( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........!! click here )வரும் ஞாயிறு அன்று அமிர்த தாரா தீட்சை அளிக்கப்படுகிறது appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846 

Share !
This Post

உஜிலாதேவி பதிவுகளை
மின்னஞ்சலில் பெற

ஒரு மனிதனுக்கு இரு உடல்களா...?


  யிர் என்பது எந்தவொரு சிறு துவாரத்திற்குள்ளும் நுழைந்து செல்லும் காற்றைப் போன்றது.  அதைக் கையில் பிடிக்க முடியாது.  ஆத்மாவை வாளால் வெட்டவோ நெருப்பினால் சுடவோ நீரினால் குளிர வைக்கவோ முடியாது என்று பகவத்கீதையும் கூறுகிறது.  நிலைமை இப்படியிருக்க ஆத்மா இழுத்து செல்லப்படுகிறது;  தாகத்தால் துடிக்கிறது;  வலியால் வேதனைப்படுகிறது;  இரத்தத்திலும் சீழிலும் அழுத்தப்படுகிறது என்று கூறுவது எந்த விதத்திலும் பொருத்தமாக இருக்கும் அல்லது ஆத்மா வேதனையை அனுபவிக்கிறது என்று கூறுவது சரீர வலியா அல்லது உணர்வு பூர்வமான வலியா?

   இந்த மாதிரியான கேள்விகளுக்கு விடை காண்பது என்பது சற்று கடினமான விஷயம்தான்.ஏனென்றால் மறு உலக வாழ்வைப் பற்றி விரிவாக எடுத்துரைக்கும் கருட புராணத்திலோ பல்வேறு விதமான நரகங்களை விரிவாகக் கூறும் விவிலியத்திலோ இத்தகைய கேள்விகள் கேட்கப்படவும் இல்லை அதற்குப் பதிலும் இல்லை. கேள்வியும் இல்லாத பதிலும் இல்லாத ஒரு விஷயம் இது.  ஆனால் தெரிந்தே ஆக வேண்டிய விஷயமும் ஆகும் இது.  காற்றைப் பிடித்து கட்டிவைத்து அடித்தார்கள் என்றால் அது எப்படி நிகழ்ந்தது  என்பதை அறிவது முக்கியமல்லவா.


   உடனடியாகப் பதில் பெற முடியாத இந்தக் கேள்வி பல வருடங்களாக எனக்குள் எழுந்தது உண்டு.  அதற்கு நூல் வடிவில் விடை காண பலமுறை முயற்சித்ததும் உண்டு.  பல தோல்விகளைச் சந்தித்த பின் மிகப் பழமையான சிதைந்து போன நிலையில் ஏட்டுப் பிரதி ஒன்று வடமாநில சந்நியாசி ஒருவர் மூலம் எனக்குக் கிடைத்தது.  அதில் ஓரளவு இந்தக் கேள்விக்கான பதில் கிடைத்தது என்று சொல்லலாம்.  அந்தப் பதிலைப் பார்த்த பின் அது சரியானதுதானா என்ற ஆராய்ச்சிக்குச் செல்லலாம்.  உடலை விட்டு உயிரைப் பிரித்தெடுத்து எமலோகத்திற்கு அழைத்துச் செல்லப்படும் முன் வைவஸ்வத என்னும் பகுதிக்கு அழைத்துச் செல்லப்படும் என்று கருட புராணத்தில் குறிப்பிட்டதைப் பார்த்தோமல்லவா அந்த வைவஸ்வத நகரத்தில் யாதனா சரீரங்கள் பல இருக்குமென்றும் அந்த யாதனா சரீரத்திற்குள் இறந்த ஜீவனைப் புகுத்துவார்கள் என்றும் அதன் மூலமே ஜீவன்கள் தண்டனையை அனுபவிக்கும் என்றும் அந்தப் பழைய ஏட்டுப்பிரதி கூறியது.

