Store
  Store
  Store
  Store
  Store
  Store

ஒழுக்கம் ஒன்றே உயிரின் சுவாசம் !

இந்து மத வரலாற்று தொடர் 35

     ன்பையும் அஹிம்சையும் போதித்தது ஜைன மதம் பிறகு அந்த மதத்திற்கு அன்பு மதம் என்றோ அஹிம்சா தர்மம் என்றோ பெயர் வந்திருக்க வேண்டும். ஆனால் அப்படி வராமல் ஜைனமதம் என்ற பெயர் வர என்ன காரணம் என்று சிலர் கேட்கலாம் புத்தருடைய போதனைகளை அடிப்படையாக வைத்து உருவான பெளத்தமதம் என்பதில் கூட புத்தரின் பெயர் மருவி வருகிறது. அதே போல ஜைன மதத்தை உருவாக்கியவர் வர்த்தமான மகாவீரர் என்கிறார்கள். அவர் பெயரால் கூட அந்த மதம் அழைக்கபட்டிருகலாமே அதை விட்டு விட்டு இப்படி அழைப்பதற்கு என்ன காரணம் என்றும் பலருக்கு தோன்றும்.

ஆத்ம வெற்றி பெற்ற பல முனிவர்கள் போதித்தது ஜைன மதம் ஜைன மதத்தில் ஞானிகளை ஜீனர்கள் என்று என்று அழைக்கிறார்கள் ஜீனர்கள் மதம் என்பதே நாளாவட்டத்தில் ஜைனமதம் என்ற பெயரை பெற்றது. ஜைனமத கொள்கைகள் பலவற்றை பார்க்கும் போது அதில் பெளத்த சாயல் இருப்பது போல் தெரியும் ஆனால் உண்மையில் புத்த மதத்திற்கும் ஜைன மதத்திற்கும் எந்த சம்மந்தமும் கிடையாது. காரணம் பெளத்த மதம் தோன்றுவதற்கு ஐந்து நூற்றாண்டுகளுக்கு முன்பே ஜைன மதம் உருவாகி விட்டது. எனவே புத்த மதம் வேண்டுமென்றால் ஜைன சாயலை பெற்றுக்கலாமே தவிர ஜைனத்தில் புத்தமத சாயல் இல்லை.


ஒவ்வொரு மனிதனும் சம்சாரம் என்ற துன்ப பெருங்கடலில் இருந்து தப்பித்து வெளியே வர வழிகாட்டிய ஜீனர்களை தீர்தங்கர்கள் என்று சிறப்பு பெயரில் அழைக்கிறார்கள். அப்படி பட்ட தீர்தங்கர்கள் இருபத்தி நான்கு பேர் இருந்ததாகவும் அவர்களில் மூத்தவர் முதல்வர் ரிஷபதேவர் என்றும் ஜைனம் சொல்கிறது. ரிஷப தேவரே ஜைனமதத்தின் அடிப்படையான கொள்கைகளை அஹிம்சா தர்மத்தை போதித்தவர் ஆவார். ரிஷப தேவரை பற்றி ஜைன மத நூல்கள் மட்டும் போற்றி புகழவில்லை ஜைன மதத்தின் தாயமதமான இந்துமதமும் பலபடி அவரை பாராட்டுகிறது. விஷ்ணு புராணம், பவிஷ்ய புராணம் போன்ற நூல்களில் ரிஷப தேவரை பற்றி சிறப்பான குறிப்புகள் தரப்பட்டுள்ளன.

