Store
  Store
  Store
  Store
  Store
  Store

பழைய கவிஞனுக்கு புதிய அறிமுகம்

லக்கிய ரசனை என்பது இப்பொழுது பலவகையாக மாறி கிடக்கிறது. கம்பன் தொடங்கி பாரதி வரையிலான படைப்புகளை ரசித்த காலம் மலையேறிவிட்டதோ என்ற சந்தேகம் கூட இன்று பலருக்கு ஏற்படுகிறது கதை, கவிதைகளை ரசிப்பது என்பது சினிமாவையும் சினிமா பாடல்களையும் ரசிப்பதாகவே ஆகிவிட்டது இது வெறும் சினிமா பாடல் தானே என்று ஒதுக்கி தள்ளிவிட முடியாத அளவிற்கு உடுமலை நாராயண கவி, மருதகாசி, ஆலங்குடி சோமு, பட்டுகோட்டை கல்யாண சுந்தரம் கவி காமு, ஷெரிப், கண்ணதாசன் போன்றவர்கள் காலத்தால் அழியாத அற்புத படைப்பை தந்த காலத்தில் சினிமா பாடல்களை இலக்கியம் என்று ரசித்து இருந்தாலும் கூட தமிழ் மக்களின் ரசனையை பாராட்டி இரக்கலாம். ஆனால் நாக்க முக்கா, புலி உறுமுது, போன்ற இரைச்சலான சத்தங்களை இலக்கியம் என்று ரசித்து ஒவ்வொரு தெரு முனையிலும் நின்று அலைபேசியில் கேட்டு ரசிக்கும் கூட்டத்தை பார்க்கும் போது வள்ளுவன் தன்னை உலகினினுக்கு தந்து வான்புகழ் கொண்ட தமிழ் நாடு திறந்த வெளி கூடராமாகி விட்டதோ என்று எண்ணத் தோன்றுகிறது.

சரி இப்போதைய ரசிக சிகாமணிகளை எண்ணி வேதனை படுவதை விட்டுவிட்டு அக்கால இலக்கிய ரசிகர்களை மனதில் கொண்டு பார்த்தோமானால் அங்கே கம்பன், இளங்கோ, பாரதி என்று வரிசைப்படி தான் ரசிக்கபட்டார்களே தவிர மிக முக்கியமாக சொல்வது என்றால் தமிழ் இலக்கிய சிற்பிகள் தான் மிக அதிகமாக முன்னிறுத்தப்பட்டார்களே தவிர தேசிய அளவில் எந்த படைப்பாளியை மிக பெரிய அளவில் நாம் ரசித்தது இல்லை ரவீந்தரநாத் தாகூர் சரத்சந்திரர் இக்பால் போன்ற மாபெரும் மேதைகளின் அறிமுகம் நமக்கு பெரிய அளவில் கிடையாது. வால்மிகி வியாசர் போன்ற கவிஞர்களை சமயசார்புடையயவர்களாக தான் அணுகினோமே தவிர கவிஞர்களாக நம்மால் பார்க்க முடியவில்லை இதற்கு காரணம் என்னவென்று ஆராய்ச்சி செய்வது இப்போது நம் நோக்கமல்ல ஆனால் அவர்களின் இலக்கியங்களை ரசிக்காமல் விட்டுவிட்டது நமது கருத்துகளை இன்னும் புதுப்பித்த கொள்ள வழி ஏற்படாமல் போய்விட்டதே என்ற குறைதான் மனதில் தொக்கி நிற்கிறது.

வால்மிகீ, வியாசரையாவது ஒரளவு அறிவோம். இந்திய இலக்கிய உலகத்திற்கு புதிய அழகியல் கோட்பாட்டை பெற்று தந்த காளிதாசனை அவன் பெயரை அறிந்த அளவிற்கு அவன் படைத்த இலக்கியத்தை நம்மில் எத்தனை பேர் அறிவோம். விரல்விட்டு எண்ணி விடலாம். அந்த எண்ணிக்கையின் தரத்தை அதிகரிக்க வேண்டும் என்பதற்காக சூரிய வெளிச்சத்திற்கு விளம்பர பலகை வைப்பது போல இந்த கட்டுரையை எழுத நான் முயற்சிக்கிறேன்.

