Store
  Store
  Store
  Store
  Store
  Store

வீண் ஜம்பமே தலைவர்களின் பலம் !

    நாடாளுமன்ற சட்டமன்ற தேர்தல்களை போல ஊராட்சி மன்ற தேர்தலுக்கு அரசியல் நோக்கர்கள் அவ்வளவான முக்கியத்துவம் கொடுப்பது கிடையாது அதற்கு காரணம் உள்ளாட்சி தேர்தலில் கட்சிகளின் செல்வாக்கை விட தனிமனிதர்களின் செல்வாக்கே பல காலமாக கொடிகட்டி பறப்பதேயாகும் மாநாகராட்சி தேர்தலில் கட்சிகள் முனைப்போடு செயல்படுவதில் மட்டும் அக்கரைகாட்டுவதும் மற்றபகுதியில் அவ்வளவாக அக்கரைகாட்டாததும் இதனால் தான்


இருப்பினும் கடந்த 2006 உள்ளாட்சி தேர்தலுக்கு பிறகு அரசியல் கட்சிகள் சற்று முனைப்போடவே இந்த தேர்தலை அணுகுகின்றன என்று சொல்ல வேண்டும் அதனால் இந்த உள்ளாட்சி தேர்தல் எப்படி இருக்கும் அதன் பின் விளைவுகள் எப்படி உருவாகும் என்பதை பற்றி குருஜியிடம் ஒரு நேர் காணல் செய்தேன் அந்த உரையாடலை எந்த மாற்றமும் இன்றி இங்கே தருகிறேன்


நான்:
        பொதுவாக உள்ளாட்சி தேர்தலை பற்றி உங்கள் கண்ணோட்டம் என்ன?


குருஜி:
     ஒரு மனித உடம்பு இயங்குவதற்கு ரத்தஓட்டம் எவ்வளவு அவசியமோ அவ்வளவு அவசியம் ஒரு நாட்டு நிர்வாகம் நல்ல முறையில் நடக்க உள்ளாட்சி அமைப்பு ஆயிரம் தான் வெளியில் வெள்ளை வேட்டி சட்டை போட்டுக்கொண்டு திரிந்தாலும் வீட்டுக்கு வந்தவுடன் ஒரு பிடி சாதம் கிடைக்காதவன் வாழ்க்கை பரிதாபமானது என்பது போல ஊராட்சி அமைப்புகள் சரியானப்படி இல்லை என்றால் நம் அன்றாட வாழ்க்கை சிக்கலாகிவிடும் தெருபெருக்காக் வீதிக்கு விளக்கேற்ற சாக்கடை சுத்தப்படுத்த கொசுக்கு மருந்தடிக்க மட்டுமாவது உள்ளாட்சி அமைப்புகள் கண்டிப்பாக தேவை


அதனால் தான் நமது தேசபிதா மகாத்மா காந்தி உள்ளாட்சி அமைப்புகள் ஒவ்வொன்றும் தனிகுடியரசுகள் போல் தன்னிறைவு பெற்று திகழ வேண்டும் என்று கருதினார் ஒரு பஞ்சாயத்தில் ஐந்து உறுப்பினர்கள் சேர்ந்து கிராமத்துக்கான கடமைகளை செய்யவேண்டும் என வலியுறுத்தினார் விவசாய வளர்ச்சி கதர் மற்றும் சிறு தொழில்கள் கிராம நீர்நிலைகள் கல்வி மற்றும் மருத்துவ சேவைகள் அனைத்துமே கிராம பஞ்சாயத்தின் அதிகாரத்திற்கு உட்பட்டதாக இருக்க வேண்டும் என கருதினார்


மத்திய மாநில அரசுகள் என்பது வரி வசூல் உள்ளிட்ட சிலவற்றை தவிர உள்ளாட்சி நிர்வாகத்தில் அதிகமாக தலையிட கூடாது அப்படி தலையிடுவது கிராமங்களின் சுயமான முன்னேற்றத்தை தடுத்து விடும் என்று கருதினார் ஆனால் காந்தியின் கொள்கைகளை எல்லா வகையிலும் மறந்து விட்ட நமது அரசுகள் உள்ளாட்சி நிர்வாகத்திலும் அவர் கருத்தை எள்முனை அளவுகூட கவனத்தில் கொள்வது கிடையாது


நான்:
    காந்தி சொன்னது போன்ற கிராம பஞ்சாயத்து முறை இன்று எதாவது ஒன்றேனும் நம் நாட்டில் இருக்கிறதா அப்படி ஒரு அபூர்வ கிராமம் இருந்தால் அதை பார்க்க நான் விரும்புகிறேன்


