Store
  Store
  Store
  Store
  Store
  Store

மார்கழி மாதம் கடவுளா...?


    லகத்தில் உள்ள ஒவ்வொரு இன மக்களுக்கும் தனித்தனியான காலவரையறைகள் உண்டு அதாவது அவர்களுக்கென்று தனியான வருடம் மாதம் தேதி போன்றவைகள் இருக்கின்றன. ஆனால் அவர்களில் யாரும் குறிப்பிட்ட ஒரு தினத்தையோ மாதத்தையோ கடவுளாக சொன்னது இல்லை புனித நாட்களாக சில மாதங்களை கருதுகிறார்களே தவிர மாதத்தை கடவுளாக யாரும் சொல்லவில்லை ஆனால் ஹிந்து மக்களான நாம் ஒரு மாதத்தை புனித மிக்கதாக மட்டுமல்ல கடவுளாகவே சொல்கிறோம். நமது ஹிந்து மதத்தின் ஆதார புனித நூலான பகவத் கீதையில் கடவுளாகிய கண்ணபெருமான் மாதங்களில் நான் மார்கழி என்று பகிரங்கமாகவே அறிவிக்கிறார். வருடத்தில் பனிரெண்டு மாதங்கள் இருக்கின்றன. ஒவ்வொன்றுமே இறைவன் தந்தது தான் அதில் குறிப்பிட்ட ஒரு மாதத்தை பற்றி மட்டும் இப்படி தனிமுக்கியத்துவம் கொடுத்து சொல்ல வேண்டிய அவசியம் என்ன? அப்படி என்ன அந்த மாதத்தில் மட்டும் தனி சிறப்பு இருக்கிறது?

    மது மதத்தில் உள்ள புராணங்கள் தேவர்களின் கால அளவை கணக்கிட்டு சொல்கிறார்கள். அதன் படி பார்த்தால் மனித கணக்குக்கு முன்னுற்றி அறுபத்தி ஐந்து நாட்கள் கொண்ட ஒருவருடம் என்பது தேவர்களுக்கு ஒரு நாளாக வருகிறது. அதாவது அவர்களின் பகல் பொழுது ஆறுமாதம் இரவு பொழுது ஆறுமாதம் கொண்டதாகும். இந்த கணக்கின் அடிப்படையில் பார்த்தோம் என்றால் தைமாதம் துவங்கி ஆனி மாதம் வரையில் உள்ள காலம் தேவர்களுக்கு பகல் பொழுதாகும். ஆடி மாதம் துவங்கி மார்கழி மாதம் வரையில் உள்ள நாட்கள் இரவு பொழுதாகும். இதில் மார்கழி மாதம் என்பது தேவர்களின் அதிகாலை நேரம்.

பொதுவாக அதிகாலை நான்கு மணிக்கு எழுந்து பழக்க பட்டவர்களுக்கு அந்த நேரத்தின் இனிமையும் அமைதியும் என்னவென்று தெரியும். ஊர் முழுவதும் ஏகாந்தமான ஒரு அமைதி நிலவும் வெப்பத்தின் கரங்களில் சிறிது சிறிதாக குளிர் தன்னை ஒப்படைத்து கொண்டு நமக்கு மிகவும் இதமான ஒரு சீதோஷ்ண நிலையை தரும். ஊர் மட்டுமல்ல நமது உள்ளமும் கூட இனம் புரியாத சாந்தியில் உலவும். அப்படி அமைதியான அந்த பொழுதில் நம் மனதில் கோபதாபங்கள் உதிக்காது. உணர்வுகள் தங்களது கொந்தளிப்பு அடங்கிய நிலையில் ஒரு நதியை போல சலசலத்து ஓடி கொண்டிருக்கும். அந்த நேரம் நம் மனது எதை பற்றி கொள்கிறதோ அதை மிக சுலபமாக விட்டு விடாது. அதனால் தான் நமது பெரியவர்கள் காலை எழுந்தவுடன் படிக்க வேண்டும் என்று சொன்னார்கள். அதிகாலையில் எழுந்து படிக்கும் பழக்கம் ஏற்பட்ட எவரும் முட்டாளாக ஆனதில்லை என்பதை நமது அனுபவத்தில் உணர்கிறோம்.

