( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........!! click here )வரும் ஞாயிறு அன்று அமிர்த தாரா தீட்சை அளிக்கப்படுகிறது appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846 

Share !
This Post

உஜிலாதேவி பதிவுகளை
மின்னஞ்சலில் பெற

அறிஞர் அண்ணா ஆவி எழுதிய கடிதம்

இது ஒரு கற்பனை கடிதம்
பாசமிகு தம்பியே நேசமிகுந்த தங்கையே

     ன்று நீங்கள் மக்கள் மத்தியில் மாபெரும் தலைவராக பவனி வர காரணமாக இருந்த காஞ்சி தலைவன் அண்ணாதுரை எழுதும் அன்பு கடிதம் நான் வாழ்ந்த காலத்தில் ஆயிரக்கணக்கான கடிதங்களை தம்பிகளுக்காக எழுதியுள்ளேன் அவைகளெல்லாம் தாழ்வுற்று கிடந்த எனது திராவிட வாரிசுகளை வீறு கொண்டு எழ கொடுக்கப்பட்ட கிரியா ஊக்கிகள் என்பேன் ஆனால் இந்த கடிதமோ அப்படி அல்ல வீதி தோறும் மேடை அமைத்து மேடை தோறும் கொள்கை முழங்கி வளர்க்கப்பட்ட என் கண்ணின் கருமணியான கழகம் பாழ்பட்டு கிடப்பதை பார்த்து பரிதவித்து எழுதும் பரிதாபக் கடிதம்

தம்பி திருக்குவளை தந்த சீர் மிகு வீரத்தமிழா! நமது கழகம் எதற்க்காக ஏன் துவங்கப் பட்டது என்பதை நீ மறந்திருக்க மாட்டாய் நமக்கெல்லாம் தலைவராக இருந்த தமிழ் இனத்தையே கை தூக்கி விடுவார் என்று நாம் நம்பிய பகுத்தறிவு பகலவன் அரும்பாடு பட்டு பகலிரவாய் விழித்திருந்து உழைத்த நம்மை எல்லாம் உதறி தள்ளிவிட்டு தனது சொந்தங்களுக்கு முதலிடம் கொடுத்ததனால் தான் திராவிட கழகத்திலிருந்து திராவிட முன்னேற்ற கழகம் என்ற புது மரத்தை நட்டு வளர்க்க ஆரம்பித்தோம் அன்று முதல் என் காலம் வரையிலும் வாரிசு அரசியலின் வன்கொடுமையை எதிர்ப்பதே நமது நோக்கமாக கொண்டு பாடுபட்டோம் 


ஆனால் தம்பி நீ செய்தது என்ன ஆயிரமாயிரம் கழக உடன் பிறப்புகள் ரத்தம் சிந்தி வியர்வை சிந்தி வளர்த்த கழகத்தை கால் மணி நேரத்தில் உடைப்பது போல ராமச்சந்திரனை வெளியேற்றினாய்! அன்றே இந்த அண்ணனின் இதயம் இரண்டாக பிளந்து விட்டது ஆயிரத்து தொள்ளாயிரத்து அறுபத்து ஏழாம் ஆண்டில் கழகம் கண்ட வெற்றி அன்பு தம்பி ராமச்சந்திரனை நம் ராதா துப்பாக்கியால் சுட்ட காட்சியை வண்ணக் காட்சியாக வடிவமைத்து சுவர்களெல்லாம் ஒட்டி சோக கீதம் பாடியதால் அன்றோ கிடைத்தது! அதனால்தான் நானே தம்பி ராமச்சந்திரன் முகத்தை காட்டினால் போதும் முப்பது லட்சம் ஓட்டுகள் கிடைக்குமென்று சொன்னேன் அதை மறந்து உன் நலனுக்காக கழகத்தை உடைத்தாய்

வாரிசு அரசியலே வேண்டாம் என்று வாய் வலிக்க பேசிய நீயே உன் திருகுமரனை பட்டுக் கம்பளம் விரித்து வரவேற்று இளைஞர் அணி தலைவராக இளவரசு பட்டம் கட்டினாய்! அந்த வாரிசின் வளர்ச்சிக்கு வை கோபால்சாமி தடையாக இருப்பான் என்று கொலை பாதக பழி சூட்டி வெளியேற்றினாய்! மீண்டும் கள்ளம் இல்லாத கண்மணியான கழகத்தை சம்மட்டி கொண்டு அடித்து பிளந்து போட்டாய்! அத்தோடு உனது ஆசைக்கு எல்லை கட்டியிருக்கலாம் பாய்ந்து வரும் காட்டாற்று வெள்ளமே அணைக்குள் அடங்கும் போது உன் ஆசை வெள்ளம் அடங்காதா என்று காத்திருந்தேன் காத்திருந்த கண்களை கள்ளி செடிதான் குத்தி காயப்படுத்தியது 

