Store
  Store
  Store
  Store
  Store
  Store

வாழ்க்கை என்பது வண்டிசக்கரம்


   குருஜி அவர்களுக்கு நமஸ்காரம் நான் பிறந்த போது எனது குடும்பம் நல்ல வசதியாக இருந்தது நான் வளர வளர குடும்பம் தேய்ந்து விட்டது. அப்பாவுக்கு தொழில் நஷ்டம் சில சொத்துக்களில் வம்பு வழக்கு என்று பல பிரச்சனைகள் வந்ததனால் படிப்படியாக வறுமை நிலைக்கு வந்துவிட்டோம்.

நடந்ததை நினைத்து வாழ்ந்ததை நினைத்து மனம் நொந்தே அப்பாவும் காலமாகி விட்டார். எனது தாயார் மிகவும் கஷ்டப்பட்டு என்னையும் என் தம்பியையும் படிக்க வைத்தார். நாங்களும் இறைவன் அருளால் ஓரளவு படித்து நல்ல வேலையில் சேர்ந்தோம். வேலை செய்தால் ஒரு குறிப்பிட்ட அளவு சம்பளம் மட்டுமே கிடைக்கும் வாழ்க்கை என்பது சீரான நீரோடை போலவே போகும் முன்னேற்றமும் சவால்களும் இருக்காது. எனவே சொந்தமாக தொழில் செய்வோம் என்று தம்பி சொன்னான்

எனக்கும் அது சரியாக பட்டது. கையிலிருந்த சிறிய முதலிடை வைத்து சொந்த ஊரில் ஹோட்டல் ஒன்று துவங்கினோம் நான் என் தம்பி எனது வயதான தாயார் மூவரின் உழைப்பிலும் கடை நல்லபடியாகவே நடக்கிறது. எங்கள் உழைப்பிற்கான ஊதியம் மட்டுமல்ல சிறிது சேமிக்கவும் முடிகிறது. பட்ட கஷ்டத்திற்கு இப்போது நன்றாகவே இருக்கிறோம் என்று சொல்லவேண்டும்.

எனது கேள்வி என்னவென்றால் எனது தந்தையார் சொந்த வீடு கார் நிலமென்று வசதியாக வாழ்ந்தார் அவரளவு இல்லை என்றாலும் ஓரளவாவது வாழ்வில் உயர விரும்புகிறோம். வறுமையில் வாடிய எனது தாயாரை நல்ல நிலையில் வைக்கவும் ஆசைபடுகிறோம். அது நடக்குமா? எனது கனவு நிறைவேறுமா? என்பது தெரியவில்லை குருஜி அவர்கள் அதை தெரியபடுத்தினால் நன்றி உள்ளவனாக இருப்பேன்.

சோமசுந்தரம்,தூத்துக்குடி



    வாழ்க்கை என்பது வண்டிசக்கரம் மாதிரி ஒருநேரத்தில் மேலை இருப்பது மறு நேரத்தில் கீழே வரும். ஏற்ற தாழ்வும் பள்ளம் மேடும் வாழ்க்கையில் சகஜம். செல்வ செழிப்பில் இருப்பவன் இந்த நிலை சாஸ்வதமானது நான் எப்போதுமே இப்படிதான் இருப்பேன் என்று நினைக்க முடியாது. பலநூறு வருடங்கள் ஆழமாக வேர்விட்டு விழுதுகள் இறக்கிய ஆலமரம் கூட அடிக்கும் காற்றில் சில நிமிடத்தில் சாய்ந்து விடும். மனிதனுக்கு அமையும் வாழ்க்கையும் இப்படி தான்.

