Store
  Store
  Store
  Store
  Store
  Store

மின்சார மணி கோவிலுக்கு வேண்டுமா...?


    குருஜி ஐயா அவர்களுக்கு பணிவான வணக்கம் வாசகர்களின் பலதரப்பட்ட கேள்விகளுக்கு நீங்கள் பதிலளிக்கும் விதத்தை பல மாதங்களாக படித்து வருகிறேன் எளிமையாகவும் விளக்கமாகவும் நீங்கள் பதில்சொல்லும் விதம் என்னை மகிழ்விக்கும் படி இருக்கிறது. தவறுதலான கேள்விகளுக்கு கூட பொறுமையாகவும் சரியாகவும் நீங்கள் சொல்கின்ற பதில் உண்மையாகவே எவரையும் சிந்திக்க வைக்கும். உங்கள் பதில்களை படித்த நாள் முதல் நான் எந்த காரியத்தை செய்தாலும் அதனுடைய அர்த்தம் விளங்கி சரியான நேரத்தில் சரியான காரியத்தை மட்டுமே செய்ய முயற்சிக்கிறேன்.

சில கேள்விகளுக்கு என்னால் பதிலை நானே தேடி கொள்ள முடிகிறது. சில கேள்விகளுக்கு யாராவது அனுபவஸ்தர்களை அணுகினால் தான் தக்க பதில் கிடைக்கிறது. இப்போது எனக்குள் இருக்கும் கேள்வி ஒன்றிற்கு என்னாலும் விடை காண முடியவில்லை மற்றவர்கள் கூறுகின்ற பதிலும் தெளிவாக இல்லை. எனவே அந்த கேள்வியை உங்களிடமே கேட்டுவிடலாம் என்று முடிவு செய்து இந்த மின்னஞ்சலை உங்களுக்கு அனுப்புகிறேன். பல வேலைகள் உங்களுக்கு என்பது எனக்கு தெரியும். இதனாலையே உங்களை தொல்லைபடுத்த கூடாது. என்று நான் நினைத்து அமைதியாக இருந்து விடுவேன். ஆனால் இந்த கேள்வி கேட்டே ஆகவேண்டிய கட்டாய சூழலில் இருக்கிறேன். தயவு செய்து தெளிவான பதிலை சிரமம் பார்க்காது தருமாறு பணிவோடு உரிமையோடு கேட்கிறேன். 
எங்கள் ஊரில் புதியதாக மாரியம்மன் கோவில் கட்டுகிறார்கள் அதற்கு பலரும் நன்கொடைகள் செய்கிறார்கள் கோவில் நிர்வாகிகளில் சிலர் என்னை அணுகி சுவாமிக்கு பூஜை வேளையில் பயன்படுத்துகிற மின்சார மங்களவாத்தியம் வாங்கி தரும்படி கேட்கிறார்கள் அது ஒன்றும் அதிகபடியான வேண்டுதல் இல்லை என்றாலும் ஆலயங்களில் மின்சார வாத்தியத்தை பயன்படுத்தலாமா? கூடாதா? என்று எனக்கு ஒரு சந்தேகம் இருந்து வருகிறது. நாகரீகம் என்ற பெயரில் நாம் விரும்புகிறபடி கோவிலில் செயல்பட கூடாது சாஸ்திர முறையில் தான் எதையும் செய்ய வேண்டும் என்று நம்புகிறவன் நான் 
ஒருவேளை மின்சார வாத்தியம் பயன்படுத்துவது பாராம்பரிய முறைக்கு விரோதமாக இருக்கலாம் எல்லோரும் தான் செய்கிறார்களே அதை நாமும் செய்தால் என்ன? தவறு என்று நினைக்க கூடாது கண்ணை மூடிகொண்டு பத்து பேர் கிணற்றில் விழுந்தால் நம்மாலும் விழ முடியுமா? விழலாமா? என்று யோசிப்பவன் நான் ஐயா அவர்கள் அது கூடும் கூடாது என்பதை தெளிவு படுத்தி சொன்னால் நானும் திருந்துவேன் என்னை போன்று உள்ள பலருக்கும் அது உபயோகமாக இருக்கும் உங்கள் பதிலை வைத்தே நான் செயல்பட போவதாக உறுதி எடுத்து விட்டேன் எனவே கோவிலில் மின்சார மங்கள வாத்தியம் பயன்படுத்தலாமா? கூடாதா என்பதை தெளிவாக சொல்லி விளங்க வைக்கவும்.