இந்திய திருநாட்டின் இலக்கிய வரலாற்றில் ஒளி வீசி பிரகாசிக்க கூடிய மூன்று சூரியன்களை சொல்லலாம். ஒருவன் வால்மிகி இன்னொருவன் வியாசன் இவர்கள் இருவருக்கும் அடுத்த இடத்தை பிடிக்கும் இலக்கிய சூரியன் மகாகவி காளிதாசன் நமது இந்திய பண்பாடு இந்த மூப்பெரும் கவிஞர்களிடமிருந்தே செம்மைப்படுத்தபட்டு வெளிவந்தது என்று சொல்லலாம்.இந்திய இலக்கியங்கள் எல்லாமே அழிந்து போனாலும் இம்மூவரின் படைப்புகள் மட்டும் எஞ்சி நின்றால் பண்பாட்டு செறிவு மிக்க பல பாரதங்களை புதியதாக உருவாக்கிவிடலாம் என்று உலக அறிஞர்கள் பலர் கருதுகிறார்கள் இது மிகைப்படுத்தப்பட்ட கூற்றாக தெரியலாம். ஆனாலும் இது தான் உண்மை.

ஆதிகவி என்று வர்ணிக்கப்படுகின்ற வால்மிகியின் ராமாயணம் ஒரு சமூகத்தின் உண்மை முகத்தை வெளிச்சம் போட்டு காட்டுகிறது என்பதில் ஐயமேயில்லை. ஆனால் வால்மிகி படைப்பாற்றலும் கலா உணர்வும் கலந்த ஒர மேதை என்ற கருத்தில் சந்தேகமில்லை, ஆனால் வால்மிகியிடம் பழமையில் மிக தீவிரமான நாட்டமும் பிடிப்பும் ஒழுக்கத்தையும் அமைதியையும், தர்மத்தையும் அழுத்தம் கொடுத்து சித்தரிப்பதிலிருந்தே இதை உணர முடிகிறது.

வால்மிகிக்கு பிறகு வந்தவர் வியாசர் பழைய தர்மத்தை விட்டுவிடவில்லை என்றாலும் காலத்திற்கு ஏற்றவாறு மாற்றத்தையும் இவர் வரவேற்கிறார். வால்மிகியின் சொல்லாடலில் உள்ள அமைதி வியாசரில் காணமுடியாது. பதினாறு வயது பையனின் துள்ளல் வியாசர் நடையில் தெரிகிறது. தர்மத்தில் வலுவாக இருப்பது எப்படி மனிதனின் கடமையோ அதை போல வீரத்திலும் அடைக்கலம் கொடுப்பதிலும் பிசகாது வாழவேண்டும் என்பதே வியாசரின் கோட்பாடாகும்.

