Store
  Store
  Store
  Store
  Store
  Store

ஹரிஜன பெண்ணை மணக்கலாமா...?



    மீப காலமாக சரியாக சொல்வதென்றால் இரண்டரை மாதமாக வலைத்தளம் பக்கமே நான் கவனம் செலுத்தவில்லை எனலாம் தினசரி படைப்புகள் வெளிவருகிறதே சில சமயம் அன்றாட நிகழ்வுகளை கூட விமர்சனம் செய்கிறீர்களே அது எப்படி என்று நீங்கள் கேட்கலாம் நமது தினசரி பதிவுகள் என்பது அவ்வபோது எழுதுவது அல்ல என்றோ எதற்காகவோ எழுதி வைத்தது ஆகும் அன்றாட விமர்சனமும் அன்றைய பொழுதில் நான் சொல்ல சொல்ல எழுதுவது ஆகும் அது சரியான முறையில் பதிவிடப்படுகிறதா இல்லையா என்பதை கூட நான் கவனிப்பது இல்லை காரணம் சரியாகத்தான் இருக்கும் என்ற நம்பிக்கை 

ஜோதிட கேள்வி பதில்கள் மட்டும் மின்னஞ்சலிலோ தபாலிலோ வருவதை சற்று கவனத்தோடு பார்த்து பதில் எழுதுவேன் காரணம் அது வெறும் பதிவு அல்ல ஒருவனின் வாழ்க்கையை தீர்மானிக்கும் கருத்துக்கள் ஆகும் எனவே அதை அசட்டையோடு எழுதுவது அழகல்ல மேலும் இந்த கேள்விகள் நேற்று இன்று வந்தவைகளும் அல்ல சில வாரம் சில மாதங்களுக்கு முன்பு வந்த கேள்விகளாக கூட இருக்கும் 


அப்படி வந்த ஒரு கேள்விக்கு நான் சொன்ன பதிலுக்கு ஒரு வாசகர் என்னை மிகவும் பாராட்டி இருந்தார் அந்த பாராட்டுதலின் விளைவே பல வேலைகள் இருந்தாலும் அதை ஒதுக்கி வைத்து விட்டு உங்களோடு உரையாட வரவைத்தது எனலாம் நான் பிராமண இளைஞன் ஒருவன் ஹரிஜன பெண்ணை மணக்கலாமா என்று கேட்டிருந்த கேள்விக்கு அவனுக்கு வகுத்த விதி காதல் திருமணம் தான் என்பதனாலும் அந்த பெண் மிகவும் நல்லவளாக ஜாதகப்படி தெரிவதாலும் திருமணம் செய்துகொள்ளும் படி எழுதியிருந்தேன் 

அதை படித்து விட்டு ss என்ற வாசகர் நான் உங்களை பழையகால கருத்துக்களில் ஊறி போன ஒருவர் என்று தவறாக நினைத்திருந்தேன் நீங்கள் அப்படி அல்ல என்பது போன்ற கருத்தில் என்னை பாராட்டி இருந்தார் வாசகரின் நோக்கம் என்னை பாராட்டுவது என்பது நன்றாக தெரிகிறது அதற்காக தனிப்பட்ட முறையில் நன்றி செலுத்த கடமைபட்டுள்ள நான் வேறொரு முக்கியமான விஷயத்தை இங்கு சுட்டிக்காட்ட அவசியப்பட்டவனாகவும் இருக்கிறேன் 

பொதுவாக இன்றைய இளைய தலைமுறையினர்கள் நமது இந்தியாவின் தொன்மைக்கால பண்பாடு கலாச்சாரம் மத நம்பிக்கைகள் என்பவைகள் எல்லாம் கட்டுப்பட்டி தனமானது நாகரிக சமூகத்தில் ஏற்றுக்கொள்ள முடியாதது அவைகளை இன்று பின்பற்றுவது மனிதாபிமானம் அற்ற செயலாகவே இருக்கும் என்று நினைக்கிறார்கள் என்னை பாராட்டிய வாசகரின் ஆழ் மனநிலையும் ஏறக்குறைய இப்படிதான் இருப்பதாக நான் நினைக்கிறேன் 

