( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........!! click here )வரும் ஞாயிறு அன்று அமிர்த தாரா தீட்சை அளிக்கப்படுகிறது appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846 

Share !
This Post

உஜிலாதேவி பதிவுகளை
மின்னஞ்சலில் பெற

பிடித்த பேய் ஓட...


    தாழ்வு மனப்பான்மை கூடாது தாழ்வு மனப்பான்மையை வளரவிட்டால் வாழ்க்கை என்பது செல்லரித்து போய்விடும் எந்த செயலையும் உத்வேகத்தோடு செய்ய முடியாமல் மனமும் உடலும் துருபிடித்து விடும் என்று பலர் பேசுகிறார்கள். அப்படி பேசுவதில் தவறு இருப்பதாகவோ அவர்கள் தவறுதலான கருத்துக்களை பரப்புவதாகவோ யாரும் சொல்லிவிட முடியாது. ஆனால் தாழ்வு மனப்பான்மை கூடாது என்பது நடைமுறைக்கு சாத்தியமானது தானா? என்பதை சிந்திக்க வேண்டும்.

உண்மையை சொல்வது என்றால் மனிதனாக பிறந்த நூற்றுக்கு 99 சதவீகிதம் மனிதர்கள் தாழ்வு மனப்பான்மை கொண்டவர்களாகவே இருக்கிறார்கள். அல்லது பலபேர்களின் வாழ்க்கையில் எதாவது ஒரு மூலையில் நமக்கு சில விஷயங்கள் தெரியாது நம்மை விட புத்திசாலிகள் இருக்கிறார்கள் என்று நினைத்து மனத்தளர்ச்சி அடையாத யாருமே இல்லை என்று சொல்லிவிடலாம். எதிரே வருகின்ற மனிதனை விட நான் அழகில் குறைந்தவனாக இருக்கிறேன் என் தம்பியை விட நான் புத்திசாலி தனத்தில் குறைந்தவன் என் நண்பன் எல்லோரையும் தனது வசீகர பேச்சாற்றலால் கவர்ந்து விடுகிறான். நான் எத்தனை முயற்சி செய்தாலும் அது நடக்கவில்லை பக்கத்து வீட்டுக்காரன் நேற்று தான் வியாபாரம் துவங்கியது போலிருந்தது அதற்குள் அழகான வீடு கட்டிவிட்டான் புதிய காரும் வாங்கி விட்டான். நான் இன்னும் பழைய சைக்கிளிலிருந்து மாறவே இல்லை என்று நினைத்து மனதிற்குள் மயங்காதவர்கள் மிக குறைவு.

தாழ்வு மனப்பான்மையில் வீழ்ந்து கிடப்பது ஆண்களை விட பெண்களே அதிகம். பெண்களின் தாழ்வு மனப்பான்மை அவர்களின் குழந்தை பிராயத்தில் இருந்தே துவங்கி விடுகிறது எனலாம். எதிர்த்த வீட்டு பாப்பா வண்ண வண்ணமாக காற்றாடி வைத்திருக்கிறாள் நிறைய பொம்மைகள் வைத்து விளையாடுகிறாள் புதிது புதிதாக பாவாடை சட்டை போட்டுகொள்கிறாள் அவள் அப்பா அவளை பல ஊர் சுற்றி காட்டுகிறார். என்பதில் துவங்கி நகைநட்டு புடவை வீடு வாசல் புருஷன் உத்தியோகம் வரையிலும் விரிந்து பரவி கிடக்கிறது. சாந்தா புருஷன் இருக்கிறாரே அவர் என்னாமா சமத்தா காரியம் பண்ணுகிறார். பணம் சம்பாதிப்பதில் ஆகட்டும் பெண்டாட்டியை தாங்குவதில் ஆகட்டும் அவரை போல மனுஷாளை பார்ப்பதே கடினம் நீங்களும் இருக்கிறீர்களே சதா எண்ணெய் வடிஞ்ச முகமும். ஓட்டை ஸ்கூட்டருமாக என்று நச்சரிக்காத புகைச்சலில் அகப்படாத பெண்களே குறைவு வேண்டுமானால் அவர்களின் தேவைகள் மாறுபட்டு இருக்கலாமே தவிர தேவைகளை அடியொற்றிய தாழ்வு மனப்பான்மை அதிருப்தி தன்மை பெரிய அளவில் மாற்றம் இல்லாமல் தான் இருக்கும். 