இம்மாபெரும் கவிஞர்களின் காலத்திற்கு மிகவும் பிற்பட்டவர் காளிதாசன். அதனால் இவர்கள் இருவரின் கருத்துக்களும் காளிதாசனின் மனதில் மிக அழமாக பதிந்திருந்தலில் ஆச்சர்யமில்லை முன்னோர்களின் அனுபவத்தையும் தனது சுய அறிவையும் ஒருங்கே கொண்டு புதிய பாதையில் அடியெடுத்து வைக்கிறார் காளிதாசன் வால்மிகி பாடிய நாகரிகத்திற்கும், வியாசர் வலியுறுத்திய பண்பாட்டிற்கும் காளிதாசனின் சித்தாந்தத்திற்கும் மலைக்கும் கடலுக்கும் உள்ள வித்தியாசம் தெரிகிறது. ஆதிகவிகளின் காலத்தில் அடக்க வேண்டிய உணர்வாக புலன் ஆசைகள் இருந்தன. காளிதாசனின் காலத்திலோ உடல் சார்ந்த ஆசைகள் மேலோங்கியிருந்தது ஒழுக்கம் என்பது பேச மட்டும் கூடிய விஷயமாகவும், பழைய லட்சியங்கள் கொள்கைகளும் இருந்திருந்தன, சமயவழிபாடு என்பது ஆடம்பர கேளிக்கையாகவும் சாதாரண மக்களிடத்திலும் நிபுணத்துவம் பெற்றிருந்த ஒவியம், இசை, சிற்பம், நடனம் நாடகம் எல்லாம் பிரபுக்களின் அந்தபுரங்களில் மட்டுமே கொலுவுயிருந்தன.
மலை உச்சியில் தோன்றிய நதி பள்ளத்தாக்கை நோக்கி ஒடி வந்தால் பயிர் விளையும். கோபுர உச்சியிலிருந்த கலை பாதாளத்தை நோக்கி வந்தால் உயிர் தோட்டத்தில் களைகள் மட்டும் தான் இருக்கும் இப்படி களைகள் மட்டுமே மண்டிகிடந்த காலத்தில் தான் காளிதாசன் தோன்றினார் தன்னை சுற்றி ஒடுகின்ற சமூக நதியின் ஒட்ட பாதையிலுள்ள சாதக பாதகங்களை ஊன்றி கவனித்தார். அவர் கற்றிருந்த அனுபவம், அலங்காரம், வியாகர்ணம், வேதாந்தம், வைத்தியம், ஜோதிடம் போன்ற துறை சார்ந்த ஞானமும், பயிற்சியும் அவரின் அறிவு கூர்மையை அதிகபடுத்தியதோடு அல்லாமல் நாடு முழுவதும் அவர் செய்திருந்த நீண்ட நெடிய பயணத்தில் இயற்கை வளமிக்க அழகுகளையும் தரிசனம் செய்திருந்தததினால் பெற்றிருந்த அழகுணர்ச்சியோடு சேர்ந்து இன்னும் கூர்மையாக விளங்கினார். காளிதாசனுக்கு தெரியாத கலைகளை இல்லையென்று சொல்லுமளவிற்கு வாய்பாட்டு வீணை வாசித்தல், நாட்டியமாடுதல், ஒவியம் வரைதல் போன்ற கலைகளில் எல்லாம் மிகச் சிறந்த விற்பன்னராக திகாழ்ந்தார். சகல கலைகளிலும் அவர் பெற்றிருந்த அபார ஞானமே ரசனை உணர்வுக்கு சிகரமான பல காவியங்களை உருவாக்க காரணமாக அமைந்தது எனலாம்.

காளிதாசனின் படைப்புகளை பற்றி தெரிந்த அளவிற்கு அவரது சொந்த வாழ்க்கையை பற்றி அவ்வளவாக யாருக்கும் விவரம் தெரியாது. மகாகவி காளிதாஸ் என்ற தமிழ் திரைப்படத்தில் நுனிமரத்தில் உட்கார்ந்து கொண்டு அடிமரத்தை வெட்டுவது போன்ற அசடனாக தான் ஆரம்பக்கால காளிதாசர் இருந்தார் என்பதை நம்ப முடியவில்லை. கடவுள் நினைத்தால் வழுக்கை தலையில் முடி வளர்வதை போல முட்டாளுக்கு கூட மூளையை வளர செய்து வடுவார் என்று சொல்லப்படும். கருத்துக்களில் எத்தனை சகவிகிதம் உண்மை என்பது நமக்கு தெரியாவிட்டாலும் அவர் ஆரம்பகாலத்தில் ஆடுகளை மேய்பவராக தான் இருந்தார் காலத்தின் கோலத்தால் மகிஷபுரியின் இளவரசியுடைய கணவர் ஆனார் என்பது ஏற்றுக் கொள்ளக் கூடியதாகவே தெரிகிறது. அவர் மேட்டுக்குடியை சேர்ந்தவராக இருந்திருந்தால் அடித்தட்டு மக்களின் ஆழமான உணர்வுகளை அனுபவபூர்வமாக வடித்து எடுத்திருக்க முடியாது.