இதுமட்டுமல்ல சிந்துசமவெளியில் கண்டெடுக்கப்பட்ட பல பொருட்களில் சில சாசனங்களில் ஜைனமத குறியீடுகள் இருப்பதாக பல ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். மிக குறிப்பாக டாக்டர் பிரேம்நாத் என்பவர் சிந்து வெளி சின்னத்தை நுணுக்கமாக ஆராய்ந்து ஆரியர்கள் இந்தியாவிற்குள் வருகின்ற காலத்திற்கு முன்பே அஹிம்சையை போதிக்கும் ஒரு அன்பு மார்க்கம் இருந்திருக்க வேண்டும் அதுவே பிற்காலத்தில் ஜைன கொள்கைகளாக வளர்ச்சி அடைந்திருக்க வேண்டும் என்கிறார். அவர் சொல்வதை சில காரணங்களை அடிப்படையாக கொண்டு ஏற்றுகொள்ள வேண்டிய நிலையில் நாம் இருக்கிறோம். இன்றைய சில சரித்திர ஆர்வலர்கள் ஆரியர்களின் வருகைக்கு பிறகே சிவன், விஷ்ணு போன்ற தெய்வங்களை மக்கள் வழிபட ஆரம்பித்தார்கள் என்று தவறாக நம்புகிறார்கள். உண்மையை சொல்வதென்றால் வேத காலத்திற்கு முன்பிருந்தே இந்துமதம் இருந்திருக்கிறது அதை நாம் இந்த தொடரின் ஆரம்பத்திலையே சிந்தித்திருக்கிறோம் அதன் தொடர்ச்சியாக அஹிம்சா தர்மமும் மிக தொன்மை காலத்திலிருந்தே இருந்திருக்கிறது என்ற முடிவை நாம் ஏற்றுகொள்ள வேண்டும்.

தீர்தங்கர்களில் இறுதியாக வந்தவர்களே வர்த்தமான மாகாவீரர் ஆவார் இவரே ரிஷப தேவரின் ஜைன சம்பிராதயத்தை நவீனபடுத்தி மக்கள் மத்தியில் கொண்டு வந்தவர். அதுமட்டும் அல்ல இந்த தர்மத்தை இந்தியா முழுவதும் பரப்பிய பெருமை மகவீரரரேயே சாரும். இவரது இயற்பெயர் வர்த்தமானர் விதேக நாட்டின் தலைநகராகிய வைசாலியில் கிமு.540 ஆம் வருடம் பிறந்தார் இவரது தந்தையார் பெயர் சித்தார்த்தர் அவர் ஒரு சிறிய நாட்டின் அரசர் இவரது தாயார் விதேக நாட்டு சக்ரவர்த்தியின் தங்கையாகிய திரிசலை வர்த்தமானர் தமது இருபத்து எட்டாவது வயதில் தனது தாய் தந்தையரை இழந்து விட்டார். வாழ்க்கையில் விரக்தி ஏற்பட்டு பனிரெண்டு வருடங்கள் காடு மலை வனாந்தரங்கள் என அலைந்து பல ஞானிகளை சந்தித்து கடும்தவம் செய்து இறுதியில் கேவல ஞானம் என்ற ஆத்ம விழிப்பை பெற்றார் அன்றுமுதல் அவர் மகாவீரர் என்ற சிறப்பு பெயரில் அழைக்கபடுகிறார் ஐம்புலன்களையும் வென்ற வீரர் என்பதே இதன் பொருளாகும். தான் வாழ்ந்த எழுபத்தி இரண்டு வருடங்கள் வரையிலும் அஹிம்சா தர்மத்தை பரப்புவதிலையே தனது வாழ்நாளை கழித்தார்.

ஜைன மதம் இந்துமத வேதங்களில் உள்ள அஹிம்சா தர்மத்தை எடுத்து தனதாக்கி கொண்டு வளர்ந்தது என்றாலும் அது இந்து மத வேதங்களை ஏற்றுக்கொள்ளவில்லை மாறாக தனக்கென்று தனியாக சில வேதங்களை உருவாக்கி கொண்டது. ஒரு ஜைனனின் நித்திய கடமை தினம்தோறும் கோவிலுக்கு சென்று தீர்தங்கறது திருவுருவ சிலையை மூன்றுதரம் வலம்வந்து மலரோ பழமோ கொண்டு ஆராதனை செய்வது மட்டும் அல்ல தனது வாழ்நாளில் எந்த ஒரு நிமிடமும் உயிர்கொலை என்பதே செய்ய கூடாது என்பதாகும்.


