( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........!! click here )வரும் ஞாயிறு அன்று அமிர்த தாரா தீட்சை அளிக்கப்படுகிறது appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846 

Share !
This Post

உஜிலாதேவி பதிவுகளை
மின்னஞ்சலில் பெற

அஹிம்சைக்காக யுத்தம் செய் !

இந்து மத வரலாற்று தொடர் 34
   வானளவு விரிந்து கிடக்கின்ற மகா சமூத்திரம் தன்னை மட்டும் உருவாக்கி கொள்ளவில்லை தன்னிலிருந்து பலவற்றையும் உற்பத்தி செய்கிறது. கரிய மேகங்கள் சுமந்து செல்லும் சமூத்திர நீர்த்திவலைகள் மழையாக பொழிகிறது. அந்த நீர் அருவியாக குதித்து நதியாக நடந்து மீண்டும் சமூத்திரத்திலையே சங்கமிக்கும் முன்பு ஏரிகள் குளங்கள் குட்டைகள் வாய்க்கால்கள் கண்மாய்கள் என்று பலவற்றை சிருஷ்டி செய்துவிடுகிறது. அதனால் தான் இறைவனது படைப்பில் அலைவீசும் மாக்கடல் தலையாய படைப்பாக இருக்கிறது.

சமூத்திரம் நீலமானது, வானமும் நீலமானது எல்லை இல்லாது எவையவை எல்லாம் இருக்கிறதோ அவை அனைத்துமே நீலமானது தான். கடலைப்போல வானத்தை போல இந்து மதமும் எல்லை இல்லாதது. அதனால் தான் இங்கு கடவுளாக காட்டப்படும் கண்ணனும் காளியும் எல்லை இல்லாத பரம்பொருளின் விளக்கமாக நீல நிறத்தில் இருக்கிறார்கள். சமூத்திரம் எப்படி சிறிய குட்டைகளுக்கு கூட காரணமாக இருக்கிறதோ அதே போலவே இந்து மதமும் பலவிதமான கருத்துக்களுக்கும் தத்துவங்களுக்கும் வாழ்க்கை முறைகளுக்கும் காரணமாக இருக்கிறது.


ஒரு சிறிய உளி எப்படி பெரிய மலையை பிளந்து விடுமோ அதே போலவே இந்து மதத்திலுள்ள ஒரு சின்னஞ்சிறிய கருத்துக்கும் மாபெரும் மாற்றங்களை ஏற்படுத்தும் சக்தி உள்ளது. நமது மதத்தில் சொல்லபடாத கருத்துக்களே உலகத்தில் இல்லை. நமது மத பெரியவர்கள் பலமுறை சொல்லி வற்புறுத்திய கருத்துக்களே பிற்க்காலத்தில் உலக முழுவதும் பரவி பல மதங்கள் உருவாக காரணமாக இருந்திருக்கிறது. இந்துமத சிந்தனைகள் சைவம், வைஷ்ணவம், சாக்தம், காணபத்யம், கெளமாரம், செளரம் என்ற ஆறு பிரிவிற்குள் மட்டும் அடங்கி விட வில்லை அதையும் தாண்டி மாற்றான் தோட்டத்து மல்லிகையும் தொட்டு தழுவும் தென்றல் போல மாற்று மதங்களையும் உருவாக்கி இருக்கிறது.

இந்தியாவில் தோன்றிய எந்த சிந்தனையும் நான்கு வேதங்களை அடிப்படையாக கொண்டே எழுந்ததாகும். இந்து மதத்தை வளர்க்கும் சிந்தனையாக இருக்கட்டும் அல்லது எதிர்க்கும் சிந்தனையாக இருக்கட்டும் அவை அனைத்திற்குமே வேதங்களே முக்கிய காரணங்களாக தொன்று தொட்டு இருந்து வருகிறது. வேதங்களையும் இந்து மத நம்பிக்கைகளையும் உடைத்தெறிந்து உருவான மதங்கள் என அழைக்கப்படும் ஜைனம், பெளத்தம் போன்ற மதங்கள் கூட வெளிப்படையாக இந்து மத கருத்துக்களை எதிர்ப்பது போல பேசி கொண்டாலும் உள்ளுக்குள் அந்த கருத்துக்களையே மையமாக கொண்டு உருவாகி இருக்கின்றன என்பது விந்தையான உண்மை எனவே அப்படி பட்ட கருத்க்க்களையும் ஒரு சிறிதாவது அறிந்து கொண்டால் தான் இந்து மதத்தின் முழுமையான வடிவத்தை ஓரளவு தரிசனம் செய்ய முடியும்.


