( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........!! click here )வரும் ஞாயிறு அன்று அமிர்த தாரா தீட்சை அளிக்கப்படுகிறது appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846 

Share !
This Post

உஜிலாதேவி பதிவுகளை
மின்னஞ்சலில் பெற

எச்சில் படாத வார்த்தைகள்...

   மாலை நேரத்தில் வீட்டு கொல்லைப்புறத்தில் நிற்கும் தென்னைமரத்தடியில் உட்கார்ந்து கொண்டு மேற்கு வானத்தை பார்த்து ரசிப்பது எத்தனை ஆனந்தம் அந்த இன்பரசத்தை வார்த்தையில் வர்ணிக்க கம்பனால் கூட முடியாது உலக மொழிகள் எல்லாவற்றிலும் உள்ள அழகான வார்த்தைகளை மட்டும் கோர்த்து ஒரு மாலையாக்கினால் கூட இந்த அழகிற்கு முன்னால் அது ஒரு தூசிதான் 

பசும்பொன்னை உருக்கி மேற்கு வானத்தில் வாரி கொட்டியது போல ஒளி வெள்ளம் நாலாபுறமும் சிதறி கிடந்தது அந்த வெள்ளத்தில் மிதக்கும் மேகதுண்டுகள் பறக்கும் படகுகளை போல காட்சி அளித்தது இன்னும் சில மேகங்கள் சூரியனின் சுடரொளி பட்டும் தனது கனத்த உடம்பால் கருமைவண்ணம் மாறாமல் பூதங்கள் போல கைகட்டி நின்றன அந்த மேக விளிம்புகளில் பட்டு சிதறும் ஆகாய வெளிச்சம் சிவப்பு நிற நெருப்புகளை பூதங்கள் தங்கள் உடல் முழுவதும் பூசிகொண்டது போன்ற ஒரு மாய தோற்றம் நமது கண்களை மது குடித்தது போல கிறங்க செய்தது 

பலருக்கு இந்த வானத்து அழகை ரசிக்க தெரிவதில்லை தினம் தினம் நமது வீட்டுக்கு பின்னால் மொட்டை மாடியின் மேலே அழகான கூந்தல் கலைந்தோட ஆனந்த கூத்தாடும் வானமங்கையை ரசிக்க தெரியாமல் பல ஆயிரம் மைல்கள் கடந்து அழகை ரசிக்க உல்லாச பிரயாணம் போகிறார்களாம் அவர்களை பார்ப்பதற்கு எனக்கு வேடிக்கையாக இருக்கும் நமது ஜன்னல் மீது வந்து அமர்ந்து அலகை உரசி கூர்மைபடுத்தும் சிட்டு குருவியின் லாவண்யத்தை ரசிக்காமல் வேடந்தாங்கலுக்கு சென்று எதை சாதிக்க போகிறார்கள்அழகு என்பது இடத்தில் இல்லை நமது மனதில் இருக்கிறது இலவம் பஞ்சு போன்ற மனதும் மென்மையான உணர்வும் கூர்மையான அறிவும் அமைந்து விட்டால் இறுக மூடிய ஐந்தடி அறைக்குள் கூட நயாகராவின் நளினத்தை காண முடியும் ஆனால் இவைகள் அனைத்தும் எத்தனை பேருக்கு ஒத்து இருக்கிறது வண்ண பூங்காவில் அமர்ந்து கொண்டு பூத்து குலுங்கும் மலர்களை ரசிக்காமல் மிளகாய் பஜ்ஜி தின்று பொழுதை ஓட்டும் மனிதர்கள் தான் அதிகம் 

