே என்று சபாரத்தினம் கேட்டார்

பாட புத்தகத்தில் உள்ள பாடங்கள் பலவற்றில் கலைஞரின் புகழ் தான் பாடப்பட்டு இருக்கிறதாம் அவர் எழுதிய கவிதைகளும் இடம் பெற்று இருக்கிறதாம் அதனால் தான் ஜெயலலிதா அந்த பாட திட்டத்தையே ரத்து செய்து விட்டாறாம்

சிலையாக உயர்ந்து நிற்கும் வள்ளுவரின் கருத்தை குழந்தைகள் படிக்கலாம் அவருக்கு சிலை வைத்தார் என்ற ஒரே காரணத்திற்காக கலைஞரின் கருத்தை படிக்க வேண்டிய அவசியம் என்ன இருக்கிறது? என்ற நாராயணசாமி கோபமாகவே பேசினார்

கோபப்படாதீங்க நாராயணன் கலைஞரும் தன்னை முத்தமிழ் அறிஞர் என்றே அழைத்து கொள்கிறார் திருக்குறளுக்கு அழகான உரை எழுதியுள்ளார் இன்னும் எத்தனையோ இலக்கியங்களை படைத்துள்ளார் அப்படிப் பட்ட ஒருவரின் படைப்புகள் பாட புத்தகத்தில் இடம் பெற்றால் என்ன அதை குழந்தைகள் படித்தால் தான் என்ன என்று கிண்டல் செய்தார் சபாரத்தினம்

விபரம் புரியாமல் பேசாதீர்கள் கலைஞர் மட்டும் தான் முத்தமிழ் அறிஞரா! அவர் மட்டும் தான் குறளுக்கு உரை எழுதியிருக்காறா? நாமக்கல் கவிஞர் கூட முத்தமிழ் அறிஞர் தான் குழந்தை கவிஞர் அழ.வள்ளியப்பாவும் அதே அறிஞர் தான்

திருக்குறளுக்கு ஏகப்பட்ட தமிழறிஞர்கள் அழகான தெளிவான உரைகளை தந்திருக்கிறார்கள் அவர்கள் படைப்புகளை எல்லாம் பாட புத்தகத்தில் இடம் பெற செய்தால் என்ன?

செய்ய மாட்டார்கள் ஏனென்றால் அவர்கள் யாரும் கட்சி நடத்த வில்லை நாட்டை ஆளவில்லை அதனால் தான் ஆள்பவர்களை துதிப் பாட சரித்திரத்தில் வலிய தன்னை நிலை நிறுத்திக் கொள்ள பாட திட்டங்கள் உருவாக்கப் பட்டிருந்தன என்று சத்தமாக பேசினார் நாராயணசாமி

சரி அப்படியே கலைஞரின் படைப்புகள் புத்தகத்தில் இருந்ததனால் தான் சமசீர் கல்வி திட்டம் நிறுத்தி வைக்கப் பட்டது என்று சொன்னால் அதில் முழு நியாயம் இல்லையே!


புதிய அரசு பதவி ஏற்கும் முன்பே பாட புத்தகங்கள் தயாராகி விட்டன பாடத்தை நடத்துவது எப்படி என்று தனிச்சம்பளம் கொடுத்து ஆசிரியர்களுக்கும் பயிற்சி கொடுத்தாகி விட்டது

இந்த வகையில் அரசாங்கத்தின் பணமான மக்கள் வரி பணம் பல கோடி ரூபாய் செலவும் ஆகி விட்டது இந்த சூழலில் பொறுப்புள்ள ஒரு அரசு என்ன செய்ய வேண்டும்?

தேவையற்ற பாடங்களை அகற்றி விட்டு அல்லது குழந்தைகளுக்கு கற்பிக்காமல் விட்டு விட்டு மற்ற பாடங்களை இந்த வருடத்தில் நடத்தலாம்

வரும் ஆண்டில் சீர்திருத்தப் பட்ட புதிய பாட புத்தகங்களை உருவாக்கலாம் அதை செய்யாமல் ஒட்டு மொத்தமாக திட்டத்தையே கை விடுவது எந்த வகையில் சரி?

கருணாநிதி கொண்டுவந்தார் என்பதற்காக சமசீர் கல்வியை ஜெயலலிதா முடக்குகிறார் அதே கருணாநிதி தான் டாஸ்மாக்யையும் கொண்டு வந்தார் அதை கைவிடுவது தானே! என்று ஏகாம்பரம் பேசினார்

நாராயணசாமியும் சபாரத்தினமும் மவுனமாகி விட்டார்கள்

நீங்கள் ஒரு விஷயத்தை நன்றாக புரிந்து கொள்ள வேண்டும் தவறான் கல்வி எப்படி தப்பான சமூகத்தை உருவாக்குமோ அதே போலவே தான் கெட்ட பழக்க வழக்கங்களும்

இளைய தலைமுறையினர்களை ஒழுங்காக உருவாக்க வேண்டும் என்று ஜெயலலிதா நிஜமாகவே விரும்பினால் முதலில் அவர் கலைஞர் கொண்டுவந்த இலவச திட்டங்களையும் தான் செய்ய போவதாக கூறியுள்ள இலவச திட்டங்களையும் நிறுத்த வேண்டும்

எவ்வளவு தான் லாபம் தரும் தங்க சுரங்கமாக இருந்தாலும் மதுக்கடைகளை இழுத்து மூட வேண்டும் அப்படி செய்தால் தான் ஜெயலலிதாவின் சமூக அக்கறைக்கு நற்சான்றிதள் கொடுக்க முடியும்

நிச்சயம் அவர் இதை செய்ய போவது இல்லை காரணம் அவரும் ஒரு சாராசரி அரசியல் வாதி தான்

சமசீர் கல்வி சிறந்தது உயர்ந்தது என்றோ தாழ்ந்தது தேவையற்றது என்றோ நான் சொல்ல வரவில்லை

ஜெயலலிதா அதை நிறுத்தியது கல்வி திட்டத்தின் மேல் கொண்ட அக்கறையால் அல்ல காழ்புணற்சியால் என்று சொல்ல வருகிறேன் என ஏகாம்பரம் ஒரு மேடை பேச்சி போல் பேசி முடிக்கவும் மற்ற இருவரும் தலையாட்டி கொண்டனர்

இப்படி ஆடுகின்ற தலை என்றோ நிமிர்ந்திருந்தால் நாடாளுவதற்கு நாராயணனே வந்திருப்பான் 

Contact Form

Name

Email *

Message *