உதாரணமாக அஹிம்சை என்ற ஒரு தத்துவத்தை எடுத்துகொள்வோம் இந்த அகிம்சை என்ற வார்த்தையை கேட்டவுடன் நமது கண் எதிரே தோன்றுவது இரண்டு உருவங்கள் ஒன்று வர்த்தமான மகாவீரர் இரண்டு மகாத்மா காந்தி காந்தியின் அகிம்சை நவீன வடிவமான இந்து மதத்தின் பரிணாமம் என்றால் மகாவீரரின் அஹிம்சை இந்து மதத்தின் அறிவு பூர்வமான வடிவமென்று சொல்லலாம் இப்படி நான் சொன்னவுடன் சிலருக்கு வியப்பாக இருக்கும் சிலருக்கு நகைச்சுவையாக கூட இருக்கும். யாகங்களில் உயிர் பலி கொடுப்பதை எதிர்த்து உருவான ஜைன மதம் இந்து மதத்தின் வெளிப்பாடு என்றால் அது எப்படி சாக்தியமாகும் அதை எப்படி நம்ப முடியும். என்று சிலரும் கேட்கலாம். உண்மையை உள்ளவாறு சிந்தித்தால் உண்மை உண்மையாக தெரியவரும்.

பாரத திருநாட்டில் அஹிம்சை என்பது வராலாற்று ஆதாரங்கள் எட்டிப்பார்க்க முடியாத தொன்மைக்கால முதற்கொண்டே பெருமளவு மக்களால் போற்றப்படும் ஒரு உன்னத கொள்கையாகும். கொலைத்தொழில் இல்லாமல் அன்பையும் அறனையும் கொண்ட உயிர் தொழிலை உலகுக்கு முதல்முறையாக தந்ததே இந்தியா தான் அதனால் தான் எந்த உயிரையும் ஹிம்சை செய்யாதே என்று வேதங்கள் முழங்குகின்றன. இந்த இடத்தில் ஒன்றை நான் தெளிவு படுத்த விரும்புகிறேன். வேதங்களை அடிப்படையாக கொண்டு நிகழ்த்தப்பட்ட சில யாகங்களில் உயிர்பலி நடந்தது என்னவோ உண்மை தான். அதை நான் மறுக்கவுமில்லை மறைக்க விரும்பவுமில்லை ஆனால் வேதங்களில் உயிர்பலி என்பது விதிவிலக்காக இருந்ததே தவிர செய்தே ஆக வேண்டும் என்ற விதியாக எப்போதுமே இருந்தது இல்லை.


வைதீக தர்மங்களில் உயிர்பலி செய்வது மகா பாவம் என்ற ஞானம் எப்போதுமே போதிக்க படுக்கிறது. உதாரணமாக மிகபெரும் இதிகாசமான மகாபாரதத்தில் ஒரு பகுதியில் யஜ்ஞ நிந்தை எனும் தலைப்பின் கீழ் ஒரு கருத்து சொல்லபடுகிறது. காட்டில் வசிக்கும் வைதீக பிராமணர் பிராணிகளை ஹிம்சை செய்ய மனமில்லாமல் யாகங்களில் தானியங்களை ஆகுதிகலாக போடுகிறார்கள். அப்போது தர்மம் மான் வடிவத்தில் வந்து யாகம் செய்யும் பிராமணனை நோக்கி யாகத்தின் பலனை தரும் தேவர்கள் தானியங்களை ஆகுதிகலாக கொடுத்தால் ஏற்றுகொள்ள மாட்டார்கள் அதனால் என்னை பலியிட்டு யாக பலனை பெற்றுகொள் என்று சொல்கிறது. அந்த பிரமணன் முதலில் சற்று தயங்குகிறான்.

