Store
  Store
  Store
  Store
  Store
  Store

சொர்க்கத்தில் செல்போன் கிடைக்குமா...?


   நீ பண்ணுகிற அநியாயத்திற்கு நரகத்துக்கு தான் போவாய் உனக்கு கதி மோட்சமே கிடைக்காது என்று யாரையாவது திட்ட தோன்றுகிறதா கொஞ்சம் பொறுங்கள் நான் சொல்வதை கேட்டுவிட்டு அதன் பிறகு நீங்கள் விருப்பபட்டால் திட்டலாம் அட நீ யாருயா நான் திட்டுவதை தடுப்பதற்கு? இந்த ஜனநாயக நாட்டில் பஸ்கட்டணம் ஏறி போனால் பெட்ரோல் விலை ஏறினால் தட்டிகேட்பதற்கு தான் எங்களுக்கு உரிமை இல்லை பக்கத்து வீட்டுக்காரனை திட்டுவதற்கு கூட உரிமை இல்லையா? என்று நீங்கள் சொல்வது என் காதில் விழுகிறது 

என்ன செய்வது நீங்களும் நானும் பிறந்த நாடு அப்படி பெட்ரோல் விலை ஏறினால் அதை குறைப்பதற்கு அரசாங்கத்திற்கே அதிகாரம் இல்லாத நாட்டில் பிறந்து தொலைத்துவிட்டோம் பிறகு எங்கிருந்து நமக்கு உரிமை வரும் நான் பேச வந்தது இந்த உரிமைகள் பற்றி அல்ல நரகத்தை மட்டரகமாக நினைத்து யாரையும் திட்டாதீகள் என்று சொல்லவந்தேன் அதற்கு உனக்கு என்ன யோக்கியதை என்று கேட்கிறீகளா அது நியாயம் அதற்கு நான் பதில் சொல்லித்தான் ஆக வேண்டும் 


நம் ஊரில் சொர்க்கத்தை பற்றியும் நரகத்தை பற்றியும் பாட்டிமார்களும் புராண பிரசங்கிகளும் தான் அதிகமாக பேசுவார்கள் இவர்கள் பேசுவதை கேட்டுவிட்டு சும்மா ஏதோ பொழுது போகாமல் கதை பேசுகிறார்கள் என்று நீங்கள் அலட்சியமாக போய்விடலாம் ஆனால் நான் பேசுவதை நீங்கள் நிச்சயம் அலட்சியப்படுத்த முடியாது காரணம் பாட்டிகளும் புரோகிர்தர்களும் அவைகளை பற்றி படித்து மட்டும் தான் இருக்கிறார்கள் நானோ அந்த சொர்க்கத்தில் இருந்தே உங்களிடம் பேசுகிறேன் அதனால் என் குரலுக்கு நீங்கள் மத்திப்பு கொடுத்தே ஆகவேண்டும் 

ஆங்! சொர்க்க வாசியா நீ கொடுத்து வைத்தவன் நல்ல நிலைமையில் இருக்கிறாய் என்று உங்கள் மனது முனுமுனுப்பது எனக்கு கேட்கிறது ஏனென்றால் சொர்க்கத்தில் பாலும் தேனும் பெருக்கெடுத்து ஓடுவதாக எல்லோரும் சொல்ல கேட்டிருப்பீர்கள் சொல்பவர்களுக்கு என்னகிடக்கிறது வந்து மாட்டிக்கொண்டு முழியாய் முளிப்பவனுக்கு தானே சொர்க்கத்தில் உள்ள கஷ்ட நஷ்டம் தெரியும் அதனால் தான் சொல்கிறேன் தப்பு செய்கிறவர்கள் நரகத்திற்கு போகவேண்டுமென்று திட்டாதீர்கள் 


சுத்த விவரங்கெட்ட மனுஷனா இருப்பாய் போலயிருக்கு அவனவன் சொர்க்கம் போகவேண்டுமென்று அன்னதானம் செய்கிறான் ஏழை பாளைகளுக்கு வேட்டி சட்டை எடுத்துக்கொடுக்கிறான் குடம் குடமாய் பாலை சாமிக்கு அபிசேகம் செய்கிறான் வைகுண்ட ஏகாதசி அன்று பரமபதம் விளையாடியும் பார்க்கிறான் அவனுக்கெல்லாம் சொர்க்கம் கிடைக்க வில்லை உனக்கு கிடைத்திருக்கிறதே அதை வைத்து திருப்தி படாமல் அங்கலாய்கிறாயே என்று நீங்கள் கேட்கிறீர்கள் 

கேட்பது சரிதான் அனுபவித்து பாருங்கள் அப்புறம் தெரியும் சொர்க்கத்தின் லட்சணம் செத்த பிறகும் வையிற்று பசி இருக்கிறது பிரதர் நம்ம ஊரு என்றால் காலையில் எழுந்து பச்சை தண்ணீரில் பல் கிடுகிடுக்க குளித்து ஊது வத்தி ஏற்றி சாமி கும்பிட்டு அடுப்பங்கரையில் போய் உட்கார்ந்தால் சுட சுட இட்லி எடுத்து சாம்பாரில் மிதக்க விட்டு அம்மா தருவாளே அந்த சுவைக்கு ஈடு எதுவுமே கிடையாது ஒரு நாள் இட்லி மறுநாள் தோசை வேறொருநாள் இடியாப்பம் என்று நமது காலை சிற்றுண்டியின் பட்டியலை பார்த்தாலே நாக்கில் நீர் சுரக்கும் 