   யாதனா சரீரம் என்றால் என்ன?  என்பதைப் பார்க்கும் முன் யாதனா என்ற வார்த்தையின் பொருளைப் பார்த்தோம் என்றால் பின்னர் வரும் கருத்துக்களைப் புரிந்து கொள்வது சுலபமாக இருக்கும்.  பாணினியின் இலக்கணத்திலும் தொல்காப்பியம் மற்றும் பல நிகண்டுகளிலும் யாதனா என்ற வார்த்தைக்கு என்றும் இருக்கும் என்ற பொருள் தரப்படுகிறது.  அதனால்தான் எமலோகத்தின் வழியில் ஜீவன்கள் பெறும் யாதனா சரீரங்கள் உயிர் இல்லாது இருந்தாலும் எந்தச் சூழலிலும் அழியாமலும் நாற்றமெடுக்காமலும் இருக்கும் எனப்படுகிறது.
   கெட்டுப் போகாத யாதனா சரீரத்திற்குள் புகும் ஆவி பூமியில் வாழ்ந்த போது தான் பெற்றிருந்த சரீரம் மூலம் என்னென்ன உணர்ச்சிகளையும் உணர்வுகளையும் கொண்டிருந்ததோ அதே மாதிரியான சூழலை யாதனா சரீத்தில் பெற்றுவிடுகிறது.  அதாவது இந்தச் சரீரத்தில் ஆத்மா தண்டனைகளை அனுபவிக்கும்போது பௌதீக உடலுக்கு ஏற்படும் வலியும் வேதனையும் எப்படியிருக்குமோ அதையே எமலோகத்திலும் பெறுகிறது.  உதாரணமாக உரலுக்குள் தலையை வைத்து உலக்கையால் இடிபடும் தண்டனையை ஆத்மா பெற்றால் சாதாரண மனிதத்தலை என்ன பாதிப்பை அடையுமோ அதே பாதிப்பை யாதனா தலையும் அடையும்.  ஆனால் தண்டனை முடிந்த பின் பழைய மாதிரி காயம் இல்லாத நிலையை அது அடைந்துவிடும்.  இப்படி அந்த ஏட்டுப் பிரதி கூறுகிறது.

   படைப்புத் தொழிலில் ஈடுபட்டு இருக்கும் பிரம்மதேவன் ஒவ்வொரு ஜீவனுக்கும் ஒரே மாதிரியான இரண்டு உடல்களைச் செய்து ஒன்றிற்கு மட்டுமே தனது சுவாசத்தில் இருந்து உயிர் கொடுத்து கருவறைக்கு அனுப்பிவைக்கிறான்.  உயிர் கொடுக்கப்படாத இன்னொரு சரீரம் கட்டைவிரல் அளவில் கர்ப்பப்பையில் வளரும் சிசுவை போல ஆரம்ப காலத்திலிருந்து பின்பு அந்த சிசு மரண காலம் வரையில் எப்படி வளர்ச்சி  அடையுமோ அதே போன்றே யாதனாவும் வளர்கிறது.  உயிர் சரீரத்திற்கும் யாதனா சரீரத்திற்கும் உயிர்த்தன்மை ஒன்றைத் தவிர வேறு எந்த வித்தியாசமும் கிடையாது.  அதாவது பூமியில் நடமாடும் உடல்களை அசல் என்று சொன்னால் யாதனாவை நகல் என்று கூறலாம்.
  இந்தக் கருத்தை ஏற்றுக்கொள்ளும் போது மிகச் சிக்கலான ஒரு கேள்வியை நாம் எதிர்கோள்ள வேண்டியிருக்கும்.  ஜீவ சிருஷ்டிகள் அதிகரித்து பூமியில் இடநெருக்கடி ஏற்படுவது போலவே மேலுலகிலும் யாதனாக்களால் இட நெருக்கடி ஏற்படும் தானே?  ஒரு சிறு வண்டிற்குக் கூட நகல் உடல் தேவைப்படும் போது யாதனாவை சேமித்து வைப்பதற்காகவே தனி உலகம் உண்டா?  அல்லது குறிப்பிட்ட உயிர்களுக்கு மட்டும்தான் நகல் உடல்கள் உள்ளதா?

