Store
  Store
  Store
  Store
  Store
  Store

நாலு வரியில் ஒரு காவியம்...!

    மிர்தம் என்பது அருந்துபவனை சாகாமல் வாழவைக்கும் அரும் மருந்தென புராணங்கள் சொல்லும் அதனால்தான் சாகாவரம் பெற்ற அனைத்தையும் அமிர்தம் என்று அழைக்கிறார்கள் நமது தாய் மொழியான தமிழ் மொழியை  அமிழ்தினும் இனியது என வர்ணனை செய்வது இதனால்தான்

இந்த இடத்தில் தமிழை அமிழ்து என்று சொல்தற்கு வேறொரு காரணமும் உண்டு தமிழ் மொழியானது  சாகாவரம் பெற்றது மட்டும் அல்ல எத்தனை முறை சுவைத்தாலும் சுவைக் குன்றாத இனிமைத் தன்மை உடையது என்றும் பொருள் உண்டு. இத்தனை உயர் உடைய கன்னித் தமிழை வாழ வைப்பது வள்ளுவன் இளங்கோ கம்பன் என்ற முப்பெரு கவிஞர்கள் என சிறப்பித்து சொல்லப்படுகிறார்கள்  மகாகவி பாரதியாரும் யாம் அறிந்த புலவரிலே இவர்களைப் போல் பூமிதெனில் யாங்கனுமே பிறந்தது இல்லை என்று வியந்து பாராட்டுகிறார் தமிழ் கவிதை உலகில் இவர்கள் முவரும் மும்மூர்த்திகள் என்று சொன்னால் மிகையில்லை

உலகிலேயே சிறிய வார்த்தைக்குள் பெரிய பொருளை அடக்கலாம் என்ற  நுணுக்கத்தை கண்டறிந்தவன் வள்ளுவன் ஒரு காவியத்துக்குள் கற்பனை வளம்மிக்க கவிதைகளையும் காதுக்கினிய இசை நுணுக்கத்தையும் கண்ணைக் கவர்கின்ற காட்சிகளை கொண்ட நாடகப்பானியையும் இணைக்கலாம் என்ற கருப்பொருளை உலகிற்கு தந்தவன் இளங்கோ


இவர்கள் இருவரில் முற்றிலும் மாறுப்பட்டு இலக்கிய உலகில் என்னென்ன நுணுக்கங்கள் உண்டோ அத்தனையும் கையாண்டு இப்படியும் எழுத முடியுமா என அறிஞர் பெருமக்களை பல நூறு வருடங்கனாக வியப்பில் மூழ்கடித்து கொண்டிருப்பவன் கம்பன் இதனால் தான் கம்பனை கலைக் கடவுளான சரஸ்வதி தேவியின் மணி மகுடம் என அனைவரும் பாராட்டுகிறார்கள்
     
சிலர் சொல்கிறார்கள் இளங்கோவடிகளைப் போல் கம்பன் புதிய காவியத்தை தனது சொந்தப் படைப்பாக தரவில்லை வால்மிகியின் இராமயணத்தை மொழிபெயர்த்து தான் தமிழில் தந்தாரே தவிர பெரிதாக ஒன்றும் செய்து விடவில்லை என்கிறார்கள்

கம்பனின் இராம காதை புதிய கதையல்ல ஆண்டாண்டு காலமாக மக்களாலும் மாபெரும் இலக்கிய மேதைகளாலும் போற்றி பாதுகாக்கப்பட்டு வந்த பழைய கதைதான். ஆனால் அந்த பழைய கதையை கம்பன் எடுத்து சொற்சித்திரமாக பாடு கின்ற போது அது புதிய காவியமாக மட்டும் அல்ல புதுமை ஒவியமாகவும் தெரிகிறது 

கம்பன் இராமயணத்தின் மூல ஆசியரின் வால்மிகியில் இருந்து பல இடங்களில் வேறுபடுகிறார் இனிமைப்படுத்துகிறார் வாழ்க்கையின் நடைமுறை சித்தாந்தங்களை விவரித்து தருகிறார் கம்பனின் இராமயணத்தை படிக்கும் போது கம்பன் சிறந்த தமிழ் கவிஞன் மட்டும் அல்ல உலகமகா கவியும் ஆவான் என்று தோன்றுகிறது அதனால் தான் அவனது படைப்பு தமிழ் இலக்கியத்தின் சிகரமாக விளங்குகிறது. 