படிப்பது மட்டுமல்ல பிறர் சொல்லும் எந்த கருத்துக்களும் அந்த நேரத்தில் மிக சுலபமாக நம் மனதில் பதிந்து எளிமையாக புரிந்து கொள்ள வசதியாக இருக்கும். ஒரு விஷயத்தில் உள்ள நல்லது கெட்டதை அந்த பொழுதில் சிந்தித்தால் எளிதாக விளங்கி விடும். அந்த காலத்தில் ஊரில் பெரிய மனிதர்களை சந்திக்க வேண்டுமென்றால் அதிகாலை நேரத்தில் தான் சந்திப்பார்கள். காரணம் கொலைகார மனது கூட அதிகாலையில் பிறர் சொல்வதை காது கொடுத்து கேட்க வைக்கும். ஒன்றரை மணி நேரம் மட்டுமே அதிகாலை சுகத்தை அனுபவிக்கும் மனிதனின் மனம் இத்தகைய பக்குவத்தை பெறுமென்றால் முப்பது நாட்கள் அதிகாலை பொழுதை அனுபவிக்கும் தேவர்களின் மனம் எத்தகைய பண்பட்டதாக இருக்கும் . பிராத்தனைகள் வைக்கும் மனிதர்களை அந்த பொழுதில் தான் தேவர்கள் மனமிரங்கி கவனிக்கிறார்கள்.

தேவர்களின் பிரம்ம முகூர்த்தமான மார்கழி மாதம் உலகம் முழுவதுமே ஒரு தெய்விகமான உணர்வுகளை கிளர்ந்தெழ செய்கிறது. உணர்வுகளின் வழியாகத்தான் இறையனுபவத்தை உயிர்கள் பெறுகின்றன. நமது ஹிந்துமத சித்தாந்தப்படி உணர்வும் உணர்பவனும் உணரப்படும் பொருளும் இறைவனே ஆகும். சாதாரண உணர்வுகளே இறை அம்சம் என்றால் தெய்விகமான உணர்வுகளை பற்றி சொல்லவே வேண்டாம் அது முழுமையான இறைவனாகவே இருக்கும். இறை உணர்வை பரிபூரணமாக மார்கழி மாதம் தருகிறது அதனால் அது இறைவனாகவே கருதப்படுகிறது.



   ப்படி பட்ட மார்கழி மாதத்தை நமது ஹிந்து மக்களில் ஒருசிலர் பீடை மாதம் என்று ஒதுக்குவது ஏன்?

பொதுவாக நமது மக்களில் பலர் திரிபு விஷயங்களை உண்மையானதாக நம்ப ஆரமித்து விடுகிறார்கள். உதாரணமாக ராமேஸ்வரத்தில் குருவி கத்தாது. என்ற ஒரு பழமொழி ஆண்டாண்டுகாலமாக நிலவி வருகிறது. சிலர் இது பழமொழி என்று கூட மறந்து உண்மையாகவே ராமேஸ்வரத்தில் குருவிகள் கத்துவதில்லை என்று நினைக்கிறார்கள். முற்றிலுமாக இது தவறு. அதாவது இந்த பழமொழி ராமபாணம் குறி தப்பாது என்பதாகும் ஆனால் இது முற்றிலும் தவறுதலான அர்த்தத்தில் மக்கள் மத்தியில் இருந்து வருகிறது. இதை போல எத்தனையோ பழமொழிகள் இருப்பதை சொல்லலாம். அதே போல மார்கழி மாதம் பீடை மாதம் தவறுதலான நம்பிக்கையும் இருந்து வருகிறது.

வருஷத்தில் முன்னூற்றி அருபைந்து நாட்கள் இருக்கின்றன. இவை அனைத்தையும் சுபநாட்கள் என்று சொல்ல முடியாது. எந்த நாளில் சுபக்கிரகங்கள் நல்ல நிலையில் இருக்கிறதோ அந்த நாளை சுப நாள் என்று சொல்கிறோம். சுபநாள் என்று வருகின்ற போது அது மனிதர்களின் தனிப்பட்ட வாழ்வில் நடத்துவதற்குரிய நிகழ்வுகளுக்காகவும் சமூதாயத்தில் அனைவரும் கூடி விழாவாக கொண்டாடுவதற்காகவும் சில சுப நாட்கள் இருக்கின்ற. மனிதர்களுக்கு என்று தனியாக இருப்பது போல தெய்வங்களை நினைத்து நன்றி கடன் செலுத்தவும் பிராத்தனைகள் வைக்கவும் என்றே சில நாட்கள் இருக்கின்றன. அதே போன்ற ஒரு மாதம் தான் மார்கழி

வருஷம் முழுவதும் நமது தனிப்பட்ட வாழ்வை நடத்தினாலும் சில நாட்களாவது அதை நிறுத்தி வைத்து தெய்வ காரியங்களை செய்ய வேண்டும். அப்படி செய்யும் நாட்கள் தெய்வீக தன்மை பொருந்தியதாக மட்டும் அல்ல மனித மனதிற்கு இதம் தரக்கூடிய மனநிலையை ஒருமுகப்படுத்த கூடிய நாளாகவும் இருக்க வேண்டும். இயற்கையாகவே மார்கழி மாதத்தின் சீதோஷ்ண நிலை மனித மனதை செம்மை படுத்தும் வகையில் இருக்கிறது. அதனால் அந்த நாளில் லொளகீக காரியங்களை நிறுத்தி வைத்து பாரமார்தீக காரியங்களை மட்டுமே செய்ய வேண்டும் என்ற நியதியை நமது முன்னோர்கள் ஏற்படுத்தினார்கள். எதையுமே தவறுதலாக புரிந்து கொள்வதில் கில்லாடிகளான நாம் தெய்வகாரியங்கள் மட்டும் தான் செய்ய வேண்டும் என்று சொன்னவுடன் மார்கழி மாதத்தை பீடை மாதம் என்று சொல்ல துவங்கி விட்டோம். இது நம் அறிவின் குறைபாடே தவிர சாஸ்திரத்திலோ மாதத்திலோ குறைபாடு இல்லை.


