( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........!! click here )வரும் ஞாயிறு அன்று அமிர்த தாரா தீட்சை அளிக்கப்படுகிறது appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846 

Share !
This Post

உஜிலாதேவி பதிவுகளை
மின்னஞ்சலில் பெற

ஒரு ஈழத்தமிழரின் பண்பாட்டுக் காதல் !


    லங்கை தமிழர் ஒருவர் நார்வே நாட்டில் இருந்து மின்னஞ்சல் ஒன்று அனுப்பி இருந்தார் அதில் நான் தமிழ் பண்பாட்டையும் அதன் முழு அர்த்தத்தையும் புரிந்து கொண்டவன் நமது முன்னோர்கள் வகுத்த வழி நடந்த பாதை அனைத்துமே புனிதமானவைகள் என நம்புபவன் நம்மால் புதிய நல்ல விஷயங்களை உருவாக்க முடியவில்லை என்றாலும் நமது முன்னோர்கள் உருவாக்கியதை சிதைக்க கூடாது என்ற ஆசையும் கொண்டவன் சொந்த நாட்டில் சுதந்திரமாக வாழமுடிய வில்லை என்றாலும் வாழும் நாட்டில் அது அந்நியமானதாக நமது பண்பாட்டிற்கு மாறுபட்டதாக இருந்தாலும் அங்கே கூட நமது நிஜமான முகத்தை மறைக்காமல் அந்நிய சாயம் பூசாமல் வாழ வேண்டும்மென நினைப்பவன்

இதனால் நம் மதத்தை என்னால் முடிந்த வரை கடைபிடிக்கிறேன் மற்றவர்களையும் கடைபிடிக்கும் படி வேண்டுகிறேன் நான் சொந்த நாட்டில் தொழில் முறை ஓவியன் என்பதனால் நமது தெய்வங்களின் திருவுருவ படங்களை வரைந்து நம்மக்களின் பூஜையறையில் வைத்துக் கொள்ள கொடுக்கிறேன் இதை தொழிலாக அல்ல என மதத்திற்கு செய்யும் தொண்டாகவே கருதுகிறேன் இதனால் நமது தெய்வ உருவங்களை வரையும் போது மரபுகள் சிறிது கூட வழுவாமல் இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன் இதில் எனக்கு தற்போது ஒரு சிறிய சந்தேகம் வந்துள்ளது அதை உங்களால் தீர்க்க முடியும் என்று நினைத்து இந்த மடலை எழுதுகிறேன்


தமிழ் கடவுள் முருகன் என்பது நமக்கு நன்றாக தெரியும் முருகனின் பவித்திரமான தோற்றத்தை பல கோணங்களில் பல ஓவியர்கள் வரைந்துள்ளார்கள் அதில் மிகவும் முக்கியமானது வள்ளி தேவயானையுடன் கூடிய சுப்பிரமணியர் ஓவியத்தை சொல்லலாம் அந்த ஓவியம்  வரையும் போது அன்னையர் இருவர் கரங்களிலும் தாமரை பூ இருப்பதாக வரையப்படுகிறது இது தவறு இப்படி வரைவது பழைய மரபுக்கு விரோதமானது என்று ஓரளவு விஷயம் தெரிந்த வயதான பெரியவர் ஒருவர் சொல்கிறார் அவர் கூறுவது நிஜமா நிஜம் என்றால் சரியான முறையில் வரைவது எப்படி? என்று அவர் கடிதம் விரிந்து இருந்தது

முருக கடவுளின் தோற்றமே பல தத்துவங்களை நமக்கு விளக்கும் அவரது கையில் உள்ள வேல் ஞானத்தையும் வாகனமான மயில் பிரணவ மந்திரத்தையும் பாதத்தில் நெளிந்து கிடக்கும் பாம்பு குண்டலினி சக்தியையும் காட்டுவதாகும் தேவிமார் இருவரோடு அவர் காட்சி தருவதிலும் ஆழ்ந்த கருத்துண்டு தேவயானை சரியை தத்துவத்தையும் வள்ளி பிராட்டியார் கிரியை தத்துவத்தையும் உணர்த்துபவர்கள் இப்படி சரியை கிரியை என்ற இருவேறு கருத்துக்களை சொல்லும் தேவியரின் திருவுருவத்தில் ஒரே மலர்கள் இருப்பது கருத்து முரணாகும் இதில் உங்களுக்கு சொல்லிய பெரியவரின் அபிப்பிராயம் நிச்சயம் சரியென்றே எனக்கு தோன்றுகிறது


