Store
  Store
  Store
  Store
  Store
  Store

ஒரு ராஜ விளக்கின் ஏழை தீபம்!


      ரு மார்கழி மாதத்து குளிர்ந்த காலை பொழுதில் ஈர விறகுகளில் நெருப்பை மூட்டி குளிர்காய்ந்து கொண்டிருந்தேன் உன் வீட்டு வாசலில் நீர்தெளித்து மாக்கோலம் போட வாசல் படியிறங்கி நீ வந்தாய் அன்று தான் உன்னை முதல்முறையாக நான் பார்த்தேன் குளித்து முடித்து ஈர கூந்தலில் வெள்ளை தேங்காய் பூ வாலையே சுற்றி இருந்தாய் உன் நெற்றியிலும் கழுத்திலும் மின்னிய நீர் துளிகள் கதிரவன் முகம்பார்க்கும் வைரங்கள் போல் என்னை சுண்டி இழுத்தன

கருப்பு போர்வைக்குள் சிறுத்த உடலோடு நடுங்கி கொண்டிருந்த என்னை பார்த்து மேக திரையை கிழித்து கொண்டு எட்டி பார்க்கும் சந்திர பிறை போல மெல்ல சிரித்தாய் அழகுக்கு இலக்கணம் சொல்லும் தொல்காப்பிய புத்தகம் திறப்பது போல் உன் செம்பவள உதடுகள் பிரிந்து மாதுளை முத்துக்கள் பளிச்சிட "எப்படி இருக்கிறாய்?" என்று என்னை பார்த்து வினவினாய். நீ என்னிடம் பேசிய முதல் வார்த்தை அது! பரபொருளின் தரிசனம் பெற ஒற்றை காலில் தவம் நிற்கும் முனிவன் வரம் பெற்றது போல உன் வார்த்தை என்னை நோக்கி வரவும் உடல் சிலிர்த்து ஆத்மா குளிர்ந்து சொர்க்க போகத்திற்குள் சஞ்சாரம் செய்ய துவங்கினேன்.

அன்று மாலை உன் வீட்டிற்கு நான் வந்த போது மூங்கில்களை வளைத்து பின்னிய பச்சை நிற நாற்காலியில் கம்பீரமாய் நீ அமர்ந்திருந்தாய்! உனக்குள் கனிந்த குமரி தனத்திற்கு ஆயிரம் ஆண்மையை மணிமகுடமாய் சூட்டியது போல உன் உட்கார்ந்த கோலம் என் நெஞ்சை விட்டு இன்னும் அகலவில்லை அப்போது நான் நினைத்தேன் முள் நிறைந்த செடியில் தான் ரோஜா மலரும் ஆனால் இங்கே மூங்கில் புல்மேலே ஒரு ரோஜா மலர்ந்திருக்கிறதே! இது இயற்கையின் விந்தையா? அல்லது விந்தையான இயற்கையா?

அன்பே! நீ பெண்தான்! பெண்மைக்கே உரிய அனைத்து நளினமும் உன்னிடம் மட்டுமே சரணடைந்து கிடக்கிறது என்பதும் சரிதான்! ஆனால் உன் ஒவ்வொரு செயலுக்குள்ளும் செய்கைக்குள்ளும் ஆண்மையின் கம்பீர வெளிச்சமாக மின்னியதே! அது ஏன்? எனக்கு தெரியவில்லை உன் அழகுக்கு முன்னால் அரச போகமும் அடிமையாகும்!. உன் அழகையும் மீறி பளிச்சிடும் கம்பீரத்தின் முன்னால் அகிலமே அடிவணங்கும்!.

