Store
  Store
  Store
  Store
  Store
  Store

என்னை நானே காதலிக்கிறேன் !


    னிதனாக பிறந்த நம் எல்லோருக்கும் யார் மீதாவது அதிகமான பாசம் இருக்கும் பாசம் வைக்கும் நபர்கள் வேண்டுமானால் மாறுபடலாமே தவிர பாசம் என்னவோ மாறவே மாறாது இப்படி சிலர் சொல்வார்கள் இதை கேட்டு விட்டு எனக்கு எனது தாயாரின் மீது அளவுகடந்த பாசம் உண்டு ஒருநாள் அல்ல இரண்டு நாள் அல்ல முன்னூறு நாட்கள் என்னை வயிற்றில் வைத்து சுமந்தவள் எனக்கு நோய் வந்தால் அவள் மருந்து சாப்பிட்டு பத்தியம் இருப்பாள். எனக்கு பசி வந்தால் என்னை உண்ண வைத்து பார்த்திருப்பாள் எனக்காக பசித்தும் இருப்பாள். என் காலில் சிறிய முள் குத்தினால் கூட தனது இதயத்தில் வேல் குத்தியது போல துடித்து போவாள். வாழ்வில் எதை இழந்தாலும் இழப்பேன் என் தாயை மட்டும் இழக்கவே மாட்டேன் என்றும் சிலர் சொல்வார்கள்

என் செல்ல மகள் இருக்கிறாளே அவள் நடந்தால் அழகு சிரித்தால் தனி அழகு வாய்திறந்து பேசினால் பசிமறந்து கேட்டுகொண்டே இருக்கலாம். அவள் அறிவுக்கு முன்னால் அறிஞர்கள் கைகட்ட வேண்டும். அவள் அழகுக்கு முன்னால் தேவதைகள் தலைகுனிய வேண்டும் கொடுத்து மகிழ்வதில் கர்ணனுக்கு தங்கை அவள் துணிச்சலில் ஜான்சி ராணியின் வாரிசு சிக்கல்களை சீராக்குவதில் சாணக்கியனின் மாணவி. அவளுக்கு இணையான பிறவியே இந்த உலகில் இல்லை அவளை பாராட்டாத மனிதர்களே கிடையாது. அவள் மீது நான் வைத்திருக்கும் அன்பு தண்ணீருக்கும் மீனுக்கும் உள்ள சொந்தம் போன்றது. என் உடல் முழுவதும் வேதனையால் துடித்தாலும் அங்கங்களிலிருந்து குருதி கொட்டினாலும் அவளுக்காக சாமரம் வீசுவேன். என்று பெற்ற மகள் மீது பாசம் வைத்த தந்தையின் சொற்களை கேட்டிருக்கிறோம்.

என்னை பெற்றததனால் தான் என் அம்மா என் மீது பாசம் வைக்கிறாள். எனக்கு பிறந்ததால் தான் என் மகள் என் மீது அன்பு காட்டுகிறாள். ஆனால் என் மனைவி என்னை பெற்றவளா? அல்லது எனக்கு பிறந்தவளா? இரண்டுமே இல்லை தாலி என்ற மூன்று முடிச்சை போடுவதற்கு முன்பு அவள் யாரோ? நான் யாரோ? ஆனால் அதற்கு பிறகு அவளும் நானும் இரண்டு உடலாக இருந்தாலும் ஒரே ஜீவனாக வாழுகிறோம். எனக்கு வலித்தால் அவள் அழுவாள் அவளது அழுகை என்னை பரிதவிக்க செய்யும் எப்படி பட்ட உறவு எங்களது தாம்பத்தியம் நான் கடவுளிடம் வரம் கேட்டு பெற்றிருந்தால் கூட இப்படி பட்ட மனைவியை அடைந்திருக்க முடியாது வரமே பெறாமல் நான் கண்டெடுத்த புதையல் அவள். இந்த உலகில் நான் நேசிப்பது அவளை மட்டும் தான் அவளை தவிர வேறு யாரையும் யாரிடமும் அன்பு காட்ட என்னால் முடியாது. என்று வாழ்க்கை துணைவியின் மீது கொண்ட வாஞ்சையை வார்த்தைகளால் வர்ணிக்கும் மனிதர்களின் குரலையும் கேட்டிருக்கிறோம்.