   கண்ணுக்குத்  தெரியாத அமீபா முதல் மாடுகள் வரையில் பிறப்பெடுக்கும் எல்லா உயிர்களும் படிப்படியான முன்னேறிய அறிவுடைய உயிர்களாகப் பிறந்தாலும் ஐந்தறிவு பெற்றிருக்கும் பிறப்பு வரையில் எந்த விதமான பாவ புண்ணியங்களும் அந்த உயிர்களுக்குக் கிடையாது.  அதாவது புழுவாகப் பிறந்திருக்கும் ஒரு ஜீவன் அடுத்த பிறவியில் பாம்பாகவோ பல்லியாகவோ பிறக்குமே அல்லாது மீண்டும் புழுவாகப் பிறப்பது இல்லை.  மேலும் புழு உடம்பில் இருக்கும்போது அதன் செயல்களுக்கு உடலை விட்ட பின்பு தண்டனையும் கிடையாது சன்மானமும் கிடையாது.  அதனால் புழுவிற்கான யாதனா தேவையில்லாது போய் விடுகிறது.  ஆறறிவு படைத்த மனிதனுக்கு மட்டுமே அவன் செயல்களுக்கான பலா பலன்கள் உண்டு என்று அந்தப் புராதன ஏட்டில் கூறப்பட்டிருக்கிறது.
   உயிர்கள் தங்களது பாவச் செயல்களுக்கான தண்டனையைப் பெறுவதற்கு மேலுலகில் தரப்படும் சரீரங்கள் போலவே ஒவ்வொரு பாவத்திற்கான தனித்தனி தண்டனைகளும் கொடுக்கப்படும்  என்று கருட புராணம் விரிவாகக் கூறுகிறது.  அதைச் சற்று பார்த்த பிறகு இதுவரை தாம் சொல்லிவந்த விஷயங்களில் நம்பக்கூடியது எது நம்ப முடியாதது எது?  உண்மை எது?  என்பதைப் பற்றிப் பார்போம்.

   பாவம் செய்தவர்கள் நரகத்திற்குச் செல்வார்கள் என்பது அனைத்து மதத்திலும் உள்ள பொதுவான நம்பிக்கையாகும்.  அந்தந்த மத நூல்களில் ஜீவன்கள் அடையும் நரகத்தைப் பற்றியும் அதில் நிறை வேற்றப்படும் கொடூரமான தண்டனைகள் பற்றியும் விரிவாகக் கூறப்பட்டுள்ளது. 