 மகனுக்கு பின்னால் பேரனையும் கொண்டு வந்து மத்திய அமைச்சராக்கி அழகு பார்த்தாய் கட்டிய மனைவிகள் கொடும் தேளாய் கொட்டியதனால் ஆசை மகளை கொல்லைப்புறம் வழியாக கொலு மண்டபம் அனுப்பினாய் மதுரைக்கு அனுப்பிய இன்னொரு மகனுக்கு மண்ணாளும் மந்திரி பதவி வேண்டி தள்ளாத வயதிலும் தலைநகர் நோக்கி பறந்தாய்! வென்றாய்! அன்பு குழந்தைகளை அரியணை ஏற்றி அழகுப்பார்க்கும் ஆசைக்கு கொடுத்த வேகத்தை பஞ்சை பராரிகளாய் பரிதவிக்கும் தமிழ் இனத்தை தலை நிமிர செய்வதில் காட்டியிருந்தால் இன்று அடுக்கடுக்கான கைதுகள் நடக்குமா? நடந்தாலும் கைகட்டி பார்த்துக் கொண்டிருக்குமா தமிழ் இனம்?

தம்பி நீ மறந்திருக்க மாட்டாய்! காங்கிரஸ்காரர்கள் காசு கொடுத்து ஒட்டுகளை வாங்கி விடுவார்களோ என்ற எண்ணத்தில் கழக தம்பிகளுக்கு நானொரு கடிதம் எழுதினேன் ஞாபகம் இருக்கிறதா? பெருமழையால் வீடிழந்து விம்மி கிடந்தோரை காண செல்கின்றேன் அவர்கள் வாழ்த்தொலி எழுப்பி அல்லவா வரவேற்கிறார்கள் அண்ணன் வந்தானாமே உங்கள் அண்ணன் என்ன கொண்டு தந்தான் உமது அல்லலை போக்கிட ஆளுக்கு ஆயிரம் என்றா அள்ளித் தந்தான் என்று கேலி மொழி பேசிட கூட சிலர் உளர் எனினும் அந்த உத்தமர்கள் நான் என்ன தந்தேன் என்றா கேட்டார்கள் அண்ணன் வந்தான் எமது அல்லலை கண்டான் ஆவன செய்திடுவான் என்றல்லவா நெஞ்சம் நெகிழ கூறுகின்றனர் 


 அத்தகை உள்ளன்பும் உணர்ச்சி பெருக்கும் நிரம்பியுள்ள நிலை கண்டேன் பெருமகிழ்வு கொண்டேன் ஆனால் மறு கணமோ கவலை என் மனதை குடயலாயிற்று இவ்வளவு உள்ளன்பையும் உணர்ச்சி பெருக்கையும் துச்சமென்று எண்ணியல்லவா ஆளவந்தார்கள் மீண்டும் நாங்களே அரியாசனம் அமர்வோம் என்று கூறுகின்றனர் அகந்தை அது என்போம் ஆயினும் எதனால் பிறந்தது அந்த அகந்தை இத்தனை தெளிவாக ஏழை எளியோர் பாட்டாளி விவசாயி கழக பற்றினை தெரிவிப்பதும் கண்டும் மீண்டும் தாமே தேர்தலில் வெற்றி பெற போவதாக எந்த தைரியத்தில் கூறுகின்றனர்? எழுச்சி இருக்கிறது நிரம்ப ஆனால் அது ஏழையரிடம் தான் ஏழையர் விலை கொடுத்து வாங்கிடத் தக்கவர்கள் உணர்ச்சி இருக்கிறது நிரம்ப ஆனால் அந்த உணர்ச்சியை மங்க செய்திடலாம் காசு வீசி இவ்விதமாக அன்றோ தம்பி காங்கிரஸ் கட்சியினர் எண்ணுகின்றனர் ஏழையர் ஆகவே அவர்களை விலை கொடுத்து வாங்கி விடலாம் பணத்தால் அடித்து வீழ்த்தி விடலாம் என்றல்லவா எண்ணுகின்றனர்