எதுவுமே இல்லை என்றாலும் பழைய சாதத்தை பிழிந்து தட்டில் வைத்து பச்சை மிளகாயை நடுநாக்கில் வைத்து கடித்து வீர் என்று காரம் உச்சிக்கு ஏற சாதத்தை உருட்டி வாய்க்குள் அனுப்புவோமே அந்த சுவைக்கு நாலு மூட்டை நெல்லை ஓசிக்கு கொடுக்கலாம் காலை சாப்பாடு கிடக்கட்டும் மதிய உணவு இருக்கிறதே அதற்காக தானே தவம் கிடப்போம் தேங்காய் இடித்து போட்டு சீரகம் பூண்டு அரைத்து போட்டு பருப்பு சாம்பார் வைத்து இலையில் கொட்டிய சாதத்தின் மேல் அதை அபிசேகம் செய்து தொட்டுக்கொள்ள மாங்காய் ஊறுகாயை கடித்தால் அடடா ஆயிரம் தேர்தலில் வெற்றி பெற்றாலும் அந்த சுகம் கிடைக்காது 

இந்த சொர்க்கத்தில் இட்லி உண்டா? சாம்பார் உண்டா? அட அதிகம் வேண்டாம் கடித்துக்கொள்ள ஒரு பச்சை மிளகாய் கூட உண்டா? ஒன்றுமில்லை எப்போது பசித்தாலும் ஒரு குவளை நிறைய அமிர்தம் கிடைக்கிறது ஆரம்பத்தில் சுகமாக சுவையாகத்தான் இருந்தது ஆனால் காலம் முழுக்க இதை தான் குடிக்க வேண்டுமென்றால் அதை விட தண்டனை வேறு என்ன வேண்டும் பூமியில் எதை தொட்டாலும் அமிர்தம் போல் சுவையாக இருக்கிறது என்போம் இங்கே வந்து பார்த்தால் தான் இந்த அமிர்தத்தை நம்ம ஊர் நாயர் கடை டீயின் காலில் கட்டி அடிக்க வேண்டும் என்று தோன்றுகிறது 


பஸ்ஸில் ஏறி பயணம் போனால் மல்லிகை பூ வாசம் கருவாட்டு வாசம் மனித வியர்வையின் வாசம் கமகம என்று வீசும் இந்த சொர்க்கத்தில் ஒரு கண்றாவியும் கிடையாது எப்போது பார்த்தாலும் எதோ ஒரு நறுமணம் வீசி கொண்டே இருக்கிறது ஆழமாக மூச்சை இழுத்து விட்டால் சாவு வீட்டில் போடுகிற சாம்பிராணியின் நாற்றம் போல் தோன்றுகிறது இதையே சுவாசித்து எப்படி தான் வாழ்கிறார்களோ தெரியவில்லை சுள்ளேன்று அடிக்கிற வெயிலில் கசகச வியர்வையில் நடந்தால் எப்படி ஆனந்தமாக இருக்கும் இங்கு வெயிலும் இல்லை வியர்வையும் இல்லை எவன் முகத்தை பார்த்தாலும் துடைத்து விட்ட சுவற்றை போல் இருக்கிறது 

நம்ம ஊர் டெண்ட் கொட்டகை எவ்வளவு கலகலப்பாக இருக்கும் காதை கிழிக்கும் பாட்டும் நான் முந்தி நீ முந்தி என்று ரசிகர்கள் போடும் கூச்சலும் அடடா கேட்பதற்கே ஆயிரம் காதுகள் வேண்டும் இவைகளை தாண்டி கொட்டகைக்குள் போனால் நடிகர்களுக்கு காட்டுகிற கற்பூர ஆரத்தி என்ன காகிகதத்தை கிழித்து பூமாரி போடுகிற அழகு தான் என்ன கடலை முறுக்கு வடை என்று எத்தனை விதமான நொறுக்கு தீனிகள் காதல் பேச்சு காலால் சீன்டியவனை அழகான தமிழ் பாஷையில் வசைமாரி பொழியும் நேர்த்தி குழந்தையின் அழுகை சத்தம் குடிகாரனின் கூப்பாடு என்று எத்தனை விதமான சத்தங்களை கேட்கலாம் 


இங்கு ஒன்றுமே இல்லை ஊர்வசி ஆடுவாள் நந்தி தாளம் வாசிப்பார் நாரதர் வீணை மீட்டுவார் எல்லோரும் சத்தமே இல்லாமல் கண்களை மூடிக்கொண்டு கேட்க வேண்டும் ரசிக்க வேண்டும் என்ன ஒரு கொடுமையான வாழ்க்கை சுதந்திரம் இல்லாத ரசிப்பு எப்படி சுகமாகும் கைதட்ட முடியவில்லை விரல்களை வாயில் வைத்து விசில் அடிக்க முடியவில்லை நினைத்து பார்த்தாலே கஷ்டமாக இருக்கிறது 