  பொதுவாக நமது இந்து மதத்தில் குரு என்ற விசித்திரமான மிருகத்தால் துன்பிறுத்தப்படும் இடம் ரௌரவம் நரகம் என்றும், பன்றிகளால் பீடிக்கப்படும் நரகம் சூகரம் என்றும், அசைய முடியாமல் ஒரே நிலையில் நிறுத்தி வைக்கப்படும் நரகம் ரோததம் என்றும், பனை மரத்திலிருந்து கீழே விழச் செய்து அதன் மட்டைகளால் அறுக்கும் நரகம் தாலம் என்றும், வெறும் கைகளால் பிழியப்படும் நரகம் விஷநஷம் என்றும், பெரு நெருப்பு எரியும் இடம் மகாஜ்வாலம் என்றும், காய்ச்சிய எண்ணெய் ஊற்றப்படும் இடம் தப்தகும்பம் என்றும், அறுத்து எண்ணெய் ஊற்றி உப்பில் புரட்டும் இடம் லவணம் என்றும், விலோகித நரகத்தில் ரத்தம் உறிஞ்சப்படும் என்றும்,  ருதிராரம்பம் நரகத்தில் சூடான ரத்தத்தில் புரட்டப்படும் என்றும், வைதரணி நரகத்தில் மூழ்கடிக்கப்படும் என்றும், கிருமிஷம் நரகத்தில் இரும்பு முட்கள் மேல் நடக்க வைக்கப்படும் என்றும், தாருணம் நரகத்தில் சகிக்க முடியாத குளிரால் வாட்டப்படும் என்றும், சந்தமிசம் நரகத்தில் சந்தமிசினி என்ற ஆயுதத்தால் நாக்கு பிடுங்கப்படும் என்றும், அசிபத்ரவனம் என்ற நரகத்தில் நாற்புறமும் கத்திகள் நட்டு அதன் மேல் நடக்க வைக்கப்படும் என்றும், பூயவகம் நரகத்தில் சூத்திரம் நரகத்தில் சக்கரத்தில் ஏற்றி கால்விரலில் ஒரு கயிற்றை மாட்டி உடலெல்லாம் ஒன்றாகும் படி இறுகக்கட்டி அறுக்கப்படுவார்கள் என்றும் விவரிக்கப்படுகிறது.
  ரௌரவம், சூகரம், ரோதம், தாலம், விஷநஷம், மகாஜ்வாலம், தப்தகுப்பம், லவணம் விலோகிதம் ருதிராரம்பம், வைதரணி, கிருமிசம், கிருமிபோஜனம், ஆசி பத்திரவதனம், கிருஷ்ணம் லாலாபடசம், சந்தமிசினி, அசிபந்ரவனம், பூயவகம், அக்கினிச் சுவாலம் அதச்சிரம், சந்தமிசம், கிருஷ்ண சூத்திரம், தமசு அவீசி, சுவபோசனம், அப்பிரதிஷ்டம் முதிலய ஆயிரம் கொடிய நரகங்கள் யமனுடைய அதிகாரத்தில் இருக்கின்றன.  அங்கு பாவிகளுக்கு ஆயுத பயம், ஐந்து பயம் முதலிய சகலவிதமான பயங்களும் உண்டு.  அவற்றினுள்ளே விழுகிற பாவிகளுக்குள் பொய் சாட்சி சொல்பவன், பட்ச பாதகத்தினால் விவகாரத்தில் அநியாயமாகப் பேசுபவன்.  பொய் சொல்வோன் ஆகியோர் ரேளரவ நரகத்தில் வீழ்கின்றனர்.  சிசுவைக் கொல்வோர், பட்டணத்தை அழிப்போர், பசுக்களைக் கொல்வோர், மூச்சைத்திணர வைப்போர், ரோகமடைவோர் மத்தியில் பாவம் செய்வோர்.  பிரமஹத்தி செய்வோர்,  பொன்னைத் திருடுவோர், இவர்களோடு சேர்ந்தவர்களும் சூகர நரகத்தில் வீழ்வார்கள்.

  அரசனைக் கொல்வேன் வைதியனைக் கொல்வோன் குருவின் மனைவியோடு கூடி மகிழ்பவன், உடன் பிறந்தாளைச் சேர்ந்து இன்புறுபவன், அரசன் ஊழியரைக் கொல்வோன் ஆகியோர் தப்தகுப்பம் என்னும் நரகத்திற்கு இரையாவர்கள்.

  மனைவியை விற்போன், தன்னிடம் அன்பாக இருப்பவனைக் கைவிடுவோன், அடைக்கலம் புகுந்தவனை அடித்து விரட்டுபவன் முதவானவாகள் தப்த லோகத்திற்கு ஆளாவார்கள்.

  மகள், மருமகள் முதவலானவரோடு புணர்கின்றவன், குருவை அவமதிப்போன், கோபித்துத் திட்டுபவன் முதலானவர்களும் புணரக் கூடாத பெண்களோடு புணர்கிறவனுக்கும் லவணம் என்னும் நரகம் கிடைக்கும்.