நீ விரல் சுட்டி பேசும் போது ஒரு மகாராணியின் வீரம் தெரியும். நீ விழியெடுத்து நோக்கும் போது மகாராஜாவின் அதிகாரம் தெரியும். நீ சொல்லெடுத்து பேசினால் இளவரசியின் அறிவு தெரியும். நீ நடந்து போகும் போது ஒரு இளவரசனின் வாள்வீச்சு தெரியும். ஒரே ஒருமுறை உன்னை உற்று பார்த்தாலே உனக்குள் இருக்கும் அரச அதிகாரம் பளிச்சென வெளிச்சமாய் தெரியும்!. ஆனாலும் நீ ஆணவம் அறியாத அன்பு பறவை! பாசம் மட்டுமே தெரிந்த பனிச்சாரல்! அரவணைக்க தெரிந்த அன்னை! இனிமையை கொடுக்கும் மழலை!

காற்றில் மிதந்து வரும் நாதஸ்வர ஓசையில் நீ கரைந்து போவாய்! வண்ண தூரிகை வரைந்து கொடுக்கும் ஓவியங்களை கண்டு நீ தன்னையே மறந்து போவாய்!. பச்சை புல்வெளியில் வண்ணத்து பூச்சிகள் வட்டமிட்டால் அதை காண நீ பறந்து போவாய்! நான் நினைப்பேன் நீயே ரசிக்க வேண்டிய ஓவியம்! சுகிக்க வேண்டிய காவியம்! மெய்மறந்து கேட்க வேண்டிய பாவியம்! அப்படி இருந்தும் எல்லாவற்றையும் நீ ஏன் ரசிக்கிறாய்? ஒ...! அழகே அழகை ரசிக்குமோ?

நீ என்னிடம் காட்டிய உணர்ச்சியின் பெயர் காதலா? அல்லது அதையும் தாண்டிய வார்த்தைகளே இல்லாத வார்த்தைகளில் சொல்ல முடியாத ஆத்ம பூர்வ ஈர்ப்பா? எனக்கு எதுவும் புரியவில்லை உன்னால் நேசிக்கபடும் அளவிற்கு நான் பாக்கியம் செய்தவனா? உன் விரல் நுனியை தொடுவதற்கு கூட அருகதையில்லாத நான், நீ கத்தரித்து எரியும் விரல் நக துணுக்கை சுமக்கும் மண்ணை விட தரம் தாழ்ந்த நான், உன் கரம் பற்றும் பேரு பெற்றது எப்படி...?

நீ அடிக்கடி சொல்வாய், உனக்கும் எனக்கும் உள்ள உறவு ஜென்மாந்திரமானது நீ பிறக்கும் ஒவ்வொரு பிறவியிலும் உனக்காகவே நான் பிறந்து வருவேன் என்று! நான் வெறும் கண்ணாடி கல்! ஆற்று தண்ணீர் உருட்டி செல்லும் கூளாங்கல்! சமையல் செய்ய உதவாத பச்சை விறகு! இச்சை மட்டுமே கொண்ட ஒடிந்து போன ஒற்றை சிறகு!. எல்லோருக்கும் பாரமாய் தெரியும் வேண்டாத உறவு! எப்போதுமே விடியாத இருண்ட இரவு!

ஆனாலும் நீ என்னை சந்தனமாக பூசி கொண்டாய், இதழ்களே இல்லாமல் கருகி போன என்னை கூந்தலில் சூடி கொண்டாய், எந்த ராகத்திலும் பொருந்தி வராத வார்த்தைகளாய் கிடந்த என்னை உன் வீணையில் மீட்டி புதிய ராகமாக்கினாய். உடைந்து போன விளக்கை எடுத்து தீபம் ஏற்றிய அதியசய தேவதை நீ! சுட்ட மண்ணை எடுத்து பானை செய்த அதிசய பிரம்மா நீ! நிழலே இல்லாத மரத்து அடியில் இளைப்பாற துணிந்த அதிசய பிறவி நீ!