குருஜி:
     வள்ளுவர் நல்லவன் என்று ஒருவன் இருந்தாலும் அவனுக்காக மழை பொழியும் என்று சொல்லுவார் அதே போல காந்தியின் உயரிய கனவுகள் இன்னும் முற்றிலுமாக இந்த நாட்டை விட்டு போய் விடவில்லை எதாவது ஒரு மூலையில் சில நல்ல மனிதர்கள் அவர் கொள்கையை இன்றும் கடைப்பிடித்து வருகிறார்கள் அப்படி பட்டவர்களில் மிகவும் பிரபலமாக சமீபத்தில் வெளியுலகம் அறிந்து கொண்ட ஒரு அறிய மனிதர் அன்னா ஹசாரே அவர் தான் வாழுகின்ற மராட்டிய மாநிலம் அகமத் நகர் மாவட்டம் ராலேகான்சித்தி என்ற கிராமத்தில் காந்தியின் கிராம ராஜிய கனவை செயல்வடிவம் படுத்தி வெற்றிவாகை சூடியுள்ளார் வெறும் ஆயிரத்து இருநூறு மக்கள் மட்டுமே வாழுகின்ற அந்த கிராமம் ஒரு காலத்தில் வறண்ட பூமி அறியாமையில் உழன்ற கிராமம் இன்றோ நிலைமை தலைகீழாக மாறிவிட்டது


தூர்வாரப்பட்ட கால்வாய்கள் ஏரி,குளங்கள் கிராமத்தை பசுமையாக்கி விட்டது எழுபது ஏக்கர் மட்டுமே விவசாயத்திற்கு உகந்த நிலம் என்றிருந்த கதை மாறி இரண்டாயிரத்தி ஐநூறு ஏக்கர் விவசாய பூமியாக மாறிவிட்டது கால்நடை பெருக்கம் பால் உற்பத்தி அதிகரிப்பு என்று சுயபொருளாதார வளம் கூடி மக்களின் வாழ்க்கை மேம்பட்டு விட்டது பள்ளிக்கூடங்களும் மாணவர்விடுதிகளும் மக்களின் உழைப்பால் உயர்ந்து நிற்கிறது


அன்னா ஹசாரே இதை இப்போது தன்னுடைய கிராமத்தில் மட்டும் செய்து காட்டவில்லை சுற்றிலும் உள்ள எழுபது கிராமங்களில் செய்து வருகிறார் இந்த காந்திய திட்டத்தை தான் நாடுமுழுவது செய்து பார்க்க அவர் விரும்புகிறார் ஆனால் அரசாங்கமும் அரசியல் வாதிகளும் நல்லதை செய்ய எப்போதுமே விரும்புவது இல்லை என்பதற்கிணங்க ஹசாரேயின் திட்டத்தை மழுங்கடிக்க முயற்சித்து வருகிறார்கள் நீ காந்தி கண்ட கனவு பூமியை நிஜமாக காணவேண்டுமென்றால் ராலேகான்சித்திக்கு போ கண்ணார காணலாம்


நான்:
     காந்தி விரும்பியதை போன்ற உள்ளாட்சி முறைகள் இந்தியாவை தவிர வேறு நாடுகள் எவற்றிலாவது இன்று நடைமுறையில் இருக்கிறதா?


குருஜி:
         மகாத்மா காந்திக்கு கொஞ்சம் கூட சம்மந்தமே இல்லாத அமெரிக்காவில் உள்ளாட்சி அமைப்பில் அவர் கொள்கை மிக கண்டிப்பாக நடைமுறைப்படுத்த படுகிறது அமெரிக்க மக்களின் அன்றாட வாழ்வில் சர்வ வல்லமை பொருந்திய மத்திய அரசை விட உள்ளாட்சி அமைப்புகளே அதிகம் ஆதிக்கம் செலுத்துகிறது என்று சொல்லலாம் மிக எளிய உதாரணத்தை காட்டவேண்டும் என்றால் உன் வீட்டில் ஐந்து வயது பூர்த்தியாகியும் குழந்தையை பள்ளிக்கு அனுப்பாமல் நீ வைத்திருந்தால் ஏரியா கவுன்சிலர் வீட்டுக்கு வந்துவிடுவார் குழந்தையை பள்ளிக்கூடத்தில் சேர்த்த பிறகு தான் அடுத்த வேலையை பார்ப்பார் நம்ம ஊர் கவுன்சிலர்களின் லட்சணத்தை அவர்களோடு ஒப்பிட்டு ஏக்க பெருமூச்சி நீ விட்டால் அதற்கு நான் பொறுப்பல்ல