அன்னை காளியின் அனுகிரஹத்தை பரிபூரணமா பெற்றிருந்த காளிதாசன் மாளவநாட்டை அரசாட்சி செய்த விக்கிரமாதித்தனின் ராஜ சபையிலுள்ள நவீன ரத்தினங்களில் ஒருவராக இருக்க கூடும் என்று பலமக்கள் நம்புகிறார்கள். ஆனால் காளிதாசரின் ரகுவம்சம், சாகுந்தலம் போன்ற காவியங்களில் வர்ணனை செய்யப்படுகின்ற பகுதிகளில் பல காஷ்மீரத்தில் தான் உள்ளது. எனவே அவர் காஷ்மீர்வாசி என்று ஒருசாராரும், மேக தூதத்தில் உஜ்ஜையினி நகரை அணுஅணுவாக வர்ணை செய்திருப்பதால் அவர் உஜ்ஜையினியை சார்ந்தவராக தான் இருக்க வேண்டும் என்று வேறொரு சாரர் கருதுகிறார்கள். இதில் உண்மை எது , பொய் எது என்று நமக்கு தெரியவில்லை.

மகாகவி காளிதாசன் ருது சம்மாரம் குமார சம்பவம், மேக சந்தேசம் ரகுவம்சம் ஆகிய நான்கு காவியங்களையும் விக்கிரமோர்வசியம், மாளவிகாக்கினிமித்ரம், சாகுந்தலம் ஆகிய நாடகங்களையும் உள்ளத்தை கொள்ளை கொள்ளும் அழகிய மொழி நடையில் நமது சாதாரண அறிவால் நினைத்து பார்க்கவே முடியாத உயரிய கற்பனை வளத்தில் படைத்துள்ளார் அவரது காவியங்களையும், நாடகங்களையும் முழுமையாக படிக்கின்ற வாய்ப்பு எல்லோருக்கும் அமையவில்லை என்பதினால் அவைகள் ஒவ்வொன்றை பற்றியும் சிறிது சிந்திப்போம்.

ருது சம்மாரம் என்ற காவியம் இயற்கையிலுள்ள பருவகாலங்களின் அழகை அழகிய ஒவியம் போல் வரைந்து வார்த்தைகளால் நம் கண் முன்னால் கொண்டு வந்து நிறுத்துகிறது. மழைக்காலமும், பனிக்காலமும் இந்தியர்களுக்கு மிகவும் பிடித்த காலம் எனலாம் கள்ளி செடிகூட பற்றி எரியும் கோடை காலத்தை நாம் விரும்புவதே இல்லை. ஆனாலும் வெயில் காலம் என்பது அழகு இல்லாத காலம் அல்ல. கண்ணாடி தகதகப்பது போல் மின்னுகின்ற கானல்நீரை மற்ற காலத்தில் காண முடியுமா? கொளுத்துகின்ற வெய்யிலில் குளிர்ச்சியான நீரை உச்சந்தலையில் ஊற்றினால் உடல் முழுக்க எழுந்து அடங்குமே ஒரு ஆனந்த கிறுகிறுப்பு அது வேறு எந்த பருவத்தில் கிடைக்கும் மஞ்சள் மூக்கு மைனாவும், பளபளக்கும் காக்காவும் வாய்கால் நீரில் குளித்துவிட்டு சிறகுகளை உலர்த்தும் அழகை கோடைக்கால மாலை வேளைகளில் பார்த்தவனுக்கு தான் கோடையின் கொள்ளை அழகு தெரியும். இப்படி ஒவ்வொரு பருவத்திற்குள்ளும் ஒளிந்திருக்கு அழகு என்ற தேவதையை வெளியே அழைத்து வந்து நமது ஒவ்வொருவரின் அறிவுக்கும் நல்ல விருந்து தருகிறான் காளிதாசன் இந்த நூலில் ருது சம்மாரத்தின் நடையழகு, சொல் அழகு, கற்பனை அழகு அனைத்துமே படிப்பவரை கட்டிப் போட்டுவிடும்.