 வயதானபிறகு வருகின்ற தாழ்வு மனப்பான்மையை கூட சற்று நியாய படுத்தலாம். வயதாகி விட்டது முன்பை போல சுறு சுறுப்பாக செயல்பட முடியவில்லை உடம்பு ஒத்துழைக்க மறுக்கிறது. பல காரியங்களை செய்து பார்த்தாகி விட்டது. எல்லாவற்றிலும் ஏறக்குறைய தோல்வி தான் இனியும் செயல்படுவதற்கு வசதியும் இல்லை வயசும் இல்லை என்ற நிலை வந்துவிட்டால் கூடவே தாழ்வு மனப்பான்மையும் வந்துவிடும். இதை முதுமையின் வியாதி என்றே சொல்லலாம். ஆனால் இளம் பிராயத்தில் மனித ஜென்மங்களுக்கு வருகின்ற தாழ்வு மனப்பான்மை இருக்கிறதே அது கொடுமையிலும் கொடுமையானது.

ஒரு சின்ன பெண் பத்து பதினெட்டு வயது அவளுக்கு இருக்கலாம். இப்போது தான் பள்ளியை விட்டு கல்லூரிக்கு செல்ல துவங்கி இருக்கிறாள். அவளுக்கு ஒரு பிரச்சனை கல்லூரிக்கு கட்ட பணமில்லை என்றா? புதிய ஆடைகள் வாங்க முடியவில்லை என்றா? கல்லூரியின் பாடம் ஆரம்பத்திலையே புரியமுடியாமல் கடினமாக இருக்கிறது என்றா? இதில் எதுவுமே அவளுக்கு பிரச்சனை இல்லை அவளுடைய பிரச்சனை மிகவும் விந்தையானது. அவளோடு சில பெண்கள் படிகிறார்களாம் அவர்கள் பார்ப்பதற்கு ஜப்பான் பொம்மை மாதிரி பளபளவென்று அழகாக இருக்கிறார்களாம். முகத்தில் ஒரு மாசு மறு கூட கிடையாதாம். இவள் முகத்திலோ நிறைய முகப்பரு இருக்கிறதாம். கன்னங்களிலும் நெற்றியிலும் தழும்புகள் இருக்கிறதாம் பார்ப்பதற்கு விகாரமாக இருக்கிறார்களாம். இதானால் அவள் கல்லூரி செல்ல மறுக்கிறாள். அழகுக்கான மார்க் போட்டால் டாப்10 வரிசையில் இவள் வரமாட்டாளாம்.

இளம் பெண்களின் மனவோட்டம் இப்படி என்றால் மீசை முளைக்கும் பையன்களின் பிரச்சனை வேறு விதமாக இருக்கிறது. புதிய திரைப்பட கதாநாயகன் போல் முடிவெட்டி கொள்ள அப்பா விடமாட்டேன் என்கிறார். புதிய பைக் வாங்கி தர மறுக்கிறார். விருப்ப படி செலவு செய்ய கையில் காசு கிடைக்க மாட்டேன் என்கிறது. செல் போனில் செய்தி அனுப்பினால் வகுப்பு தோழி பதில் தரமாட்டேன் என்கிறாள். இன்னும் வித விதமான வினோத பிரச்சனைகள் அவர்களுக்கு

குழந்தைகள் நிலை தான் இப்படி என்றால் பெற்றோர்களின் நிலையோ அதிக வித்தியாசம் இல்லாமல் இதே வகையில் தான் தொடர்கிறது. ஒவ்வொரு குடும்ப தலைவனும் நிறைய சம்பாதிக்க விரும்புகிறான். நாலுபேர் மத்தியில் நடந்து போனால் அனைவரும் தன்னை மதிக்க வேண்டும். எழுந்து நின்று வணக்கம் செலுத்த வேண்டும் என்று எதிர்பார்க்கிறார். இது முடியாத போது தான் வாழ்வதற்கே அருகதை அற்றவர் என்ற முடிவுக்கு வந்து விடுகிறார். கணவன் சோர்ந்து விழும் போது தூக்கி நிமிர்த்த வேண்டிய மனைவியும் ஏறக்குறைய இதே எதிர்பார்ப்புகளில் காற்று இல்லாத ரப்பர் டியூப் போல் வளைந்து நெளிந்து கிடக்கிறாள். இந்த நிலைமை தான் உலக முழுவதும் உள்ள மக்கள் மத்தியில் பரவலாக காணப்படுகிறது. 


