Store
  Store
  Store
  Store
  Store
  Store

தெற்கை பார்க்கும் தெய்வம்


    குருஜி அவர்களுக்கு வணக்கம் என் பெயர் மதன கோபாலன் நான் ஒரு நடன கலைஞன் நான் மட்டுமல்ல என் தாத்தா என் அப்பா என் தாயார் அனைவருமே நடனத்தை தொழிலாக கொண்டு வாழ்ந்து வருகிறோம். நான் சில திரைப்படங்களில் நடன கலைஞராகவும் பணியாற்றி இருக்கிறேன். பல பெரிய கலைஞர்களின் வெளிநாட்டு கலை நிகழ்சிகளிலும் கலந்திருக்கிறேன். இருந்தாலும் இதுவரை எனது திறமைக்கு ஏற்ற அங்கிகாரம் இதுவரை கிடைக்கவில்லை இந்த தொழிலில் புகழ் இல்லாத வரை வருமானம் என்பது மிக குறைவு அதனால் என் குடும்பம் இதுவரை வறுமையை வெல்ல முடியாமல் வாடுகிறது. ஆனாலும் எனக்கு வேறு தொழில் தெரியாது. நடனத்தை விட்டு விடவும் மனது வரவில்லை அக்கம்பக்கத்து குழந்தைகளுக்கு கற்றுகொடுப்பது சில நிகழ்சிகளில் துணை கலைஞராக பங்குபெறுவது ஆகியவற்றை வைத்தே ஜீவன் நடத்தி வருகிறேன்.

சென்னையில் என் தாத்தா சம்பாதித்த ஒரு சிறிய வீட்டில் தான் காலகாலமாக வாழ்ந்து வருகிறோம் இதுவரை வீட்டை சரியான முறையில் மராமத்து செய்ய கூட வசதி இல்லை. மழைகாலம் வந்து விடடால் பாதி மழை வீட்டிற்குள் தான் பெய்யும் நானும் என் மனைவியும் இரண்டு குழந்தைகளும் வேறு வழியில்லாமல் அந்த வீட்டில் வாழ்ந்து வருகிறோம். தாத்தா கட்டிய வீடு என்பதனால் விற்கவும் மனது வரவில்லை.

சென்ற மாதம் என் வீட்டிற்கு என் நண்பனின் தகப்பனார் வந்திருந்தார் அவர் என் வீட்டில் பூஜை அறையை பார்த்தார் அங்கே என் தாத்தாவின் குரு அன்பாக கொடுத்த நடராஜர் சிலை ஒன்று இருக்கிறது அதை என் தாத்தா கிழக்கு முகமாக வைத்து அடியில் சிமென்ட் பூசி வேறு எங்கும் யாரும் நகர்த்த முடியாமல் நிலையாக வைத்து பூஜை செய்து வந்தார். அது இன்னும் அப்படியே இருக்கிறது அதை பார்த்த நண்பனின் தந்தையார் நடராஜர் சிலையை கிழக்கு முகமாக வைக்க கூடாது அப்படி வைத்து வழிபட்டால் குடும்பத்திற்கு ஆகாது என்று சொன்னார்.

இதை பற்றி வேறு சில பெரியவர்களிடமும் கேட்டேன் அவர்களோ நடராஜர் சிலையே வீட்டில் வைத்து வழிபட கூடாது எங்காவது கோவிலில் கொண்டு வைத்து விடு என்கிறார்கள். தாத்தாவின் குரு கொடுத்த பரிசை மற்ற இடத்தில் கொண்டு வைக்க எனக்கு அதிகாரம் இல்லை என்று நினைக்கிறேன் அதே நேரம் எனது வறுமைக்கு இது தான் காரணமாக இருக்குமோ என்று நினைத்தும் கலங்குகிறேன். என்ன செய்வது என்று எனக்கு புரியவில்லை இந்த நேரத்தில் தான் என்னோடு நடனம் ஆடும் ஒரு பெண்களைஞர் உங்களைப்பற்றிய விவரங்களை சொல்லி என் குழப்பத்திற்கு தெளிவு பெறும்படி கூறினார் அதனால் இந்த கடிதம் உங்களுக்கு எழுதுகிறேன். தயவு செய்து சரியான விளக்கம் தாருங்கள் என் வாழ்வில் வெளிச்சத்தை உருவாக்குங்கள்