இதனால் தான் நான் உங்கள் ப்ளாக்ஐ நீண்ட நாட்களாக படித்து வருகிறேன்.. இருப்பினும் பெரும்பாலான ஆன்மிக வாதிகளை போல் நீங்களும் பழமையில் ஊறியவர் என்று இது நாள் வரை நினைத்திருந்தேன் என்று எழுதியிருக்கிறார் அதாவது ஆன்மிகவாதிகள் அனைவருமே பழைய சமூக பழக்க வழக்கங்களை மிக தீவிரமாக கடைபிடிப்பவர்கள் என்று இவர் நம்புகிறார் அது இவர் தவறல்ல இதே போன்ற எண்ணங்களை பலர் திட்டமிட்டு மக்கள் மத்தியில் பரப்பி வருகிறார்கள் அதன் விளைவே இப்படியான எண்ணம் 


இன்று தங்களை புரட்சிவாதி முற்போக்குவாதி என்று விளம்பரம் படுத்திக்கொள்ளும் எவரும் ஆதிகால,தற்கால ஆன்மிகவாதிகளின் சிந்தனைக்கும் செயலுக்கும் ஈடாக மாட்டார்கள் நவீன சிந்தனை வாதிகள் என்று கூறிக்கொள்ளும் பலர் தங்களுக்கு ஜாதிகளின் மீது நம்பிக்கை இல்லை என்று சொல்வதை ஒரு வழக்கமாக வைத்திருந்தாலும் கூட நான் இந்த ஜாதியில் பிறந்தவன் இவ்வளவு உயர்ந்த ஜாதியில் பிறந்தாலும் கூட எனக்கு ஜாதிகளின் மீது நம்பிக்கை இல்லை என்று மறைமுகமாக தம்பட்டம் அடித்து கொள்வதை யாரும் மறுக்க முடியாது 

ஆனால் உண்மையான ஆன்மிகவாதிகள் இந்திய பண்பாட்டை நேசிப்பவர்கள் யாரும் தங்களது ஜாதீய நம்பிக்கைகளை மறைக்காவிட்டாலும் ஜாதிவெறியை தூண்டுவதும் இல்லை ஜாதியை ஒரு பொருட்டாக மதிப்பதும் இல்லை ஜாதி இல்லை என்று மேடை போட்டு பேசுபவர்களால் தான் ஜாதி சண்டையே நாட்டில் நடைபெறுகிறது இதை உணர்ந்தால் பண்டையகால நம்பிக்கைக்கும் தற்கால செயலுக்கும் உள்ள நடைமுறை வித்தியாசம் புரியும் 

மேலும் பழைய பண்பாடுகள் ஜாதிக்கொடியை தூக்கி பிடிக்கிறது என்று நிறைய பேர் நம்புகிறார்கள் அவர்கள் சற்று ஆழமாக நமது பண்டைய இலக்கியங்களை படித்து பார்த்தாலே ஜாதிக்கொடி எங்கே எப்போது பறக்கிறது அதை பறக்க விடுவது யார் என்பதை புரிந்து கொள்ளலாம் 

ராமாயணத்தை எடுத்துக்கொள்ளுங்கள் அதில் வரும் ராமன் சக்கரவர்த்தி திருமகன் முழுமையான ஷத்திரியன் ஆனால் அவன் நேசிப்பது உறவு முறை என்று ஊருக்கு அறிமுகப்படுத்துவது யாரை என்று எண்ணிப்பாருங்கள் உன்னோடு நாங்கள் ஐந்து சகோதரர்கள் ஆனோம் என்று காட்டில் வாழ்ந்த வேடனான குகனையும் தனது தம்பியாக ஏற்றுக்கொண்டான் மனித குலமே இல்லாத பறவையை தந்தையாகவும் வானரங்களை உடன் பிறப்புகளாகவும் ஏற்றுக்கொண்டான் இதைவிட ஒருபடி மேலே சென்று தனது எதிரியின் சகோதரனை கூட அரவணைத்து சன்மானம் வழங்கியவன் ஸ்ரீராமன் 


