Store
  Store
  Store
  Store
  Store
  Store

மாய மானுக்கு மயங்காத சீதை...!


    ரணதண்டனை விதிக்கப்பட்ட கைதியை பார்க்கிறோம் அவன் பச்சை குழந்தையை கழுத்தை முறித்து கொன்றவனாக இருக்கலாம். அடுத்தவன் மனைவியை கதற கதற கற்பழித்து கொலை செய்தவனாகவும் இருக்கலாம் பெற்ற தாயையை வளர்த்த மகளை கற்றுத்தந்த ஆசானை கொன்றிருக்கலாம். ஆனாலும் இப்போது அவன் முகம் மரண பயத்தால் வெளுத்து போயிருக்கிறது. இன்னும் சிறிது நேரத்தில் நாம் செத்து விடுவோம் என்ற படபடப்பில் துடியாக துடிக்கிறான் ஐயோ நான் தெரியாமல் தவறு செய்து விட்டேன் என்னை மன்னித்து விடுங்கள் என்னை விட்டு விடுங்கள் என்று அழுது பதைபதைக்கிறான்.

அவனை பார்க்கிறோம் அவன் மரண குரலை கேட்கிறோம் நம் நெஞ்சி கனக்கிறது வயிற்றை பிசைந்து தொண்டைகுழியில் சோகம் வந்து அடைக்கிறது. அவன் கொலைகாரனாக இருந்தாலும் இப்போது அவன் செய்த தவறுக்காக வருந்துகிறான் தன்னை மன்னிக்கும் படி மன்றாடுகிறான்.குற்றம் புரிந்தவனாக இருந்தாலும் தனது குற்றத்தை உணர்ந்த பிறகு அவனுக்கு தண்டனை கொடுப்பது எந்த வகையில் நியாயம் அவனுக்கு மன்னிப்பு வழங்குவது தான் தர்மம் என்று நமது மனசாட்சி பேசுகிறது.

மேடை தோறும் ஏறி மரண தண்டனை வேண்டாமென்று பேசுகிறோம். பல புத்தகங்கள் எழுதி மரண தண்டனையின் இரக்கமற்ற தன்மையை எடுத்துசொல்லி கருணை புரியுமாறு வேண்டுகிறோம். நாட்டு தலைவர்களை உலக உத்தமர்களை நேரில் கண்டு மரணதண்டனை கொடுப்பது மனிதாபிமானம் அற்ற செயல் எனவே அதை நிருந்த்துங்கள் என்று விண்ணப்பம் செய்கிறோம். ஒரு உயிரை படைக்க நம்மால் முடியாத போது அதை பறிக்க நினைப்பது பாவ செயல் என்று விளக்கம் தருகிறோம். நமது கருத்துக்கு ஆதரவாக மக்கள் சக்தியை திரட்ட பாடுபடுகிறோம். இவை எல்லாம் சரியானது தர்மமானது மாண்பு மிக்கது

அதே நேரம் ஒன்றை சிந்திக்க வேண்டும். நமக்கொரு குழந்தை இருக்கிறது. அதை ஒரு எதிரி கடத்தி போய்விடுகிறான் ஒரு பாவமும் அறியாத பச்சிளம் குருத்தை பணத்தை தா இல்லை என்றால் கொலை செய்துவிடுவேன் என்று மிரட்டுகிறான். பணத்தை சம்பாதிக்கலாம் குழந்தையின் உயிரை சம்பாதிக்க இயலாது என்று கடத்தியவன் கேட்ட பிணை தொகையை கொடுக்கவும் செய்கிறோம். ஆனால் பணத்தை பெற்றுக்கொண்ட அந்த பாதகனோ நமது குழந்தையை இரக்கமே இல்லாமல் கொன்று பிணத்தை தருகிறான். அப்போது நம் மனது என்ன நினைக்கும்? இதுவரை மேடையேறி பேசிய அஹிம்சா தர்மம் என்னவாகும். எல்லாம் காற்றில் பறந்துவிடும். குற்றம் செய்த அந்த கொடியவனை தூக்கில் தான் போட வேண்டும் என்று போராடுவோம். கூக்குரலிடுவோம் அவனுக்கு தண்டனை கிடக்கும் வரை உண்ணாவிரதம் கூட இருப்போம்.

இதிலிருந்து என்ன தெரிகிறது? குற்றத்தின் பாதிப்பு மற்றவர்களுக்கு என்றவுடன் அதன் வலி நாம் அனுபவிக்காதது என்றவுடன் குற்றவாளிக்காக இறக்க படுகிறோம் தர்மம் பேசுகிறோம். மனித உரிமையை பற்றி ஆழமாக சிந்தித்து கவலை படுகிறோம். ஆனால் வலியும் வேதனையும் நமக்கென்றவுடன் நம் சுபாவமே மாறிவிடுகிறது. இதுவரை கொடுமையாக தெரிந்த தண்டனைகள் அனைத்தும் நியாயமானதாக படுகிறது. தண்டனையின் தன்மையை அதிகரித்தால் மட்டுமே குற்றங்கள் குறையும் கொடுமைகள் ஒழியும் என்ற எண்ணம் வந்துவிடுகிறது.

