Store
  Store
  Store
  Store
  Store
  Store

விசுவாமித்திரர் தமிழரா...?



  நான் இலங்கையில் வசிக்கும் ஒரு மாணவன் .கடந்த சில தினங்களாக தங்களுடைய உஜிலதேவி இணையதளத்தை பார்வையிட முடிந்தது .அதில் இந்து மத வரலாற்று தொடரை வாசிக்க முடிந்ததில் பெரும் மகிழ்ச்சி அடைந்தேன். ஆயினும் என்னால் 17 வது தொடர் வரை மட்டும் தான் வாசிக்க முடிந்தது. இவற்றில் எனக்கு சில சந்தேகங்கள் உள்ளது. அதை தங்களிடம் நிவர்த்தி செய்யவே இந்த இ -மெய்லை அனுப்புகிறேன். தயவு செய்து எனக்கு சரியான பதிலை விரைவாக தருவீர்கள் என எதிர்பார்கிறேன்.

1. வேத காலத்திற்கு முன்பே சிவ வழிபாடு இருந்தது என தாங்கள் குறிப்பிட்டு இருந்தீர்கள். அப்படி என்றால் வேதங்களுக்கு முன்பே ஆகமம் தோன்றியதா? வேதம் தான் முதலில் தோன்றியதா ?
2 . மந்திரங்கள் முதலில் தோன்றியது சமஸ்கிருதத்திலா ? இல்லை தமிழிலா ? 
3 . சமஸ்கிருதத்தில் என்றால் சமஸ்கிருதம் தோன்றும் முன் மந்திரங்கள் இருக்கவில்லையா ? 
4. காயத்திரி மந்திரம் தமிழிலும் உள்ளதே அப்படி என்றால் முதலில் மந்திரங்கள் தமிழில் தானே உருவாகியிருக்க வேண்டும் .காரணம் விசுவாமித்திரர் தமிழர் தானே .


   இன்னும் நிறைய சந்தேகங்கள் இருக்கின்றன குருஜி அவற்றை அடுத்த முறை கேட்கிறேன் .தயவு செய்து தாங்கள் எனக்கு சீக்கிரமாக பதில் தருவீர்கள் என ஆவலோடு காத்திருக்கிறேன் .

எனது மடலை உதாசீனபடுத்தாது பதில் தாருங்கள் .

இப்படிக்கு, 
உண்மையுள்ள உஜிலதேவி வாசகன் .
ச .சம்பத் .


   ந்துமத வரலாறு என்ற தொடர் பதிவை எழுத ஆரம்பிக்கும் போது இதில் அலெக்ஸ்சாண்டர் வந்தார் அசோகர் வென்றார் சாணக்கியர் சபதம் செய்தார் என்பது போன்ற நிகழ்வுகளை எழுதபோவதில்லை சிந்தித்து பார்ப்பதற்கே மிகவும் கடினமான வேத வேதாந்த சமய தத்துவங்களை எழுத போகிறோம் இது வாசகர்கள் மத்தியில் வரவேற்ப்பை பெறுமா? அல்லது இணையதள பக்கங்களிலேயே முடங்கி போய்விடுமா? என்று நான் யோசித்ததுண்டு ஆனால் அதை எழுத துவங்கியவுடன் அதற்கு கிடைத்த வரவேற்ப்பும் விமர்சனங்களும் உண்மையாகவே என்னை மகிழ்வடைய செய்தது. காரணம் இதை பாராட்டுபவர்களும் முழுமையாக படித்த பிறகே பாராட்டுகிறார்கள் எதிர்மறையாக விமர்சனம் செய்பவர்களும் படித்த பிறகே விமர்சனம் செய்கிறார்கள். பாராட்டுகிறார்கள் எதிர்க்கிறார்கள் என்பது முக்கியமல்ல இத்தனை பேர் படிக்கிறார்கள் என்பது மிகவும் முக்கியம் அதற்காக நான் இறைவனுக்கு நன்றி செலுத்த வேண்டும். 