இப்படி எண்ணம் என் மனதில் ஓடும் நேரத்தில் நண்பர் செல்வராஜ் வந்து என்னருகில் அமர்ந்தார் இன்று விடுமுறை என்பதனால் கொல்லைப்புறத்தில் காற்று வாங்குகிறாயா என்று கேட்டார் ஆமாம் என்று பதில் சொன்னேன் மாலை நேரம்தானே வெயிலும் இறங்கி விட்டது சற்று நேரம் காலாற நடந்து கோவிலுக்கு போகலாம் வேறு நண்பர்களை பார்க்கலாம் அது உடலுக்கு ஆரோக்கியமும் கூட அதை விட்டு விட்டு கொல்லை புறத்தில் உட்கார்ந்து வானத்தை வேடிக்கை பார்ப்பது நன்றாகவா இருக்கிறது என்று சொன்னார் 

அவர் சொல்லியதை அறிவுள்ள எவனும் தவறு என்று சொல்ல மாட்டான் நானும் அப்படி நினைக்கவில்லை எனக்கும் சுற்றி வருவதில் ஆர்வமுண்டு ஆனால் இன்று ஏனோ எனக்கு உட்கார்ந்த இடத்தில் மாலைவானத்தை ரசிக்க தோன்றியது அதை செய்து கொண்டிருக்கிறேன் இதை அப்படியே அவரிடம் சொன்னால் ஒன்று ஏளனம் செய்வார் அல்லது அது கிடக்கட்டும் என்னோடு வா என்று அழைத்து போய்விடுவார் எனக்கு அந்த இரண்டுமே இப்பொது தேவையில்லை என்று தோன்றியதனால் உடம்பு ஏனோ சோர்வாக இருக்கிறது அதனால் தான் வெளியில் போகவில்லை என்று பொய் சொன்னேன் பொய் சொல்லாமல் உண்மையை மட்டுமே பேசி வாழ்வதில் எவ்வளவு சிக்கல் இருக்கிறது ஊருக்காக நமது சுகந்திரத்திற்காக பொய் சொல்ல வேண்டிய சூழல் வருகிறது அதை தவிர்க்கும் தெம்பும் தைரியமும் அற்ப ஜீவனான நமக்கு இல்லைநான் சொன்ன பொய்யை செல்வராஜ் உண்மை என்று நம்பிவிட்டார் அடடே உடம்புக்கு என்ன ஜாக்கிரதையாக கவனித்து கொள் என்று அக்கறையுடன் சொன்னார் பிறகு அவரே மனிதன் எவ்வளவு தான் ஜாக்கிரதையாக வாழ்ந்தாலும் வரவேண்டிய நோய் வந்து தான் தீரும் கடவுள் நமக்கு உடம்பு என்ற வீட்டை வாடகைக்கு தந்திருக்கிறார் அதற்கு நோய் என்ற குடக்கூலி வாங்கி தான் தீருவார் என்று சொன்னார் அழகின் மீது ஆர்வமாக இருந்த என் மனது இப்போது செல்வராஜ் பேச்சை கேட்டவுடன் சட்டென்று மாறியது என்ன மனிதர் இவர் எதை எடுத்தாலும் கடவுள் தந்தது அவர் பார்த்து கொள்வார் அவரால் தான் எல்லாம் நடக்கிறது என்று பேசுகிறார் மனித வாழ்க்கைக்கு கடவுள் எதற்கு அவருடைய தேவை இல்லாமலேயே மனிதனால் வாழமுடியாதா என்று வாதம் செய்ய தோன்றியது 

நாம் நம் உடலை ஒழுங்காக கவனிப்பது இல்லை மனம் போன போக்கில் வாழ்கிறோம் ஆரோக்கியமற்ற செயல்களை செய்கிறோம் இதனால் நோய் வருகிறது அதை போய் கடவுள் தந்தார் என்று பேசுகிறீர்களே உங்கள் கடவுள் என்ன நோய்களை பரப்பும் வைரஸ் கிருமியா? அப்புறம் நோய் வாய் பட்டவன் சுகமாகி எழுந்து வந்தான் என்றால் கடவுள் குணமாக்கி விட்டார் என்கிறீர்கள் வைரஸ் கிருமியான உங்கள் கடவுள் வைத்தியராகவும் இருக்கிறாரா? என்று கேட்டேன் 