வேண்டியவர்களோடு பேச செல்போன் இருக்கிறது நொடியில் செய்தி அனுப்ப மின்னஞ்சல் இருக்கிறது இவை எல்லாமே ஒரு நேரத்தில் ரிப்பேர் ஆகிவிட்டால் என்ன இந்த மனிதன் கண்டு பிடிப்பு என்று எரிச்சல் படலாம் இங்கு அப்படி எந்த எரிச்சலும் படமுடியாத வேதனை தான் இங்கு மனத்தால் நினைத்தாலே வேண்டியவருக்கு அடுத்த கணமே விஷயம் தெரிந்து விடுகிறது ஒருவனை பற்றி சுதந்திரமாக விமர்சிக்க முடியவில்லை அது அடுத்த நிமிசமே அவனுக்கு தெரிந்து விடுகிறது 

வருசத்தில் ஒருநாள் பழனிக்கு போகலாம் மொட்டை போடலாம் பஞ்சாமிர்தம் வாங்கி உள்ளங்கையில் ஊற்றி நக்கி நக்கி சாப்பிடலாம் எதிர்த்த வீட்டு மாமா திருப்பதிக்கு போய்வந்தால் லட்டு தர மாட்டாரா என்று காத்திருக்கலாம் இங்கு அது முடியுமா? பழனி முருகன் பக்கத்தில் இருக்கிறான் வேங்கடாஜலபதியோ கைகெட்டும் தூரத்தில் நின்று சிரிக்கிறார் இவர்களிடம் எப்படி பஞ்சாமிர்தம் வாங்கி நக்குவது லட்டு வங்கி உதிர்த்து தின்னுவது 


வாலிப வயதோ வயோதிகமோ ரோட்டில் நடந்து போனால் நாலுவிதமான பெண்களை பார்க்கலாம் ஒருத்தி சிவப்பாக இருப்பாள் ஒருத்தி கருப்பாக இருப்பாள் வேறோருத்தியோ மாநிறமாக இருப்பாள் இதில் யார் அழகு யார் அவலட்சணம் என்று கணக்கு போடலாம் மனதிற்குள் நிறுத்தி பார்த்து ரசிக்கலாம் இந்த பாழாய் போன சொர்கத்தில் பார்க்கும் பெண்கள் எல்லோருமே ஒரே மாதிரி இருக்கிறார்கள் இவர்கள் அழகா அழகு இல்லையா என்று சொல்லவும் முடியவில்லை காணும் இடமெல்லாம் அழகு மட்டுமே நிறைந்திருந்தால் அந்த அழகுக்கு என்ன மரியாதை இருக்கிறது இருட்டுக்கு பக்கத்தில் வெளிச்சத்தை வைத்தால் தானே ரசனை வளரும் 

டீக்கடை ஓரத்தில் போடபட்டிருக்கும் பெஞ்சில் உட்கார்ந்து கனிமொழி ரீலிசாவாரா? ஜெயலலிதா பஸ் கட்டணத்தை குறைப்பாரா கூடங்குளம் அணுமின் நிலையம் இயங்குமா என்று பேசுவோமே அது இங்கு நடக்குமா? பேசுவதற்கே விஷயம் இல்லை அவனவன் வேலையை அவனவன் பார்க்கிறான் வம்புக்கு போனால் கூட வணக்கம் வைக்கிறான் எதிர்த்து நின்று முட்டி மோதி போராடினால் தானே வாழ்க்கையில் சுவை இருக்கும் சொர்க்க வாழ்வில் சுவையும் இல்லை சுகமும் இல்லை 



நேற்று இருந்தது போல் தான் இன்றும் இருக்கிறது இன்றைய நாளை போல் தான் நாளையும் இருக்கும் எதுவும் இங்கு மாறாது யாரும் இங்கு மாற்ற மாட்டார்கள் சலிக்காத சுற்றுகிற பூமியை போல அலுக்காது ஒளிகொடுக்கும் சூரியனை போல இங்கு எந்த மாற்றமும் எப்போதும் இல்லை மாற்றத்தையே கண்டு பழகியவனுக்கு மாற்றம் இல்லை என்றால் செக்கு மாடாக ஆகிவிடுவான் அதனால் தான் எப்போதடா சொர்க்கத்தில் இருந்து விடுதலை அடைவோம் என்று சிந்திக்கிறேன் 

வாழ்ந்த போது மாங்காயும் புளிப்பை ரசிக்காமல் குழந்தையின் மழலை மொழியை கேட்டு சிரிக்காமல் மனைவியின் நச்சரிப்பில் மனதை செலுத்தாமல் வாழ்ந்து விட்டு இப்போது அவையெல்லாம் கிடைக்குமா என்று ஏங்குவது கூட ஒரு வித தண்டனை தான் தண்டனையை சொர்க்கத்தில் அனுபவித்தால் என்ன நரகத்தில் அனுபவித்தால் என்ன இரண்டும் ஒன்று தான்.

Contact Form

Name

Email *

Message *