உலகத்தில் செழுமை பெற்ற இலக்கிய வராலாறுகளில் கவிதை என்பதே தலமைப் பொறுப்பை அன்று முதல் இன்று வரை ஏற்றுவருகிறது அழியாத தன்மை உடைய பல ஆதிகால இலக்கியங்கள் அணைத்துமே கவிதைகளால் உருவானது தான் நல்ல முறையிலான பண்பாடும் நாகரிகமும் தோன்றி வளர்த்த இந்தியா மற்றும் சீனா போன்ற நாடுகளில் கவிதைப் புனையும் புலவர்கள் வெறும் இலக்கிய வாதிகளாக மட்டும் பார்க்கப்படவில்லை அறம் வளர்க்கும் சான்றோர்களாக அமைதி காக்கும் ஆன்றோர்களாக கடவுளின் வரம் பெற்ற தீர்க்கதரிசிகளாகவே பார்க்கப்பட்டனர்

மக்கள் இந்த அளவு இலக்கிய பிரம்மாக்களை மதிப்பதற்கு நிறைய காரணங்கள் இருந்தன மேல்நாட்டு கவிஞர்களும் இலக்கியவாதிகளும் மாளிகை வாசிகளின் மன உணர்ச்சிகளையே இலக்கியங்களாக படைத்தார்கள் அவர்களுக்கு அடிமட்டத்தில் இருக்கும் மக்களின் மனக்கொதிப்பு புரியாது தெரியாது சேஷ்பியர் ஆகட்டும் உமர்க்கயாம் ஆகட்டும் ஏழைகளின் உணர்வுகளை புறக்கணித்தே படைப்புகளை உருவாக்கி இருப்பார்கள்

ஆனால் இந்திய இலக்கியவாதிகள் அப்படியல்ல மக்களின் உணர்ச்சிகள் எழுச்சிகள் இலட்சியங்கள் ஆர்வங்கள் அனைத்தையுமே இயல்பான மொழியில் யதார்த்தமாக பாடுவார்கள் அவர்களுடைய கவிதையில் இசை என்பது ஒரு உறுப்பாகவே இருப்பதனால் மக்கள் மனதில் ஆழமாக பதிந்துவிடும் இந்த தன்னமயை சங்ககால தமிழ்ப் பாடல்களில் இருப்பதை இன்று கூட நாம் அறியலாம் 


அந்த கவிதைகளில் நேரிய பெருமிதமான நடைஅழகும் இயற்கையான சொல்லழகும் சுற்றுப்புறத்தில் உள்ள ஒலி அசைவுகளின் சந்தலயமும் காணும் போது பழங்கால புலவர்களின் உள்ளுணர்வை தம்மால் புரிந்து கொள்ள முடிகிறது நமது தமிழ் இலக்கியம் சங்ககாலத்தில் ஒரு வித நெருப்புத் தன்மை கொண்டதாக இருந்தது என்றால் வடபுலத்தில் இருந்து பவுத்தமும் ஜைனமும் தமிழகத்திற்குள் வந்த பிறகு வடமொழியில் இருந்து பல சொற்கனை பெற்று தனது உச்சரிப்பு திறனில் புதிய பொலிவு பெற்றது இதனால் முன்பை விட தமிழ் மொழிநடை வீருகொண்டது