இதற்கு செல்வராஜ் பதில் ஏதும் சொல்லவில்லை அமைதியாக என்னை பார்த்தார் நீங்கள் பேசுவது கேட்பதற்கு நன்றாக இருக்கிறது இதையே மேடையில் பேசினால் கைதட்டலும் வாங்கலாம் ஆனால் அனுபவத்தில் உங்கள் பேச்சி வெறும் சுரக்காய்தான் என்று பதில் சொன்னார் உங்களால் பதில் சொல்ல முடியாத விஷயங்களுக்கு அனுபவம் அது இதுவென நொண்டி சமாதானம் சொல்லிவிடுகிறீர்கள் இது உங்களை போன்ற பக்த சிரோன்மணிகளின் வாடிக்கயான போக்கு என்று காட்டமாக நான் பேசினேன்நீங்கள் நான் வருவதற்கு முன்னால் வானத்தில் மேக கூட்டங்களை பார்த்து ரசித்து கொண்டு இருந்தீர்கள் அதில் ஒரு மேகம் உங்களுக்கு பூதமாக தோன்றலாம் உங்களை போலவே ரசிக்கும் வேறொருவருக்கு அதே மேகம் காட்டெறுமை கூட்டமாக தோன்றலாம் எனக்கு பூதமாக தெரிந்தது உனக்கும் பூதமாக தான் தெரியவேண்டுமென்று வாதிடமுடியுமா அவரவருக்கு ஒவ்வொரு பார்வை ஒவ்வொரு விதமான அனுபவங்கள் நான் காரியங்கள் அனைத்திற்கும் கடவுளே காரணம் என்று நம்புகிறேன் நீங்கள் செயல்களே காரணமென்று நம்புகிறீர்கள் இரண்டுமே நம்பிக்கை தானே தவிர இரண்டிற்கும் ஆதாரம் எதுவும் இல்லை என்று என் காட்டாமான பேச்சிக்கு பதில் சொன்னார் செல்வராஜ் 

உங்கள் கடவுளுக்கு வேண்டுமானால் ஆதாரம் இல்லாமல் இருக்கலாம் என் கருத்திற்கு நிஜமான ஆதாரங்கள் நிறையவே உண்டு இந்த உடம்பும் இதற்குள் ஓடுகின்ற உயிரும் பூத்து குலுங்கும் உணர்வும் சில ரசாயன கலவையால் உருவானதே தவிர கடவுளால் அல்ல இதை சோதனை கூடத்தில் வைத்து நிருபித்து காட்ட முடியும் உங்கள் கடவுளை எதாவது ஒரு சோதனை கூடத்தில் வைத்து நிரூபிக்க முடியுமா? முடியாது இன்று மட்டும் அல்ல இன்னும் எத்தனை காலமானாலும் அது நடக்காது காரணம் கடவுள் என்ற ஒரு பொருள் இந்த உலகில் இல்லவே இல்லை எனது பேச்சால் செல்வராஜ் கோபம் அடைய வேண்டும் என்பதற்காகவே இப்படி பேசினேன் 