திருடனுக்கும் உலக ஒப்புரவை அழிப்பவனுக்கும் விலோமம் நேரிடும்.  தேவ தூஷனை, பிதுரு தூஷணைகளை செய்பவனும் உத்தம வஸ்துக்களைத் தூஷிப்பவனும் பிறருக்குத் தீங்கு செய்வோனும், சூனியம் வைப்பவனும் கிருனிசம் கிருமிபஷம் நரகத்தில் விழுவார்கள்.  பிதுர்களையும் அதிதிகளையும் விட்டு முன்னதாக உண்பவனும், வேடர் முதலியோருக்கு அம்புகள் கத்தி முதலிய ஆயுதங்களைச் செய்து கொடுப்பவர்களும் விசஸ நரகத்தைச் சேர்வார்கள்.

   அயோக்கியரிடத்தில் தானம் ஏற்போர், வைதீகக் கருமங்களுக்குத் தகாதவனுக்கு அவற்றைச் செய்விப்பவன் சோதிட நூலை உணராமல் பலன் சொல்வோன் ஆகியோர் அதோ முகத்தில் வதை படுவார்கள்.  சாகசஞ் செய்பவனுக்கும் பிறருக்கு கொடுக்காமல் தான் ஒருவனே நல்ல வஸ்துவைப் புசிப்பவனுக்கும் பூயவக வேதனை உண்டாகும்.  பூனை, கோழி, ஆடு, நாய், பன்றி, பறவைகள் முதலியவற்றை எப்போதும் மிகவும் கொஞ்சி வளர்ப்பவனும் அந்த நரகத்தையே அடைவான்.  கூத்தாடிப் பிழைக்கும் பிராமணன், மல்யுத்தம் செய்து பிழைக்கும் பிராமணன், தூண்டில் முதலிய கருவிகளால் மீன்களைப் பிடிக்கும் பிராமணன். முதலியோன் அன்னத்தை தின்பவன் விஷம் வைப்பவன், கோள் சொல்பவன், மனைவியைக் கூட்டிக் கொடுத்து பிழைப்பவன், பருவமற்ற காலத்தில் பொருளாசையால் பருவச்சடங்குகளைச் செய்பவன், வீட்டைக் கொளுத்துபவன், நட்பைக் கெடுப்பவன், பறவைகளைக் கொலைக்கு விற்பவன், காசுக்காக யாகம் செய்பவன், யாகத்தை அழிப்பவன் ருதிராம்பத்தில் விழுவார்கள்.

  ஊரைக் கொளுத்துபவன், யாகத்தை இகழ்பவன் முதலியோர்கள் வைதரணி நரகத்தை அடைவார்கள்.  பணம் வயது முதலியவற்றால் செருக்கடைந்து கிராமத்து எல்லையை மாற்றுபவர்கள், மனச்சுத்தம இல்லாதவர்கள் மோசடி செய்து பிழைப்பவர்கள் ஆகியோர்கள் கிருஷ்ணத்தை அடைவார்கள்.  பலன் தரும் மரங்களை வெட்டுபவர்கள், ஆடுகளைப் பலி இடுபவர்கள், மிருகங்களை உல்லாசத்திற்காக வேட்டை ஆடுபவர்கள் முதலியவர்கள் அக்னி ஜீவாலத்தில் பிரவேசிப்பார்கள்.  தனக்குரிய சுயதர்மத்தை விடுபவன் விரதலோகம் செய்பவன்.  சந்தவிசத்தில் வீழ்ந்து வேதனைப்படுவான்.  பிரம்மச்சாரிகளாக இருந்தும் பகலிலும் இரவிலும் ஜீவசக்தியான சுக்கிலத்தை விடுபவார்கள் புத்திரர்களுக்குத் தீங்கு இழைத்து அவர்களால் ஒதுக்கி வைக்கப்படுவார்கள் சுவபோஜனத்தில் அகப்படுவார்கள்.

