Store
  Store
  Store
  Store
  Store
  Store

கனவுகளை விற்கும் கடைகள்...


    நூறு வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே நல்ல கவிஞன் பிறப்பான் என்று சொல்வார்கள் யார் நல்ல கவிஞன்? ஆயிரமாயிரம் வார்த்தைகளை அள்ளி போட்டு பலநூறு சந்தங்களில் பாடல்களை வடித்து கொடுக்கும் அனைவருமே நல்ல கவிஞர்களா? அல்ல மக்களின் வாழ்க்கையை மக்களின் மனதை மக்களின் அறிவை செம்மை படுத்த எவன் சிந்தித்து எழுதுகிறானோ அவனே நல்ல கவிஞன் என்று சிலர் சொல்கிறார்கள் வறுமை சமூதாய அவலம் இவைகள் அனைத்துமே கண்ணெதிரே விரிந்து கிடக்கும் நிஜ காட்சிகள் இதை கவிதையில் சொல்லும் போது எங்கே ரசம் இருக்கும் எனவே உபதேசம் செய்பவன் நல்ல கவிஞன் அல்ல அழகான கனவுகளை கண்டு அதை அற்புதமான உவமை நயத்தோடு சொல்ல தெரிந்தவனே நல்ல கவிஞன் என்றும் சிலர் சொல்கிறார்கள்

உழைப்பாளியின் வியர்வை பசித்தவனின் கண்ணீர் பரிதவிப்பவனின் உயிர் துடிப்பு இவைகளை நாள்தோறும் பார்க்கிறோம் நம் வீட்டில் நம் தெருவில் நமது ஊரில் ஒவ்வொரு சந்து மூலையிலும் இந்த காட்சிகளை பார்க்க முடிகிறது. அவைகளை பார்த்து பார்த்து நமது இதய பாரம் கூடுகிறதே தவிர மன அழுத்தம் குறையவில்லை மன அழுத்தத்தை குறைத்தால் தான் ஆனந்தம் பிறக்கும். அந்த ஆனந்தத்தை தருவது எதுவோ அது தானே சிறப்புடையதாக இருக்கும். எனவே வறுமையை வார்த்தைகளால் வடித்து காட்டும் கவிதை எதற்கு? கவிஞன் எதற்கு?


ரோஜா மலரின் அழகிய நறுமணம் ஆகாய வீதியின் ஓவிய கண்காட்சி சிலை போன்ற மேனிகளின் சீரார்ந்த பேரெழில் தென்றல் காற்றின் தாலாட்டு அலைவீசும் கடலின் ஒலிபேசும் பாட்டு இவைகளை எழுத்தாணி வாயிலாக அருவின் நடைபோல அழகு மொழியில் கொட்டி கொடுக்கும் கவிஞன் மட்டுமே நமக்கு வேண்டும். ஆடலும் பாடலும் கூடலும் துள்ளாட்டமும் மனித மனதிற்கு உரம் தருவது அவனது சிந்தனையை கட்டி இறுக்கி மூச்சி திணற வைக்கும் சோக இருளை வெட்டி வீழ்த்தி வெளிச்சத்திற்கு கொண்டு வரும் கவிதைகள் மட்டுமே நமக்கு வேண்டும்.

இப்படி இரண்டு அணிகள் எப்போதுமே உண்டு தமிழ் கூறும் நல்லுலகில் மட்டுமல்ல ஆங்கிலம் ஜெர்மனி பிரஞ்சு பேசுகின்ற ஐரோப்பிய உலகிலும் இந்த அணிகளின் மோதல்கள் எப்போதுமே இருந்து வருகிறது. ஆனால் இந்த இரண்டு மோதல்களிலிருந்து இடி முழக்கம் போன்ற பெருங்கவிஞர்கள் நூற்றாண்டுகள் தோறும் பிறந்து கொண்டே இருக்கிறார்கள் அப்படி பிறந்த ஒரு நூற்றாண்டு கவிஞன் தான் நமது பாரதி அவன் தெற்கில் உதித்த தமிழ் சூரியன் திசை தெரியாத மனிதருக்கு வழிகாட்டிய கைவிளக்கு ஆணவத்தால் தலைநிமிர்ந்து நிற்கும் பெரும் மரங்களை தரைதட்ட செய்த சூறை காற்று நெருப்பு பட்டு நெஞ்சம் காரமாய் எரியும் போது சில்லென்று வீசிய தென்றல் காற்று