சித்திர சாஸ்திரத்தை விளக்கும் பல நூல்களில் இதற்கான பதில் இருக்கிறதா என்று தேடிபார்த்தேன் சித்திரை தீபிகை என்ற மிக பழமையான வடமொழி நூல் ஒன்றில் இதற்கான விளக்கம் தெளிவாகவே சொல்லப்பட்டிருக்கிறது அதில் சிவகுமாரனான கார்த்திகேயனின் திருவுருவம் சிவந்த மேனியும் அபய வரதத்துடன் கூடிய கரங்களும் மார்பில் சாய்ந்த வேலும் திருவடியில் மயிலும் தாமரை ஏந்திய கரத்துடன் வள்ளி தேவி வலப்புறத்திலும் நீலோத்பலம் மலர் ஏந்திய கரத்துடன் தேவயானை இடப்புறத்திலும் இருப்பதே சரியான தோற்றம் என்று சொல்லப்பட்டிருக்கிறது

தற்போது நடைமுறையில் உள்ள எளிதாக கிடைக்க கூடிய பல முருககடவுளின் படங்களையும் பார்த்தேன் அவற்றில் நீங்கள் குறிப்பிட்டது போலவே தாமரை ஏந்திய கரங்களுடன் தேவியர்கள் காட்சி தருகிறார்கள் இது தத்துவப்படி மிகவும் தவறு திருமுருகனின் திருவிழிகள் இரண்டும் சூரிய சந்திரனை குறிப்பதாகும் வலப்புற கண்ணாகிய சூரியன் தாமரை ஏந்திய வள்ளியை நோக்கிய வண்ணம் உள்ளது சூரியனை தரிசனம் செய்து கொண்டிருக்கும் காலம் வரை தாமரை பூ வாடாது சுருங்காது அதை போலவே சந்திரன் என்ற இடது கண்ணால் நோக்கப்படும் நீலோத்பலம் என்ற குமுத மலர் அதாவது அல்லி சந்திரன் இருக்கும் வரை இதழ்களை சுருக்காது எப்படி பிராட்டியார் இருவர் கையிலும் உள்ள மலர்கள் முருகனின் திருபார்வையால் வாடாமல் இருக்கிறதோ அதை போல உள்ளன்போடு முருகப்பெருமானை உபாசிக்கும் பக்தர்களின் இதயமும் சந்தோசத்தால் மலர்ந்திருக்கும் என்பதே தத்துவ விளக்கம்


நமது முன்னோர்களின் அறிவும் தெளிவும் எவ்வளவு நுணுக்கமானது பாராட்டுதலுக்குரியது என்பதை இரண்டு சிறிய மலர்களின் விஷயத்திலேயே தெரிந்து கொள்ளலாம் இவ்வளவு அறிவார்த்தமான முன்னோர்களை பெற்ற நமது தமிழ்மக்கள் இன்று ஐரோப்பிய கலாச்சாரம் என்ற அந்நிய முகமுடியை அணிந்து கொண்டு பெருமைப்படும் போது சொந்த நாட்டிலேயே வாழ முடியாமல் அகதிகளாக அல்லல்படும் நமது ஈழத்தமிழர்கள் நம் மதத்தின் மீதும் பண்பாட்டின் மீதும் கொண்டிருக்கும் அளவிட முடியாத அபிமானத்தை நினைக்கும் போது மெய்சிலிக்கிறது

இந்த ஈடுபாடு ஈழமக்கள் மத்தியில் இருக்கும் வரை அவர்கள் நாடற்ற அனாதைகளாக இன்று துரத்தப்பட்டு வனவாசத்தை மேற்கொண்டு இருந்தாலும் நிச்சயம் ஒருநாள் தங்களது தாய் பூமியை மீட்டேடுத்தே ஆவார்கள் என்ற நம்பிக்கை பிரகாசமாக ஒளிர் விடுகிறது ஆனால் சொந்த நாட்டில் வாழ்ந்தாலும் பண்பாட்டை குழிதோண்டி புதைத்து விட்டு ஐரோப்பிய வேசதாரிகளாக மாறிவிட்ட தமிழக தமிழர்களை நினைக்கும் போது இவர்களும் ஒருநாள் சொந்த மண்ணை இழந்து விட்டு நாடோடிகளாக மாரி விடுவார்களோ என்ற பயம் ஏற்படுகிறது.+ comments + 2 comments

நல்ல கட்டுரை. முருக பெருமான் நான் சிறு வயதில் வணங்கிய முதல் தெய்வம். தவறு செய்து விட்டு என் அப்பா முன் நிற்கும் போது உதை விழாமல் இருக்க வாயில் அடிக்கடி உச்சரிக்கும் வார்த்தை , முருகா முருகா என்பதுதான் , அவர் மனைவிகள் திருகரங்களில் இருக்கும் மலர்களை பற்றி எவ்வளவு விஷயமா? நம் முன்னோர்கள், மிகவும் அறிவாளிகள்தான்.! இன்று, இதை பற்றி நான் புரிந்துகொண்டேன்.