பொதுவாக அமெரிக்காவில் பள்ளிக்கூடங்கள் அனைத்துமே உள்ளாட்சி அமைப்புகளின் அதிகாரத்தில் தான் செயல்படுகின்றன அதே போல மருத்துவ மனைகளும் காவல் துறை தீயணைப்பு துறை குடிநீர் வழங்குதல் கழிவு நீர் அகற்றுதல் உள்ளூர் போக்குவரத்து கட்டிடங்கள் கட்ட அனுமதி எல்லாமே உள்ளாட்சியின் அதிகாரத்திற்கு உட்பட்டது தான் அதனால் நிர்வாகத்தில் முறைகேடுகள் ஏற்படுவது பெருமளவு தவிர்க்கப்படுகிறது


ஆனால் நம் நாட்டில் உள்ளாட்சி மன்றம் என்பது அதிகாரம் இல்லாத அலங்கார மண்டபமாகவே இருக்கிறது பல பஞ்சாயத்து பிரதிநிதிகளுக்கு தங்களுக்கு இருக்கும் அதிகாரம் என்ன அதை வைத்து மக்களுக்கு எத்தகைய சேவைகள் செய்யலாம் என்பது கூட தெரிவது இல்லை கிராம பஞ்சாயத்துக்களில் தலைவர் மற்றும் உபதலைவர்கள் அரசாங்கம் ஒதுக்கும் பணத்தில் தலைக்கு எத்தனை பங்கு எடுத்துக்கொள்ளலாம் என்று கணக்கு போடுகிறார்களே தவிர உருப்படியாக எதையும் செய்வதற்கு காணோம்


நான்:
       பஞ்சாயத்து அமைப்புகளில் அரசியல் கட்சிகள் ஈடுபடுவது ஆரோக்கியமான விஷயம்தானா?


குருஜி:
     நகராட்சி மற்றும் மாநகராட்சி நிர்வாகத்தில் அரசியல் அமைப்புகள் பங்காற்றுவது தவிர்க்க முடியாததாகும் காரணம் நகரங்களில் வாழும் மக்கள் தங்களது அண்டை வீட்டுக்காரனை கூட தெரிந்து வைத்திருப்பதில்லை அவர்கள் தங்கள் பகுதியில் கட்சி சார்பில்லாத நல்ல மனிதர்களை தெரிந்து வைத்திருப்பார்கள் என்று சொல்ல முடியாது ஆனால் கிராமங்களில் நிலைமை வேறு மாவட்ட கவுன்சிலர்களில் இருந்து தெரு கவுன்சிலர் வரையும் முகம் தெரியாத யாருக்கும் மக்கள் ஒட்டு போடுவது இல்லை அதனால் பேரூராட்சி முதற்கொண்டு கிராம பஞ்சாயத்து வரை கட்சி சார்பில்லாமல் தேர்தல் நடத்துவது நன்றாக இருக்கும் அரசியல் கட்சி சார்பில் ஒரு நபர் தேர்ந்தெடுக்க படும்போது அவரை மக்கள் அணுகுவதில் பல நடைமுறை சிக்கல்கள் உள்ளன சுயேச்சை பிரதிநிதிகள் என்றால் எந்த வித தயக்கமும் இல்லாமல் அணுகலாம்


நான்:
     இந்த உள்ளாட்சி மன்ற தேர்தலில் தமிழக அரசியல் கட்சிகள் நடந்து கொள்ளுகின்ற விதம் மக்களுக்கு நன்மை செய்யுமா? அல்லது அந்த அந்த கட்சிகளின் தனிப்பட்ட நன்மையாகத்தான் முடியுமா?


குருஜி:
        நமது மக்களின் தலையெழுத்து எப்போதுமே ஓட்டுப்போடும் வரைதான் ராஜா வேடம் ஒட்டு முடிந்தவுடனேயே மக்கள் பிரதிநிதியை நோக்கி நாம் தவம் கிடக்க வேண்டியது தான் இந்த தேர்தலிலும் பங்குபெறும் அரசியல் கட்சிகள் தங்களது சுயலாபத்தை முன்னிறுத்தியே பணி புரிகிறார்கள் மக்கள் நலத்தை பற்றி யாரும் கவலைப்பட்டதாக தெரியவில்லை கடந்த ஐந்து வருடத்தில் மக்களுக்காக எதையுமே செய்யாமல் பதவியில் இருந்தவர்கள் இந்த தேர்தலிலும் எந்த வித கூச்சமும் இல்லாமல் பவனி வருகிறார்கள் இவர்களை தட்டி கேட்பதற்கோ தட்டி கழிப்பதற்கோ மக்களிடம் துணிச்சல் இருப்பதாக எனக்கு தெரியவில்லை


