Store
  Store
  Store
  Store
  Store
  Store

ஆடிவரும் யானையில் ஆண்டவன் திருக்கோலம்


இந்து மத வரலாற்று தொடர் 24

அழகானது என்று சொல்லும் போது இறைவன் படைப்பில் உள்ள பல விஷயங்களை சொல்லலாம் அதில் ஒரு சிக்கலும் இருக்கிறது. எனக்கு அழகாக தெரிவது மற்றவருக்கு அழகாக தெரிவதில்லை மற்றவர்கள் அழகு என்று போற்றி புகழ்வதை மனம்கசிந்து ரசிப்பதை என்னால் கண்ணெடுத்து பார்க்க முடியவில்லை எனவே அழகு என்பது ஒவ்வொருவரின் மனபாங்கை பொறுத்தே அமைகிறது என்ற முடிவுக்கு வரவேண்டிய நிலை உள்ளது ஆனாலும் பொதுவான நிலையான சாஸ்தவமான அழகு என்று எதுவும் இல்லையா? என்று கேள்வி எழும்ப கூடும்.

இந்த உலகில் மட்டுமல்ல எந்த உலகிலும் நிலையான அழகு என்பது இறைவனின் அழகு மட்டுமே அவனது திருமேனியாக பறந்து விரிந்து கிடக்கும் இந்த பிரபஞ்சமும் இதனுள் சுற்றிகொண்டே இருக்கும் உலகமும் உலகத்தினுள் ஓங்கி உயர்ந்து நிற்கும் மலையும், கருமுகில் கூட்டமும், மரம், செடி,கொடிகளும், நதியும், கடலும், அறுவிகளும் நிரந்தரமான அழகை வாரி வழங்கி கொண்டிருக்கிறது. என்பதில் சந்தேகமில்லை ஆனால் இந்த அழகுகளை எத்தனை பேரால் ரசிக்க முடிகிறது சிலருக்கு மலையையும், கடலையும் கண்டால் ரசனை வருகிறதோ இல்லையோ பயம் வருகிறது. சாதாரண மனித கண்களுக்கு இறைவனின் அழகும் இயற்கையின் அழகும் தெரிவதில்லை 



எனவே நம்மை போன்ற சாதரண மனித ஜீவன்களுக்கு நம்மால் புரிந்து கொள்ள கூடிய நிரந்தர அழகு என்பது இல்லவே இல்லையா? என்ற சிந்தனை எழுந்து நிற்கும் நம்மை போன்ற அறிவிலிகளையும் இறைவன் கருணையோடு பார்பதனால் நமக்கான தனி அழகையும் படைத்திருக்கிறான். அதை பற்றிய தெளிவு நம்மிடம் இல்லை என்றாலும் சொன்னால் புரிந்து கொள்ள நம்மால் இயலும் எனவே சாமான்ய அறிவு புரிந்து கொள்ளும் அழகு எது என்று கேட்டல் எதை பார்த்தால் மீண்டும் மீண்டும் பார்க்க தோன்றுகிறதோ அதுவே மாறாத அழகு என்று அடித்து சொல்லலாம்.

மலையை பார்த்தால் மீண்டும் பார்க்க தோன்றும், ஆகாயத்தில் நகர்ந்து கொண்டிருக்கும் மேக கூட்டங்களை எத்தனை முறை பார்த்தாலும். சலிப்பதில்லை அதே போன்று ஆடி ஆடி அசைந்து வரும் யானையை கோடான கோடி முறை பார்த்தாலும். இன்னும் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் உதிக்குமே தவிர போதும் என்ற திருப்தி வராது. இப்படி மிக எளிய அழகான உருவில் வந்தால் தான் மனித மனங்களை ஆசை என்ற படுகுழியில் இருந்து தூக்கி மேலே கொண்டு வரமுடியுமென்று கருதிய இறைவன் ஆணைமுகத்தானாக அவதாரம் செய்தது தான் விநாயகர் பெருமானாகும்.



ஆணை முகம் கொண்ட விநாயகர் பெருமானின் திருவுருவத்தை அமர்ந்த கோலத்தில் பார்த்தாலும் நின்ற கோலத்தில் கண்டு கழித்தாலும். கிடந்த கோலத்தில் தரிசனம் செய்தாலும் பிரணவ ஒலியான ஓம் என்ற அட்சரத்தின் வடிவமே தெரியும். சிவபெருமானின் மூத்த குமாரரான விக்னேஸ்வரன் ஓம் கார வடிவினன் என்று விநாயகர் அஷ்டோத்திர சத நாம வழியில் ஓம் ஓங்கார உருவே நம! என்று துதிக்க படுவதை இங்கு நினைவு கூற வேண்டும். ஓம் என்ற பிரணவ வடிவத்தில் இருந்து தான் உலகமே உருவானது என்பது இந்துக்களாகிய நம் நம்பிக்கை என்பதனால் இந்த உலகத்தை உருவாக்கியவன் விநாயகனே என்று உறுதி மொழியும் நமது சமய ஆன்றோர்களால் தரப்படுகிறது.