இப்படி நான் தம்பிக்கு எழுதிய கடிதம் ஒன்று உண்டு அன்று காங்கிரஸ்காரர்கள் கனவான்கள் ஆளவந்தார்கள் செய்ய துணிந்த பணம் கொடுத்து ஒட்டு வாங்கலாம் வெற்றி வாகை சூடலாம் என்று போட்ட கணக்கை ஐயோ! தம்பி இன்று நீயே செய்து என் நெஞ்சில் ஈட்டி பாய செய்து விட்டாயே! முறமெடுத்து புலி விரட்டிய தமிழச்சியை இலவசம் கொடுத்து மயக்கி விடலாம் என்று கனவு கண்டாயே! பணத்தை வாங்காத பண்பாளர்களை தடி கொண்டு மிரட்டி வணக்கிட செய்திடலாம் என்று திட்டம் தீட்டினாயே! இதற்க்காகவா இந்தி எதிர்ப்பு போராட்டம் நடத்தினோம்? தனி நாடு கேட்டு தடியடி பட்டோம்? அப்பாவி இளைஞர்களை சிறைச்சாலைக்கு அனுப்பினோம்? 


 நீயும் நானும் அறியாசனத்தில் அமர எத்தனை இளம் நெஞ்சங்கள் உயிர் கொடுத்திருப்பார்கள்! கொழுந்து விட்டு எரியும் நெருப்பிற்கு உடல் கொடுத்திருப்பார்கள்! கடந்த காலத்தை எல்லாம் நடந்த வரலாறு என்று நினைக்காமல் உடைந்த பானையாக எண்ணி அன்றோ உன் குடும்பத்து வாரிசுகள் அனைத்தையும் கொலு மண்டபத்தில் அலங்கரித்து அணிவகுக்க செய்தாய்! செம்மொழி மாநாட்டில் செப்பத் தெரியாத பேதைகளை பேச வைத்து செம்மாந்திருந்தாய்! அரும்பாடு பட்டு நான் கட்டிய கழகம் என்ற மாளிகையை கோடாலி கொண்டு பிளந்து போட்டாயே! இது நியாயமா? தம்பி இது தர்மமா?

தோளோடு தோள் நின்ற என் தோழனான கருணாநிதியை தோல்வியை சுவைக்க செய்து மருண்டு விழ செய்து விட்டு தமிழ் மண்ணை ஆளவந்திருக்கும் சீமாட்டியே! நான் மேடையேறி விரல் நீட்டி பேசும் போது தாயின் விரல் பிடித்து நடந்த பெருமாட்டியே! உன்னை நினைத்தும் என் உள்ளம் பூரிப்பால் பொங்கி மகிழ வில்லை ஓடுகின்ற திருடனில் ஓரளவு உத்தமன் யாரென்று அறிந்து உட்கார வைத்து போல் தான் நீயும் தமிழ் மக்களால் உட்கார வைக்கப் பட்டுள்ளாய்! இந்த ரகசியம் எனக்கு தெரியும் ஊரில் உள்ள ஒவ்வொரு ஜீவனுக்கும் தெரியும் ஆனால் உனக்கு தெரியுமா என் தோழியே? 


நீ நினைக்கிறாய் நமது ஆளும் திறன் கண்டு அறிவு பலம் கண்டு ஆற்றலின் வகை கண்டு ஆள அழைத்துள்ளார்கள் தமிழ் நாட்டு வாக்காளர்கள் என்று நீ நினைப்பது தவறு தங்கையே தவறு! காலுக்கு போடுகின்ற செருப்பிலும் கணக்கற்ற வகையை நீ வைத்திருந்ததையும் ஒரு பொட்டு தங்கம் கூட இல்லாமல் தமிழகத்து வீதிகளில் ஆயிரம் முதிர்கன்னிகள் வீட்டுச் சிறையில் அடைபட்டு கிடக்க உன் வீட்டு தண்ணீர் குழாயோ சொக்கத் தங்கத்தில் மின்னியதையும் மானம் மறைக்க அரை முழ துணி இல்லாத பல நூறு மனிதர்கள் வெயிலிலும் மழையிலும் சுருண்டு கிடக்க நீயோ மணிக்கொரு ஆடை கட்டி அழகு பார்க்கும் அளவிற்கு காஞ்சிபுரம் பட்டும் காசி பட்டும் அடுக்கடுக்காய் கொட்டி வைத்ததையும் என் இனிய தமிழ் மக்கள் இன்னும் மறக்க வில்லை