பிறகென்ன இந்த உலகம் எத்தனை அழகானது இதில் ஆயிரமாயிரம் வண்ண பூக்கள் குத்தித்தொடும் நீரோடைகள் மேகமென கொட்டும் வெள்ளி அருவிகள் வண்ணத்து பூச்சிகள் அலகுகளில் புல்லாங்குழலை சுமக்கும் பட்டு பறவைகள் கால் முளைத்து குதித்தோடும் முயல்கள் மான்கள் ஏன் வளமான கருத்துக்களை வாரிவழங்கும் அறிவார்ந்த மனிதர்கள் இவைகளை எல்லாம் ரசிக்காமல் ரசிக்க தெரியாமல் கண்ணுக்கு தெரியாத புலங்களுக்கு அகப்படாத இல்லவே இல்லாத கடவுளின் அழகை ரசிப்பது போற்றி பாடுவது மண்டியிட்டு வணங்குவது முட்டாள் தனம் தானேஉலகமுழுவதும் சுவைமிகுந்த கனிவளங்கள் மலிந்து கிடக்கிறது உடலை தொட்டு தாலாட்டும் தென்றல் வீசிக்கொண்டே இருக்கிறது பாலும் தெளிதேனும் என்னை பருகமாட்டாயா என்று காத்து கிடக்கிறது இவைகளை எல்லாம் அனுபவிக்காமல் செத்த பிறகு சொர்க்கம் கிடைக்கும் ஆடி பாடலாம் ஆனந்த கூத்தாடலாம் என்று நம்புவது எத்தனை அறிவீனம் என்று பல நாட்களாக எனக்குள் ஊறிக்கிடக்கும் சிந்தனையை இவருக்குள் என்றாவது ஒரு நாள் கொட்டி தீர்த்துவிடவேண்டும் என்று முடிவு செய்ததினால் அவர் மனம் புண்பட்டாலும் பரவாயில்லை என பேசினேன் 

நீங்கள் சொல்வது முற்றிலும் சரிதான் மனித உடலும் உயிரும் விஞ்ஞானப்படி ரசாயன கலவையில் உருவானது தான் அதை நான் மனப்பூர்வமாக ஒத்துக்கொள்கிறேன் ஆனால் அந்த ரசாயனங்களை ஒன்றாக சேர்த்து ஒரு மனிதனை உங்கள் விஞ்ஞானத்தால் உருவாக்கி விட முடியுமா? மனிதனை கூட வேண்டாம் ஜீவன்களின் உடம்புகளில் ஓடும் ஒரே ஒரு துளி ரத்தத்தை உங்கள் ரசாயனம் உருவாக்குமா உருவாக்குமென்று நீங்கள் நிருபித்தால் நான் என் கடவுள் நம்பிக்கயை விட்டு விட சித்தமாக இருக்கிறேன் செல்வராஜின் பதில் பிசுறு தட்டாமல் தெளிவாக இருந்தது 

ஒரு காலத்தில் பறக்கும் வாகனம் என்பது கற்பனையாக இருந்தது மனித முயற்சி விமானங்களை உருவாக்கிய பிறகு கற்பனை நிஜமானது அதை போல புதிய மனிதனை சிருஷ்டிக்கும் சக்தியை நாளைய விஞ்ஞானம் கண்டிப்பாக பெரும் அப்போது உங்கள் கடவுள் சித்தாந்தம் ஓடி ஒழிந்துவிடும் என்று சளைக்காமல் பதில் சொன்னேன் எனது பதில் அவரை திருப்திபடுத்த வில்லை என்பது அவர் முக குறிப்பில் தெளிவாக தெரிந்தது அதனால் கடவுள் என்பது கண்ணுக்கு தெரியாத விஷயம் மட்டும் அல்ல அது இல்லாத பொருளை இருப்பதாக நம்பும் ஒரு மாய தோற்றம் கடவுள் இருப்பது உண்மையானால் அவர் யாரவது ஒருவர் கண்ணில் படவேண்டும் இது வரை கடவுளை பார்த்தவர்கள் யாருமே இல்லை பார்த்தேன் என்று சொல்பவர்களின் பேச்சி நம்பக்கூடியதாக இல்லை முன்னுக்கு பின் முரணாக இருக்கிறது என்று என் எண்ணத்தை தெரிவு படுத்தினேன்கன்னியாகுமரியில் இருந்து ராமேஸ்வரம் போகவேண்டுமென்றால் ஒரு பாதை இருக்கிறது அந்த பாதையில் பயணப்பட வேண்டும் அப்போது தான் ராமேஸ்வரத்திற்கு போக முடியும் பயணமே படாமல் கன்னியாகுமரி பாறைமேல் ஏறி நின்று இங்கிருந்து பார்த்தால் ராமேஸ்வரம் தெரியவில்லை அதனால் ரமேஸ்வரமே இல்லை என்பது மூடவாதம் அதை போல கடவுளை காண்பதற்கு ஒரு வழிமுறை இருக்கிறது அந்த வழியில் போனால் கண்டிப்பாக கடவுளை காணலாம் அப்படி முயற்சிக்காமல் கடவுளே இல்லை என்பது வீண் வாதம் என்றார் செல்வராஜ் 