இரண்டாயிரத்து ஒன்று உள்ளாட்சி தேர்தலிலேயே தெருவுக்கு தெரு பணம் புரள ஆரம்பித்துவிட்டது சாதரணமாக ஒரு வார்டு உறுப்பினர் பல லட்சம் ரூபாய் வரை செலவு செய்தார் வாக்களர் ஒருவருக்கு ஆயிரம் ரூபாய் வரை கொடுக்கப்பட்டது எனக்கு தெரிந்து பல உறுப்பினர்கள் வீட்டுக்கு ஒரு கிராம் தங்கம் கூட கொடுத்தார்கள் பணத்தை வாங்கிவிட்டு ஓட்டுப்போடும் மக்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறார்கள் இந்த தேர்தலில் பணம் கொடுப்பவர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகரித்து விட்டது


நான்:
     தேர்தல் கமிஷன் பணம் கொடுப்பவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லையா?


குருஜி:
      தேர்தல் கமிஷன் மக்களிடம் இருந்து புகார் வந்தால் தான் நடவடிக்கை எடுக்கும் அதுவும் ஆளும் கட்சியின் மீது குற்றசாட்டு இருந்தால் நடவடிக்கையில் துரிதம் இருக்காது பக்க சார்பே இருக்கும் தேர்தல் நேரத்தில் தில்லுமுல்லு செய்வதில் நமது தமிழ் நாட்டு ஆளுகட்சியும் சரி எதிர்கட்சியும் சரி நல்ல அனுபவம் வாய்ந்தவர்கள் என்றே சொல்லவேண்டும் இப்போது நடக்கின்ற தேர்தலி கூட பகிரங்கமாகவே பல தில்லு முல்லுகள் வாக்காளருக்கு அன்பளிப்பு வழங்குதல் நடந்துவருகிறது இதை பற்றி எந்த மக்களும் புகார் கொடுக்க தயாராக இல்லை முக்கால்வாசி பேர் பதவிக்கு வந்தால் சம்பாதிக்கதானே போகிறார்கள் அந்த பணத்தில் எனக்கு கொஞ்சம் கொடுத்தால் குறைந்தா போய்விடுவார்கள் என்று பேசுகிறார்கள்


லஞ்சத்தையும் முறைகேடுகளையும் கண்டு முகம் சுளித்த மக்கள் இன்று முற்றிலுமாக மாறி விட்டார்கள் நீ அடிக்கும் கொள்ளையில் எனக்கு பாதி கொடு என்று பாகம் கேட்க ஆரம்பித்துவிட்டார்கள் இது ஜனநாயகத்தின் மிக ஆபத்தானா காலகட்டமாகும் சமூக அக்கறையோடு புகார் கொடுக்க செல்லும் வாக்காளர்கள் அரசியல் கட்சிகளின் குண்டர்களால் மிரட்டப்படுகிறார்கள் ஊழலுக்கு துணைபோகும் மக்கள் கூட்டம் ஒரு புறம் அச்சத்தால் கண்மூடிகொள்ளும் மக்கள் கூட்டம் இன்னொருபுறம் இது தான் இன்றைய தமிழகத்தின் யதார்த்த நிலை


இந்த நிலையில் காந்தி கண்ட கிராம ராஜ்ஜியம் ராம ராஜ்ஜியம் என்பது எல்லாம் கேலிகூத்தாகத்தான் இருக்கிறது மனசாட்சியும் நேர்மையும் தேர்தல் என்றாலே ஓடி ஒளிந்து கொள்ள வேண்டிய சூழலே நிலவுகிறது நிச்சயம் இது நாட்டுக்கு நல்ல அறிகுறி அல்ல விரைவில் இந்த நிலை மாறவில்லை என்றால் நாடு பல விபரீதங்களை சந்திக்க வேண்டிய காலம் வரும் எனவே நாட்டின் மீது அக்கறை கொண்ட நல்லவர்கள் இன்னும் பேசியும் எழுதியும் கொண்டு மட்டும் இருந்தால் போதாது அரசியல் என்ற சாக்கடையை சுத்தம் செய்ய முனைந்து எழ வேண்டும் அதாவது நேரடியாக களப்பணிக்கு வரவேண்டும்


