( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........!! click here )வரும் ஞாயிறு அன்று அமிர்த தாரா தீட்சை அளிக்கப்படுகிறது appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846 

Share !
This Post

உஜிலாதேவி பதிவுகளை
மின்னஞ்சலில் பெற

நடப்பானா என் மகன்...?


    குருஜி அவர்களுக்கு பணிவான வணக்கம் நான் மதுரையிலிருந்து எழுதுகிறேன் எனக்கு திருமணமாகி ஐந்து வருடத்திற்கு பிறகு ஒருமகன் பிறந்தான் அவன் பிறக்கும் காலம் வரையில் நானும் என் மனைவியும் உற்றார் உறவினரிடம் பெற்ற விமர்சனங்கள் அதிகம் இவனுக்கு ஆண்மை இல்லை அதனால் குழந்தை இல்லை என்றும் இவளுக்கு மலட்டு தன்மை இருக்கிறது என்றும் வார்த்தையில் சொல்லமுடியாத அளவிற்கு எங்களை பற்றி தாறுமாறாக பேசினார்கள். திருமணம் மஞ்சள்நீர் போன்ற உறவுக்காரர்களின் விழாக்குக்கு செல்லும் போதெல்லாம் எங்கள் இருவரையும் ஒதுக்கியே வைப்பார்கள். 

இந்த நிலையை மாற்ற இறைவன் அருளால் மகன் வந்து பிறந்தான் அவனது பிறப்பு எங்களுக்கு கொடுத்த ஆனந்தம் என்பது வர்ணிக்க முடியாத இமயமலை போன்றது. நாங்கள் இருவரும் ஆனந்த கூத்தாடினோம் என்றே சொல்லலாம். இதுவரை எங்களை ஒதுக்கி வைத்து வேடிக்கை பார்த்த அனைவருமே வாயடைத்து போனார்கள். நாங்கள் அடைந்த அளவுக்கதிகமான சந்தோசமோ அல்லது மற்றவர்களின் பொறாமை பெருமூச்சோ என்னவென்று தெரியவில்லை ஆழ்ந்த மயக்கத்திலிருந்து சுயநினைவிற்கு வந்தவன் தலையில் கல்லை போட்டதை போல் பெரிய துயரம் எங்கள் தலையில் விடிந்தது.

இரண்டு வயது வரையில் தவழ்ந்து தளிர்நடை பயின்று பிஞ்சு கால்களால் ஓடி ஆடி எங்களை மகிழ்வித்த என் அன்பு மகனுக்கு மூளைக்காச்சல் வந்தது. பதறி போன நாங்கள் உடனடியாக மருத்துவமனையில் சேர்த்தோம். என் வருவாய் சொற்பம் என்றாலும் கடனுடன் வாங்கி தீவிரமாக சிகிச்சை செய்தோம். நல்ல வேளை அவன் உயிரை காப்பாற்ற முடிந்தது. ஆனால் அவனால் எழுந்து நடக்க முடியாத அவல நிலை ஏற்பட்டு விட்டது. இப்போது அவனுக்கு பதினைந்து வயது முடிய போகிறது. இதுவரை அவனால் நடக்க முடியவில்லை இருப்பினும் அவன் நல்ல அறிவாளி இந்த சிறிய வயதிலேயே தமிழ் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் சிறந்த புலமை பெற்றவனாக இருக்கிறான். 

எங்களுக்கு ஒரே ஒரு ஆசை மட்டுமே உண்டு நானும் என் மனைவியும் இருக்கும் வரையில் என் மகனை கண்ணை போல் காப்பாற்றுவோம் எங்கள் காலத்திற்கு பிறகு அவன் எந்த வகையிலும் கஷ்டப்பட கூடாது. சராசரி மனிதர்களை போல் அவன் வாழ வேண்டும். அவன் ஜாதகத்தை பலரிடம் காண்பித்துள்ளேன் அனைவருமே அவன் நடப்பான் வாழ்வில் நல்ல முறையில் இருப்பான் என்று சொல்கிறார்கள். அவர்கள் குறிப்பிடும் காலகெடுவை கணக்கு செய்த வண்ணமே இதுவரை காத்திருக்கிறோம். எங்களுக்கு ஏமாற்றம் மட்டுமே விடையாக இன்றுவரை உள்ளது. 