கணபதியினுடைய நான்கு கைகள் மனித இயல்புக்கு அப்பாற்பட்ட வானவர் இயல்பை குறிப்பதாகும். அவருடைய தும்பிக்கை விலங்கு இயல்பையும் காட்டுகிறது. அவரது மத்தள வயிறும் குறுகிய கால்களும் பூதகணங்களின் இயல்பை நமக்கு காட்டுகிறது. அவரது திருமேனியில் உள்ள மற்ற உறுப்புகள் மானுட இயல்பையும் தந்தமோடு கூடிய அழகிய வதனம் ஆண் இயல்பையும், தந்தம் இல்லாமல் இருக்கும் வதனத்தின் மறுபக்கம் பெண் இயல்பையும் புலப்படுத்துகிறது. அதாவது ஆணை முகம் மிருக தன்மையையும் மற்ற உறுப்புகள் மனிதர் உள்ளிட்ட தேவகணங்கள் இயல்பையும் விநாயகனின் திருமேனியில் ஒன்றாக இருப்பதை நமக்கு காட்டுகிறது. சுருங்க சொல்வது என்றால் அவரது சதுர்கரமும் தும்பிக்கையுடன் கூடிய பஞ்சகரமான ஐங்கரமும் உலகின் உள்ள பஞ்ச பூதங்கள் அனைத்தும் இறைவனுக்குள் அடக்கம் என்பதை சொல்லாமல் சொல்கிறது.



கணேச பகவானின் உருவம் இந்த பிரபஞ்சம் போல மிக பிரம்மாண்டமானது. அவ்வளவு பெரிய திருவுருவத்தின் வாகனமாக சின்னஞ்சிறிய மூஞ்சூறு அமைந்துள்ளது நமக்கு விந்தையாக இருக்கும். இந்து மத கடவுளின் திருவுருவங்களை பற்றி கேலி பேசுபவர்கள் எந்த காலத்திலாவது ஆணை ஒன்று எலியின் மீது பயணம் செய்ய முடியுமா? என்று கிண்டலாக கேட்பார்கள் அவர்களுக்கு இந்த உருவங்களின் உண்மை தத்துவம் என்னவென்று அறிந்து கொள்ளும் மனபக்குவம் இல்லை. எலி என்பது மனிதனுக்குள்ள கீழான இயல்பை காட்டுவதாகும். அந்த கீழான இயல்பை அடக்கி அதன் மேல் உட்கார்ந்து இருக்கும் இறைவனான விநாயகர் மனிதனுக்குள் மறைந்திருக்கும் பரமாத்மா சக்தியை காட்டுவதாகவும்.

மேலும் கையில் உள்ள மோதகம் என்ற கொழுக்கட்டை ஆத்மாக்களை காக்கும் பொறுப்பையும் இன்னொரு கையில் உள்ள தந்தம் உயிர்களுக்கு வரும் இடையூறுகளை தடுக்கும் பொறுப்பையும் மற்றொரு கையில் உள்ள நீர் கலசம் மனித உயிர்களை பீடிக்கும் மாயையை அகற்றும் பொறுப்பையும். வேறொரு கையில் உள்ள பாச கயிறும் அங்குசமும் ஆத்மாக்களை தீங்குகள் அணுகாமல் காத்து நிற்கும் பொறுப்பையும் கொண்டுள்ளதாக சமய சான்றோர்கள் சொல்வார்கள். இதுமட்டுமல்லாது ஐங்கர பெருமானின் ஐந்து திருகரங்களும் மூலமுதற் கடவுளின் முக்கிய தொழிலான படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல், ஆகிய இறை பண்புகளை காட்டுவதாகவும் அனுபுதிமான்கள் பேசுகிறார்கள்.



முக்கண் இறைவன் என்று அழைக்கப்படுவது சிவபெருமான் ஒருவரை தான் ஆனால் மூன்று கண்கள் உடைய இறைவன் அவர் மட்டுமல்ல முச்சந்தியில் அமர்ந்திருக்கும் விநாயகருக்கும் மூன்று கண்கள் உண்டு இந்த மூன்று கண்கள் முறையே சூரியனையும் சந்திரனையும் அக்னியையும் நினைவு படுத்திறது என்றாலும் சிவபெருமான் வேறு யாருமல்ல நானே அவரும் அவரே நானும் என்று நமக்கு உணர்த்தாமல் உணர்த்தவே மூன்று கண்களை கணபதி கொண்டு காட்சி தருகிறார். அதாவது கங்கை சடை உடையானை தனியாக வணங்க வேண்டியது இல்லை கணபதி ஒருவனை வணங்கினாலே போதும் என்பது இதன் அர்த்தமாகும்.

