Store
  Store
  Store
  Store
  Store
  Store

உடம்பு சுமையா...? சுகமா...?


   ன்மீக வாழ்விற்கு மனித உடம்பு பெரிய தடை என்று சில சித்தர்கள் சொல்கிறார்கள். மனித உடம்பில் தோன்றுகின்ற உணர்சிகள் ஆத்மாவை கீழ்நிலைக்கு இட்டுசென்று விடும் சொந்தபந்தங்கள் என்றும் பாவம் என்றும் விலங்குகளை பூட்டி இறைவனோடு இரண்டற கலப்பதை தடை செய்து விடும் என்று அவர்கள் நம்புகிறார்கள் இதனாலையே பல சித்தர்பாடல்கள் மனித சரீரத்தை பழித்தும் இழித்தும் பேசுவதை காணமுடிகிறது. 

உண்மையிலையே உடம்பு என்பது ஆன்மிக வாழ்விற்கு தடையா? என்று சிந்திக்கும் போது திருமூலர் போன்ற மகாஞானிகள் உடம்பு ஆன்மீக பயணத்திற்கு தடையாக இருந்து கெடுப்பது இல்லை சம்சார சாகரத்தை கடந்து செல்ல உடம்பு படகாகவே இருக்கிறது என்கிறார்கள். இன்னும் சொல்ல போனால் உடம்பு என்பது ஒரு சாதாரண பொருள் அல்ல அது இறைவன் வாழுகின்ற ஆலயம் என்று அவர்களால் சொல்லபடுவதை அறியமுடிகிறது. 

நாம் பூமியில் பிறக்கும் போது எனக்கு இந்தமாதிரி உடம்பு வேண்டும் என்று கேட்டு பிறப்பது இல்லை நாம் கேட்ட உடம்பு கிடைக்குமென்றால் ஒவ்வொருவரும் ரதியை போன்றோ மன்மதனை போன்றோ உடல்களை தான் தேர்ந்தெடுப்போம் என்பது வேறு விஷயம் இன்ன குடும்பத்தில் இந்த தாய்தந்தையருக்கு நீ பிறக்க வேண்டுமென்று இறைவன் எப்படி தீர்மானம் செய்து நம்மை அனுப்பி வைக்கிறாரோ அதே போலவே இறைவனின் விருப்ப படியே நமக்கு உடம்பு அமைகிறது. இந்த கருத்தை மையமாக கொண்டு சிந்தித்து பார்த்தோம் என்றால் இந்த உடம்பு கூட நமக்கு சொந்தமானது அல்ல இறைவன் நம்மை தற்காலிகமாக வாழவைத்திருக்கும் வாடகை கூடு என்று சொல்லலாம். 

ஹிந்தியில் ஒரு பழமொழி உண்டு நா குச் மேரா சப் குச் தேரா என்பது அந்த பழமொழி இதன் பொருள் என்னவென்றால் என்னுடையது எதுவும் இல்லை இருப்பது எல்லாமே உன்னுடையது தான் என்பதாகும். நாம் கண்களால் காணுகின்ற பொருள்கள் அனைத்தும் தொட்டு அனுபவிக்கின்ற பொருள்கள் அனைத்தும் நம்முடையது என்று தவறுதலாக நினைத்து கொண்டிருக்கிறோம். உண்மையில் அவைகள் ஈஸ்வரனால் படைக்கப்பட்ட அவனுக்கு சொந்தமான பொருள்களாகும். நமது உடம்பும் அப்படியே 

நமக்கு பாத்தியதை பட்ட சொத்துக்களை மட்டுமே சர்வ சுகந்திரமாக அனுபவிக்கும் உரிமை நமக்கு உண்டு அவைகளை விற்கலாம் பாழ்படுத்தலாம் முற்றிலும் இல்லாமல் கூட அழித்து விடலாம். ஆனால் அடுத்தவருக்கு சொந்தமான பொருளை சேத படுத்துவற்கு நமக்கு எந்தவித உரிமையும் கிடையாது தகுதியும் கிடையாது. அப்படியென்றால் இந்த உடம்பும் இறைவனது சொத்து இதை வதைப்பதற்கும் பாதுகாப்பு இல்லாமல் போட்டு வைப்பதற்கும் எனக்கு உரிமை ஏது? 

சரீரம் பிரம்ம மந்திரம் என்று வடமொழியில் சொல்வார்கள் இதையேதான் திருமூலர் ஊனுடம்பே ஆலயம் என்று சொல்கிறார். இந்த உன்னதமான இறைவன் வாழுகின்ற ஆலயம் என்ற உடம்பை நாம் எந்த வகையில் பாதுகாக்கிறோம் என்பதை சற்று ஆழமாக சிந்திக்க வேண்டும். நம்மில் யாருமே மரணமடைய விரும்புவது இல்லை வாழவே விரும்புகிறோம் அதுவும் குறிப்பாக இன்பமாக சந்தோசமாக எந்த தொல்லையும் இல்லாமல் வாழ விரும்புகிறோம். நமக்கு இன்பம் தருகின்ற பொருள் எதுவாக இருந்தாலும் அதை பெற்று விட அலைந்து திரிந்து பெரும் முயற்சி எடுக்கவும் தயங்குவது இல்லை. 

கஷ்டப்பட்டு தேடி அலைந்து உழைத்து சம்பாதித்த பொருள்களை கெட்டு போகாமலும் கள்வர்கள் கவர்ந்து போகாமலும் இருக்க அல்லும் பகலும் பாடுபடுகிறோம். வெளியிலிருந்து பெற்ற பொருளை பாதுகாக்க எடுத்து கொண்ட முயற்சியில் நூற்றில் ஒரு பங்காவது அழிந்து போனால் மீண்டும் கிடைக்காத நமது உடம்பை பாதுகாக்க எடுக்கிறோமா என்றால் இல்லை என்றே சொல்ல வேண்டும். 