அருமையாக விளக்கம் சொன்ன , குருஜி ஐயா அவர்களுக்கு எமது நன்றிகள். வெளிநாட்டில் வசித்தாலும், நம் பண்பாடு மதம் மறக்காத இந்த ஈழத்து நண்பர் அவர்களை வணங்குகிறேன். அவரின் சேவைகள் தொடரட்டும். முருக பெருமான் அவருக்கு அருள் புரியட்டும். இப்படி பட்ட மனிதர்கள் மத்தியில், ஐரோப்பா நாடுகளில் வசிப்பதால், சொந்த மதத்தை கலாசாரத்தை மறக்கும் மனிதர்களும் இருக்கிறார்கள். உதாரணமாக வெளிநாட்டில் வசிக்கும் ஈழத்து இளையோர்கள்.!

ஈழத்து பல ஆண்கள் பெண்களிடம் இணைய அரட்டை அரங்கில் நான் பேசியிருக்கிறேன். முகம் பார்க்க முடியாமல் போனாலும், அவர்கள் பேசும் விதம் மூலம், அவர்கள் பண்பாடு மறந்த விஷயம் , ஐரோப்பா கலாசாரத்தில் மூழ்கியது எல்லாம் நான் அறிந்துகொண்டேன்.

உதரணமாக, 2 வருடம் முன்பு, நோர்வேயில் வசிக்கும் ஒரு ஈழத்து பெண்ணிடம் பேசினேன். அவள் வயது கேட்டேன் . 22 என்றாள். என் வயது என்ன வென்று அவள் கேட்டாள். மிகவும் நேர்மையாக 36 என்றேன். உடனே, அவள், ஹாய்! அங்கிள் , போய் அண்டியிடம் பேசுங்கள். எனக்கு கிழவன் வேண்டாம் என்று சொல்லி போய்விட்டாள்


இது , எனக்கு சிரிப்பை உண்டாக்கினாலும், சிறிது கோபத்தையும் உண்டாக்கியது. காரணம், அதே வயதுள்ள மலேசியா நாட்டு மலாய் பெண்களிடம் நான் பேசியிருக்கிறேன். என் வயதை சொன்னதும், abang (அண்ணன் ) என்று என்னை அழைத்து சில நிமிடங்கள் அவர்கள் பேசுவார்கள்.


மலாய் பெண்கள் மிகவும், மரியாதை தெரிந்தவர்கள். இது உண்மை. !பண்பாடிலும் கலாச்ச்சரட்டிலும் உயர்ந்த நமது பெண்களுக்கு ஏன் இது இல்லாமல் போனது? தயவு செய்து நான் அனைவரையும் சொல்கிறேன் என்று என்ன வேண்டாம். வெளிநாட்டில் வசிக்கும் ஈழத்து இளையோர்கள் மட்டும்தான் இப்படி. அவர்கள் முன்னோர்கள் வாழ்ந்த பூமியின் துயரங்களை அவைகள் மறந்து கொண்டிருக்கிறார்கள். குடும்பத்தில் மூத்தவர்கள் அவர்களுக்கு சரித்திரத்தை சொல்லி கொடுத்து, ஐரோப்பா கலாசாரத்தில் மூழ்காமால் அவர்களை பாதுகாக்க வேண்டும்.

முருக பெருமான் அவர்களுக்கு அருள் புரியட்டும். குருஜி அவர்களுக்கு எமது நன்றிகள்.

Anonymous
03:46

மதிப்புக்குரிய குருஜி, எங்கள் மதத்தை நோர்வேயில் கடைபிடிக்கும் இலங்கையர் பாராட்ட படவேண்டியவர். இலங்கையில் வசிக்கும் தமிழர்களும் இந்து மதத்தை சிறப்பாக கடைபிடிக்கிறார்கள். யுத்தம் முடிந்த பின்பு கடந்த இரு வருடங்களாக நல்லூர் கந்தசாமி கோவில் திருவிழா நல்லூர் கந்தசாமி கோவில் வருடாந்த உற்சவம் மிக சிறப்பாக நடைபெற்றது. வெளிநாடுகளில் வசிக்கும் பல ஆயிரக்கணக்கான இலங்கை பக்தர்கள் கலந்து கொண்டனர். இலங்கை தமிழர்கள் இந்துவாக இருப்பதிற்க்கும் ஈழ அமைவதிற்க்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. ஒரு பேச்சுக்கு ஈழம் அமைந்துவிட்டதாக வைத்து கொள்வோம் ஐரோப்பாவில் வாழும் இலங்கை தமிழர்கள் ஒருபோதும் ஈழத்திற்க்கு திரும்பமாட்டார்கள் ஐயா. கம்பதாசன் சொன்னது உண்மையே. மலாய் பெண்கள் மட்டுமல்ல ஐரோப்பிய பெண்கள் கூட வெளிநாடுகளில் உள்ள இலங்கை பெண்களை விட மிகவும் மரியாதை தெரிந்தவர்கள்.


Next Post Next Post Home
 
Back to Top