  மனோ வாக்கு காயங்களினால் பாதகம் செய்தல், பாதகம் செய்யத் தூண்டுதல், இன்னும் அநேயவிதமான பாவங்களைச் செய்பவர்கள் நரகத்தில் கிடந்து துன்பப்படுவது மட்டுமின்றி சொர்க் கத்தில் உள்ளவர்களைப் பார்த்து ஏங்கிக்கொண்டே நரகத்தில் தலை கீழாகத் தொங்கிக் கொண்டு இருப்பார்கள்.

  புராணங்களிலும் இதிகாசங்களிலும் நரகங்களைப் பற்றியும் நரக வேதனைகளை பற்றியும் குறிப்பிட்டு இருப்பதைப் பார்க்கும்போது ஆத்மாக்கள் சரீரங்களோடே வேதனையை அனுபவிப்பதாகப் படுகிறது.  யாதனா சரீரத்தைப் பற்றிய குறிப்புகளும் ஆத்மாவானது சரீர வேதனைகளை அனுபவித்து அதன் மூலம் மனவேதனை அடைகிறது என்ற கருத்தை உறுதிப்படுத்துகிறது.  புராண இதிகாசங்கள் இப்படிக் கூறினாலும் பழைய நூற்குறிப்புகள் அதை உறுதிப்படுத்தினாலும் இவை தான்  முழுமையான உண்மையான உண்மைகள் என்று நம்மால் ஒத்துக்கொள்ள முடியவில்லை.  காரணம் எதையும் தர்கித்துப் பார்த்து பரிசோதித்துப் பார்த்து பழக்கப்பட்டுப்போன மனித அறிவு எத்தகைய புனிதமான நூல்களையும் கருத்துக்களையும் சந்தேகப்படவே வைக்கிறது.
  இந்துமதப் புராணங்களில் எந்தவிதத்தில் நரகங்களைப் பற்றி வர்ணனைகள் வருகிறதோ அதே பாதியான வர்ணனைகளும் கருத்துக்களும் இஸ்லாமிய வேதமான குரானிலும் கிருத்தவர்களின் புனித நூல்களிலும் ஒரே மாதிரியாகக் குறிப்பிடப்பட்டு இருந்தாலும் அதில் மனிதக் கற்பனைகளை சற்று மலிந்து கிடப்பதையே நம்மால் காண முடிகிறது.

  உதாரணமாக நாம் நம்மிடம் இல்லாத பொருட்களைப் பற்றி உயர்வாக நினைக்கிறோம்.  அந்தப் பொருளை அடைவதற்காக எத்தகைய சிரமங்களையும் அனுபவிக்கத் தயாராக இருக்கிறோம்.  அந்தப் பொருள் நமக்குக் கிடைக்கவே கிடைக்காது என்ற உறுதி ஏற்பட்டவுடன் அது பூமியிலையே இல்லாதது.  இறைவனால் சொர்க்கத்தில் தரப்படும் என்று திருப்திப்பட்டுக் கொள்பவர்கள் நம்மில் பலர் உண்டு.  ராஜஸ்தான் பாலைவனத்தில் வாழ்பவன் காஷ்மீர் பனிமலைக்காக ஏங்குவதும், வடதுருவப் பனியில் அவதிப்படுபவன் பஞ்சாப்பின் வயல் வெளிகளை பெறுவதற்கு துடிப்பதும் இயற்கையான விஷயம்தான்.