அதன் பிறகு நிதானமாக யோசித்து பார்க்கிறான் யாகம் செய்தவனும் யாகத்தில் பலியிடப்படும் உயிர்களும் மேலான நிலைக்கு போவதாக முன்னோர்கள் சொல்கிறார்கள் எனவே வலியவந்து என்னை பலிகொடு என்று கேட்கும் மானை பலியிட்டால் மானும் நற்கதி அடையும் நானும் யாகத்தில் வெற்றி பெற்றவனாக இருப்பேன் என்று மனதை சமாதானபடுத்தி கொண்டு மான் வடிவத்தில் இருந்த தர்மத்தை யாகத்தில் பலிகொடுத்து தனது வேள்வியை நிறைவு செய்தான். அந்த நிமிடம் முதல் அந்த பிராமணன் அதற்கு முன்பு செய்த அனைத்து புண்ணியங்களும் அவனை விட்டு போயின வெறும் பாவங்கள் மட்டுமே அவனை சூழ்ந்து நின்றன. பிராமணன் தடுமாறினான் மனம் பதைபதைத்தான் ஐயோ தவறு செய்து விட்டோமே என்று துடிதுடித்தான்.


அப்போது யாகத்தில் பலியிடப்பட்ட தர்மமான மான் மீண்டும் உயிர்பித்து வந்து தனது சுய வடிவை எடுத்து பிராமணனை நோக்கி பேசியது அஹிம்சை மேன்மையான தர்மம் அஹிம்சை மட்டுமே மேன்மையான தவம் அஹிம்சையே மேன்மையான சத்தியம் அஹிம்சை என்ற ஒன்றிலிருந்து தான் அனைத்து தர்மங்களும் பிறப்பெடுக்கின்றன என்று தர்ம தேவன் பிராமணனுக்கு உபதேசித்ததாக மாகாபாரதம் பேசுகிறது. ஆகவே ஐந்தாவது வேதமென்று அனைவராலும் ஏற்றுகொள்ளபட்ட மகாபாரதமே தர்மங்களில் தலைமை அஹிம்சை என்பதை மிக தெளிவாக நமக்கு சொல்லி விட்டது. அஹிம்சை என்பது பலர் நினைப்பது போல பொறுமை அல்ல கலப்படமே இல்லாத தூய அன்பு

இந்து மதத்தின் ஆதார நூலான ஸ்ரீ மத் பகவத் கீதை அஹிம்சையை போதிக்கவில்லை அன்பை வலியுறுத்தவில்லை மாறாக ஹிம்சையை போதிக்கிறது போர் தொழில் செய்வதே தர்மம் என்று பேசுகிறது என்று சிலர் நினைக்கிறார்கள் இது முற்றிலும் தவறு யானையை பார்த்த குருடர்கள் யானை தூன்போன்றது யானை முறம் போன்றது யானை பானையை போன்றது என்று சொல்வது போல் தான் கீதை ஹிம்சையை வலியுறுத்துகிறது என்று சொல்வதாகும். கீதையின் நோக்கம் போர் செய்ய தூண்டுவது அல்ல பிறவிக்கு காரணமாக உள்ள சோகத்தையும் மோகத்தையும் அதாவது துக்கத்தையும் ஆசையையும் போக்க செய்வதே கீதையின் மிக முக்கிய நோக்கம்.


கீதையில் முதல் மற்றும் இரண்டாம் அத்தியாயங்களில் அர்ஜுனன் போர் செய்ய மாட்டேன் என்று சொல்கிறான் அதை மறுத்து பகவான் கிருஷ்ணன் அவனை போர் செய்ய சொல்கிறான். இதை படித்து விட்டு சிலர் கண்ணன் வன்முறையை தூண்டுகிறான் நன்முறையை காட்டவில்லை என்று அரைகுறையாக பேசுகிறார்கள் இது முற்றிலும் தவறு அர்ஜுனன் போர்செய்வது உயிர்களை கொல்லும் வேலை அதை நான் செய்யவே மாட்டேன் என்று சொல்லியிருந்தால் அதை கிருஷ்ணன் மறுத்திருந்தால் அது அதர்மம் ஆனால் அர்ஜுனன் அப்படி எதுவும் சொல்லவில்லை ஐயோ என் எதிரே நிற்பது என் உறவினர்கள் என் நண்பர்கள் என் எதிர்கால வாரிசுகள் அவர்களை நான் கொல்ல மாட்டேன் என்று தான் சொல்கிறான்.