உலகம் முமுவதும் உள்ள பல சொற்களை தனது இயல்புக்கேற்றவாறு தனக்குள் சுவிகரித்து கொண்ட தமிழ் மொழி சமய  எழுச்சிக் காலத்தில் சைவ வைஸ்னவ சமயங்கள் புத்தொளிப் பெற்று மக்கள் மத்தியில் பரவியது நாடாண்ட மன்னர்களும் கடல்கடந்து பொருள் ஈட்டிய தனவந்தர்களும் நாடு முமுவதும் பல திருக்கோவில்களை எழுப்பினார்கள் சமய அடியார்கள் பலர் தோன்றி ஆலயங்களுக்கு சென்று திருப்பாடல்களை பலவற்றினை பாடி இறைவனையும் மக்களையும் ஆனந்தக் கடலில் மூழ்கடித்தார்கள்

இந்த வேளையில் பக்தி இயக்கமும் பக்தி இலக்கியமும் மேலும் வளர்ந்து தமிழ்தாயின் திருமேனியை செழிப்புற செய்தன பல்லவர்களும் சோழர்களும் தங்களது அரசு எல்லைகளை விரிவாக்கி சாம்ராஜ்யம் அமைக்க அடிகோலினர் தமிழ் வீரமறவர்கள் கடல்கடந்தும் சென்று தங்களது ஆதிக்கத்தை நிலைநாட்டினர் அப்படி அவர்கள் கடல் கடக்கும் போது போர் தளவாடங்களை மட்டும் கப்பலில் ஏற்றிச் செல்லவில்லை அன்னை தமிழ் வளர்க்கும் அருந்தவப் புலவர்களையும் ஏற்றிச் சென்றனர் இதனால் தமிழ் இலக்கியத்தில் பரணி, கலம்பகம், முதலிய புதிய பிரபந்த வகைகள் பிறந்தன புதிய பல காப்பியங்களும், காவியங்களும் தமிழக்கு புதுசுவை கொடுத்தன.


சோழ பேரரசின் காலத்தின் ஸ்ரீ ராஜ ராஜ விஜயம் என்னும் காவியமும் ராஜ ராஜஸ்வரம் என்ற நாடக இலக்கியமும் வீராணுக்க விஜயம் வீர சோழ அனுக்கன் என்ற வீரர்களின் புகழ்பாடும் காப்பியங்களும் தோன்றின நாராயண பட்டன் என்பவர் எழுதிய குலோத்துங்க சோழ சரிதையும் வீரத்தலைவன் பாசமையகோலா மாமுனி இயற்றிய பூம்புலியூர் நாடகம் என்னும் நாடாக காப்பியமும் ஜெயம் கொண்டாரின் கலிங்கத்துப் பரணியும் சேக்கிழார் பெருமானின் பெரியபுராணமும் இந்தக் காலக் கட்டத்தில் கிடைத்த தமிழ் சொத்து எனலாம்

இந்த சுழலில் தான் ஆழ்வார்களின் பலர் பாம்பனையிவ் பள்ளிக்கொண்ட பரந்தாமனின் திவ்ய அவதாரமான ஸ்ரீராமச் சந்திர மூர்த்தியின் சத்திய வாழ்க்கையை தங்களது பாசுரங்களில் பாட ஆரம்பித்தனர் இதுவரை வால்மிகி காட்டிய மாமனிதனான ஸ்ரீராமன் ஆழ்வார்களின் பக்தி பிராவாகத்தல் பிறவிப்பெருங் கடலில் நீக்கவல்ல இறைவனாக காட்டப்பட்டார். அப்போது தான் கவிச் சக்கரவர்த்தி கம்பன் வருகிறான்

வானத்தில் ஆயிரம் நட்சத்திரங்கள் ஜொலித்தாலும் நிலவின் அழகு என்பது தனியானதுதான் இரவு வானத்தில் முழுநிலா இளவரசு என்பது போல கம்பன் என்பவன் தமிழ் கவிஞர்களில் சக்கரவாத்தி என்றால் அதில் மிகையில்லை கம்பன் படைத்த இராமாயாணம் தமிழர்களின் தலைசிறந்த இலக்கிய செல்வமாகும்