  அரபுநாடுகள் பாலைவனம் சூழ்ந்த பிரதேசம் என்பது நமக்குத் தெரியும். அங்கே ஆறுகளும் நதிகளும் கனவில் கூட கிடைக்காத விஷயம் என்பதும் நாம் அறிந்ததாகும்.  ஆனால் அங்கே வாழ்ந்த மனிதன் தான் வாழும் போது தனக்குக் கிடைக்காத மர நிழலும் ஆற்றுத் தண்ணீரும் சொர்க்கத்தில் கிடைக்கும் என்று நம்பினான்.  இதற்கு ஆதாரமாக குரானில் உள்ள அர்ரஃத் என்ற அத்யாயத்தில் சொர்க்கத்தில் ஆறுகள் ஓடிக்கொண்டு இருக்கும், நிழல் தரும் மரங்களும், கனி தரும் மரங்களும் அங்கு நிலையாக இருக்கும் என்ற குறிப்பு வருகிறது.  இதே போன்ற குறப்புகள் சொர்க்கத்தைப் பற்றி காணும்போது குரானில் பல இடங்களில் கூறப்பட்டு இருக்கிறது.
   இவைகளை எல்லாம் பார்க்கும்போது சொர்க்கம் நரகம் என்பது நமது அருகில் உள்ள மும்பையைப் போலோ டெல்லியைப் போலோ வேறு வேறு ஊர்களாகத்தான் கற்பனை செய்யப்பட்டு இருக்கிறது. அதனால் தான் சரீரத்திற்குக் கிடைக்கும் சுகங்களையும் துக்கங்களையும் ஆதாரமாக வைத்தே சொர்க்கம் நரகங்களின் இயல்புகள் சொல்லப்பட்டு இருக்கின்றன. இந்த விஷயத்தில் பல கற்பனைக் கூளங்கள் கிடந்தாலும் அதைத் துழாவித்தேடும் போது பிற உண்மை மரகதக்கற்களும் கிடைக்கத்தான் செய்கிறது.  அச்சிறு உண்மைகளை ஆதாரமாக வைத்துப் பார்த்தால் உயிர்கள் அனுபவிக்கும் மரணத்திற்குப் பின் உள்ள உண்மை நிலைகள் நமக்குத் தெரிந்துவிடும்.

சிறுவயதில் விளையாட்டுத் தோழர்கள் நம்மை செம்மையாக அடித்து இருப்பார்கள்.  துரத்தித் துரத்திக்கூட அவர்களிடம் கல்வீச்சு வாங்கிய சம்பவங்கள் நடந்து இருக்கும்.  அவையெல்லாம் அந்த நேரத்தில் நமக்குப் பெரும் வேதனையாக இருந்து இருக்கும்.  ஆனால் அது இரண்டொரு நாளில் மறந்துவிடும்.  வயது ஏற ஏற அப்படிப்பட்ட சம்பவங்களை நிகழ்த்திய பிள்ளைத் தோழர்கள் உயிர்த்தோழர்களாக மாறிவிடுவதும் உண்டு.  ஆனால் இளம் பிரயாத்தில் எவராவது நம்மை கடும் சொற்களல் திட்டி இருந்தாலோ அல்லது மனம் துன்பப்படும் படி நம்மை அவமானப்படுத்தி இருந்தாலோ அந்த நிகழ்வுகள் நாம் சாகும் வரைக்கூட மறந்து போவது கிடையாது.  ஆக சரீரத்தில் பெறும் வலியை விட மனதளவில் பெறுகின்ற வலிதான் என்றும் நிலைத்திருந்து வேதனையைத் தந்து கோண்டே இருக்கும்.