பாதையில் நீங்கள் போனாலும் நான் போனாலும் ராமேஸ்வரத்தை அடைய வேண்டும் அதில் நீங்கள் மட்டும் தான் போக முடியும் நான் போக முடியாது என்பதை ஏற்றுக் கொள்ள இயலாது நீங்கள் சொல்லும் கடவுளை காணும் வழிமுறை ஒன்றாக இல்லை பலவாக இருக்கிறது அதில் எது சரி எது தவறு என்று வழியை உருவாக்கிய உங்களை போன்ற ஆத்திகர்களுக்கே தெரியவில்லை இது தான் பாதை இப்படி தான் பயணம் என்று உறுதியாக காட்டுங்கள் அப்படி காட்டும் வரை நீங்கள் சொல்லும் கடவுளை காணும் நெறிமுறை மோசடியாகவே இருக்கும் என்று உடனுக்குடன் பதில் சொன்னேன் 

விளக்கு எரிகிறது அந்த தீபத்தை இந்த திசையில் போனால் தான் காணமுடியுமென்று வரைமுறை செய்ய முடியுமா கடவுளும் தீபம் போன்றவர் தான் அவரை அடைய ஒரே ஒரு வழிமுறை என்பது எப்போதுமே ஆகாத விஷயம் மனிதனின் சுபாம் மனிதனுக்கு மனிதன் மாறுபடும் நான் கடவுளை விஷ்ணுவாக நம்புகிறேன் என் பக்கத்து வீட்டுகாரனோ அல்லாவாக நம்புகிறான் வேறொருவன் அவரை கர்த்தர் என்கிறான் இன்னொருவரோ அவரை ஜோதி பிழம்பு என்று நம்புகிறான் எங்கள் ஒவ்வொருவரின் எண்ணப்படி எங்களுக்கு கடவுள் காட்சி தருகிறார் எங்கள் சுபாவத்தின் படி நாங்கள் அவரை தரிசிக்கிறோம் நீங்கள் அவரை இல்லாத பொருளாக தேடுகிறீர்கள் அதனால் அவர் உங்களுக்கு இல்லாமலே தெரிகிறார் என்று அவரும் உடனுக்குடன் பதில் தந்தார்அவர் கூறுவதிலும் நியாயம் இருப்பதாக எனக்கு பட்டது அதோ பக்கத்து வீட்டு மாடியில் சிவப்பு தாவணி கட்டி பச்சை பாவாடை உடுத்தி துணி காயப்போட்டு கொண்டு நிற்கும் பெண் ஒரு அழகான தேவதை போல எனக்கு தெரிகிறாள் ஆனால் அவளை பெண் பார்க்க வந்த பல வரன்கள் அவள் அழகாக இல்லை என்று தட்டி கழித்து போய் விட்டார்கள் ஒருவர் கண்ணுக்கு அழகாக தெரிவது இன்னொருவர் கண்ணுக்கு அவலச்சணமாக தெரிகிறது பார்வைக்கு பார்வை வேறுபடுவது காட்சியில் இல்லை கருத்தில் புத்தியில் இருக்கிறது நான் வானத்து அழகை இயற்க்கையாக பார்க்கிறேன் செல்வராஜ் கடவுளின் ஓவியமாக பார்க்கிறார் அவ்வளவு தான் வித்தியாசம் கடவுள் உண்டா இல்லையா என்ற முடிவிற்கு நான் வரவில்லை என்றாலும் கடவுள் நம்பிக்கை மனித அனுபவத்தை அறிவை பொறுத்தே அமைகிறது என்பதை புரிந்து கொண்டேன் 