இதை சிலபேர் மறுக்கலாம் நான் அப்படி அல்ல என் மனதிலோடும் கருணை என்ற நதி சுயநலம் இல்லாதது. பொதுநலத்தை மட்டுமே உறுதியாக கொண்டது. என்று அவர்கள் வாதாடலாம் அந்த வாதம் சரியான வாதம் போல நமக்கு தோன்றும் ஆனால் உண்மை அதுவல்ல சாதாரண மனிதமனம் தனக்குவரும் துயரத்தை தாங்க முடியாததாக இருக்கிறது. தனது துயரத்திற்கு பிராயச்சித்தம் கிடைத்தே தீர வேண்டுமென்று அலைபாய்கிறது. சரியான பரிகாரம் கிடைக்காத பட்சத்தில் வஞ்சகத்தை பகை உணர்ச்சியை வளர்த்து கொள்கிறது. இது இல்லை என்று சொன்னாலும் இது தான் உண்மை

ஆனால் உண்மையாகவே நாம் மனிதநேயம் மிக்கவர்களாக அன்பும் நிரம்பியவர்களாக துயரம் இல்லாதவர்களாக இருக்க வேண்டும் என்றால் பாதிப்பு நமக்கு வந்தாலும் மற்றவர்களுக்கு வந்தாலும் மாறாத உறுதியான ஒரே கொள்கையில் மன்னிக்கும் சுபாவத்தில் இருக்க வேண்டும். மனிதனின் மனதில் பகை உணர்ச்சியும் வஞ்சகமும் கொடூரமும் எந்த அளவு வளர்கிறதோ அந்த அளவு துயரமும் தோல்விகளும் வளரும்

தனக்கு துன்பம் தந்தவனை மன்னிப்பது மனிதநேயம் நமக்கு நிகழ கூடாத துயரத்தை அவன் தந்துவிட்டான் இவனால் தான் எனக்கு துன்பம் வந்தது என்பது எல்லோருக்கும் தெரிந்து விட்டது. இனி அவனை தண்டித்து ஆகபோவது என்ன? எனக்கு நிகழ்ந்த துயரம் மறைந்து விட போகிறதா என்ன? நான் இழந்ததை மீண்டும் பெற்றுவிட போகிறேனா என்ன? ஒன்றுமே இல்லை நடந்தது நடந்தது தான். இழந்தது இழந்தது தான். எனக்கு தவறு இளைத்தவனை மன்னிப்பதனால் அவனை மனதால் நான் சாகடிக்கிறேன். என்னை பார்க்கும் போதெல்லாம் என் நினைவு வரும்போதெல்லாம் என்னால் மன்னிக்க பட்டதை நினைத்து அவன் மருகுவான். நெககுருகுவான் எனக்கு செய்த தவறை இன்னொருவருக்கு கண்டிப்பாக செய்ய மாட்டான். மீண்டும் தன்னை வருத்திகொள்ளும் தைரியம் அவனுக்கு இருக்காது.

துயரம் தந்தவனை மன்னிப்பது மனித சுபாவம் என்றால் துயரம் தர போகிறவனை மன்னிப்பது தெய்வ இயல்பு இந்த தெய்வ தன்மையை பெறுவதே மனிதனாக பிறந்த ஒவ்வொருவரின் கடமையாகும். எவன் மனதில் களங்கம் இல்லையோ எவன்மனது ஒரு குழந்தையின் மனதை போல நிர்மால்யமாக இருக்கிறதோ எவன் மனதில் கருணை என்ற நதி பெருக்கெடுத்து ஓடுகிறதோ அவனே கண்கண்ட தெய்வம். கைகளால் தொட்டு பார்க்க கூடிய கடவுள் அப்படி பட்ட மனிதர்கள் வாழுகின்ற நாடு தான் சொர்க்கமாகும்.

காரணம் ஒருவனால் நாம் துன்பப்பட்டு விட்டோம் என்றால் அது முடிந்து போன கதை கடந்த காலமாகி விடுகிறது. ஆனால் இவன் என்னை கொல்லபோகிறான் எனக்கு துயரத்தை தரபோகிறான் என்று தெரிந்த பிறகு எனது வருங்கால விரோதியின் மீது நம்மால் அன்பு பாராட்ட முடியாது. காரணம் அவன் நம்மை எப்போது என்ன செய்வானோ என்ற அச்ச உணர்வே அவன் மீது விரோதம் கொள்ள வைத்து விடும். விரோத உணர்ச்சி தலையெடுத்து ஆடும் போது அன்பு ஏது? கருணை ஏது? தர்மம் ஏது?