அவனை அந்த பாரதியை சிலபேர் வாழ்க்கைக்கு உதவாத கனவுகளை விற்ற வார்த்தை வியாபாரி என்று வசைபாடுகிறார்கள் ஏற்ற தாழ்வுகளை சமன்செய்ய தெரியாத அப்பாவி என்று இசைபாடுகிறார்கள். ஜாதி போர்வையை மற்றவர்க்கு போர்த்திவிடும் சூத்திரதாரி என்று நகையாடுகிறார்கள் ஆதிக்க சக்திகள் சாதிக்கும் கருவி என்று பகையாடுகிறார்கள் உண்மையில் இவர்கள் அனைவருமே சூரியனின் வெளிச்சத்தை கண்டு இயலாமை என்ற பொறாமையை சுமக்கும் அம்மாவாசை ஆமைகள். தலைமுடியின் அழகை சிங்காரிக்க தெரியாமல் அக்குள் முடிக்கு பின்னல் போட்டு பூச்சூடி பார்க்கும் வார்த்தை பேசும் ஊமைகள்

பாரதியா கனவுகளை விற்றான்? சுட்டும் விழி சுடர்தான் சூரிய சந்திரரோ என்று கற்பனை உவமை சிறகடித்து பறக்கும் வார்த்தைகளை தந்தவன் பட்டு கரு நீல புடவையில் பதித்த நல் வைரங்களாய் நட்ட நடுநிசியின் தெரியும் நட்சத்திரங்களை அறிமுகம் செய்தவன் நிலையற்ற மனிதரை நினைத்து விட்டால் நெஞ்சு பொறுக்க வில்லையே என்று எதார்த்த வாழ்வில் எதிரே தெரிந்த காட்சியையும் நமது கண் முன்னால் அறிவு கண் முன்னால் பதிய செய்து துருபிடித்து மூடிகிடந்த இதய கதவுகளை முட்டி மோதி அதிரடியாக திறந்து விட்டவன்

காக்கை சிறகினிலே கரிய நிறத்தினிலே பார்க்கும் மரத்தினிலே தீயின் வெம்மையிலே பரம்பொருளின் மெய்ஞான உணர்ச்சியை கண்ணார கண்டு நெஞ்சார காட்டி நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே நீங்கள் அத்தனை பேரும் சொப்பனம் தானா? வெறும் காட்சி பிழை தானா? என்று வாழ்க்கையின் நிலையாமையை உணர்த்தியவன் நிலையில்லாத வாழ்க்கையில் எப்படி வாழ்ந்தால் என்ன? என்று சோம்பி கிடக்காதே வாழும் வரை போராடு தொண்டு செய்யும் அடிமை உனக்கு சுதந்திர நினைவோடா என்று ஆணவகாரர்கள் கூச்சலிட்டால் தாதர் என்ற நிலைமை மாறி ஆண்களோடு பெண்களும் சரிநிகர் சமானமாக வாழ்வோம் இந்த நாட்டிலே என்று பதிலடி கொடு என்று கற்றுத்தந்தவன்.

