Store
  Store
  Store
  Store
  Store
  Store

அப்பா அரக்கன் அல்ல !


    குருஜி அவர்களுக்கு, எனது பணிவான வணக்கங்கள்!.. எனது பெயர் ---------, காரையில் பிறந்து, இப்பொழுது,பிரான்சில் வாழ்கின்றேன்.. நான் (அகங்காரத்துடன் நான் கூறவில்லை, மன்னிக்கவும்). சிறு வயதே ஆயினும் தெய்வத்தின் மீது அதீத பற்று வைத்துள்ளேன்,அவனைத் தேடிக் கொண்டும் இருக்கின்றேன், பல முறை, அதற்க்கு தேவரீர் உதவியுள்ளீர், ஆகவே, இப்பொழுதும் தமது உதவி நாடி வந்துள்ளேன்.. அய்யா, ஒரு சில மாதங்கள் ஆக, மனம் எதிலும் லயிக்கவே மறுக்கின்றன, இரண்டு வேளைகள் உண்ணாமல் இருந்தாலும், மூன்றாம் வேளை பசிக்கவில்லை. அதே சமயம், உடல் மெலிகின்றேன், மூக்கில் சதை வளருகின்றது வேறு.. தினம் தினம் அப்பாவுடம் காரணம் புரியாமல் திட்டு, அப்பாவிடம் கோவம் காட்ட பயந்து அம்மாவிடம் எரிந்து விழுகின்றேன்.. இதில்,சிறு வயதிலிருந்தே எனக்கு பிடித்தமான காரியம் அவ்வளவு எளிதில் நடந்ததே இல்லை, போராட வேண்டும், பல சமயங்களில் நடந்ததே இல்லை.. தற்பொழுது, இருக்கும் என்னைக் கண்டால் எனக்கே பயமாய் உள்ளது... ஆகவே, அனைத்தும் அறிந்தவரான தாம் தான், இதை எமக்கு விளக்க வேண்டும் என்று மன்றாடிக் கேட்டுக் கொள்கின்றேன்.

பி.கு: பெயர் வெளியிட வேண்டாம் என்று வேண்டிக் கொள்கின்றேன்..
விரைந்து பதிலள்ளிக்க வேண்டும், தயைக் கூர்ந்து!
நன்றி, ஜெய் ஸ்ரீராம்..



    ரு மனிதனின் வாழ்க்கை எப்படி இருக்குமென்று தீர்மானம் செய்வது அவனது இருபத்தி ஐந்தாவது வயதில் எப்படி இருக்கிறான் என்பதை வைத்து செய்து விடலாம் என்று சிலர் சொல்கிறார்கள் என்னால் அதை முழுமையாக ஏற்றுகொள்ள முடியவில்லை காரணம் அவனது வாழ்நாளில் கால்பங்கை அந்த வயதில் தொட்டு விடுகிறான் ஏறக்குறைய தவிர்க்க முடியாத சில பழக்கவழக்கங்கள் அவனோடு ஒட்டிகொள்கின்றன அவைகளை திருத்துவதும் மாற்றுவதும் அப்போது மிகவும் கடினம் அதனால் நான் இருபது வயதிற்குள் ஒருவன் எப்படி வாழ துவங்குகிறான் என்பதை வைத்தே அவனது வாழ்வின் தரத்தை தீர்மானம் செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன்.

காரணம் விடலை பருவம் என்பது பச்சை களிமண்ணை போன்று மென்மையானது அதை பிசைந்து நாம் விரும்புகின்ற உருவத்தை மிக எளிதாக செய்து விடலாம். அதே போலவே விடலை பருவத்தில் ஒருவனை வந்து ஒட்டி கொள்ளும் பழக்கம் அவன் வாழ்நாள் முழுவதும் கூடவே வருகிறது. இந்த வயதில் அவன் மனதில் விதைக்கப்படும் எண்ணங்கள் தான் அவனை புத்திசாலியாகவும் முட்டாளாகவும் உருவாக்குகின்றன. எனவே ஒருவன் நல்லவனாக வரவேண்டும் என்றாலும் வல்லவனாக வளரவேண்டும் என்றாலும் விடலை பருவத்தில் சரியான பயிற்சியை கொடுக்க வேண்டும் அந்த பயிற்சியே அவன் வாழ்நாள் முழுவதும் உரமாக அமையும்.