இப்படி சொல்வது உண்மையா? தாயின் மீது கொண்ட பாசமும் மனைவியின் மீது கொள்ளும் பாசமும் குழந்தையிடம் காட்டும் அளவுகடந்த பாசமும் நிஜம் தானா? ஒரு மனிதன் தன்னலமே இல்லாமல் வேறொருவரை நேசிக்க முடியுமா? நேசிக்கிறேன் என்று சொல்வது உண்மையாக இருக்குமா? இத்தகைய பாசங்களை சந்தேகப்பட்டு கேள்வி கேட்பதே ஒருவிதத்தில் தவறுதல் போல தெரியும் ஆனால் நாம் நமது வாழ்க்கையில் பல சந்தர்ப்பங்களில் பெறுகின்ற அனுபவத்தை அஸ்திவாரமாக கொண்டு ஆராயும் போது இத்தகைய கேள்விகளையும் சந்தேகங்களையும் அவ்வளவு சுலபமாக புறக்கணித்து விட முடியாது.


ஒரு அழகான குழந்தை தலையில் மயில் பீலியும் கையில் புல்லாங்குழலும் கொடுத்து விட்டால் சாச்சாத் கிருஷ்ண பரமாத்மாவையே நேரில் பார்ப்பது போல இருக்கும் கன்னனம் குழி விழ அந்த குழந்தை சிரிக்கும் போது சொர்க்கலோகமே நம் கண்முன்னால் தெரியும் அந்த குழந்தை பெற்றோர்களுக்கு திருமணம் முடிந்து பல வருடங்கள் காத்திருந்து தவமிருந்து நோம்பிருந்து பிறந்தது தாயும் தகப்பனும் அதன் மீது உயிரையே வைத்திருந்தார்கள் ஒரு நாள் இரவு லேசாக சுட ஆரம்பித்த குழந்தையின் மென்மையான உடம்பு நான்கு நாட்கள் அளவிட முடியாத ஜுரத்தில் தகித்தது ஐந்தாவது நாள் பூத்து குலுங்கி கண்ணை பறித்து கொண்டிருந்த ரோஜா மலரை குரங்கு ஒன்று பிடுங்கி தாறுமாறாக கசக்கி எரிந்தது போல மரணம் இரக்கமே இல்லாமல் குழந்தையின் கதையை முடித்து கோரமாக சிரித்தது பெற்றவர்கள் துடித்தார்கள் துவண்டார்கள் தரையில் விழுந்த மீனை போல துடிதுடித்து அழுதார்கள். அவர்கள் அழுத அழுகையை பார்த்து கல்லாக நிற்கும் மலை கூட கண்ணீர் வடித்தது

அக்கம் பக்கம் உள்ள மனிதர்கள் பேசி கொண்டார்கள் தாயும் தகப்பனும் குழந்தையின் மீது உயிரையே வைத்திருந்தார்கள் இனி குழந்தை இல்லாமல் அவர்களால் எப்படி வாழ முடியும். பசும் தளிரை பறிகொடுத்த அந்த தாய் மாண்டு போனாலும் போய் விடுவார் என்று மற்றவர்களின் வேதனையை கண்டு பரிகாசம் செய்து பழக்கப்பட்ட ஊரார்கள் கூட மனம் கசிந்து கண்ணீர் மல்கி மருகி போனார்கள் காலமும் ஓடியது இலையுதிர் காலத்தில் மொட்டையாய் நின்ற மரங்கள் வசந்த காலத்தில் தளிர்ப்பது போல எத்தனையோ மாற்றங்கள் உலகில் நடந்தன உடலை வருத்தி விரதமிருந்து மனதை வருத்தி தவமிருந்து பெற்ற பிள்ளையை பறிகொடுத்து விட்ட அந்த பெற்றவர்கள் சிறிது காலத்திலேயே இறந்த குழந்தையை மறந்து விட்டு அடுத்த குழந்தயை பெறுவதற்கு கர்பவதி ஆனார்கள்.