நான்:
     நீங்கள் கூறுவது முற்றிலும் சரி நம்மூர் அறிவாளிகளும் சமூக ஆர்வலர்களும் பேசுவதோடு மட்டும் சரி காரியத்தில் இறங்கு என்றால் அதற்கு வேறு ஆளை பார் என்று ஓடிவிடுகிறார்கள் நாடும் மக்களும் கெட்டுபோகாமல் இருக்க நல்லவர்கள் அரசியலுக்கு வரவேண்டும் இறைவன் அருளால் அது விரைவில் நடக்கும் என்று நம்புகிறேன்


இப்போது நான் கேட்கும் கேள்வி நடைமுறை அரசியலை சார்ந்ததாகும் இந்த உள்ளாட்சி மன்ற தேர்தலில் அரசியல் கட்சிகள் கூட்டணி அமைக்காமல் போட்டியிடுகின்றன இதன் முடிவு ஒவ்வொரு கட்சியின் தனிப்பட்ட செல்வாக்கை நமக்கு தெளிவாக காட்டுமா? அத்தோடு அரசியல் கட்சிகளின் நிஜ பலத்தை அதன் தலைவர்கள் உணர்ந்து கொள்வார்களா?


குருஜி:
             நமது கட்சிகள் கூட்டணி இல்லாமல் போட்டியிடுவதனால் அவைகளுக்கு மக்கள் மத்தியில் உள்ள உண்மையான செல்வாக்கு என்னவென்பது இப்போது தெரிந்து விடும் என்று நான் நம்பவில்லை காரணம் கடந்த கால வரலாற்றை புரட்டி பார்த்தால் அதற்க்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை உதாரணமாக பாரதிய ஜனதா கட்சிக்கு நம் தமிழ் நாட்டில் உள்ள செல்வாக்கு என்னவென்று நமக்கு தெரியும் அந்த கட்சி கடந்த தேர்தலில் மாநகரங்களில் இரண்டு உறுப்பினர்களையும் நகரங்களில் முப்பத்தியேழு உறுப்பினர்களையும் ஊராட்சி ஒன்றியங்களில் ஏழு உருபினர்களையும் மாவட்ட அளவில் மூன்று உறுப்பினர்களையும் பேரூராட்சிகளில் நூற்றி ஐம்பத்து நான்கு உருபினர்களையும் பெற்றது இவர்கள் அனைவருமே கட்சிக்காரர்கள் என்பதற்காக மட்டுமே தேர்ந்தேடுக்கபட்டார்கள் என்று கூறிவிட முடியுமா நிச்சயம் முடியாது


ஊராட்சி மன்ற தேர்தலை பொறுத்தவரை தனிமனித செல்வாக்கு மிகவும் முக்கியமானது எனக்கு பிடித்த நபர் பிடிக்காத கட்சியில் நின்றால் கூட நான் ஒட்டு போடுவேன் அதற்காக என்னை அந்த கட்சியை சார்ந்தவன் என்று சொல்லிவிட முடியாது அதே போல தான் பலரின் நிலையும் இருக்கும் எனவே கட்சிகளின் உண்மையான பலத்தை இந்த தேர்தலை வைத்து முடிவு செய்து விட இயலாது மேலும் நமது அரசியல் தலைவர்கள் எந்த காலத்திலும் உண்மையை ஒத்துக்கொள்ள மாட்டார்கள் இங்குள்ள அரசியல் கட்சிகளின் உறுப்பினர்களின் எண்ணிக்கயை மொத்தமாக கூட்டினால் அது தமிழகத்தின் ஜனத்தொகையை விட மிக அதிகமாக இருக்கும் அந்த அளவு போலியான பலத்தோடு பவனி வருபவர்கள் தான் நம் தலைவர்கள் அவர்கள் தங்களது நிஜ பலத்தை தெரிந்த கொண்டால் வீட்டை விட்டு வெளியே கூட வரமாட்டார்கள் வீண் ஜம்பம் என்பது தான் நம் தலைவர்களின் தைரியம்


குருஜியின் இந்த கருத்துக்கள் யதார்த்தமான தமிழகத்தின் நிலை ஆனால் இதை ஒத்துக்கொள்ள யாருக்கும் துணிச்சல் இல்லை அப்படி துணிச்சல் உள்ள தலைவர்கள் நாட்டுக்காக உழைக்க முன்வந்தால் அதுதான் இந்தியாவின் பொற்கால விடியலாக இருக்கும் .




பேட்டி டாக்டர்.v.v.சந்தானம்

Contact Form

Name

Email *

Message *