அடுத்த காவியமான மேகசந்தேசம் என்பதை தமிழில் மேகதூதம் என்று அழைக்கிறோம். அதாவது மனைவியை விட்டு பிரிந்திருக்கும் கணவன் அவளை பிரிந்து இருப்பதினால் ஏற்படும் மன வேதனையை வானத்தில் ஒடுகின்ற மேகத்தை அழைத்து அதனிடம் சொல்லி என் எண்ணத்தை அவளிடம் சேர்த்து விடு என மேகத்தை தூதாக அனுப்புவது தான் இந்த காவியத்தின் நிகழ்வு.

காவிய தலைவனான ஒரு ஏச்சன் ராமகிரி கோட்டையில் உச்சியில் நின்று மேகத்தை அழைத்து பேசுகின்றான் மேகம் அவனிடம் கொஞ்சுகிறது. மிஞ்சுகிறது, குதித்து களியாட்டம் போடுகிறது. இந்த காட்சியின் வர்ணனையை படிக்கும் போது காளிதாசன் இயற்கையை எந்தளவு நேசித்திருக்கிறார் என்பது நமக்கு தெரிகிறது. மேகம் செல்லும் இடமெல்லாம் அதாவது நாடு, நகரம், மலை, வனாந்திரம், நதி, ஏரி,மரம், மலர், ஒவ்வொரு பகுதியின் நீர்வளமும், நிலவளமும், கவிநயம் சொட்ட சொட்ட வர்ணிக்கப்படுகிறது. போக்குவரத்து வசதி எதுவுமே இல்லாத அந்த காலத்தில் காளிதாசன் கால்நடையாகவே நடந்து சென்று ஒவ்வொரு பகுதியையும் நேரிடையாக பார்வையிட்டு இருந்தால் மட்டுமே சாத்தியம் என்பது அந்த வர்ணனையை படிக்கும் போதே நமக்கு தெரிகிறது. மேக தூதத்தில் காட்டப்படும் காட்சியழகை எல்லாம் படம் பிடிக்க வேண்டுமென்றால் ஆயிரம் மேகமராக்கள் போதாது. மேகசந்தேசத்தில் முதல் பகுதியான பூர்வமேகம் பகுதி முழுவதும் பலவகையான இயற்கையழகுகள் விதவிதமான வார்த்தை ஜாலங்களால் வர்ணிக்கப்படுகிறது. கடைசி பகுதியான உத்திர மேகத்தில் காதலர்களுக்கிடையில் உள்ள ஆழமான பாசம் எடுத்து சொல்லப்படுகிறது.

குமாரசம்பவம் என்ற காவியம் பதினேழு பகுதிகளை கொண்டதாகும். உலகை படைத்த ஈஸ்வரன் இமய மலை சாரலில் தவம் புரியம் போது இமவான் என்ற அரசனுக்கு மகளாக பிரிந்த பார்வதி பணிவிடை செய்கிறாள். ஈசனின் மோன தவத்தால் தைரியம் பெற்ற தாரகாசூரன் என்ற அசுரன் தேவர்களை கொடுமை செய்கிறான். பார்வதியும் பரமேஸ்வரனும் இணைந்து கார்த்திகை குமாரனை பெற்றுயெடுத்தால் தான் அசுரனின் அராஜகம் முடிவுக்கு வரும் என்று தவத்தில் இருக்கும் சிவனை எழும்ப மன்மதன் மலர் அம்பு எய்துகிறான். சிவனின் கண்திறக்க காமன் எரிந்து சாம்பலாகிறான். காதல் கணவனின் பிரிவை எண்ணி ரதி புலம்புகிறாள் பார்வதியும், ஈசனும் இணைந்து குமார ஜனனத்திற்கு வழி ஏற்படுகிறது இந்த காவியம் முழுவதும் ஆண் பெண்ணின் உறவு சுகமே பிரதானமாக பேசப்படுகிறது. உமை சிவனை அடையும் காட்சியும், ரதி தேவியின் சோகப் புலம்பலும், நாடக பாணியில் சுவைபட வர்ணிக்கப்பட்டுயிருக்கிறது. இணைப்பின் மகிழ்வும் பிரிவின் துயரமும் குமார சம்பவத்தன் சிறப்பு எனலாம்.