உயிருக்கு உயிராக நேசித்த காதலி கண்ணிமைக்கும் நேரத்தில் காலதேவனின் மரண கயிற்றில் அகப்பட்டு கொண்டாள் உலகமே இடிந்து தலையில் விழுந்தது போல காதலன் துடித்தான் உணவு கசந்தது உறக்கம் மறந்தது இனிமையான வீணை இசை கூட அவனுக்கு ஒப்பாரியாக கேட்டது இனி எதுவுமே இல்லை மரணம் மட்டுமே தனக்கு வாய்த்த மஞ்சம் என்று நெஞ்சம் எல்லாம் நெருப்பு கொழுந்து விட கதறி அழுதான். நண்பர்கள் தேற்றினார்கள் உற்றார் உறவினர்கள் ஆறுதல் மொழி சொன்னார்கள் பெற்றவர்கள் மாண்டார் வருவதில்லை செத்தவளுக்காக இருப்பவர்களை சாகடிக்காதே தைரியமாக இரு உன்னை பெற்ற எங்களுக்காக மாண்டு போகாதே என்று வருடல் மொழிகளை வாரி வழங்கினார்கள் அவனும் பொறுமையோடு கேட்டான் பெற்றவர்களுக்காக காதலியோடு போகவேண்டிய மரண பயணத்தை தள்ளி போட்டான் அத்தோடு விட்டானா? தனக்காக இல்லை தன்னை ஈன்றவர்களுக்காக வேறொரு பெண்ணையும் கைத்தலம் பற்றினான் உயிராக இருந்த காதலியின் நினைவுகள் இப்போது அவன் குழந்தையின் சிரிப்பில் அடிக்கடி மறந்து போகிறது.

இப்படி எத்தனையோ சம்பவங்களை பார்க்கிறோம். நான் அவரை நேசிக்கிறேன் இவரை நேசிக்கிறேன் என்று சொல்வதெல்லாம் வெறும் மாய்மாலங்கள் என்பது போல நமது அனுபவத்திற்கு தெரிகிறது மற்றவர்களை ஏன் சொல்ல வேண்டும் பல நேரங்களில் நாமே கூட அப்படி தான் இருக்கிறோம். பத்து மாதம் சுமந்து பெற்ற தாய் பக்கத்தில் பத்தினி ஒருத்தி வந்த பிறகு பாரமாக தெரிகிறாள் கட்டிய மனைவி கூட அதை கொண்டு வா இதை கொண்டு வா என்று சாட்டை சொடுக்கும் போது பத்தினி பத்திரகாளியாக தோற்றம் அளிக்கிறாள். நண்பர்களும் அன்பர்களும் சொந்த பந்தங்களும் ஏன் பெற்றெடுத்த குழந்தைகளும் கூட பல நேரங்களில் நமக்கு நெருப்பாக தெரிகிறார்கள். வெறுப்பாக நடக்கிறார்கள் அப்படி என்றால் உண்மையாகவே நம்மால் நேசிக்கபடும் எந்த ஜீவனும் உலகில் கிடையாதா? நாம் யாரையுமே நேசிப்பது இல்லையா?

உண்டு நிஜமாக உண்டு நம்மால் நேசிக்கபடும் ஜீவன் இந்த உலகத்திலே உண்டு அந்த ஜீவன் நமக்கு அந்நியமானது அல்ல மிக தூரத்திலும் இருப்பது அல்ல நமக்கு மிக மிக நெருக்கமானது நம்மோடு மிக அருகாமையில் இருப்பது சந்தேகமே வேண்டாம் நம்மால் நேசிக்கபடும் ஜீவன் வேறு யாரும் அல்ல நாமே தான் அது ஆம் இந்த உலகில் நம் மீது மட்டுமே நாம் அளவிட முடியாத பாசம் வைத்திருக்கிறோம் அளவிட முடியாத நெருக்கம் வைத்திருக்கிறோம் அல்லும் பகலும் அறுபது நாழிகையும் நமக்கு நம்மை தவிர வேறு எந்த சிந்தனையும் கிடையாது. வேறுயாரும் நம் சிந்தனையிலும் கிடையாது. தாயின் மீது மனைவியின் மீது மக்களின் மீது சொந்தபந்தங்களின் மீது நாம் பாசம் வைத்திருப்பது கூட நமக்காகத்தான் நம் சந்தோசத்திற்காகத்தான் இந்த உண்மையை ஒப்பு கொள்வது சற்று கடினமாக இருக்கும் ஆனால் இது தான் உண்மை