இப்படிக்கு
முருகேசபாண்டியன்
நான்குநேரி 



    நான்குநேரி வானமாமலை பெருமாளை தினசரி தரிசிக்கும் பாக்கியம் பெற்ற முருகேச பாண்டியனுக்கு உண்மையில் நன்றி சொல்லி ஆகவேண்டும். காரணம் அவர் கேட்டிருக்கும் இந்த கேள்வி மிக முக்கியமானது என்று நான் நினைக்கிறேன். நாகரீகம் முன்னேற்றம் என்ற போர்வையில் வழிபாட்டு கூடங்களில் ஒவ்வொருவரும் தங்களது சுய விருப்பபடி எதை எதையெல்லாமோ செய்து விடுகிறார்கள். இதனால் ஏற்படுகின்ற விளைவுகள் மிக மோசமானது என்பதை அவர்கள் நினைத்து கூட பார்ப்பது கிடையாது. 

சில மாதங்களுக்கு முன்பு ராணி வார இதழில் ஆலயங்களில் டைல்ஸ் பதிக்கலாமா? வேண்டாமா? என்ற ஒரு கேள்வியை என்னிடம் கேட்டிருந்தார்கள். அதற்கு நான் கொடுத்த பதிலை மிக விரிவாகவே ராணி வார இதழ் வெளியிட்டு இருந்தார்கள். ராணியில் எனது பேட்டியை படித்து விட்டு தமிழகத்திலும் சிங்கபூரிலும் இருந்து சில அன்பர்கள் என்னோடு தொடர்பு கொண்டு தங்களது ஆலயங்களிலும் பதிக்க பட்டிருக்கின்ற டைல்சை எடுத்து விட்டு சாதாரண தரை பழையபடி போட்டு விடலாமா? அதற்கு தெய்வ குற்றம் வராத வழிகள் உண்டா? என்று விளக்கங்களை கேட்டு டைல்சுகளை எடுத்து விட்டார்கள். 

அதிலிருந்து தெளிவான சில விளக்கங்கள் எனக்கு கிடைத்தது மக்கள் தாங்கள் விரும்புகின்ற படி கண்ணப்பநாயனார் போல் பகவானுக்கு எதையாவது செய்ய வேண்டும் என்ற அதீத ஆசையில் தவறுதலான காரியங்களை செய்தாலும் கூட இது தவறு இதை செய்ய கூடாது செய்தால் இப்படியாகப்பட்ட பாதிப்புகள் வருமென்று விளக்கம் சொன்னால் கண்டிப்பாக ஏற்றுகொள்கிறார்கள். நான் செய்ததை தவறு என்று சொல்ல நீ யார்? என எவரும் பிடிவாதம் செய்வதில்லை. ஆன்மிக விஷயத்தை பொறுத்தவரை சுட்டி காட்டினால் திருத்தி கொள்கிறார்கள்.


மின்சார மங்கள வாத்தியம் என்பது மிக அற்புதமான உபகரணம் என்பதில் எனக்கு மாற்று கருத்து கிடையாது. சங்கு கேசண்டி மத்தளம் போன்றவைகளை வாசிக்க தெரியாத மக்கள் இருக்கும் ஊர்களில் இந்த மங்கள வாத்தியம் மிகபெரிய வரப்பிரசாதமாகவே இருக்கிறது என்பதில் ஐயமில்லை புதியதாக கட்டிய கோவில்களில் மட்டுமல்ல பாரம்பரியமான பழமையான ஆலயங்களில் கூட மங்கள வாத்தியம் மின்சாரத்தில் இசைக்கபடுகிறது. இதை இல்லை என்று சொல்லி விட முடியாது. ஆனால் உண்மையாகவே பூஜையின் போது மின்சார வாத்தியம் பயன்படுத்தலாமா? பயன்படுத்துவது சரியா என்பதை சிந்திக்க வேண்டும். இப்படி சிந்திப்பதற்கு முன் பூஜையின் போது மேள தாளங்கள் முழங்குவது ஏன் என்பதும் தெரிந்தால் தான் சொல்லுகின்ற பதிலில் உள்ள நியாயத்தை அனைவரும் உணர்ந்து கொள்ள முடியும். 