மார்கழி மாதத்தில் தெய்வ காரியங்கள் மட்டுமே செய்ய வேண்டும் என்ற நியதி வகுத்த நமது முன்னோர்கள் அக்காலத்தில் ஆலயங்களை மட்டுமே அழகு படுத்த சொல்லி இருக்கலாமே? அதை விடுத்து இல்லங்களையும் கோலம் முதலியவற்றால் அழகுபடுத்த சொல்ல வேண்டிய அவசியம் என்ன?

 
  தெய்வம் ஆலயங்களில் மட்டும் தான் இருப்பதாக யார் சொன்னது? தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான் தூய ஜோதி எங்கள் நாராயணன் என்பது மார்கழி மாதத்தில் பாடப்படும் மிக அழகான பாடல் அல்லாவா? அதன் அடிப்படையில் இல்லங்களிலும் நாராயணன் இருக்கலாமே? ஒவ்வொரு இந்துவின் வீடும் அவன் தர்மப்படி நடந்தால் கோவிலாகவே இருக்கும் என்பதில் மாற்று கருத்து என்ன இருக்கிறது? எனவே தான் அந்த காலத்தில் ஆலயங்களை மட்டுமல்ல வீடுகளையும் கோவில்களை போல அலங்காரம் செய்ய வேண்டுமென்று நமது பெரியவர்கள் சொன்னார்கள்.

மார்கழி மாத அலங்காரத்தில் மிக முக்கிய பங்கு வகிப்பது கோலங்களாகும். கோலங்கள் என்றவுடன் அது மாவினால் வரையப்படும் வெறும் படங்கள் என்று யாரும் நினைக்க வேண்டாம் கோலங்களில் உள்ள புள்ளிகள் நமது வாழ்க்கையில் அழிக்கவே முடியாத விதியை குறிக்கும். அதை சுற்றி வரும் கோடுகள் நமது செயல்பாட்டை குறிக்கும் செயல்பாடு என்ற கோடுகள் ஒழுங்கு மாறாமல் வந்தால் விதி என்ற புள்ளி அந்த கோட்டிற்குள் அடங்கி விடும். செயல்பாடுகள் தாறுமாறாக போனால் புள்ளி தனியாக நின்று வாழ்க்கையை அலங்கோலமாக்கி விடும். இதுவே கோலத்தின் தத்துவம்.

தத்துவத்தை மட்டும் சொல்வதல்ல கோலம் அது தானத்தையும் காட்டுகிறது. அரிசி மாவினால் போடப்படும் கோலங்களை எறும்பு உள்ளிட்ட சிறிய உயிரினங்கள் உண்டு களிக்கின்றன. ஒரு ஹிந்துவின் வாழ்வில் அதீதி சேவை என்பது மிகவும் முக்கியமானது. அதீதி என்றால் மனித விருந்தினரை மட்டும் குறிப்பது அல்ல. கண்ணுக்கு தெரியும் தெரியாத உயிரினங்களை கூட அதீதியாக கருதவேண்டும். அப்படி கருதி பூதயாகம் என்ற உயிர்சேவை செய்வதே ஹிந்துவின் தலையாய கடமையாகும். பெரிய அளவில் தானங்கள் செய்ய வசதி இல்லாதவர்கள் கூட வீட்டு வாசலில் கோலம் போடுவதால் தனது அதீதி சேவை கடமையை திறம்பட செய்யலாம். இதில் சுகாதார காரணம் கூட இருக்கிறது. வீட்டுக்கு வெளியே வாசலில் கோலம் போட்டு எறும்புகளை அங்கே போகும்படி செய்து விட்டால் அவைகள் வீட்டுக்குள் வந்து நமக்கும் தொல்லை தாராது நம்மால் அவைகளுக்கும் தொல்லை இருக்காது. இப்படி சகல விஷயங்களையும் ஒருங்கே செய்வது தான் மார்கழி மாதத்து தனி சிறப்பு.



கோலங்களில் உள்ள தத்துவம் புரிகிறது ஆனால் அந்த கோலத்தில் சாணம் வைத்து சில மலர்களை வைக்கிறார்களே அது அலங்காரத்திற்கு மட்டுமா? அல்லது அதற்கும் ஒரு காரணம் இருக்கிறதா?