குருஜி அவர்கள் என் மகனின் ஜாதகத்தை பார்த்து அவன் நடப்பானா? மாட்டானா? என்பதை தெளிவாக சொல்லவும். நடப்பான் என்றால் எப்போது நடப்பான் எப்படி நடப்பான் என்பதையும் மாட்டான் என்றால் அவன் எதிர்காலத்திற்கு நாங்கள் என்ன செய்ய வேண்டும். என்பதையும் ஒளிவு மறைவு இல்லாமல் சொல்லிவிட வேண்டுகிறேன். நீங்கள் சொல்வதையே இறுதி முடிவாக ஏற்றுக்கொண்டு மன ஆறுதல் அடைகிறோம். பிள்ளையே இல்லை என்று வருந்துவதை விட பேர் சொல்ல ஒரு மகனாவது இருக்கிறானே என்ற ஆறுதல் மட்டும் எங்களுக்கு இருந்தால் அது போதும். 

இப்படிக்கு 
நாராயணசுவாமி , மதுரை மருத்துவ கலையை கரைகண்ட மருத்துவனாக இருந்தாலும் தனது அபரீதமான திறமையால் பல நோய்களுக்கு மருந்துகளை உருவாக்கிய மருத்துவ அறிஞனாக இருந்தாலும் கடவுளின் சக்திக்கு முன்னால் அவரது சன்னிதானத்திற்கு முன்னால் சிறிய தூசுக்கு கூட சமமாக மாட்டான். இந்த நோயை நான் குணபடுத்தி விடுவேன் என்று சொல்பவனும் இதை என்னால் மட்டுமே குணபடுத்த முடியும் என்று சவால் விடுபவனும் இறைவனின் சக்தியை அறியாத மூடன் என்றே சொல்ல வேண்டும். 

இதை போல ஈஸ்வரனின் திருவுள்ளத்தை இது தான் என்று அறிந்து இன்னது தான் நடக்குமென்று உணர்ந்து முன்கூட்டியே அறுதியிட்டு சொல்ல கூடிய தீர்கதரிசியும் ஜோதிடனும் கிடையவே கிடையாது. காரணம் ஜோதிடன் என்பவன் கடவுளின் தீர்மானத்தை ஒரே ஒரு பங்கும் மட்டும் அறிந்து சொல்ல கூடிய தகுதி உடையவனாக இருக்கிறானே தவிர முழுமையாக அறியும் தகுதி அவனுக்கு குண்டுமணி அளவு கூட இல்லை 

எனவே உங்கள் மகனை பொறுத்தவரை என்னுடைய கணிப்பு தான் இறுதியானது உறுதியானது என்று நீங்கள் நம்ப வேண்டிய அவசியமில்லை காரணம் கடவுள் நினைத்தால் ஒரு நொடியில் எல்லாம் தலைகீழாக மாறிவிடும். என்னை என் வார்த்தையை நம்புவதை விட கடவுளை நம்புவதே மிக சிறந்தது. 

ஊனமான ஒரு பிள்ளையை பெற்றவர்களுடைய மனநிலை என்ன பாடுபடும் என்பது நான் பலர் சொல்லி அறிந்தவன் அல்ல என் சொந்த வாழ்க்கையில் அறிந்ததாகும். அரகண்டநல்லூர் பேரூராட்சியில் துப்புரவு தொழிலாளியாக பணியாற்றிய பரசுராமர் என்பவர் என்னிடம் அடிக்கடி ஒன்று சொல்வார். நீ பிறந்த செய்தி கேட்டதும் உன் அப்பா அடைந்த சந்தோசம் இன்னதென்று சொல்ல முடியாது. ஐந்து பெண் பிள்ளைகளுக்கு பிறகு ஒரு ஆண்குழந்தையாக உன்னை பெற்றதும் அவர் வாழ்வில் கிடைப்பதற்கறிய பேரு பெற்றதாக நினைத்தார். உன் பிறந்த நாளுக்கு கடைதெருவில் உள்ள அனைவருமே அழைத்து விருந்து வைத்து பரிசுகொடுத்து மகிழ்ந்தார். 