பூஜையின் போது மங்கள வாத்தியங்கள் முழங்கும் நேரத்தில் அர்ச்சகர் ஒரு மந்திரம் சொல்வார். "வாத்திய கோஷ யாமி" என்பது அந்த மந்திரம் இதன் பொருள் என்ன? வாத்திய ஒலியினை உனக்கு சமர்பிக்கிறோம் என்று இறைவனிடம் முறையிடுவது ஆகும். சமர்பணம், சமர்பித்தல் என்ற வார்த்தைகளை பயன்படுத்தும் போதே அதனுள் ஆத்மார்த்தமாக அல்லது உள்ளன்போடு என்ற பொருள் மறைந்து இருக்கிறது. மனமுவந்து மனம் கசிந்து ஒரு காரியம் நடக்க வேண்டுமென்றால் அதை நாம் தான் செய்ய வேண்டுமே தவிர மற்றவர்களை ஏவி செய்ய கூடாது. அதனால் தான் கிராமத்தில் தான் செய்கிற வேலையை தம்பி செய்யலாமா? என்ற பழமொழி வழங்கி வருகிறது. 

நமது வேலையை செய்வதற்கு கூட மற்றவர்களை பணிக்க கூடாது எனும் போது பகவானுக்கான வேலையை நாம் தானே செய்ய வேண்டும். அதற்கு ஒரு மனிதனையோ ஒரு எந்திரத்தையோ ஏவி செய்வது எந்த வகையில் நியாயம் ஆதிகாலத்தில் ஆலைய பூஜைகளில் பக்தனே மணி அடித்தான். அதன் பிறகு வசதிகள் பெருகியவுடன் அவனுக்கு ஆணவம் தலைக்கேறியது எனவே மணியடிக்க ஒரு பணியாளனை நியமித்தான். பணியாளனுக்கு தனியாக சம்பளம் கொடுக்க வேண்டுமா? என்ற கருமி தனம் மனிதன் மத்தியில் அதிகரித்து விடவே மணியடிப்பதற்கு இயந்திரத்தை பயன்படுத்த துவங்கி விட்டான். 


நாகரீகம் வளர்கிறது விஞ்ஞானம் வளர்கிறது அதனால் விஞ்ஞான கருவிகளை பயன்படுத்தினால் என்ன தவறு என்று சிலர் கேட்கலாம். விஞ்ஞான கருவிகளை பயன்படுத்த வேண்டிய இடத்தில் பயன்படுத்தினால் தான் அந்த கருவிகளுக்கும் மரியாதை சில காரியங்களுக்கும் மரியாதை அபிசேகம் செய்வதற்கு குடம் குடமாக நீரை எடுக்க முடியவில்லை என்பதற்காக சுவாமி தலைக்கு மேலே ஷவரை பொருத்தி விட முடியுமா? ஐயர் தப்புதப்பாக மந்திரத்தை உச்சரிக்கிறார் என்று டேபிரிக்கார்ட் போட்டு விட்டால் அர்ச்சனையின் முழுமையான அர்த்தம் கிடைத்து விடுமா? எனவே எதிலும் வரன்முறை கட்டுதிட்டம் என்பது மிகவும் அவசியமானது.

கருவறையில் அர்ச்சகர் ஆரத்தி தட்டை ஒருகையிலும் மணியை இன்னொரு கையிலும் வைத்து கொண்டு பூஜை செய்வது ஒன்றும் சிரமம் அல்ல அது சிரமமாக இருக்கிறது அதற்காக வேறு எதாவது ஏற்பாடு செய்யுங்கள் என்று அவர் சொன்னால் அவரை மாற்றுவதை தவிர வேறு வழியில்லை அதே போல மண்டபத்தில் கட்டபட்டிருக்கும் மணியை பூஜைக்கு வந்த பக்தர்களில் யாரவது ஒருவர் அடிக்கலாம் அடிக்க வேண்டும். அப்படி அடிப்பது தான் கடவுளை நம்மை நோக்கி திருப்பும் நாமும் கடவுளை நோக்கி திரும்புவோம். எனவே மின்சார வாத்தியம் என்பவைகள் நமது சாஸ்திர மரபிற்கு விரோதமானது அதை எங்கே எந்த கோவிலில் யார் பயன்படுத்தினாலும் அது முற்றிலும் தவறு இறைவனுக்கு நாம் செய்யும் பக்தி என்ற அன்பு தொண்டை அவமதிக்கும் காரியமும் ஆகும். எனவே முருகேச பாண்டியன் அம்மனுக்கு எதாவது செய்ய நினைத்தால் மின்சார மங்கள வாத்தியம் வேண்டாம் வேறு எதுவேண்டுமென்றாலும் செய்யட்டும் அன்னை அன்போடு ஏற்றுகொள்வார்.


Contact Form

Name

Email *

Message *