அன்று மாட்டு பொங்கல். கொம்புகள் சீவி வண்ணம் தீட்டி புதுமனிகள் கட்டி அலங்கார கொடிபிடித்து மாட்டுவண்டிகள் ஊர்வலமாக மாலைநேரத்தில் வீதி வழியே சென்றது. வெளிச்ச காதலி இருட்டு காதலனுடன் தொட்டு உறவாடும் அந்த பொழுதில், நீயும் நானும் மட்டுமே ஒருவரை ஒருவர் பார்த்திருந்தோம். நமக்கிடையே புகுந்து சென்ற தென்றல் உன் சுவாசத்தை எடுத்து வந்து என் நெஞ்சுக்குள் நிரப்பியது. காலம் முழுவதும் இப்படியே இருந்து விடலாமா? என்று வார்த்தை முத்துக்களை மெல்ல உருட்டி விட்டாய்... உன் கனவை என் நினைவாக மட்டுமே எண்ணத் தெரிந்த நானும் அது தான் நல்லது என்று தலையசைத்தேன்

காலம் என்னும் கத்திரிக்கோல் உன்னையும் என்னையும் ஓட்ட விடாமல் கத்தரித்து தள்ளியது! உலகம் என்ற சுவற்றில் உன்னையும் என்னையும் தனித்தனியாக சித்தரித்தே எழுதியது! ராகமும் தாளமும்மாய் இணைந்து இருந்த நாம் எண்ணெயும் தண்ணீருமாய் பிரிந்து போனோம்! தயிராகி வெண்ணையாய் உருவாக வேண்டிய நம் உறவு திரிந்த பாலாய் பாழாய் போனது! தண்ணீரில் மட்டுமே வாழ தெரிந்த மீன் போல் நான் இல்லாமல் நீ கரைந்து போனாய்! தரையிலும் நீரிலும் வாழும் தவளையாக நான் மட்டும் இங்கு இசை எழுப்பாத நாதஸ்வரம் போல் மூலையில் கிடக்கிறேன்!.

நீ சுவாசித்த காற்றை நான் மூச்சு விட கொடையாக கொடுத்தாய்! இந்த நதி எங்கு ஓடினாலும் உன்னை நோக்கியே சுரந்து வருமென்று சத்தியம் செய்தாய்! கண்ணுக்கு தெரியாமல் எங்கோ ஒளிந்திருந்து என்னை தினசரி நீ பார்த்து கொண்டே இருக்கிறாய்...! உன் கொலுசு சத்தமும், கைவளை ஓசையும், சிரிக்கும் ஒலியும், உன்னிடமிருந்து எப்போதுமே வரும் மல்லிகை பூ வாசமும், தலையே வெட்டு பட்டு தரையில் விழுந்தாலும் இன்னும் உன்னால் வாழ முடியும் என்று நம்பிக்கை கொடுப்பாயே! அந்த வார்த்தையும், இன்றும் என்றும் என்னை தொடர்ந்து கொண்டே... இருக்கிறது!

எனக்கு தெரியும். அன்பே! எனக்கு மட்டுமே தெரியும். என்னை தேடி நீ ஒவ்வொரு பிறவியிலும் வருவாய்... வந்து உன் அன்பெனும் அமுத ஊற்றை எனக்காக தருவாய்... உன் அன்பை யாசகமாக பெற கோடி கோடி காலங்கள் பிறவிகள் எடுத்து வந்துகொண்டே... இருப்பேன்! ஆயிரம் சுமைகளை அடுக்கடுக்காய் சுமந்தாலும் உன் மெல்லிய சிரிப்பை தரிசனம் செய்ய நரக வாசலில் கூட தவம் கிடப்பேன்! நீ இல்லாமல் எனக்கு மட்டும் சொர்க்கலோகம் கிடைத்தாலும் உமிழ்ந்த எச்சில் போல் உதறி நடப்பேன்! அதனால் வா அன்பே நாம் இருவர் மட்டுமே இருக்கும் தனி உலகை சமைப்போம்!




 

Contact Form

Name

Email *

Message *