கம்பனின் இராமகாதையை ஒரு முறை படித்தால் அழகிய கதை தெரியும் மறுமுறை படித்தால் அவனின் கவிதா விலாசம் தெரியும் வேறோரு முறை படித்தால் ஆழமான தத்துவங்கள் தெரியும் இப்படி ஒவ்வொரு முறையும் ஆழ்ந்து படிக்க படிக்க அளவிட முடியாத அதன் பெருமை புதிது புதிதாக தோன்றும்

கம்பன் காவியத் தலைவனான ஸ்ரீராமபிரான் மீது பக்தி கொண்டு காவியத்தை இயற்றியிருக்கலாம் ஆனால் கம்பனின் ராமபத்தியால் கவிதையின் இலக்கிய நயம் என்பது சற்றும் குறையாது இருப்பதை காணலாம் இதற்கு காரணம் கம்பன் என்ற மாபெரும் கலைஞன் கவிஞன் கதையின் ஒட்டத்தில் மட்டும் மனதை லயிக்க செய்யாமல் கவித்துவ ஆற்றலில் மனதை முழுமையாக ஆழ்த்தி விடுகிறான்

தான் மட்டும் இரசனையில் கரைந்து போகாமல் படிக்கும் வாசகனையும் கவிகளின் ஒசைநயத்திலும் தாள கட்டுகளிலும் வார்த்கைளின் அழுத்தத்திலும் கருத்துகளின் அமைப்பிலும் ஆழந்து போக செய்கிறான்  இராமகாதையின் தனிச்சிறப்பு கண்ணாடிகளில் காட்சிகளை மாறி மாறி காட்டி மனறப்பது போல் இல்லாமல் கதாப்பாத்திரங்களின் உண்மை இயல்புகளுக்கு ஏற்றவாறு உணர்ச்சிகளை மிகைப்படுத்தியும் இயல்பு படுத்தியும் கட்டுப்படுத்தியும் அமைத்திருக்கும் வீதம் மிகவும் வியப்புக்குரியது


கம்பன் கதாப்பாத்திரங்களின் உணர்வுகளை உரையாடல்களை விவரிக்கும் போது கையாளும் தமிழ் நடை நம்மை சீலிர்க்க வைக்கிறது ஒரு மொழியின் ஆளுமையால் இத்தனை ஜால வித்தைகனை காவியங்களில் செய்து காட்ட கம்பன் ஒருவனால்தான் முடியும் அவனுக்கு இணையாக  இன்று வரை அத்தகைய சொற்சிலம்பாடும் இலக்கியவாதிகளை உலகில் உள்ள எந்த மொழியிலும் காண முடிய வில்லை.               

கம்பராமாயணத்தை படிக்கின்ற போது அது வால்மிகியின் மூலக்கதையை பின்பற்றி எழுதியதாகவே நமக்கு தெரிய வில்லை கதாமாந்தர்கள் தமிழகத்திற்குள்ளேயே நடமாடுவது போன்ற ஒரு பிரம்மை ஏற்படுபிறது. அவன் சரயு நதியின் அழகை வர்ணணை செய்யும் போது அது இந்தியாவின் வடக்கு மூலையில் அயோத்தியில் ஓடுவதாக நம்மால் நினைக்க முடியவில்லை. தஞ்சை மண்ணில் பெருக்கெடுத்து ஓடும் அன்னை காவேரியை கம்பன் வார்த்தைகளாக வார்ப்பது போல தான் இருக்கிறது. குகன் என்ற கதாபாத்திரத்தை அறிமுகப்படுத்தும் போது குகனின் அளவு கடந்த அன்பும், பக்தியும்,தியாக உணர்வும், சிவபெருமானுக்கு தனது கண்களையே பிடுங்கி கொடுத்த கண்ணப்ப நாயனார் தான் நம் கண்முண்ணால் நிற்கிறார்.