இந்த கேள்வியை கேட்டிருக்கும் சின்ன தம்பியும் விடலை பருவத்தில் இருக்கிறான். இந்த சமூகத்தில் நடக்கும் நல்லது கெட்டவைகளும் குடும்பத்தில் நடக்கும் சில நிகழ்வுகளும் அவனது மனதில் பல கொந்தளிப்புகளை ஏற்படுத்தி வருகிறது எது சரி எது தவறு என்பது தெரியாமல் தவிக்கிறான் இதனாலேயே தான் பலகாலம் வாழ்ந்தவன் போலவும் தனக்கு பலவித அனுபவங்கள் ஏற்ப்பட்டு விட்டது போலவும் நினைக்கிறான் துரதிஷ்ட வசமாக துன்பத்தை மட்டுமே சுவைப்பதாக கருதுகிறான் இது தவறு காரணம் முட்டையில் இருந்து ஒரு கோழி குஞ்சி வெளிவருவது போல இப்போது தான் இவன் உலகத்தின் நடைமுறைகளை பார்க்க துவங்கி இருக்கிறான்

இளம் கன்று பயமரியாததை போல் எதையாவது செய்ய வேண்டும் என்ற ஆவலில் போராடுகிறான் சிங்கத்தின் குட்டியாக இருந்தாலும் அனுபவமில்லாமல் மான்வேட்டைக்கு சென்றால் மானின் நெடிய கொம்பு சிங்க குட்டியை காயபடுத்தி விட கூடும் அதனால் பெற்ற சிங்கம் தனது குட்டியீன் கன்னி வேட்டையாடுதலை தடுக்கும் குட்டி திமிரும் போது அடிக்கவும் செய்யும் அதனால் குட்டி தனது தாய் சிங்கத்தை விரோதியாகவும் பார்க்க துவங்கும்

இவனின் தகப்பனாரும் தாய் சிங்கம் செய்வது போலவே தனது மகனை பாதுகாக்க விரும்புகிறார் அனுபவமில்லாமல் அந்நிய பூமியில் தன் மகன் துன்ப பட கூடாது என்று எதிர்பார்க்கிறார் இது மகனுக்கு புரியவில்லை அதனாலேயே அவனுக்கு துக்கமும் மன சோர்வும் வருகிறது உண்மையில் இப்படி பட்ட தகப்பனை பெற கொடுத்து வைக்க வேண்டும்

அன்பு தம்பி நீ கன்னி ராசியில் பிறந்திருக்கிறாய் இப்போது உனக்கு கோட்சாரப்படி ஏழரை நாட்டு சனி நடக்கிறது இந்த நேரத்தில் மனக்குழப்பமும் மனசோர்வும் ஏற்படுவது இயற்க்கை மனசோர்வை தவிர்க்க புதிய முயற்சிகள் எதையாவது நீ எடுக்க துவங்கினால் சங்கடப்பட்ட வேண்டிய நிலை வரும் எனவே வரக்கூடிய இரண்டரை வருடகாலம் உனது சுய விருப்பங்களை மூட்டை கட்டி வைத்து விட்டு உன் தாய்தகப்பன் சொல்லுகிரப்படி அவர்கள் விரும்புகிரப்படி நட உனக்கு எது நன்மை எது தீமை என்று அவர்களுக்கு நன்றாக தெரியும் ஐந்தறிவு பறவை கூட தனது குஞ்சிகளுக்கு அபாயம் வர சம்மதிக்காது உன் பெறோர்கள் மட்டும் அதற்கு சம்மதிப்பார்களா? என்ன? சற்று யோசித்து பார் அவர்களை பார்த்தால் உனக்கு பாசமும் பரிவும் தானாக வரும் அன்பு கனிந்த மனது எப்போதுமே இன்பமயமாக இருக்கும் உன் மனத்துயரம் மறைவதற்கு அவர்களை நேசி உனக்குள் ஆனந்த ஊற்று பெருக்கெடுத்து ஓடுவதை காண்பாய்

மேலும் உன் ஜாதகத்தில் பத்தாமிடத்தில் குரு நல்ல நிலையில் அமர்ந்துள்ளது இதனால் உன் எதிர்கால வாழ்க்கை மிக சிறப்பாக இருக்கும் என்று துணிந்து சொல்லலாம் பேரும் புகழும் செல்வமும் செல்வாக்கும் தானாக வந்து உன்னை சேரும் இரண்டரை ஆண்டுகள் மட்டும் பொறுமையாக இரு அதன் பிறகு உனது திறமையை உனது அறிவை உன் பெற்றோர்கள் மட்டுமல்ல மற்றவர்களும் அங்கிகாரம் செய்து பாராட்டுவார்கள் உன் மனது தெளிவடைய தினசரி ராம நாமத்தை உபாசனை செய்து வா நீ காணும் ஒவ்வொன்றும் ஆனந்தமாகவே இருப்பதை உணர்வாய் கீதை சொன்ன கண்ணன் உன்னை தங்க தேரில் பவனி வர செய்வான் கவலைபடாதே பொறுத்திரு கண்ணன் காப்பாற்றுவான்.




Contact Form

Name

Email *

Message *