அர்ஜுனனின் இந்த கூற்று அஹிம்சை தர்மத்தால் வந்தது அல்ல நான் என்ற அகங்காரத்தால் வந்தது நான் எனது என்பது எப்போதுமே துன்பத்தின் வடிவாக வந்து முடியும். துன்பத்தை போக்குவது தான் பகவானின் வேலை விருப்பும் வெறுப்பும் தவறு செய்வதற்கு காரணமாக இருக்கிறது. அந்த விருப்பு வெறுப்பை அகற்றிவிட்டால் துன்பம் என்பது தவறுகள் என்பது மறைந்து விடும். ஞானத்தின் நெறிமுறைகளை கூறும் இடமெல்லாம் கீதையில் அஹிம்சை நெறியை மேலோங்கி நிற்பதை காணலாம். கீதை கொலை செய் என்று கூறுவது உயிர்களை அல்ல ஆசையை மோகத்தை காமத்தை என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.


சகல விதத்திலும் சகல நேரத்திலும் சகல உயிர்களிடத்திலும் வெறுப்பில்லாமல் அஹிம்சை பாராட்டப்பட வேண்டும் என்று யோக சூத்திரத்தில் வியாசர் சொல்லுகிறார். ஒருமனிதன் எல்லா நேரத்திலும் அன்பு மயமாக மட்டுமே இருந்தால் அவன் மனதில் எப்போதுமே வஞ்சகம் வராது என்பது வியாசரின் கருத்து ஆதிகால ரிஷிகளின் ஆஸ்ரமங்களில் புலியும் மானும் சகஜமாக வாழ்ந்தன என்று புராணங்களில் படிக்கிறோம் இவை எதை காட்டுகிறது மனித மனதில் கனிந்து கிடக்கும் அன்பு பிரவாகம் மிருகங்களை கூட பற்றிகொள்ளும் என்று நமக்கு தெளிவுபடுத்துகிறது. யோக மார்க்கத்தில் சொல்லப்படும் இயமம், நியமம் என்ற படித்தரங்கள் அஹிம்சா தர்மத்தை ஆதாரமாக கொண்டதாகும்.

தர்மங்களையும் தத்துவங்களையும் வாழ்க்கையின் நடைமுறையோடு உருவகபடுத்தி சொல்லும் இந்துமத புராணங்கள் கூட அஹிம்சையின் புகழை பலவாறு நமக்கு எடுத்து காட்டுகிறது. உதாரணமாக பத்ம புராணத்தில் ஈஸ்வரனுக்கு மிக பிரியமான எட்டுவித மலர்கள் சொல்லபடுகின்றன அந்த மலர்கள் என்ன தெரியுமா? அஹிம்சை புலனடக்கம் தயை பொறுமை சாந்தி தவம் தியானம் சத்தியம் இந்த எட்டு வித மலர்களே ஈஸ்வரனை திருமார்பை அலங்கரிக்கும் மலர்மாலைகள் என்றால் இந்து மதத்தின் ஆதார சுருதியே அஹிம்சை என்பது புலப்படுகிறது அல்லவா?