மனிதர்களில் எத்தனை வகையான குணமுடையவர்கள் உண்டோ அத்தனை சுபாவங்கள் உடைய கதாபாத்திரங்களை கம்பன் படைப்பில் காண முடிகிறது. இராமனின் வீரம் அவன் பின்பற்றும் தர்மத்தின் கம்பீரம் இவைகளை காணும் போது நம்மாலும் இப்படி வாழ முடியாதோ என்ற ஏக்கத்தை நமக்குள் கொளுந்துவிட்டெரிய செய்கிறது. இது மட்டுமல்ல இராமனின் அழகை கம்பன் வர்ணித்துப் பாடும் போது ஆண் மக்களுக்கு கூட இராமன் மீது மையல் வருகிறது. 


கம்பன் கதாநாயகனின் சிறப்புகளை மட்டும் ஒருதலைபட்சமாக பாராட்டவில்லை இராமனுக்கு எதிரியான இராவணனின் சிறப்புகளையும், பெருமைகளையும் சரிக்கு சமமாகவே விவரிக்கிறார். இராவணனின் உருவ அழகையும், அறிவு திறமையையும், வீரத்தின் மாட்சிமையையும் கம்பன் வாயால் கேட்கும் போது அடடா  எவ்வளவு சிறந்த ஆண்மகன் இவன் பெரிய மலையை சிறிய உளி பிளப்பது போல இத்தனை சிறப்பு மிக்க மாவீரனை காமம் என்ற கீழ்மை குணம் தரைமட்டமாக்கி விட்டதே என்ற பட்சதாபம் நமக்கே ஏற்படுகிறது

சீத்தாபிராட்டியின் கற்பின் வெடிப்பும், மண்டோதரியின் சோகத்துடிப்பும், சூர்பனையின் வஞ்சனை நடிப்பும், அனுமனின் பக்தி என்ற படிப்பும் நம் கண்முன்னே தத்ரூபமாக கம்பன் கொண்டு வந்து நிறுத்தும் போது இந்த கவிஞனின் சொல்வளமும், பொருள்வளமும், கற்பனை வளமும் தான் இமயமலை போல எவ்வளவு பெரியது, எவ்வளவு நேர்த்தியானது என்ற ஆச்சரியம் ஏற்படுவதை தவிர்க்கவே முடியாது கம்பராமாயணம் என்பது வார்த்தைகளால் வடித்த காவியம் மட்டும் மல்ல உணர்வு என்ற வண்ணத்தூரிகையால் வரையப்பட்ட ஓவியமும்மாகும்.

கம்பன் இராமனின் ஒழுக்கத்தை சீத்தா என்ற மாதர்குல மாணிக்கத்தின் கற்பின் திறத்தை வெளிகாட்டதான் இராமாயணத்தை படைத்தான் அறிந்தோ அறியாமலோ இராமனுக்கு இணையாக இராவணன் வளர்ந்து நிற்கும் போது ஒருவேளை கம்பன் திட்டமிட்டுதான் இராவணனின் கதாபாத்தரத்தை இத்தனை உயரத்திற்கு தூக்கி நிறுத்துகிறானோ என்ற சிந்தனை நமக்கு ஏற்படுகிறது சில கவிஞர்களின் இயல்பு ஒரு மனிதனின் நற்பண்புகளையே விவரித்து கொண்டு வருவது பின்பு திடீர் என அதை நிறுத்தி அதே பாத்திரத்தின் மிகத் தீய பண்புகளை சட்டென்று காட்டி நமது மனதில் ஆளப்பதித்து விடுவார்கள் கம்பன் இதற்காக கூட இப்படி செய்திருக்கலாம்.