   காரணம் இல்லாத காரியங்களே ஹிந்து சம்பிராதயத்தில் இல்லை என்று சொல்லலாம். பெண் குழந்தைகள் வயதுக்கு வந்து விட்டால் ஊராரையும் உறவினரையும் அழைத்து மஞ்சள் நீராட்டுவது எதற்காக? எனது மகள் பருவத்திற்கு வந்து விட்டாள் இந்த சமூதாயத்தில் இனி அவள் குழந்தை அல்ல தனது பங்கு பணியை சமூகத்திற்கும் குடும்பத்திற்கும் ஆற்றக்கூடிய தகுதி அவளுக்கு இருக்கிறது என்று அனைவரும் அறிய சொல்வதற்காகத்தான். அதே போல இறப்பு வீடுகளில் வாசலில் நெருப்பு வைப்பதற்கும் மேளதாளங்கள் அடிப்பதற்கும் காரணங்கள் உண்டு. நமது வாழ்வின் ஒவ்வொரு நிகழ்வுக்குமே சடங்குகளை சொன்ன நமது மதம் அதற்கான விஞ்ஞான பூர்வமான சமூகரீதியிலான காரணங்களை மனதில் வைத்தே சொல்கிறது.

பொதுவாக கோலங்களில் பூசணி பூ, செம்பருத்தி பூ போன்றவைகளே அதிகமாக வைக்க படும் மலர்களாகும். அனைவர் வீட்டு கோலங்களிலும் செம்பருத்தி பூ இருக்கும் ஆனால் சென்ற இருபது ஆண்டுகளுக்கு முன்புவரை ஒருசிலர் வீட்டு கோலங்களில் மட்டுமே பூசணி பூ இருக்கும். மற்றவர்கள் அதை வைக்க மாட்டார்கள். அதற்கு தக்க காரணம் உண்டு. நமது இந்து பெண்கள் நெற்றியில் பொட்டு வைக்காமல் இருக்க மாட்டார்கள். சாந்து பொட்டு ஒரு பெண் வைத்திருந்தால் அவளுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்று அர்த்தம். குங்கும பொட்டு வைத்தால் அவள் சுமங்கலி என்று அர்த்தம். அதே சுமங்கலி விபூதி பூசி அதன் மேல் குங்குமத்தை வைத்தால் அவள் இல்லறத்தில் இருந்தாலும் கணவனோடு உடல் சம்மந்தம் இல்லாமல் வாழ்கிறாள் அதாவது வயதான சுமங்கலி என்பது பொருளாகும்.

அதே போலவே யார் வீட்டு வாசலில் கோலத்தில் பூசணி பூ வைக்க பட்டிருக்கிறதோ அந்த வீட்டில் திருமணம் நடக்காமல் கன்னிபெண் ஒருத்தி விவாகத்திற்காக காத்திருக்கிறாள் என்பது பொருளாகும். இன்றைய நிலையில் மக்கள் அந்த விஷயங்களை எல்லாம் தங்களது அறியாமையாலும் அசட்டையாலும் மறந்து விட்டார்கள் அதனால் கோலங்களில் இன்ன பூ தான் வைக்க வேண்டும் என்ற விதி இல்லாமல் கையில் கிடைத்த மலர்களை எல்லாம் வைக்கிறார்கள். அதை விட கொடுமை நமது பெண்களில் பலருக்கு இப்போது கோலம் போடுவதற்கே தெரிவதில்லை கடைகளில் வாங்கிய கோல அட்டைகளை வாசலிலும் பூஜை அறையிலும் ஒட்டி வைத்து விடுகிறார்கள். சிலர் தினசரி கோலம் போடுவதற்கு சோம்பேறிதனம் பட்டு ரசாயன கலவைகளால் கோலங்களை வரைந்து வைத்து விடுகிறார்கள். இது முற்றிலும் தவறுதலான நடைமுறையாகும். தற்போது நமது பெண்களின் மனது மீண்டும் ஆன்மீக பாதையில் சிறிது திரும்புவதாக தெரிகிறது. அவர்கள் இந்த நடைமுறையை மாற்றி மாக்கோலம் போட்டால் நாட்டுக்கும் நல்லது குடும்பங்களுக்கும் நல்லது.




https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiCAwzxeRuGcMhVu5ZS5871oEWWb56mzihiKmW0q9kzYye_GRgiKYx-KXOBIXGb2N1A3VSUnJ3-_LElDG1n_-sG8w3cCR4s_zT60ZuvEZSZ6aQZac-LgAT-lBuGTaD0dE-K1HjfeeKSBXQ/s1600/sri+ramananda+guruj+3.JPG

Contact Form

Name

Email *

Message *