வழிபாடு உபாசனை பூஜைகள் பாடல் பஜனைகள் என்பவைகள் சாதாரண ஜைனனுக்கு மட்டும் தான் காரணம் அவன் தான் ஆத்ம பரிபக்குவம் அடையாமல் சம்சார சாகரத்தில் வீழ்ந்து அவதிப்பட்டு கொண்டு இருக்கிறான். அவன் மனம் பக்குவப்பட வழிபாட்டு முறைகள் என்பது மிக கண்டிப்பாக தேவை ஒரு பாத்திரத்தில் இருக்கின்ற அழுக்கை எடுப்பதற்கு எப்படி புளி வைத்து தினசரி சுத்தம் செய்ய வேண்டுமோ அதே போலவே சாதாரண மனிதனும் தனது மனதை பீடித்துள்ள மாசுகளை அகற்ற வழிபாடு செய்ய வேண்டும். ஆனால் இந்த கடமை ஜைன துறவிகளுக்கு இல்லை அவர்கள் வழிபாடும் செய்ய வேண்டாம் பூஜை புனஸ்காரம் என்று பொழுதையும் கழிக்கவேண்டாம். காரணம் நெருப்பில் விழுந்த பொன் எப்படி தங்கமாக மாறிவிட்டதோ அதே போல ஞானம் கைவரபெற்று அவர்கள் சுத்த ஆன்மாவாக மாறிவிட்டார்கள். அவர்களை மாசுக்கள் தீண்டவே தீண்டாது. அவர்களது வேலை கடையனாக கிடக்கும் மனித ஜென்மங்களை கரைதேற்ற போதனை செய்வது மட்டுமே ஆகும்.

ஜைன மதத்தில் திகம்பரர், சுவேதாம்பரர் என்று இருவகை உண்டு ஜைன மத துறவிகள் யதி என்ற பெயரில் அழைக்கபடுகிறார்கள் துறவிகள் அல்லாத சாதாரண ஜைனர்களை சிராவகர் என்று அழைக்கிறார்கள். ஜைன மதம் ஆத்மா மோட்சம் ஆகிய இரண்டின் பேரிலும் நம்பிக்கையுடைய மதம் என்பதனால் மோட்ச நெறியை பற்றி மிக விரிவாக பேசுகிறது. ஒருவன் தனது வாழ்வின் இறுதி லட்சியமான மோட்சத்தை அடைய வேண்டுமானால் நல்ல பார்வை நல்ல ஞானம் நல்ல ஒழுக்கம் எனும் மூன்று ரத்தினங்களை மேற்கொள்ளுதல் வேண்டுமென்று வலியுறுத்துகிறது. இந்த மூன்றில் ஒன்று குறைந்தாலும் வாழ்ந்து பயனில்லை என்றும் எச்சரிக்கை செய்கிறது. அதே வேளை மேற்குறிப்பிட்ட மூன்று தர்மங்களை கடைபிடிக்காமல் பக்தி மார்க்கமோ ஞான மார்க்கமோ கர்ம மார்க்கமோ தனியாக மோட்சம் பெற துணை வராது என்றும் ஜைன மதம் வலுவாகவே பேசுகிறது.