முத்து வேலர் பெற்ற என் மூத்த தம்பி நாட்டாச்சி செய்யும் நேரத்தில் அடுப்படியில் ஒழிந்து கிடந்த தனது குஞ்சு குருமான்களை காட்டாச்சி செய்ய கட்டவிழ்த்து விட்டது போல் மன்னார்குடியின் உன் மனம் கவர்ந்த தோழியின் குடும்பத்தை தாலாட்டி சீராட்டியதால் தமிழ் நாட்டு மூலை முடுக்கெல்லாம் வெறியாட்டம் போட செய்ததை மறந்து போவதற்கு என் மறத் தமிழன் மண்டையில் சரக்கில்லாதவனா? எல்லாம் அவன் நினைவில் பச்சை மரத்து ஆணியாய் பதிந்தே கிடக்கிறது ஆனாலும் உன்னை ஆள அழைத்ததற்கு ஆள் வேறு யாரும் இல்லை என்பதே ஆகும் என்பதை மறந்து விடாதே! 


மக்கள் வரி பணத்தை வாரி கொட்டி கட்டிய புதிய சட்டசபை வளாகம் மக்கள் பிரதிநிதிகள் உட்கார்ந்து பணியாற்ற உதவாது உயிருக்கு உத்தரவாதம் தராது என்று இழுத்து மூடினாய்! மனதிற்கு சங்கடம் என்றாலும் சமாளித்துக் கொண்டார்கள் தங்க தமிழர்கள் ஆனால் அடுத்தக் கணமே நீ சட்ட சபைக்காக கட்டிய இடத்தை மருத்துவ மனையாக்க போவதாக அறிவித்தாய் ஒட்டு வாங்கி வெற்றி பெற்ற உறுப்பினர்களின் உயிருக்கு உத்திரவாதம் தராத கட்டிடம் ஒட்டு போட்டு உழைத்து ஓடாய் தேய்ந்து போன ஏழை தமிழனின் உயிருக்கு மட்டும் பாதுகாப்பு தருமோ! அல்லது தமிழனின் உயிர் என்ன உப்பு போட்டு ஊறவைத்த ஊறுகாயா இலையின் ஓரத்தில் வைத்து தூக்கி எரிய? அல்லது ஏழை தானே செத்தால் என்ன என்று கருதுகிறாயா செல்வ மகளே!

சமசீர் கல்வி என்ற அரசியல் சித்து விளையாட்டில் ஒன்றுமே அறியாத பிஞ்சுகளாம் பிள்ளை குட்டிகளை அறுவது நாட்கள் கல்வி கற்க முடியாமல் கண்களை கட்டி விட்டாயே அது நியாயமா தகாத பாடங்கள் தந்த புத்தகத்தில் இருக்கிறது என்றால் உதாவாத பக்கங்களை உதறிவிட்டு நடத்தி இருக்கலாமே பாடங்களை ஊரெல்லாம் கூடி ஒப்பாரி வைத்தபின் நீதி மன்றமே நீதி இல்லை இது என்று சொன்ன பிறகு அவசர கோலத்தில் அள்ளித் தெளிக்க வேண்டிய அவசியம் என்ன? நீ சமசீர் கல்வியில் காட்டியது கல்வி மீதுள்ள கரிசனம் அல்ல கருணாநிதியின் மீதுள்ள எரிச்சலின் தரிசனமே ஆகும்!


தனக்கென்று உள்ள விருப்பு வெறுப்புகளை பள்ளம் பறித்து புதைத்து விட்டு ஏற வேண்டிய இடமே நாட்டு சிம்மாசனம் தனது அழுக்குகளை சுமந்து கொண்டு ஆட்சி செய்ய நினைப்பவன் விரைவில் செல்வான் மண்ணாசனம் இந்த உண்மையை மறந்தவன் மறைப்பவன் எல்லோருக்கும் நிரந்தர இடம் இருட்டான கல்லாசனம்

ஸ்ரீ ரங்கத்து ஜெயராமன் மகளுக்கும் திருக்குவளை முத்துவேலர் மகனுக்கும் காஞ்சிபுரத்து கற்றறிந்த தலைவன் சொல்ல வேண்டிய தகவல் ஒன்றுள்ளது உடனடியாக நூலகம் போங்கள் தம்பிக்கு அண்ணாவின் கடிதம் என்ற நூலின் இருபத்தி ஒன்றாம் பாகத்தில் இருபத்தி ஒன்பதாம் பக்கத்தை எடுத்து இரண்டாவது பாராவை படித்து பாருங்கள் அதில்