உண்மையில் நம்மை நாமே நேசிப்பது என்பது நம் வாழ்க்கையை நாம் நேசிப்பது தான் இந்த உலகில் நமக்கு இருக்கும் எல்லா சொத்துக்களை விட எல்லா சுகங்களை விட அதிக மதிப்பு மிக்கது, அதிக முக்கியத்துவமானது நமது வாழ்க்கை தான். நேற்று வரை அரசனாக இருந்து விட்டு இன்று ஆண்டியாக தெருவில் போ என்றாலும் கூட நாம் போவோம் அதற்காக அதிகமாக அலட்டி கொள்ள மாட்டோம் காரணம் இழந்த அரச போகத்தை மீண்டும் நாம் பெற்றுவிட முடியும். ஆனால் ஒருவனை நீ வாழ்ந்தது போதும் உன் வாழ்க்கையை முடித்து கொள் என்று சொன்னால் அதற்கு அவன் ஒப்புதல் தருவானா? மகிழ்ச்சியோடு தலையசைப்பானா? நிச்சயம் மாட்டான்

ஆரோக்கியமாக நடமாடி கொண்டிருப்பவனுக்கு வாழ்வதை பற்றி அவ்வளாவாக அக்கறை இராது. ஆனால் அவனுக்கே ஒரு கொடிய நோய் வந்து விட்டால் வாழ வேண்டும் என்ற ஒரு ஆர்வமும் வேகமும் வரும் பாருங்கள் அதற்கு முன்னால் காட்டாற்று வெள்ளம் கூட சக்தி இல்லமல் முடங்கி போகும். மரணத்தை பற்றிய பயம் வரும் போது தான் மனிதனுக்கு வாழவேண்டும் என்ற ஆசை வருகிறது. கொடிய நோயால் வலியோடு துடித்து கொண்டிருப்பவன் ஐயோ எனக்கு சாவு வராதா? என்று கதறி அழுவான் அவனிடமே இதோ இது விஷம் இதை குடித்து விட்டு உன் வாழ்க்கையை முடித்து கொள் என்று சொல்லி பாருங்கள் உங்களிடமிருந்து அவன் பல காத தூரம் தள்ளி போவான் வெகு தொலைவில் நின்று உங்களை விரோதியை பார்ப்பது போல பார்த்து சாபமும் கொடுப்பான்.

காரணம் மனிதன் வாழ்வை நேசிப்பவன் வாழ வேண்டுமென்று ஒவ்வொரு வினாடியும் துடிப்பவன் தனது வாழ்க்கை பயணத்திற்கு தடையாக எவை வந்தாலும் அவற்றை ஆக்ரோசமாக தாக்க துணிபவன் நானும் நீயும் கூட மரணத்தை விரும்புவது இல்லை காரணம் மரணத்திற்கு பிறகு நாம் மீண்டும் இந்த பூமிக்கு வருவோமா? இந்த சுக போகங்களை அனுபவிப்போமா? என்பது நிச்சயமாக நமக்கு தெரியாது . பூமியில் வாழ்வது துயரமாக இருந்தால் கூட நாம் இங்கு வாழ்வதற்கே விரும்புகிறோம். காரணம் நம் வாழ்க்கை தான் நமக்கு பொக்கிஷம், புதையல் எல்லாமே அப்படி நம்மால் உண்மையாகவும் சத்தியமாகவும் நேசிக்க படுகின்ற வாழ்க்கையை நல்ல முறையில் வாழ்கிறோமா? வாழ்வை பாதுகாப்போடு காவல் செய்கிறோமா என்பதை சிந்திக்க வேண்டும். உண்மையில் எந்த வாழ்வை இழப்பதற்கு நான் தயாராக இல்லையோ அந்த வாழ்வை வாழ தெரியாமல் சிதைத்து கொண்டிருக்கிறோம். எப்படி...? 

தொடரும் ...

Contact Form

Name

Email *

Message *