ஒளவை பாட்டி பாடிய ஆத்தி சூடியை நவீன மனிதனுக்கு செப்பனிட்டு காட்ட விரும்பிய பாரதி எடுத்த எடுப்பிலேயே அச்சம் தவிர் ஆண்மை கொள் என்று தோள்தட்ட வைக்கிறான். அது மட்டுமா உச்சிமீது வானிடிந்து வீழ்கின்ற போதிலும் நஞ்சை வாயில் கொண்டுவந்து நண்பரூட்டும் போதிலும் பிச்சை வாங்கி உண்ணும் வாழ்க்கை பெற்றுவிட்ட போதிலும் அச்சமில்லை அச்சமில்லை அச்சம் என்பதில்லையே என்று எலும்பும் தோலும் மட்டுமே போர்த்தி இருக்கும் நோஞ்சான்களை கூட அடர்ந்த காட்டிற்குள் அரியாசனம் போட்டு அமர்ந்திருக்கும் அரிமாவை போல ஆர்த்தெள வைக்கிறான். கடல்பொங்கி எழுந்தாலும் கலங்கிட மாட்டோம் அண்டம் சிதறினாலும் அஞ்சிடமாட்டோம் என்ற நெஞ்சுரத்தை தருகிறான்.

பாதகம் செய்பவரை கண்டால் பயம் கொள்ளலாகாது மோதி மிதித்து விடு அவர் முகத்தில் உமிழ்ந்து விடு என்று கொடுமைகண்டு போர் முரசு கொட்ட கட்டளை இடுகிறான். போர்த்தொழில் பழகு முனையிலே முகந்து நில் குன்றென நிமிர்ந்து நில் கொடுமையை எதிர்த்து நில் செய்வதை துணிந்து செய் என்று பலவாறு அடுக்கடுக்கான வீர கட்டளைகளை சோர்ந்து கிடக்கும் மனிதர்களை பார்த்து பாரதி சொல்கிறான். பாரதி கனவுக்காரன் கற்பனையின் சொந்தகாரன் என்றால் அவனது சிந்தனையிலிருந்து இத்தனை அக்னி குஞ்சிகள் வெளிப்பட்டு இருக்குமா?

காணி நிலம் வேண்டும் அதில் ஒரு மாளிகை கட்டி தரவேண்டும் பத்து பதினைந்து தென்னை மரம் பக்கத்திலே வேண்டும் அங்கு முத்து சுடர் போல நிலா ஒளி முன்பு வர வேண்டும் கத்தும் குயிலோசை சற்றே வந்து காதிலே விழ வேண்டும் என்று பராசக்தியிடம் தன் கனவுகளை நிஜமாக்க வரம் கேட்ட பாரதி அத்தோடு நிற்கவில்லை விசையுறு பந்தினை போல் உள்ளம் வேண்டியபடி செல்லும் உடல் கேட்டேன் நசையறு மனம் கேட்டேன் நித்தம் நவமென சுடர் தரும் மதிகேட்டேன் தசையினை தீச்சுடினும் சிவ சக்தியை பாடும் நல் அகம் கேட்டேன் என்று ஆன்மிகத்தையும் அன்றாட வாழ்க்கையும் செப்பனிட தகுந்த நல்ல வழியறிந்து அதையே வரமாக கேட்கிறான்.


கவிஞன் என்பவன் வறுமையை மட்டுமே காட்டுகிற வறட்டு வியாபாரியாக இருக்க கூடாது அதே நேரம் கற்பனை சஞ்சாரம் மட்டுமே வாழ்க்கையின் வசதி என்று போதை மருந்து வியாபாரமும் செய்ய கூடாது இனிப்பான பண்டத்திற்குள் கசப்பான மருந்து வைத்து தரும் அன்னையை போல் இனிமையையும் காட்டி வாழ்க்கையில் எதிர்படும் தனிமையையும் காட்டி வறுமையை சீர்படுத்தும் கனிவையும் காட்டி மனிதனை மனிதனாக்கும் வழிமுறை தெரிந்தவனே சிறந்த கவிஞன் அப்படி சிறந்து உயர்ந்து தெளிந்து மலர்ந்து ஒளிர்ந்து இமயமென நிமிர்ந்து நிற்கும் ஒரே ஒரு மாக்கவிஞன் பாரதி மட்டுமே.



 

Contact Form

Name

Email *

Message *