எனக்கு தெரிந்த ஒருகுடும்பம் ஒருவேளை சோற்றுக்கே வழியில்லாமல் தவிக்கும் நிலையில் இருந்ததை நான் பார்த்திருக்கிறேன். ஊரில் யாருக்காவது திருமணம் போன்ற நல்ல விஷயங்கள் நடந்தாலும் அல்லது இறப்பு காரியங்கள் நடந்தாலும் அந்த குடும்பத்து அங்கத்தினர்கள் அங்கே இருப்பார்கள். காரணம் ஒருபிடி சோறு

அந்த குடும்பத்தை சேர்ந்த ஒரு பையன் வறுமையின் கொடுமை தாங்காமல் திருட்டு ரயில் ஏறி பம்பாய் சென்று விட்டான். அங்கு எவ்வளவு கஷ்டப்பட்டோ அவமான பட்டோ தையல் வேலையை கற்றுகொண்டான் சும்மா சொல்ல கூடாது தையல் கலையில் பெரிய கில்லாடி அவன் இரண்டு மூன்று வருடத்தில் சொந்த ஊருக்கு வந்து சுயமாக தொழில் செய்ய ஆரம்பித்தான் அவனோடு அவன் குடும்பமே சேர்ந்து உழைத்தது.

இன்று அந்த குடும்பம் ஊரிலுள்ள பணக்கார குடும்பங்களில் ஒன்றாக இருக்கிறது. காரணாம் அவர்கள் பட்ட கஷ்டம் அவர்களுக்கு ஒற்றுமையின் பலத்தையும் உழைப்பின் மேன்மையையும் சொல்லிகொடுத்து சிறுகசிறுக சேமித்து தையல் தொழிலோடு அரிசிகடையும் வைத்து அதன் பின் பழைய லாரி வாங்கி அதை தாங்களே ஓட்டி ஒன்று பத்தானது என்பது போல சில பல வாகனங்களை இன்று தனது சொத்துக்களாக வைத்துள்ளார்கள்.

உங்கள் கடித்ததை பார்க்கும் போது எனக்கு அந்த குடும்பத்தின் நினைப்பு தான் வந்தது. அவர்களால் வெறுங்கையை வைத்தே முளம் போட்டு வெற்றி பெற்றிருக்கும் போது உங்களிடம் படிப்பும் கூடவே கடின உழைப்பும் இருக்கிறது. உங்களாலும் கண்டிப்பாக வெல்ல முடியுமென்று துணிந்து சொல்லலாம்.

மேலும் உங்கள் ஜாதகத்தில் இளைய சகோதரஸ்தானம் என்ற மூன்றாமிடம் சுப தன்மையோடு இருக்கிறது. நாளைக்கே உங்கள் தம்பிக்கு திருமணம் முடிந்து மாட்டுப்பெண் வீட்டுக்கு வந்து தலையணை மந்திரம் போட்டால் கூட உங்கள் சகோதரர் குடும்பத்தை பிரிக்க சம்மதிக்க மாட்டார். நீங்களும் தம்பிக்கேற்ற அண்ணனாக இருப்பீர்கள் என்றே தெரிகிறது. எனவே உங்கள் இருவரின் குழந்தைகளின் காலம் வரையில் பிரிவு இல்லை என்று சொல்லலாம்.

இத்தோடு மட்டுமல்ல உங்கள் ஜாதகப்படி வக்கிரம் பெற்ற சுக்கிரனுக்கு நான்காம் இடத்தில் சனி இருக்கிறது. இத்தகைய கிரக அமைப்பு கொண்டவர்கள் கண்டிப்பாக நல்ல வீடு வண்டி வாகன யோகத்தொடு வாழ்வார்கள் என்று சொல்லபடுகிறது. எனவே நீங்கள் கவலைப்பட வேண்டாம். கண்டிப்பாக கனவுகள் நிறைவேறி நலமோடு வாழ்வீர்கள்.

மேலும் ஒரு விஷயத்தை கவனத்தோடு மனதில் வையுங்கள் தினசரி ஒரு பிச்சைகாரனுக்காவது இலவசமாக சாதம் கொடுங்கள் இதை கண்டிப்பாக உங்கள் வாழ்நாள் முழுவதும். கடைபிடித்தீர்கள் என்றால் வசதியும் வாய்ப்பும் உங்களை விட்டு விலகவே விலகாது.




Contact Form

Name

Email *

Message *