செல்வராஜ் தொடர்ந்து பேசினார் நீங்கள் ரசிக்கும் வானத்தில் இன்னும் சிறிது நேரத்தில் இருட்டு வரப்போகிறது நீல வானம் கருமையாக ஆகப்போகிறது அப்போது மின்மினி கூட்டங்கள் போல் பல நட்சத்திரங்கள் வானத்தில் சுடர்விடப்போகிறது இவ்வளவு நேரம் பார்க்க முடியாத நம் கண்ணுக்கு தெரியாத அந்த நட்சத்திரங்கள் இரவில் மட்டும் எங்கே இருந்து வருகிறது பகலில் இல்லாதது இரவில் மட்டும் எப்படி இருப்பதாக ஆகும் நிச்சயம் இல்லை அது பகலிலும் இருந்தது ஆனால் நம் கண் அதை காணவில்லை கடவுளும் அப்படி தான் அவர் எப்போது இருக்கிறார் அவரை காணக்கூடிய சூழல் வரும்வரை அவர் காத்திருப்பார் அதன் பிறகே அவர் காட்சி தெரியும் 

இன்னும் ஒரு முக்கியமான விஷயம் கடவுளை பற்றி பேசுகின்ற மொழிகள் எல்லாம் பல காலமாக பயன்படுத்தப்பட்டு எச்சிலாகி விட்டது எச்சில் படாத வார்த்தைகள் மட்டுமே கடவுள் இருப்பை நிருபித்து காட்டும் நீங்கள் எச்சில் படாத வார்த்தைகளை தேடுங்கள் அதில் கடவுள் தெரிவார் என்றார் எனக்கு எச்சில் படாத வார்த்தைகள் என்றால் என்னவென்று புரியவில்லை அப்படி என்றால் என்ன வார்த்தைகள் என்று அவரிடமே கேட்டேன் அவர் மெளனமாக இருந்தார்.     

+ comments + 1 comments

அற்புதம் மிகவும் அறுபுதமான பதிவு குருஜி,

கடவுள் இல்லை என்பவர்கள் இந்த பூமி, சூரியன், உயிரினம் அனைத்தும் எதற்சையாக தோன்றியது என்பார்கள், உண்மையில் அவர்களுக்கு எதற்சை என்ற வார்த்தைக்கே அர்த்தம் புரியவில்லை என்று தான் கூற வேண்டும், எதற்சை என்றால், நூற்றுக்கு ஒன்று, ஆயிரத்தில் ஒன்று, லட்சத்தில் ஒன்று அல்லது கோடியில் ஒன்று நடக்க இயலாத விஷயம் ஆச்சர்யமாக நடந்தது என்பது தான், எதற்சையாக நடந்தது, என்பார்கள்.

முதலில் நாம் வாழும் பூமி,
உயிரினங்கள் ஒன்று ஒருவாகும், அவை வாழ்வதற்கு ஏற்ற சூழல் இருக்க வேண்டும் என்பதை ஏற்கனவை திட்ட மிட்டது போன்று, சூரியன் என்ற நெருப்பு பந்து வெளிச்சத்திர்ககவும் உயிரினங்கள் உயிர் வாழவும், அதே சமயம் அந்த நெருப்பு அவர்களை எரித்து விடவும் கூடாது, என்பதற்கு சரியான தொலைவிலும் சூரியன், பூமியின் இடைவெளியும், வாழும் உயிரினத்திற்கு ஓய்வும் தேவை என்பதற்கு பூமி தன்னை தானை சுற்றுவதும், இரவு, பகல் என்று இத்தனை ஆண்டு காலமும் மாறாமல் வருவதும், நாம் வாழ தேவையான பஞ்சபூதங்களும் இப்புவியில் அடக்கி, மழை பொலிவு முதல், வீசும் காற்று வரையும், நாம் சுவாசிக்க ஆக்சிஜனை நாம் கண்டுபிடித்து சுவாசிக்கும் அவசியமும் நமக்கு இல்லை, தானாக ஆக்சிஜனை நமது உள்ளை செல்வது முதல், பூமியில் எந்த ஒரு ஏறி கற்களும் விழாமல் இருக்க கந்தபுலமும் கவசம் போன்று காப்பதும், முக்கால் பங்கு ஏறி கற்கள் வியாழன் என்ற மிக பெரிய கிரகத்தால் அங்கேயே தடுக்க படுவதும், புவியில் வாழும் உயிரினங்கள், உயிரற்றவை யாவும் மிதக்காமல் இருக்க புவி ஈர்ப்பும், இப்படி தினமும் மாறாமல் நடக்கும் இந்தனை விஷயமும் எதற்சையாக நடப்பவை என்று கூறி விட முடியாது,