எனவே நரகத்தின் தண்டனை என்பது ஆத்மா சமந்தப்பட்ட விஷயம் என்பதினால் அது பௌôதீகமானதல்ல அபௌதீகமானது என்பதை உணரவேண்டும் எண்ணெய் சட்டில் வருப்பது காலில் ஆணி அடிப்பது என்பவைகள் சாதாரண மனிதமனதை திசை தடுமாறாமல் தடுபதற்கக கூறபட்ட நம் முன்னோர்களின் நற்ச்சிந்தனையே தவிற வேறல்ல உண்மையில் யாதனா சரீரம் என்பதெல்லாம் மறுவுலக வாழ்வில் இல்லாத விஷயம் அதேப்போன்றே சொர்க்கத்தில் ஆறோடும் தேனோடும் என்பவைகளும் நல்ல கற்பனையே அல்லாமல் வேறல்ல உண்மையில் ஆத்பாக்களுக்கு நரகம் என்றால் மீண்டும் பூமியில் வாழ வேண்டும் சொந்தப்பந்தங்களை சொத்து சுகங்களை அனுபவிக்க வேண்டும் என்ற ஆசை மேலிட உடம்பு இல்லாமல் அது இயலாது என்ற எதார்த்தத்தை உணர்ந்து துடிக்குமே துடிப்பு அதுதான் நரகம் அந்த உயிர்கள்தான் மீண்டும் மீண்டும் மண்ணில் வந்து பிறக்கின்றன தனது பூமி வாழ்விலே திருப்நி அடைந்து கடவுளின் திருவடியை மரணத்திற்கு பிறகும் தியானிப்பதுதான் சொர்க்கம் அந்த ஆத்மாக்கள் தான் பரமாத்மாவோடு ஐக்கியமாகி முத்தி அடந்து அமரத்தன்மையோடு நிலைத்திருக்கின்றன
+ comments + 2 comments

வணக்கம் குருஜி அவர்களே,
தங்களின் இந்த கட்டுரை மிகவும் பயனுள்ளதாக இருந்தது. கட்டுரையின் முதல் பாதி வரை சில குழப்பங்கள் இருந்தன. இறுதியில் கூறியிருந்த உண்மைகளை நான் ஒப்புக்கொள்கிறேன். ஆனால் நரகமும் சொர்கமும் பூமியலே தான் உள்ளது என்பதே எனது கருத்து.
சில உதாரணங்கள்....
நரகத்தில் (நகரத்தில்) வாழும் ஒருவன் சொர்கத்தை (கிராமத்தை) பற்றி எண்ணுகிறான். சொர்க்கத்தில்(கிராமம்) வாழும் 60 சதவிகித மக்கள் ஆரோகியமான வாழ்கையை வாழ்கிறார்கள். 30 சதவிகித மக்கள் நடுநிலை வாழ்கை வாழ்கிறார்கள். 10 சதவிகத மக்கள் நரக வாழ்கை வாழ்கிறார்கள். இதற்கு எதிர்மாறாக நகர (நரக) வாழ்கை நடக்கிறது. சகல வசதிகள் இருந்தும் பிறர் பொருளை நாடும் ஒருவன் நரக வாழ்கையை அனுபவிக்கிறான். நவீன நாகரிக வளர்ச்சி என்ற பெயரில் மங்கையரின் அரை நிர்வாண உடைகள், தொழில் நுட்ப வளர்ச்சி என்ற பெயரில் செயற்கை மற்றும் அதி நவீன உணவுகள். இவைகள் தான் நகர (நரக) வாழ்கை. இவை காலநிலை மற்றும் மனபக்குவ நிலைக்கு ஏற்றார் போல் மாறலாம். எவ்வளவு தான் நாகரிகம் வளர்ந்தாலும் எத்தனை ஆண்டுகள் கடந்தாலும் வள்ளுவன் வாக்கு பொய்யாகாது.

சுழன்றும்ஏர் பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை.

அரண்ஈனும் இன்பமும் ஈனும் திறனறிந்து
தீதின்றி வந்த பொருள்.

குருஜி அவர்களே எனக்காக ஒரு உதவி செய்வீர்களாக. அதாவது வள்ளுவன், கம்பன், அகத்தியர் போன்ற மாபெரும் மனவலிமை படைத்த ஆத்மாக்கள் புவியில் வாழ்கின்றனவா? அல்லது பரம்பொருள் ஆகிவிட்டதா? என்று ஒரு கட்டுரை நீங்கள் எழுத வேண்டும் என்று விரும்புகிறேன்.

கவி.சுந்தர்., மனநூல் ஆய்வாளர்...
எண்ணம் போல் வாழ்க.

Anonymous
17:39

please verify with avis with naragam and sorgam.
They knos it very well.


Next Post Next Post Home
 
Back to Top