இப்படிக்கு      
மதனகோபாலன் 
சென்னை    


   ரு கலைஞன் கலைத்துறையில் வெற்றிபெற வேண்டுமென்றால் திறமை மட்டும் இருந்தால் போதாது அதிஷ்டமும் வேண்டும் இப்போதைய கலைத்துறையின் சாபத்தின் படி சிலரை காக்கா பிடிக்கவும் தெரிந்திருக்க வேண்டும். ஆயிரம் திறமை இருந்தாலும் ஈடுபாடு அர்பணிப்பு இருந்தாலும் காக்கா பிடிக்க தெரியவில்லை என்றால் வாசல்படியாக கிடந்தது மிதிபட வேண்டியது தான்.

நடனம் மற்றும் இசை போன்ற நுண்கலைகளை பெற்றிருப்பது ஒருவகையில் வரம் என்றாலும் வேறொரு வகையில் அந்த வரமே சாபமாகவும் அமைந்து விடுகிறது. நான் அறிந்த வரை இந்த துறை சார்ந்த கலைஞர்கள் பலருக்கு வேறு எதை பற்றியும் அதிகமாக தெரியாது தெரிந்து கொள்ளவும் விரும்ப மாட்டார்கள். பசியால் துடி துடித்து உயிர் போகும் நிலை வந்தால் கூட வேறு தொழிலை நாட மனசும் வராது அவைகளை செய்வதற்கு திறமையும் இருக்காது.

இனி விசயத்திற்கு வருவோம். அம்பலத்தில் ஆடுகின்ற அருள் விருந்தை அரும் மருந்தை ஆனந்த தேனை உலகத்தின் நாயகனாக மட்டுமல்ல பரதத்தின் தலைவனாகவும் அவனே ஆடல் கலையை உலகுக்கு வழங்கிய வள்ளலாகவும் நமது முன்னோர்கள் போற்றி வணங்குகிறார்கள். அதனாலேயே ஆடல் கலை மூலம் ஆடவல்லானுக்கு புஷ்பாஞ்சலி செலுத்தும் கலைஞர்கள் அனைவருமே தில்லை கூத்தனை தனது குல தெய்வமாக கொண்டாடுகிறார்கள்

புராணப்படி எமதர்ம ராஜனை வென்றுவிட்டு நடனமாடுவது தான் நடராஜரின் திருகோல தோற்றம் அவர் எமனை வென்று ஆடுவதனால் அந்த ஆடல் தெற்கு முகமாகவே இருந்தது என்று ஆகமங்கள் சொல்கின்றன அதனாலையே எல்லா தெய்வ உருவங்களும் கிழக்குமுகமாக பிரதிஷ்டை செய்ய பட்டாலும் கூட நடராஜ பெருமானை மட்டும் தெற்கு பார்த்தவராகவே பிரதிஷ்டை செய்வார்கள் ஆலையத்தில் மட்டுமல்ல வீடுகளிலும் நடராஜர் விக்கிரகங்களை தெற்கு பார்த்த வண்ணம் வைத்து வழிபட வேண்டும்

தாத்தா வெட்டிய கிணறு என்பதற்காக உப்பு தண்ணீரை குடிக்க முடியுமா? நல்ல தண்ணீர் கிடைப்பதற்கு கிணற்றை சிறிது மாற்றி அமைத்தால் அது தவறல்ல எனவே உங்கள் பூஜை அறையில் கிழக்கு நோக்கி இருக்கும் எம்பெருமானை தெற்கு நோக்கி திருப்பி வையுங்கள் மேலும் உங்கள் கஷ்டங்களுக்கு இது மட்டும் காரணம் அல்ல உங்கள் வீட்டு அமைப்பே வாஸ்துபடி தவறாக இருக்கிறது நீங்கள் முன்னேற வேண்டுமென்றால் ஒன்று வீட்டை மாற்றி கட்ட வேண்டும் அல்லது வீடு மாற்றி குடியிருக்க வேண்டும். மனிதன் வாழுகின்ற வீட்டில் நடராஜர் சிலையை வைக்க கூடாது என்று எந்த சாஸ்திரமும் சொல்லவில்லை.




Contact Form

Name

Email *

Message *