பாம்பு புற்றுக்கு பால் வார்க்கும் தர்மமும் எறும்புகளுக்கு அரிசி போடும் தர்மமும் காக்கை கழுகுகளுக்கு தின்பண்டம் போடும் தர்மமும் செய்திடுவதிலே விருப்பமும் பழக்கமும் கொண்ட முதலாளிகள் அதிக விலைக்கு பண்டங்களை விற்பதற்கோ கள்ள மார்க்கட் நடத்துவதற்கோ பொய் கணக்கு எழுதுவதற்கோ கடன் பட்டவன் கதறிடும் போது அந்த கண்ணீரை கண்டு மனதை கல்லாக்கி கொள்வதற்கோ துளியும் தயங்குவதில்லை என்று எழுதி வைத்திருக்கிறேன் 


அந்த வாசகம் நான் அப்போது காங்கிரஸ் காரர்களை மனதில் வைத்து எழுதியது என்றாலும் இன்றைக்கு நிஜமாக முழுவதும் பொருந்தி வருவது உங்கள் இருவருக்கும் தான்

உங்களின் திருநாவுகள் வறுமையின் கோரத்தை பற்றி பேசுகிறதே தவிர உங்கள் கரங்கள் ஏழ்மையை ஒழிப்பதற்கான சாரத்தை தேட வில்லை உங்கள் நலன்தான் அல்ல அல்ல உங்களது குடும்பம் மற்றும் தோழியின் குடும்ப நலன் மட்டும் தான் உங்கள் கண்களில் தென்படுகிறது

காக்கும் தெய்வமாக உங்களை மட்டுமே நம்பி இருக்கும் ஓட்டாண்டி தமிழனின் நலன் என்பதை பற்றி உங்கள் மனது சிந்திக்க கூட மறுக்கிறது தமிழனை ஆட்டுக் கூட்டமாக ஓட்டுப் போடும் இயந்திரமாக பார்க்கிறீர்களே தவிர சதையும் எலும்பும் இதயமும் கொண்ட உணர்வு மனிதன் என்று நீங்கள் பார்க்கவே இல்லை

நிலைமை இப்படியே தொடர்ந்தால் உங்களை தாங்கி பிடிக்க குப்பை மேடுகள் மட்டும் தான் தயராக இருக்கும் மக்களின் இதய மேடுகள் கல்லாகி போகும் கடந்த காலத்தில் நடந்த தவறுகளை கனவாக நினைத்து மறந்து விட்டு இன்று இப்போது தான் புதிதாக பிறந்தோம் மக்களுக்கு நம்மால் இயன்ற நற்பணியை புரிவோம் என்று உழைக்க வாருங்கள் இந்த அழைப்பை ஏற்க மறுத்தால் தயங்கினால் போகி அன்று பற்ற வைக்கும் நெருப்பு குப்பைகளை எரிப்பது போல் மக்களின் இதய நெருப்பு உங்கள் தொப்பைகளை எரித்து விடும் ஜாக்கிரதை!இப்படிக்கு      
அறிஞர் அண்ணா


+ comments + 5 comments

Anonymous
08:04

அண்ணா அவர்களுக்கு யார் கடிதம் எழுதுவது? "நான் ராமனும் அல்ல, அவள் படிதாண்டா பத்தினியும் அல்ல" என சொன்னதற்கு

Anonymous
08:05

really this message should reach all people.people only can make a very great change in our society.still lot of articles should copme.

L.Kandaswamy
11:32

எனக்கு தெரிந்த வரை நீங்கள் அரசியல் கட்டுரை எழுதாதீர். ஏன் எனில் நீங்கள் கட்சி சார்ந்து எழுதுவதாக தெரிகிறது. தெரியாததை செய்ய வேண்டாம். என்னை போன்ற நடுநிலை பற்றி மட்டும் படிப்பவர்குலுக்கு இது உங்கள் மேல் உள்ள மதிப்பை குறைக்கிறது. இனி உங்கள் விருப்பம்.

நான் நினைக்கிறேன் நீங்கள் இந்த கருத்தை அழித்திடுவீர் என்று.

பார்ப்போம்...

மற்றபடி உங்கள் மற்ற கட்டுரைகள் நன்றாக உள்ளது.

தொடரட்டும் உங்கள் பணி...

அரசியல் வேண்டாம்.

ல.கந்தசாமி.

really feel about our government

No. guruji have made only an observation. his views are not politically biased.


Next Post Next Post Home
 
Back to Top