பிள்ளையாரின் உருவத்தில் மட்டும் தத்துவம் மறைந்தில்லை அவருக்கு மிக பிடித்தமானது என்று பக்தர்களால் படைக்கப்படும் பொருள்களில் கூட தத்துவங்கள் மறைந்துள்ளன. மிக குறிப்பாக சொல்வது என்றால் பிள்ளையார் சதுர்த்தி அன்று நாம் படைக்கும் கொழுகட்டையை எடுத்து கொள்வோம். அது எள், வெல்லம் போன்றவற்றால் செய்யப்படும் ஒரு சாதாரண இனிப்பு பண்டம் தான் ஆனால் அதனுள் இருக்கின்ற எள் என்ற கருப்பு தானியம் உலக பற்றை ஆசையை குறிப்பதாகும். அந்த ஆசையை தியாகம் செய்தால் மறுமை இன்பமாகிய வெல்லம் என்ற இனிப்பு கிடைக்கும் என்பதே மோதக படையலின் உண்மை தத்துவம் ஆகும்.



கணபதியின் உருவமும் கணபதியின் படையலும் மட்டுமா தத்துவங்களை சுமந்து நிற்கிறது. அவரது திருநாமங்கள் கூட ஆயிரமாயிரம் தத்துவ ஞானத்தை நமக்கு காட்டுகிறது. உதாரணமாக கணபதி என்ற நாமத்தில் உள்ள க என்ற முதலெழுத்து மனிதனின் மனதையும் வாக்கையும் குறிப்பதாகும். ண என்ற இரண்டாவது எழுத்து கடந்த நிலை என்ற பொருளை தரும். பதி என்பது தலைவனை சுட்டி காட்டும் வார்த்தையாகும். ஆக மனம், வாக்கு ஆகியவைகளை கடந்த நிலையில் பதியாகிய இறைவன் இருக்கிறான் என்பதே கணபதி என்ற திருநாமத்தின் ஆதர சுருதியாகும். அதே போன்று வக்ரதுண்ட என்ற திருநாமம் கொடிய மாயைகளை ஒடித்து போடுபவர் என்ற பொருளை தரும். லம்ப உதரர் அதாவது லம்போதரர் என்ற திருநாமம் சாதாரண மனித புலன்களுக்கு அகப்படாத பிரபஞ்ச வெளியை தனக்குள் கொண்டவர் என்ற பொருளை தரும். 

பொதுவாக கணபதியை பிரம்மசாரியாகவே நாம் அறிவோம் அதனால் அவர் சன்யாசிகளுக்கு உரிய தெய்வம் இல்லறத்தார்களுக்கு கணபதியின் அருள் கிடைப்பது துர்பலம் என்று சிலர் நினைக்கிறார்கள் அது மிகவும் தவறு கணபதி என்ற மூலமுதற் பொருளில் எந்த அளவு பிரம்மசரிய தன்மை உள்ளதோ அந்த அளவு இல்லறதன்மையும் இருக்கிறது. இதை தெளிவாக நமக்கு காட்ட சக்தியை தனது மடியின் மேல் வைத்து கொண்ட நிலையில் வல்லப கணபதியாக நமக்கு காட்சி தருகிறார். இதன் பொருள் நான் காட்டுக்கு சென்று கடுந்தவம் செய்யும் முனிவன் மட்டுமல்ல அன்னையை தாங்கும் நல்ல பிள்ளையுமாகவும் இருக்கிறேன் என்பதாகும்.

அதே போலவே சித்தி,புத்தி என்ற இரண்டு தேவி மார்கள் விநாயகரின் நாயகிகளாக இருப்பதை விநாயக புராணம் நமக்கு தெளிவாக காட்டுகிறது. அது மட்டுமல்ல ஷேமம்,லாபம் இரண்டு புத்திரர்கள் கணபதிக்கு உண்டு என்று அந்த புராணம் நமக்கு தெளிவு படவே சொல்லுகிறது. அதாவது இதன் பொருள் என்னவென்றால் சித்தி என்பது வெற்றியையும் புத்தி என்பது அறிவையும் குறிப்பதாகும். வெற்றியும் அறிவும் எங்கு இருக்கிறதோ அங்கே சுகம் என்ற ஷேமமும்,லாபமும் இயற்கையாகவே இருக்கும் அல்லவா? இது தான் விநாயக பெருமானின் கல்யாண திருகோலத்தின் தெளிவான விளக்கமாகும்.



Contact Form

Name

Email *

Message *