இரண்டாவது உயிரினம்,

மனிதன் பிறக்கும் போது, ஒரு கை அளவு தான் இருக்கிறான், பின்பு அவன் வளர்வது அவனுக்கே தெரிவதில்லை, காலம் போக போக வளர்ந்து ஆளாகிறான், குறிப்பிட்ட வயது வந்ததும் அவனது உடலில் ஏற்படும் மாற்றங்களால் அவனுக்கு இன்னொரு ஜீவனை தருகிற சக்தி கிடைப்பது, குழந்தை கருவில் உருவாகுவதும், கருவில் வளர்வதும், குழந்தைக்கு உருவாகும் பசியை போக்க தொப்புள் கோடியில் மூலம் உணவு போவதும், பின்பு குழ்தை பிறந்ததும் அதன் பசிக்காக, தாய்க்கு பால் சுரபதும், ஒன்றும் தெரியாத அந்த புதிதாக பிறந்த குழந்தைக்கு மற்றவர்களை காட்டிலும் தாயிடம் மட்டும் இருக்கும்போது பாதுகாப்பாக கருதுவதும், பின்பு நடப்பது முதல் பேசுவது வரை, இவையும் எதற்சையனவை என்று கூறிவிட முடியாது, உண்மையில் இவை எதற்சையான விஷயம் என்றால், நமக்கு இருக்கும் கண் , காது,மூக்கு வாய், கை , கால் ஆனதும் யாரோ பார்த்து பார்த்து செய்தது போன்று அழகாக இரண்டு கண்களும் நேராகவும், இரண்டு காதும் சம அளவிலும், பக்கதிற்கு ஒன்றாக, கை கால்களும் இருக்காது, ஒரு கண் முன்னாடி இன்னொரு கண் பின்னாடி என்று, எருக்குமாறாக தான் இருக்குமே தவிர யாரோ திட்டமிட்டு செய்வது வைத்து போன்று அமைய வாய்ப்பு இல்லை.

பார்பதற்கு கண்
கேட்பதற்கு காது
சுவாசிபதர்க்கு மூக்கு
பேசுவதற்கு வாய்
நடப்பதற்கு கால்
வேலை செய்ய கை
சாப்பிட வாய், ஜீரணிக்க வயிறு, உணவில் இருந்து சத்துகளை எடுத்து கொள்ள ரத்தம், இரத்தத்தை சுத்தம் செய்யும் இதயம், இந்த பிரபஞ்சத்தையும் தாண்டி யோசிக்கும் மூளை, தேவையற்ற கழிவுகள் வெளியேற துவாரம்,

இவை அனைத்தும் எதற்சையான விஷயம் என்று சொன்னால் அது முட்டாள்தனம் என்று தான் கூற வேண்டும்,

இதற்க்கு அறிவியல் காரணம் ஆயிரம் கூறலாம்,
ஆனால் சற்று தனிமையில் இருந்து இவை ஆனைத்தும் யோசித்து பார்த்தல் புரியும், நமக்கு மேலே ஏதோ ஒரு சக்தி இருக்கு என்று..


Next Post Next Post Home
 
Back to Top