இல்லையென்றால் இராமன் சகல தர்மங்களின் பிறப்பிடம், நற்பண்புகள் என்பதே இராமனிடம் இருந்துதான் வெளிப்படுகிறது. இன்னும் சொல்லப் போனால் இராமனிடம் இருப்பது தான் தர்மமே தவிர மற்ற ஏதுவும் தர்மம் ஆகாது. இவ்வளவு சிறப்பு மிக்க ஒரு இராமனுக்கு எதிரியாக வந்து வாய்ப்பவன் வெறும் சோற்றுப் பிண்டமாக இருக்க முடியுமா?, இருந்தால் கூட அது ராமனின் சிறப்புக்கு கட்டியம் கூறுவது போல் அமையுமா? ஒரு தலைவன் தனக்கு நிகரான மற்றொரு தலைவனோடு தான் நட்பு பாராட்ட வேண்டும் பகையும் கொள்ள வேண்டும். தகுதி இல்லாத நட்பும் பகையும் ஒரு மாமனிதனின் ஆத்மாவை களங்கப்படுத்திவிடும். அதனால் தான் ராமனோடு மோதுகின்ற தகுதியும், கம்பீரமும் ஒருங்கே கொண்டவனாக இராவணனை கம்பன் காட்டுகின்றானோ என்றும் தோன்றுகிறது.

இராவணன் மிகவும் உயர்ந்தவன் ஒரு தலைவனுக்குகேற்ற அனைத்து பண்புகளும் ஒருங்கே கொண்டவன் அவனது வீழ்ச்சி என்பது நெஞ்சில் இருந்து மறையவே மறையாத அவலமாகும் வால்மீகி ராவணனை கலப்படம் அற்ற கொடியவனாக காட்டினார். ஏன் என்றால் வால்மீகி கண்ட இராமன் சாதாரண மனிதன், கம்பன் இராவணனிடம் உள்ள சிறப்புகளை எடுத்துகாட்டுவதற்கு இராமனை கம்பன் மனிதனாக பார்க்கவில்லை. முழு முதற் முப்பொருளான இறைவனின் அம்சமாகவே பார்க்கிறார் அதனால் தான் அவன் இசையில் வல்லவன், வேத பண்டிதன், கைதேர்ந்த யுத்த தந்திரி, வெற்றிகளை மட்டுமே சுவைபார்த்து அறிந்தவன் என்று இராவணச் சிறப்புகளை அடுக்கி கொண்டே போய் கடைசியில் இராமபானம் இராவணனை வீழ்த்தியது போல் தனது வார்த்தைகளால் ஒரே அடியாக அடித்து யுத்த களத்தில் வீழ்த்துகிறார் அந்த அவல காட்சியை காணும் போது நம் இதயம் அடித்துக் கொள்கிறது அடடா  மாவீரன் ஒருவன் காமத்தால் மதியிழந்து போனானேன் என்று துடித்து கொள்கிறது.

சீதையின் மேல் மோகம் கொண்ட ராவணன் யுத்த களத்தில் பரிதாபகரமான முறையில் தோல்வியடைந்து மாண்டுவிட்டான் மன்னன் விழ்ந்தான் என்ற செய்தி அரசி மண்டோதரிக்கு எட்டுகிறது வேரற்ற மரம்போல விழுந்து அழுத அவள் தனது கணவன் மாண்டு கிடக்கும் மரணபூமியை நோக்கி ஓடுகிறாள்


அங்கே மலை சாய்ந்து கிடப்பது போல் அவள் காதல் மணாளன் சாய்ந்து கிடக்கிறான் கொட்டிய இரத்தத்தின் சூடு இன்னும் தனியவில்லை, அவன் உடல் முழுவதும் சல்லடைக் கண்போல அம்புகள் துளைத்திருக்கின்றன இந்த அவலக் காட்சியை பார்த்தாள் பார்த்த அவள் கண்களில் கடந்த காலம் மின்னலைப்போல வெட்டியது