நமது மனமும் புத்தியும் சந்தோசமடைய பாட்டில் பாட்டிலாக மதுவகைகளை குடிக்கிறோம் பெட்டி பெட்டியாக சிகரெட்களை ஊதி தள்ளுகிறோம். கஞ்சா அபின் புகையிலை என்று போதை பொருகளை பயன்படுத்துகிறோம். உடம்பை மறந்து உல்லாசமாக வாழ்வதற்கு எத்தனை வகை போதை பொருகள் உண்டோ அத்தனையும் நமது அறிவை பயன்படுத்தி கண்டுபிடித்து அனுபவிக்கிறோம். நேற்றொரு மேனகை இன்றொரு ஊர்வசி என்று இந்திரிய சுகத்திற்காக உடம்பை தேடி ஓடுகிறோம். இவை அனைத்துமே நமது ஆத்மாவை மட்டுமல்ல நமது உடம்பையும் கெடுக்கிறது சிறிது சிறிதாக அழிய செய்கிறது. என்பதை நாம் உணர்கிறோமா? 

நமது உடம்பு இருநூறுக்கும் மேல்பட்ட எலும்புகளாலும் ஐந்நூறுக்கும் மேற்பட்ட தசை நாறுகளாலும் ஆக்கபட்டது. எழுபத்தி இரண்டாயிரத்திற்கும் அதிகமான நரம்புகள் நமது உடம்பில் ஓடுகிறது. நம் கையளவே உள்ள இதயம் நிமிடத்திற்கு எழுபது முறை துடிக்கிறது. நீர் இறைக்கும் மோட்டார் பம்பை விட அதிக சக்தியோடு ரத்தத்தை அந்த இதயம் உடல் முழுவதும் பிறந்த நாள் முதல் இறக்கும் நாள் வரை செலுத்தி கொண்டே இருக்கிறது. சுவாசகோசம் என்ற நுரையிரலில் உள்ள செல்களை பரப்பி வைப்போம் என்றால் அதன் பரப்பளவு நாற்பது சதுரடிக்கும் அதிகமாக இருக்கும். 

நம் தோலின் ஒவ்வொரு சதுர அங்குலத்திற்கு மூவாயிரத்தி ஐந்நூறுக்கு அதிகமான துளைகள் உள்ளன. அந்த துளைகள் வழியாகவே காற்று நம் உடம்பிற்குள் சென்று வருகிறது. நம் உடம்பில் ஓடுகின்ற வியர்வை குழாய்களை நீட்டி நிமிர்த்தி பிடித்தோம் என்றால் அறுபது கிலோ மீட்டருக்கு அதிகமான தூரம் பிடிக்கலாம். ஆக்சிஜன், ஹைட்ரஜன், கார்பன், நைட்ரஜன், மக்னீசியம், கால்சியம், சல்பர், க்ளோரின். சோடியம், அயர்ன், பொட்டாசியம், சிலிக்கான் போன்ற மூல பொருள்களால் நம் உடம்பு உருவாக்க படிருக்கிறது. 

இன்று ஆயிரம் விஞ்ஞான வளர்சிகள் மனிதகுலம் கண்டுருக்கிறது. பலலட்சம் வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த விலங்குகளின் சிறிய துணுக்குகளை வைத்து அவைகளின் குணாதிசயங்களை கண்டுபிடித்து விட முடிகிறது. அப்படி பட்ட விஞ்ஞானத்தால் மேலே குறிப்பிட்ட மூல பொருள்களை வைத்து ஒரு புதிய மனித உடலை உருவாக்கி விட முடியுமா? அதிகம் வேண்டாம். ரத்தத்தின் மூல பொருள்களை இணைத்து ஒரே ஒரு துளி ரத்தத்தையாவது நம்மால் உருவாக்க முடியுமா? நிச்சயம் இயலாது. 

இன்னும் ஆயிரம் வருடம் சென்றாலும் இறைவன் படைப்பில் உள்ள ரகசியங்களை மனிதனால் புதிது புதிதாக கண்டுபிடிக்க முடியுமே தவிர இறைவனை போல் ஒரு உயிரை சிருஷ்டித்து விட முடியாது. அப்படி பட்ட இறைவனால் நமக்கு கொடுக்கப்பட்ட பெரும் வரம் என்ற உடலை சாபமாக நினைப்பதும் அப்படி அதை பாவிப்பதும் கண்களை திறந்து கொண்டு பள்ளத்தில் விழுவதற்கு சமமானது. 

பூமியில் நல்ல வண்ணம் வாழ்வதற்கு ஒழுக்கம் தர்மம் சட்டம் அன்பு எல்லாம் அவசியம் தான் ஆனால் அவைகளை நடைமுறை படுத்துவதற்கு உடம்பு என்பது அதிக அவசியமாகும். இன்று அந்த உடம்பு பலவகையாலும் கெட்டு போய் கிடக்கிறது. நம்மால் நம் செயலால் ஒருபகுதி கெடுகிறது என்றால் சுற்றுப்புற சூழலால் சீதோஷ்ண நிலையால் ஒருபகுதி கெடுகிறது. அப்படி கெடாமலும் கெடுதியிலிருந்து மீட்டெடுக்கவும் தெரிந்தால் மட்டுமே நமது வாழ்வை அர்த்தபடுத்தி கொள்ளவும் முடியும். இறைவனோடு இரண்டற கலக்கும் இறுதி லட்சியத்தை அடையவும் முடியும். தொடரும்...


Contact Form

Name

Email *

Message *