ரகுவம்சம் என்ற இன்னொரு காவியம் திலிபன் தொடங்கி அக்னிவரன் வரையிலான ஸ்ரீராமனின் பரம்பரையை காட்டுகிறது பத்ம புராணத்தை அடிப்படையாக கொண்டு தான் காவியம் உருவாக்கப்பட்டிருக்கிறது என்றாலும் சரத்ருது, வசந்த ருது போன்ற வர்ணைகளில் காளிதாசனின் கைவண்ணத்தை அதிசயமாக பார்க்க முடிகிறது. ராமரின் காலத்தில் புகழின் உச்சியிலிருந்த ரகுவம்சம் அக்னிவரன் என்ற காம மன்னனின் காலத்தில் பூண்டற்று போனதை காட்டும் காளிதாசர் எவ்வளவு பெரிய பரம்பரையாக இருந்தாலும் பெண்ணாசையானது மன்னர்களை பிடித்து விட்டால் நிலைத்து வாழ முடியாது என்பதை அழுத்தம் திருத்தமாக சொல்லுகிறார்.

இனி காளிதாசனின் நாடகங்களை சற்று கவனிப்போம். மாளவிகாக்கனிமத்திரம் என்ற நாடகத்தில் முக்கிய கதாபாத்தரம் நாட்டிய தாரகை மாளவிகா, இவள் அழகின் இலக்கணம், பேசினால் கிளி கொஞ்சும் கண் அசைந்தால் மின்னலுக்கு உடல் எரியும், வாய் திறந்தாலோ மாதுளை முத்துக்கள் எல்லாம் ஒடி ஒளிந்து கொள்ளும், மயில் போன்ற சாயல் குயில் போன்ற குரல், அன்னம் பழிக்கும் நடை, அவள் கொடியிடை காண கோடிக்கான பேர் தவமிருப்பார்கள். அவள் விரல் நகத்தில் நிலா வந்து முகம் பார்க்கும். அவள் ஒவியகலையில் மேதை இசைக்கு அரசி, பரதகலையின் நூணுக்கங்களை ஆழமாக அறிந்த ஆடல் திலகம். அவள் அழகிலும், அறிவிலும் மயங்குகிறான் மன்னன் ஒருவன் மன்னனோ மணமானவன். கணவனின் காதலை தடுக்க எவ்வளவோ போராடுகிறார் அரசி கடைசியில் போகத்தின் முன்னால் மண்டியிட்ட மன்னனை கை கழுவி விடுகிறான் தர்ம தேவதையான மனைவி, அழகு வர்ணனையும், மோகத்தின் வேகமும் தர்மத்தின் போராட்டமும் நாடகத்தில் போட்டி போட்டு கொண்டு பளிச்சிடுகிறது.

அடுத்தது ஊர்வசியின் அழகு லாவண்யத்தை அனு அனுவாக வர்ணிக்கும் விக்கிரமோர்வசியம், மிகச்சிறந்த நாடகம் என்றாலும் கூட காளிதாசனின் கவிதிறமையை உலகுக்கு எடுத்துகாட்டிக் கொண்டு மகாபாரதத்தில் உள்ள விசுவாமித்திரர் வரலாற்றை அடிப்படையாக கொண்டு சகுந்தலை, துஷ்யந்தன் காதலை கண் முன்னால் நிறுத்துகிறது வேட்டைக்கு வரும் துஷ்யந்தன் வனதேவதை போன்ற சகுந்தலையை மான்கள் புடைசூழ காண்பதும் கணையாழி பரிசளிப்பதும், முனிவரின் சாபத்தால் சகுந்தலையை மறந்து போவதும் இந்த நாடகத்தின் சிகர காட்சிகளாகும். இதில் வரும் பல காட்சிகள் தான் ராஜ ரவிவர்மாவின் ஒவியங்கள் பலவற்றிக்கு மூலக்கருவாகும். காமம் என்பது தெய்வீகமாக மாறக்கூடியது என்பதையும், மனித தன்மையின் உண்மை மாண்பு கடவுள் தன்மையோடு இரண்டற கலக்கும் என்பதையும் கவிஞர் அழகுற விளங்குகிறார். இதனால்தான் அயல்நாட்டு இலக்கிய விமசகர்கள் கூட இனிமையில் மலர்களையும் புதுமையில் பழங்களையும் ஒருங்கே காட்டி மண்ணையும், விண்ணையும் இந்த நாடகம் இணைப்பதாக போற்றி புகழுகிறார்கள். காளிதாசன் இந்த நாடகத்தில் கையாண்டுள்ள மொழியின் சிறப்பும் வார்த்தையின் அலங்காரமும், ஒலி அமைப்பின் கம்பீரமும் நம்மை வசபடுத்துகிறது.