 இப்போது நான் சொல்லுகின்ற விஷயம் ஒன்றும் புதுமையான கண்டுபிடிப்புகள் இல்லை நிறையப்பேர் இதை பற்றி சலிப்பு ஏற்படும் அளவிற்கு ஆய்வும் செய்து விட்டார்கள் செய்த ஆய்வுகளை பக்கம் பக்கமாக எழுதியும் தீர்த்து விட்டார்கள். அவர்கள் எழுதியதை பலரும் படித்தும் முடித்து விட்டார்கள். ஆனால் நிலமை என்னவோ எந்த வித முன்னேற்றமும் இல்லாமல் அபப்டியே தொடர்கிறது. இன்று உலக முழுவதும் இருக்கும் சிக்கல்கள் பிரச்சனைகள் அத்தனைக்கும் இது தான் மூலகாரணம் என்பது தெளிவாக சிந்தித்தால் நன்றாக புலப்படும். அமெரிக்ககாரன் தன்னை விட மற்றவன் புத்திசாலி ஆகிவிட்டால் தனது மாங்காய் விலை போகாது என்று நினைக்கிறான். அதற்கு காரணம் தன்னிடமுள்ள மாங்காய் தரத்தில் குறைவு என்பது அவனது நம்பிக்கை சீனாகாரனும் இந்தியனும் ஒன்றும் முன்னேற்றமாக இல்லை அமெரிக்க மனதை போலவே இவர்கள் மனதும் தாழ்வில் தான் கிடக்கிறது. அதனால் தான் தானும் முன்னேறாமல் மற்றவனையும் முன்னேற விடாமல் தடுத்துக்கொண்டு படுத்து கிடக்கிறார்கள்.

ஆயிரம் போதனைகள் செய்ய பட்டாலும் மனிதனிடமுள்ள தாழ்வு மனப்பான்மை குறையாமல் வளர்ந்து கொண்டு போவதற்கு என்ன காரணம்? தாழ்வு மனப்பான்மையை முற்றிலுமாக நிவர்த்தி செய்து கொள்ள இதுவரை எந்த வழிமுறையும் பயிற்சிகளும் சொல்லப்படவில்லையா? கண்டுபிடிக்க வில்லையா? என்பதை நோக்க வேண்டும். உண்மையை சொன்னால் தாழ்வு மனப்பான்மையை பட்டியல் போட்டால் எந்த அளவு பட்டியல் நீளுமோ அதே அளவு அதை நீக்குவதற்கான பயிற்சிகளின் பட்டியலும் நீளுகிறது. ஆனாலும் எந்த பிரயோஜனமும் இதுவரை ஏற்படாதற்கு என்ன காரணம்?


தாழ்வு மனப்பான்மை நீங்க மாற்றம் வர வேண்டும். அந்த மாற்றம் எங்கே இருந்து துவங்க வேண்டும் என்பது தான் இதுவரை முக்கிய பிரச்சனையாக இருந்து வருகிறது. நிறையப்பேர் சொல்கிறார்கள் வெளியில் உள்ளவைகளை மாற்றி அமைத்து விட்டால் எல்லாம் சரியாகி விடும் என்று இதற்காக அவர்கள் புதிய சட்டங்களை உருவாக்குகிறார்கள். புதிய சித்தாந்தங்களை தோற்றுவிக்கிறார்கள். ஆனாலும் மாற்றம் நடைபெறவில்லை நாளைமுதல் எல்லோரும் அதிகாலையில் எழுந்து குளித்து முடித்து சுப்ரபாதம் பாடவேண்டும்மென்று சட்டம் போட்டாலோ அல்லது அதற்காக மற்றவர்களை நிற்பந்தித்தாலோ சிறிது காலம் தான் அது முடியுமே தவிர பல காலத்திற்கு அதை தொடர முடியாது. ஆனால் அதே மாற்றம் நமக்குள் ஏற்படுமேயானால் அது நிரந்தரமாக இருக்கும். அதாவது மாற்றங்களை வெளியில் செய்து எந்த பயனுமில்லை உள்ளுக்குள் செய்ய வேண்டும்.