இவ்வளவு பரந்த மனப்பான்மை கொண்ட ஸ்ரீராமன் நேற்று பிறந்தவன் அல்ல நமது குலமுதல்வனுக்கும் மூத்தவன் மூலவன் இவனே ஆகும் இவனிடம் உள்ள ஒரு சிறிய நற்குணம் இன்றைய மனிதன் எவனுக்காவது ஒருவனுக்கு கால்பங்கு இருந்தால் அவனே இப்போது கண்முன்னே காணும் மகாத்மாவாக இருப்பான் ஆனால் பழைய ராமனின் சுவடுகளும் இன்றைய மனிதர்களிடம் இல்லை சுபாவமும் இல்லை அதனால் தான் குறுக்கு புத்தியும் குறுகிய மனப்பான்மையும் நாட்டை ஆள்கிறது 

என்னிடமோ அல்லது என்னை போன்றவர்களிடமோ ஒரு சிறு துளியேனும் நன்மை தெரிந்தால் அது நமது பழைய சனாதன தர்மத்தில் இருந்து பெற்றதாகவே கருதவேண்டும் மனிதர் எல்லோரும் சமம் என்ற எண்ணத்தை எனக்கு கம்யூனிஷ்யம் மட்டும் கற்பிக்க வில்லை சர்வம் விஷ்ணுமயம் ஜகத் என்று உபநிஷதங்களும் கற்பித்தன ஜாதி என்பதும் அதில் உயர்வு தாழ்வு கற்பிப்பதும் நமது பண்பாட்டில் உள்ள குறையல்ல சமூகத்தில் உள்ள குறையாகும் 

மேலும் ஒரு பிராமண இளைஞனும் ஹரிஜன பெண்ணும் திருமணம் செய்துகொள்வதை நான் கலப்புமணமாக கருதுபவன் அல்ல ஒரு வான்கோழியும் மயிலும் திருமணம் செய்தால் அது கலப்புமணம் ஒரு கழுதையும் குதிரையும் திருமணம் செய்தால் அது கலப்புமணம் ஒரு நாகப்பாம்பும் சாரைப்பாம்பும் திருமணம் செய்தால் அது கலப்புமணம் மனிதனான ஒரு ஆணும் பெண்ணும் திருமணம் செய்தால் அதை எப்படி கலப்புமணம் என்று சொல்லலாம் சொல்ல முடியும் 

ஜாதி என்பது சமூக சொத்தே தவிர சரீர சொத்து அல்ல அக்ரகாரத்தில் வியர்த்தாலும் சேரியில் வியர்த்தாலும் நாற்றம் தான் அடிக்குமே தவிர நறுமணம் வீசாது பூணுல் போட்டவன் சிறுநீரகம் செயலிழந்தால் எப்படி செத்துபோவானோ அதே போல தான் போடாதவனும் செத்து போவான் 

எனவே ஜாதீய கொடுமைகள் தீண்டாமை கொடுமைகள் நமது பழையகால இந்திய மரபின் சனாதன தர்மத்தின் வெளிப்பாடுகள் என்று யாரும் தயவு செய்து கருதாதீர்கள் அவைகளுக்கும் நமது தர்மத்திற்கும் சம்மந்தமே இல்லை அரைகுறை படிப்பாளிகள் மேல் நாட்டு நாகரிக விசுவாசிகள் அப்படி பேசிவருவது உங்கள் மனதையும் கூட பாதிப்படைய செய்துள்ளது பதிந்துள்ளது என்பதை நினைக்கும் போது மிகவும் வருத்தமாக இருக்கிறது 

நமது மதமும் பண்பாடும் சமூக முன்னேற்றத்தை பற்றி நல்லிணக்கததை பற்றி சொல்வது என்ன என்பதை தெளிவாக புரிந்து கொள்ள நிறைய படியுங்கள் குறிப்பாக சுவாமி விவேகனந்தரின் நூல்களை படியுங்கள் அப்போது நமது தர்மத்தின் பெருமையும் சிறப்பும் அதற்குள் ஆழ்ந்து கிடக்கும் மனித நேயமும் என்னவென்று உங்களுக்கு புரியும்.


Contact Form

Name

Email *

Message *