எத்தனை திடகார்த்திரமான உடம்பு அவனுக்கு யானைகள் வந்து மோதினாலும் மோதிய யானைகளின் தந்தங்களையே உடைக்க வல்லது அவனது வீர மார்பு அவன் தோள்கள் திணவெடுத்து விட்டால் வான நோக்கி எழுந்து நிற்கும் மாமலைகள் கூட பொடிப் பொடியாகி விடும், அவன் நடந்தால் வானம் அதிரும் சிரித்தால் திசைகள் கிடுகிடுக்கும் அப்படிபட்ட மாவீரன் அந்தோ பரிதாபம் இரத்த சேற்றில் வீழ்ந்து கிடக்கிறானே என்று எண்ணிப்பார்த்தாள்

அவன் இதயம் வெடித்து அழுகை வார்த்தைகளாக கொப்பளித்தது. அந்த காட்சியை கம்பன் அழகு தமிழால் கவிநயம் சொட்ட சொட்ட வடித்து தருகிறான் படிக்கும் நமக்கு அழுகையும் வருகிறது, தமிழனின் ஆற்றல் கண்டு ஆனந்தமும் வருகிறது.

     வெள்ளெருக்கஞ் சடைமுடியான் வெற்பெடுத்த
        திருமேனி, மேலும் கீழும்,
     எள்ளிருக்கும் இடன் இன்றி, உயிர் இருக்கும்
         இடன்நாடி, இழைத்தவாறே
   கள்ளிருக்கும் மலர்கூந்தல் சானகியை
         மனச்சிறையில் கரந்த காதல்
   உள்ளிருக்கும் எனக்கருதி உடல்புகுந்து
         தடவியதோ ஒருவன் வாளி

சிவ பெருமான் வாசம் செய்கின்ற திருக்கயிலாய மலையையே பெயர்ந்து தூக்கிய திருமேனியில் மேலிருந்து கீழாக எள்ளளவு இடம் கூட இல்லாமல் இராம பானம் துளைத்து எடுத்துருக்கிறதே அத்தனை கோபமா இராவணன் மீது? இராமன் என்பவன் சத்திய சொரூபன், சாந்த மூர்த்தி அவனுக்கு இவ்வளவு கோபம் வரவே வாரது பின்னர் எதற்காக சல்லடையாக இராவணன் உடலை ஆக்கிவைத்திருக்கிறார், இதற்கும் காரணம் இருக்கும்.


குடித்தால் தான் மது போதையை தரும் காமம் என்பது கண்களால் பார்த்தாலே போதையை ஏற்றிவிடும் நாகப்பாம்பாகும் சீதையின் அழகு என்பதும் இராவணனை பொருத்த வரை போதையானதே அத்தகை போதை தருகின்ற ஜானகியின் மீது கொண்ட காதல் இராவணனன் மனதில் இருக்கிறதா  அல்லது அவனது உடலில் வேறு எந்த பகுதியிலாவது இருக்கிறதா எதில் உண்டு என்பதை அறிந்து கொள்ள அவகாசம் இல்லை என்பதனால் அந்த காமக் காதல் எங்கிருந்தாலும் அழிய வேண்டும் என்பதற்காக இராம பானம் உடலை துளைத்தெடுத்து சல்லடையாக்கி விட்டதோ என்று மண்டோதரி நினைக்கிறாள், அந்த நினைவோடவே அழத வண்ணம் தானும் உயிர்நீக்கி கொண்டாள். எதிரியானவன் தோற்று கிடக்கும் போது கூட அவனது பெருமைகளை நிலை நிறுத்தி காட்டும் கம்பனின் கவிதை திறனுக்கு நிகர் ஏதும் இல்லை.

இராமாயணம் எவ்வளவு பெரிய கதை என்று நமக்கு தெரியும் அவ்வளவு பெரிய காவியத்தை நான்கே வரியில் சுருக்கி சூட்சமமாக கம்பன் சொல்கிறான். அந்த பாடல் இராமாயணத்தில் பாலகாண்டத்திலேயே இருக்கிறது.

