Store
  Store
  Store
  Store
  Store
  Store

குழம்பிய மனது குழிபறிப்பது நிஜம்


   ரண்டு ஆண்டுகளுக்கு முன்பு எனது பூர்வாசிரம கிராமத்திற்கு அருகிலுள்ள சிறிய ஊரில் நல்ல ஜோதிடர் இருப்பதாக சொன்னார்கள்.  எல்லாவற்றையும் சரியாக சொல்கிறார்.  சொன்னவைகளும் பலிக்கின்றன என நிறைய ஜனங்கள் பேசி கொண்டார்கள்.

   எனக்கும் ஆசை வந்துவிட்டது.  அவரிடம் நம் ஜாதகத்தையும் காட்டி பார்க்கலாமே என்று தோன்றியது.  மேலும் அவர் என்னை பற்றி அறிந்திருக்க அதிகம் வாய்ப்பில்லை.  காரணம் முப்பது வருடங்களுக்கு முன்பே நான் சொந்த ஊரைவிட்டு வந்து விட்டதினால் பலருக்கு என்னை முற்றிலும் தெரியாது.  அப்படியே தெரிந்த ஒன்றிரண்டு பேருக்கு கூட அப்பா விட்டுவிட்டு போன தொழிலை கவனிப்பதாக தான் தெரியுமே தவிர வேறு எந்த விவரங்களும் தெரியாது.     


   இந்த மாதிரியான சுழலில் தான் ஒரு ஜோதிடர் திறமையை தீர்மானிக்க முடியும்.  எனவே என் ஜாதகத்தை எடுத்து கொண்டு அந்த ஜோதிடரிம் இது என் தம்பியின் ஜாதகம், கொஞ்சம் பார்த்து சொல்லுங்கள் என்றேன்.  சரி என்ன தெரிந்து கொள்ள வேண்டும் என்று அவர் கேட்டார் இவரின் முதல் மனைவி செத்துவிட்டாள் இரண்டாவது திருமணம் செய்து வைக்கலாமா என்று அண்டபுளுகு ஒன்றை புளுகினேன்.

 ஜாதகத்தை வாங்கி சிறிதுநேரம் பார்த்த அவர் இந்த ஜாதகப்படி இவருக்கு திருமணம் ஆகாது.  பிறகு எப்படி இல்லாத மனைவி செத்து போவாள் என்று திருப்பி கேட்ட அவர் இந்த ஜாதகருக்கு உடன் பிறந்த சகோதர்கள் யாருமில்லை பிறந்த ஊரில் இவர் வாழ முடியாது என்று சொன்ன அவர் மேஷத்தில் உள்ள ராகுவும், தூலாத்தில் உள்ள கேதுவும் இவரை நிச்சயமாக ஊனம் உள்ளவராகவே வைத்திருக்கும் என அழுத்த திருத்தமாக சொல்லி என்னை அதிசயப்பட வைத்தார். 


  அது மட்டுமல்ல என் வாழ்க்கையில் நடந்த எனக்கு மட்டுமே தெரிந்த பல சம்பவங்களை அருகிலிருந்து பார்த்தவர் போல கூறி ஆச்சர்யப்பட வைத்தார்.  அவர் ஜோதிட அறிவு என்னை வியப்பில் ஆழ்த்தியது.  அவரிடம் உண்மையை சொல்லி பாராட்டி விட்டு புறப்பட்டு விட்டேன்.

  அவர் மீது எனக்கு ஒருவித மரியாதையே ஏற்பட்டுவிட்டது எனலாம்.  அதனால் அவரிடம் சென்ற வருடம் வேறொரு விஷயத்திற்காக தொலைபேசியில் அழைத்து ஜாதகப்பலன் கேட்டேன்.  அவரும் சிரமம் பார்க்காது பலன் சொன்னார்.  ஆனால் அவர் சொன்ன பலன் எதுவும் நடக்கவில்லை. 


   இதை ஏன் இங்கு சொல்ல வருகிறேன் என்றால் ஒருவருக்கு ஒரு செயலை நாம் செய்யும் போது இருவரின் கிரக நிலைகளும் ஓரளவாவது பொருந்தி வர கூடியதாக இருக்க வேண்டும்.  அப்படி இல்லாதபட்சத்தில் நாம் எவ்வளவு சக்தி பெற்றிருந்தாலும் அதனால் எந்த பயனும் கிடையாது.

   ஒரு முறை நான் கடுமையான பல் வலியால் அவதிபட்டுக் கொண்டிருந்தேன்.  அப்போது என் நண்பர் ஒருவரை கூட்டி வந்து அவருக்கு ஜோதிடம் பார்க்கும் படி வற்புறுத்தினார்.  அவன் நச்சரிப்பு தாங்காமல் வேறு வழி இல்லாமல் பார்த்தேன்.  கூட வந்த அந்த நபர் தான் டிரைவர் தொழிலுக்கு போகலாமா?  என்று கேட்டார்.  நான் கணக்கு பார்த்து பலன் சொல்லும் நிலையில் அப்போது இல்லை என்பதினால் தாராளமாக போங்கள் பிரச்சனை இல்லையென்று சொல்லிவிட்டேன்.


     என் பேச்சை நம்பிய அவர் டிரைவர் தொழிலுக்கு போயிருக்கிறார்.  வண்டி ஓட்டி நல்ல அனுபவம் இல்லாத அவரின் விதி என் வார்த்தை இருந்திருக்கிறது.  பாவம் தொழிலுக்கு போன மூனாம் நாளே ஒரு விபத்தில் சிக்கி காலமாகிவிட்டார்.  இந்த குற்றவுணர்வு என் மனதில் ஆறாத புண்ணாக இன்னும் இருக்கிறது.  அதை நாலு பேருக்கு தெரியபடுத்திய இதற்கு பிறகாவது என் மனம் ஆறுதலடைகிறதா?  என்று பார்க்க வேண்டும்.  சின்னதும் பெரிதுமாக இப்படி சில சம்பவங்களை என்னால் கூற இயலும்.

  ஒரு மந்திர சாதகன் உடலாலும் மனதாலும் சிரமத்தை அனுபவிக்கும் போது யாருக்காகவும், எதையும் செய்ய கூடாது.  அப்படி செய்தால் நிச்சயம் விபரீதங்கள் தான் ஏற்படும்.  ஆனால் நிறைய பேர் இதை உணர்வதே கிடையாது பணம் வந்தால் போதும் என்ற எண்ணத்தில் காரியங்களை செய்ய துணியும் போது தான் மந்திர சாஸ்திரத்திற்கு அவமானம் ஏற்படுகிறது.  மனிதனின் குற்றம் மந்திர சக்தியின் மீது வந்து விழுந்து விடுகிறது.  அதனால் நான் இப்போது எல்லாம் என் மனம் முழுமையாக விரும்பினால் ஒழிய வேறு எந்த காரணத்திற்காகவும் எதையும் செய்வதில்லை.  பணம் சம்பாதித்தால் செலவழிக்கலாம்.  பாவம் சம்பாதித்தால் செலவழிக்க முடியாது.  அனுபவிக்க வேண்டும். 


     மேலும் மந்திர அனுபவங்கள் படிக்க இங்கு செல்லவும்








Contact Form

Name

Email *

Message *