அஹிம்சை என்றால் துன்பம் விளைவிக்காமல் இருப்பது மட்டுமல்ல எல்லா உயிர்களிடத்திலும் அன்பு காட்டுவதும் ஆகும். அன்பே சிவம் ஆனந்தமே ஆத்மா அஹம் பிரம்மாஸ்மி ஏகம் ஸத் என்ற தத்துவங்கள் எல்லாம் அஹிம்சை என்ற ஊற்றிலிருந்து புறப்பட்ட நீரோடைகளே ஆகும். உலகத்தில் காணபடுகின்ற உயிர்கள் அனைத்தும் ஒரே ஆத்மாவின் பல்வேறு வடிவங்கள் என்ற ஞானம் நமக்கு பிறக்குமேயானால் அன்பு என்பது தானாக தோன்றிவிடும். எனக்கு துன்பம் தருவது மற்றவனுக்கும் துன்பத்தையை தரும் என்ற தெளிவு வந்துவிட்டால் வன்முறை என்பதே உலகத்தில் இல்லாமல் போய்விடும். இது அஹிம்சையின் துவக்க தத்துவம் அதன் சிகரம் எது தெரியுமா? பிறர் என்னை ஹிம்சித்தாலும் நான் அவரை ஹிம்சிக்க மாட்டேன் என்பதே அஹிம்சையின் சிகரம் இதை இந்து மதம் ஒன்றில் மட்டும் முதல்முறையாக காணபடுகிறது. அவற்றிலிருந்தே மற்ற மதங்களும் மகான்களும் கடனாக பெற்றார்கள் என்று துணிந்து சொல்லலாம்.

இப்போது ஒரு கேள்வி வரும் அஹிம்சை ஒன்று தான் உயர்ந்தது சிறந்தது என்று இந்து மதம் கருதினால் அதன் தர்ம நூல்கள் யுத்த தர்மத்தை பற்றி விரிவாக பேசுவது ஏன்? இந்து மன்னன்ர்கள் யுத்தங்கள் செய்தது ஏன்? மன்னர்கள் கூட கிடக்கட்டும் இதிகாசபுருஷர்கள் இறைவனின் அவதாரங்கள் என்று அழைக்கப்படும் மகாபுருஷர்கள் யுத்த தொழிலை செய்தது ஏன் என்ற சந்தேகம் யாருக்கும் வராமல் போகாது அவர்கள் ஒன்றை மிக தீவிரமாக உணர்ந்து கொள்ள வேண்டும் இந்து மதம் முத்திக்கு மட்டுமே வழிகாட்டும் ஒருவழி பாதையல்ல அது சாதாரண மனிதர்களுக்கும் வாழ்க்கையை கற்றுகொடுக்கும் ராஜபாட்டை. தவ ஸ்ரேஷ்டர்களும் ஞானிகளும் முனிவர்களும் அஹிம்சையை மட்டுமே கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்று வலியுறுத்திய நமது மதம் நம்மை போன்ற சாமான்யர்களை பார்த்து வேறு விதமாக சொல்கிறது.


உலக சமூகத்தை மீட்டெடுத்து முன்னோக்கி அழைத்து செல்வதற்கு சில தர்ம யுத்தங்கள் அவசியமாக தேவைபடுகிறது. அதை நிகழ்த்தாமல் போனால் வளர்ச்சி என்பது கானல் நீராகிவிடும் என்று மாகாபாரதத்தில் வனபர்வத்தில் சொல்லபடுகிறது. அஹிம்சையை நோக்கி செல்வது தான் மனிதனின் தலையாய கடமை இயன்றவரையில் மனதின் அதை தொடர்ந்து செய்ய வேண்டும். தனிப்பட்ட வாழ்க்கையும் சமூக வாழ்விலும் அஹிம்சா தர்மத்தை கடைபிடித்தால் இறைவனின் திரு பாத நிழலை நிரந்தரமாக அடையலாம் இதுவே இந்துமதம் சொல்லும் அஹிம்சை வழி அந்த வழியில் வர்த்தமான மகாவீரர் எந்த வகை பயணத்தை மேற்கொண்டார் என்பதை அடுத்த பதிவுகளில் சிந்திப்போம்..
+ comments + 2 comments

Very Excellent Guruji. No other religion other than Hinduism and No other country other than India could have produced a man like Mahatma Gandhiji. Buddha is 500 years older than Jesus.Jesus draws immensely from the teaching of Lord Buddha, who is the model for Organised Missionary work.

Anonymous
14:22

super guruju......i liked it...


Next Post Next Post Home
 
Back to Top