தாழ்வு மனப்பான்மைகள் அதிகபடியாக வளர்வதற்கு ஊடகங்கள் முக்கிய காரணமென்று ஒருசாரார் சொல்கிறார்கள். அதாவது தொலைக்காட்சி மற்றும் சினிமாவில் காட்டப்படும் ஆடம்பரமான வாழ்க்கையை பார்த்து அதே போலவே தானும் வாழ முயற்சித்து முடியாமல் பல மனிதர்கள் தாழ்வு மனப்பான்மை என்ற சவக்குழியில் விழுந்து கிடக்கிறார்கள். எனவே ஊடகங்களை தணிக்கை செய்ய வேண்டும். திருத்த வேண்டும். என்பது அவர்களின் கோரிக்கைகளாக இருக்கிறது. இந்த கருத்தை ஆழமாக சிந்தித்தால் மிக சீரியசான நகைச்சுவை என்று தான் முடிவுக்கு வரவேண்டிய நிலையில் நாம் இருக்கிறோம். காரணம் ஊடகங்கள் காட்டும் ஆடம்பரங்கள் என்பது வெறும் நிழல் மட்டுமே என்று பலருக்கு தெரியும். ஆனாலும் அவர்கள் அதில் ஊறி கிடப்பதற்கு மிக முக்கிய காரணம் தன்னை மாற்றிக்கொள்ள அவர்களுக்கு மனமில்லை சோம்பேறி தனம் அதை தடுக்கிறது. என்பதை ஒத்துகொள்ள வேண்டும். 


உண்மையில் தாழ்வு மனப்பான்மை என்பது சோம்பேறி தனம் பெற்று போட்ட அசுர குழந்தை சோம்பேறி தனத்தை ஒழித்து விட்டு கடினமாக உழைக்க துவங்குவோமானால் தாழ்வு மனப்பான்மை இருந்த இடம் தெரியாமல் மறைந்து விடும். இன்று உடல் வலிக்க வேலை செய்வது குறைந்து விட்டது. உட்கார்ந்த இடத்தில் வேலைகளை முடித்து கொள்ள இயந்திரங்கள் வந்து விட்டன இதனாலே தாழ்வு மனப்பான்மை கடவுள் மாதிரி நோக்குமிடமெல்லாம் நீக்கமற நிறைந்து விட்டது. எனவே வெளிமாற்றங்களை நம்பாமல் எவனொருவன் உள்மாற்றமான உழைப்பில் கவனம் செலுத்துகிறானோ அப்போதே அவன் தாழ்வு மனப்பான்மையில் இருந்து விடுதலை பெறுகிறான். பகவத் கீதையில் சொல்வதை போல நாம் அனைவரும் வேலை செய்வதற்காகவே பிறந்திருக்கிறோம். பிறப்பின் நோக்கத்தை விட்டு விட்டு வேண்டாததை செய்தால் வேண்டாதவைகள் தான் கிடைக்கும். என் அறிவுரை என்னவென்றால் தாழ்வு மனப்பான்மை நீங்க வேண்டும். வாழ்வு உயர வேண்டும். என்று நினைப்பவர்கள் தயவு செய்து நான் உயர்ந்தவன் வெற்றி பெறவே பிறந்தவன் என்று ஜபம் செய்வதை விட்டு விட்டு கையில் கிடைக்கும் கருவியை எடுத்துகொண்டு உழைப்பதற்கு இறங்கி வாருங்கள் தாழ்வு எண்ணமென்ற கொடிய பேய் உங்களை விட்டு ஓடும்.+ comments + 4 comments

மிக மிக நல்ல பதிவு.சாமிஜி,

Anonymous
14:49

மிக அற்புதமான சிந்தனை!

நல்ல பதிவு ஜி

நல்ல பதிவு ஜி


Next Post Next Post Home
 
Back to Top