       சேலுண்ட வொண்கணாரில் திரிகின்ற
            செங்கால் அன்னம்
       மாலுண்ட நளினப்பள்ளி வளர்த்திய
            மழலைப் பிள்ளை
       காலுண்ட சேற்றுமோதி கன்றுள்ளிக்
            கனைப்பச் சோர்ந்த
       பாலுண்டு துயிலப் பச்சைத் தேரைதா
            லாட்டும் பண்ணை

    இந்த பாடலில் நேரிடையான பொருள் மீன்களைப் போன்ற விழிகள் உடைய பெண்கள் அன்னம் போல் நடக்க வேண்டும் என்பதற்காக அன்னப் பறவைகள் தண்ணிருக்கு அருகில் நடக்கிறதாம் தாய்ப் பறவைகள் நடை நடந்து காட்ட குஞ்சுப்பறவைகள் தாமரை இலை மீது படுத்து ஓய்வெடுக்கிறதாம்

அப்படி ஓய்வெடுக்கும் அன்னக் குஞ்சுகளுக்கு எருமைபால் குடிக்க கிடைக்கிறதாம் இது எப்படி சாத்தியமாகும் என்று யாரும் நினைக்க வேண்டாம் உடல் சூட்டை தணிக்க தண்ணீல் ஒய்வெடுக்கும் எருமைகள் தனது கன்றுகளை நினைத்து கனைக்கிறதாம் அப்படி கனைக்கும் போது பெருகி வரும் பால் தாமரை இலைகளின் மீது தெரிக்கிறதாம் இதை உண்ட அன்னக்குஞ்சுகள் தவளை தாலாட்ட உறங்குகிறதாம்.

அது சரி இது இயற்கை காட்சியையும் நாட்டு செழுமையையும் குறிப்பிடும் வர்ணனைகள் தானே இதில் எங்கே இராமாயணம் கதை இருக்கிறது என்று குழப்பம் வர வேண்டிய அவசியமே இல்லை ஆழ்ந்து சிந்தித்தால் உள்ளே இருக்கும் கதை தெளிவாக தெரியும்

எறுமையிடம் சுரக்கின்ற பால் அதன் கன்றுகாக தான் ஆனால் எறுமை மாட்டை வளர்ப்பவர்கள் பாலை கன்றுக்கு கொடுக்காமல் தங்களது சொந்த பயனுக்கு கறந்து கொள்வார்கள் இந்த காட்சியிலோ எருமையின் பால் கன்றுக்கும் கிடைக்கவில்லை அதை வளர்க்கும் மனிதனுக்கும் பயன்தர வில்லை சம்பந்தமே இல்லாத அன்னக் குஞ்சுகளுக்கு எருமையின் பால் கிடைக்கிறது

இராமாயணத்தில் இராமன் என்ற கன்றுக்கு தசரதன் மனிமகுடம் என்ற பாலை சுரக்க துவங்கினான் ஆனால் கையேயி இராமனுக்கு பால் கிடைக்காத படியும் தன் மகனாகிய பரதனுக்கு கிடைக்க வேண்டும் என்றும் தடுக்க போனாள்  அதனால் மணிமகுடம் இராமனுக்கும் கிடைக்காமல், பரதனுக்கும் கிடைக்காமல், பாதுகை என்ற அன்னக்குஞ்சுக்கு கிடைத்தது

இதுதானே இராமயணத்தின் மிக நீண்ட கதை அதை நான்கே வரிகளில் சொன்ன கம்பனின் கவிதை திறமைக்கு ஆயிரம் நமஸ்காரம் செய்யலாம் இளைய தலைமுறையினர் கம்பனை வணங்க வேண்டும் என்றால் கம்பராமாயாணத்தை ஒரு முறை ஒரே ஒருமுறை படியுங்கள் கம்ப சாகரத்தில் கரைந்து போவீர்கள்.  



Contact Form

Name

Email *

Message *