வனவாசத்திற்கு வந்த சீதை கானகத்தின் நடுவில் அமைக்கப்பட்ட குடிலில் வாசலிலிருந்து பூ தொடுக்கிறாள். ஒரு மலரே மலர் மாலை தொடுக்கும் அழகை கண்ணார கண்டு ரசித்து கொண்டிருக்கிறான் ஸ்ரீ ராமன் அப்போது அவர்கள் முன்னால் தங்க நிறத்து மாயமான் ஒன்று துள்ளி குதித்து ஓடுகிறது . ஓடுகின்ற மானை சீத்தா தேவி ஒருகணம் மட்டுமே பார்க்கிறாள். பிறகு எதுவும் நடக்காதது போல மாலை தொடுக்க ஆரம்பித்து விடுகிறாள்.

மாய மானாக வந்த அசுரன் மாரிசனுக்கு பெரிய ஏமாற்றம் பொன் வண்ணத்தில் கருநிற புள்ளிகள் வைத்த மான் உருவில் தான் சென்றால் தன்னழகை காண சீத்தா மயங்குவாள் மானை பிடித்து தரும் படி ராமனை கேட்பாள் ராமன் இல்லாத சீதாவை இராவணன் சுலபமாக கவர்ந்து செல்வான் என்பது தான் அவனது திட்டமாக இருந்தது. ஆனால் சீதை மானை கண்ணெடுத்தும் பார்க்கவில்லை மானின் அழகையும் ரசிக்க வில்லை காரணம் சீதா தேவி கற்பின் சின்னம் அறநெறியின் திருவுருவம் அவளுக்கு ராமனை தவிர உலகத்தில் எதுவுமே அழகில்லை ராமனை தவிர எது மீதும் ஆர்வமில்லை ராமனை தவிர எதையும் அவள் வேண்டுவதில்லை அப்படிப்பட்டவள் மாய மானுக்கா ஆசைபடுவாள்.

மாரிசனுக்கு மைதிலியின் மனம் புரிந்தது அவள் உள்ளத்தில் கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்த ராம காதலின் வேகம் தெரிந்தது. தன்னை அவள் ஏறடுத்தும் பார்க்கமாட்டாள் என்ற உண்மை தெரிந்தது. எனவே அவன் மனத்துக்குள் அழுதான். அம்மா சீதா தேவி உனது கணவன் ராமனின் வீரம் தெரியாதவனா நான் தாடகையை அவன் வதைத்த போது அதை கண்டு நடுநடுங்கி கடலுக்குள் சென்று மறைந்து கொண்டு இருந்தவன் அல்லவா நான். எனது மருமகன் இராவணன் சீதாவின் முன்னால் மானாக நீ போகவில்லை என்றால் என் கையில் மாண்டு போவாய் என்று மிரட்டினான்.

இராவணன் கையால் வதைபட்டு இறந்து நரகத்துக்கு போவதற்கு பதிலாக கல்லை பெண்ணாக மாற்றிய கருணா மூர்த்தியின் திருகரங்க்களால் மரணம் அடைந்து. முத்தி பெறுவதே மேல் என்ற எண்ணத்தில் மான் வடிவம் கொண்டு வந்திருக்கிறேன் என் மீது இறக்கம் காட்டு தாயே கேட்டாலும் கிடைக்காத முக்தி ஸ்ரீ ராமன் தயவால் எனக்கு கிடக்க அருள் செய் அம்மா என்று வேண்டினான் ஆயிரம் அன்னையரின் கருணை உள்ளத்தை தனக்குள் கொண்டவள் அல்லவா அன்னை ஜானகி மாரிசனால் தான் துயரப்பட போகிறோம் என்பதை அறிந்தும் அவனுக்கு முக்தி என்ற ஆனந்த சாகரத்தை கொடுப்பதற்கு மானை பிடித்து தர ராமனை அனுப்பினாள்

சீதா தேவியின் இவ்வளவு பெரிய கருணை மனம் நமக்கு வேண்டாம் . அது கேட்டாலும் கிடைக்காது. ஆனாலும் ஓரளவாவது கருணையை நாம் வளர்த்து கொண்டால் நம் சமூகம் அமைதி பெரும் என்று பெரிய வார்த்தைகள் எதுவும் நான் சொல்ல வரவில்லை குறைந்த பட்சம் நாம் தேடி தேடி அலுத்து போன மன அமைதியாவது கிடைக்கும் காரணம் அன்பு நிரம்பிய மனிதனால் மட்டும் தான் அமைதியாக வாழமுடியும்.




Contact Form

Name

Email *

Message *