பொதுவாக இந்திய இலக்கியங்கள் தர்மத்தையும், நிகழ்கால வாழ்க்கையையும் சந்தோஷத்தையும் கடவுளோடு ஒருங்கினைவதையும் காட்டும் கருவிகளே ஆகும். இதைதான் அறம், பொருள், இன்பம், வீடு என்று சுருக்கி சொல்வார்கள் ராமாயணம், மகாபாரதம் போன்ற காவியங்களில் இந்த நான்கு அமைப்புமே சமமாக இணைந்திருப்பதை பார்க்கலாம். ;இந்திய இலக்கியவாதிகளின் காளிதாசனே முதுல்முறையாக இன்பம் என்ற ஒரேயொரு பொருளை மட்டும் கருவாக கொண்டு படைப்புகளை தந்தவர் என்று சொல்லலாம் மனித உடல் அழகையையும் உறவையும் பிரதானமாக பேசிய போதும் கூட அழகியலை தவிர ஆபாசத்திற்கு இடமில்லாமல் காளிதாசன் தந்திருக்கும் விதம் இன்றைய இலக்கியவாதிகள் நிச்சயம் அறிந்திருக்க வேண்டிய ஒன்றாகும்.
இன்றைய படைப்பாளிகளில் பலர் ஆண், பெண் பேதமின்றி மனித உடலை வார்த்தைகளால் வெளிச்சம் போட்டு காட்டுகிறார்கள். அது பல நேரங்களில் ஆபாச இலக்கியமாக மாறி விடுகிறது. தனி மனிதனின் அபிலாஷைகளை சித்திரமாக தீட்டுவது தான் இலக்கியம் என்று நினைக்கும் மனநிலை இன்று பலரிடம் உள்ளது. இயற்கையை பற்றி பேசுபவர்கள், பண்பாட்டை பற்றி பேசுபவர்கள் அனைவரும் பழமைவாதிகள் என்று விமர்சிக்கும் நிலை இன்று உள்ளது. அம்மாவை அம்மா என்று அழைப்பது பழமைவாதம் என்று சொல்லப்பட்டாலும் ஆச்சர்யம்படுவதற்கில்லை அந்த காலம் வந்து விடுமோ என்று பயமாக இருக்கிறது.

என் கையில் அலைபேசி இருக்கலாம் இணையதளம் இருக்கலாம். எனது வாரிசுகள் சந்திர மண்டலத்தில் வீடுகட்ட செங்கல்சூளைகூட வைக்கலாம். ஆனால் என் பெற்றோரை கொன்று புதைத்தால் தான் இத்தனையும் நிரந்தரமாக கிடைக்கும் என்றால் புதுமை அலங்காரங்கள் எல்லாம் முகத்தில் புண்வரச்செய்யும் அரிதாரங்களே ஆகும். அரிதாரத்திற்காக ஆவேச குரல் எழுப்பும் புதுமைவாதிகள் சற்றேனும் காளிதாசனை உணர்ந்தால் பழமை என்பது கழிக்க தக்கது அல்ல என்பதை அறிவார்கள்.









Contact Form

Name

Email *

Message *