ஆனால் அவர் நீ உடல் நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்க பட்டவுடன் உயிரை இழந்த சடம் போல ஆகிவிட்டார். தன்மகனால் நடக்க முடியாது. பிறர் துணையின்றி இயங்க முடியாது என்பது தெரிந்தவுடன் எதற்குமே கலங்காத அந்த பெரிய மனுஷன் கண்ணீர் விட்டு கலங்கியதை முதல் முறையாக கண்டேன் என்று அடிக்கடி சொல்வார். என் உறவினரில் ஒருவர் உன் அப்பா உனக்கு செலவு செய்த பணத்தை வைத்திருந்தால் மூன்னூறு ஏக்கர் நிலத்திற்கு மேல் வாங்கலாம் என்பார் அது உண்மை தான் நான் பிறக்கும் வரையில் ஆர்வத்தோடு வியாபாரம் செய்த அவர் அதன் பிறகு வியாபாரத்தை ஒழுங்காக நடத்தவே இல்லை சம்பாதித்து என்ன ஆகபோகிறது என்று பேசுவதை கேட்டுருக்கிறேன்.

அன்று எனது தந்தையார் இருந்த அதே மனநிலையில் இன்று நீங்கள் இருப்பதை உணர்கிறேன். ஆனாலும் நீங்கள் இனி முடியாது ஆகாது எல்லாம் முடிந்துவிட்டது என்று வருத்தப்பட வேண்டிய அவசியமில்லை என்று நினைக்கிறேன். நமது மருத்துவ சாஸ்திரம் மனித உடல் இருபத்தி ஐந்து வயது வரை தன்னுடைய சூழலை மாற்றி அமைக்கும் வல்லமை பெற்றிருப்பதாக சொல்கிறது. அதாவது இதே போன்ற நரம்பு மற்றும் எலும்பு சார்ந்த நோய்களுக்கு இருபத்தி ஐந்து வயது வரையில் சிகிச்சை செய்யலாம் பயன் கிடைக்கும் என்பதே பொருளாகும். எனவே உங்கள் மகனின் உடல் ஆரோக்கியம் மேன்மையடையும் என்பது என் கருத்தாகும். 

மேலும் ஜிநேந்திர மாலை என்ற மிக பழைய ஜோதிட நூல் பனிரெண்டாம் பாவத்தில் சனியிருக்க லக்கினத்தில் ராகு இருக்க பிறந்த குழந்தைகள் அங்ககீனம் உடைய குழந்தைகளாகவே இருப்பார்கள் அவர்களின் ஆயுள்காலம் வரையிலும் உடல்குறைபாடு வெளியில் தெரியும் வண்ணம் இருக்குமென்று சொல்கிறது. உங்கள் மகனின் ஜாதகமும் ஏறக்குறைய அப்படியே இருக்கிறது மேலும் வராகமிகிரரின் ஜோதிட நூல் உடல்பாகமான இடுப்பை குறிக்கும் ஏழாவது இடத்தில் செவ்வாய் அல்லது சந்திரன் இருந்தால் மனிதனின் இடைபகுதி பாதிப்படையும் கூடவே கேது இருந்தால் முறையான சிகிச்சை மூலம் ஓரளவு நிவாரணம் பெறலாம் என்றும் சொல்லபட்டிருக்கிறது. 

இதன் அடிப்படையில் இன்னும் இரண்டு வருடத்தில் உங்கள் மகன் உடல் நிலையில் சிறிய முன்னேற்றம் ஏற்படும் என்றே தோன்றுகிறது. அதாவது அவன் வேலையை அவனே பார்த்துகொள்ளும் அளவிற்கு முன்னேற்றம் அடைவான் என்று சொல்லலாம். எனவே நீங்கள் மனதை தளரவிடாமல் ஆயுர்வேத சிகிச்சையை அவனுக்கு கொடுங்கள் இடுப்பு பகுதியில் எண்ணெய் மசாஜ் தொடர்ந்து செய்தால் கண்டிப்பாக முனேற்றம் கிடைக்க வாய்ப்புள்ளது. கடவுளை நம்புகிற எவரையும் இறைவன் கைவிடுவது இல்லை ஒரு ஜன்னலை அடைத்தால் நமக்காக பல கதவுகளை திறந்து விடுவான்.


+ comments + 3 comments

இதை படித்து மனதுக்கு மிகவும் வேதனையாக உள்ளது, சுவாமி. இந்த சிறுவன் கம்ப்யூட்டர் படிப்பது மிகவும் நல்லது...அதற்க்கு எதாவது உதவி, வழிகாட்டல் தேவைப்பட்டால், உங்கள் மூலமாக நான் அதை செய்ய தயாராக இருக்கிறேன்.

Guruji.......Neengal pathil solluya vetham mehavum arumai.

Thank you Guruji.

RENGARAJ.A
QATAR

Guruji.......Neengal pathil solluya vetham mehavum arumai.

Thank you Guruji.

RENGARAJ.A
QATAR


Next Post Next Post Home
 
Back to Top