வாழ்க்கையின் அத்யாவசிய தேவையான இந்த மூன்று தர்மங்களில் முதலாவது தர்மமான நற்காட்சி என்பது புறத்தில் இருக்கின்ற பொருட்கள் அனைத்தையும் ஊன கண்கள் பார்த்து தெளிவு அடைவது போல ஞானிகள் கூறிய ஆத்ம அனுபுதிகளை மனதாலும் அனுபவத்தாலும் கண்டு தெளிவு பெற வேண்டுமென சொல்லப்படுகிறது. இரண்டாவதாக ஞானிகளின் அமுத மொழிகளில் உள்ள கருத்துக்களை ஐயம் திரிபற அறிந்துகொள்ள வேண்டும் மூன்றவதாக அவற்றை நெஞ்சார நம்ப வேண்டும் அதன்படி நடக்க வேண்டும் அப்படி நடந்தாலே நல்லொழுக்கம் கைவர பெரும் என்றும் சொல்லபடுகிறது.

நல்லொழுக்கம் என்பது அஹிம்சை வாய்மை களவு செய்யாமை பிரம்மச்சரியம் தவம் என்பதாகும். இந்த ஐந்து விரதங்களையும் ஜைன துறவிகள் மிக கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். துறவிகள் அல்லாதவர்கள் தவத்தையும் பிரம்மச்சரியத்தையும் தவிர மற்ற மூன்றையும் கடைபிடிக்க வேண்டும். அதே நேரம் கற்பையும் பொருள்களின் மீது அதீத பற்றுகொள்ளமையும் இல்லற வாசிகளின் கடமை என்றும் கூறுகிறார்கள். இவற்றை அனுவிரதம் என்று ஜைன மதம் சிறப்பித்து பேசுகிறது.


மேற்கூறப்பட்ட விரதங்களில் அஹிம்சா விரதம் என்பதே தலையாய விரதமாகும். அஹிம்சா தர்மம் என்பது இந்தியாவில் தொன்றுதொட்டு பேசப்பட்டு வந்த கருத்து என்றாலும் கூட அதை அன்றாட வாழ்க்கையில் கொண்டு வந்த பெருமை ஜைன மதத்தை மட்டுமே சாரும் என்று துணிந்து சொல்லலாம். அஹிம்சை என்பது இன்னா செய்யாமை மட்டுமல்ல பார்க்கும் உயிர்கள் அனைத்திடமும் அன்பு பாராட்ட வேண்டும் என்பதே ஆகும். ஒருவன் உதவி செய்ய வேண்டிய இடத்தில் செய்யாமல் கைகட்டி நின்றால் அது கூட அஹிம்சை தர்மத்திற்கு விரோதமான ஹிம்சை என்றே ஜைனர்கள் நம்புகிறார்கள்.

இந்து மதத்திலும் சரி பெளத்த மதத்திலும் சரி துறவு வாழ்கை என்பது ஒரு தனி பாதையாகவே இருந்து வருகிறது. ஆனால் ஜைன மதத்தில் துறவறம் என்பது இல்லறத்தில் இருந்து வெகு தூரத்தில் இல்லாமல் மிக அருகிலேயே இருக்கிறது. ஜைன தர்மத்தை பின்பற்றுகின்ற ஒவ்வொரு இல்லற வாசியும் தனது நெறிப்பட்ட வாழ்க்கையை மிக கண்டிப்பாக கடைபிடிக்கும் போது துறவற தர்மத்திற்குள் இயல்பாகவே நுழைந்து விடுகிறான். ஒரு ஜைனனின் வாழ்வு கனிவடைகிறது. என்று சொன்னால் அவன் துறவியாக வளர்ச்சி பெற்றிருக்கிறான் என்பதே ஆகும். சுருங்க சொன்னால் துறவிகள் மட்டுமே மோட்ச வீட்டுக்குள் நுழைய முடியும் தர்மத்தை கடைபிடிக்கும் ஒவ்வொரு இல்லற வாசியும் தன் நிலை கனிந்து மோட்சம் பெறுவான் என்பதே ஜைனத்தின் சிகரமான கோட்பாடாகும். இனி ஜைன மத தத்துவத்தை சிறிது ஆராய்ச்சி செய்வோம்.



Contact Form

Name

Email *

Message *