இன்றைய தலைமுறையை சேர்ந்தவர்களுக்கு நமது பாரம்பரிய சின்னங்களின் மீதும் தத்துவங்களின் மீதும் அவ்வளவாக அக்கறை இல்லை என்று எல்லோரையும் போலவே நானும் நினைத்திருந்தேன் ஆனால் இந்த தொடர் பதிவை படித்து விட்டு என்னோடு கருத்து பரிமாறி கொள்ளும் பலநூறு இளைஞர்களை காணும் போது இந்த நாடும் இந்த நாட்டு பண்பாடும் எத்தனை ஆழி பேரலைகள் தாக்கினாலும் அழியாது கற்கோட்ட போல நிமிர்ந்து நின்று எதிர்த்து நிற்கும் என்பது கண்கூடாக தெரிந்தது. உண்மையை சொல்வது என்றால் நாமும் உலகில் மனிதனாக பிறந்தோம் நாலுபேரை போல உணவு உண்ணுகிறோம் ஆடைகளை மாற்றுகிறோம் வீண் ஜம்பம் பேசுகிறோம் கடேசியில் ஒருநாள் காலன் அழைக்கும் போது சொல்லாமல் கொள்ளாமல் போய்விடுகிறோம். இதை போலதான் நமது வாழ்க்கையும் போகபோகிறது நிலையாக உறுதியாக அனைவருக்கும் பயன்பட கூடிய எந்த காரியத்தையும் நம்மால் செய்ய முடியுமா? அதற்கு இறைவனின் கருணை கிடைக்குமா? என்று நினைத்ததுண்டு அந்த நினைப்பு இந்த இந்துமத வரலாற்று தொடரை எழுதுவதனால் இது நிச்சயம் நம் பெயரை ஓரளவாவது நிலை நிறுத்தம் என்ற நம்பிக்கை எனக்குள் ஏற்பட்டுள்ளது.

இதுவரை நீங்கள் பதினேழு தொடர்களை மட்டும் படித்திருப்பதாக எழுதியிருக்கீர்கள் இந்த பதிவு நாற்பத்தி மூன்றையும் தாண்டி சென்றுகொண்டிருக்கிறது என்பதை உங்களுக்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன். இப்போது இந்து மதத்தில் உள்ள ஒரு பிரிவான சீக்கிய மதத்தை பற்றி எழுதி வருகிறேன். இன்னும் பல பிரிவுகளை பற்றி எழுத வேண்டியது இருக்கிறது அவைகளையும் பொறுமையோடு படித்து வாருங்கள் அவ்வபோது உங்கள் கருத்துக்களை எனக்கு தெரிவியுங்கள் காரணம் ஒரு சாதாரண கல் சிலையாக மாறுவதற்கு உளி எப்படி அவசியமோ அப்படியே என்னை போன்ற சாதாரணமான எழுத்தாளர்களுக்கு உங்களை போன்ற நல்ல வாசகர்களின் அறிவுரையும் அனுசரணையும் கண்டிப்பாக தேவை அதை உங்களிடமிருந்து நிறையவே நான் எதிர்பார்க்கிறேன். 

நீங்கள் சிவ வழிபாடு என்பது வேதகாலத்திற்கு முற்பட்டிருந்தே இருக்கிறது அதனால் வேதங்களை விட ஆகமங்கள் காலத்தால் முற்பட்டதா என்ற முக்கியமான கேள்வியை கேட்டிருக்கிறீர்கள். ஒரு விஷயத்தை தெளிவாக புரிந்து கொள்ளுங்கள் வடக்கு தெருவிலிருந்து தெற்கு தெருவிற்கு போவதற்கு புதியதாக ஒரு பாதையை நாம் நடந்து உருவாக்குகிறோம் என்றால் அந்த பாதை பலகாலம் பலரால் பயன்படுத்த பட்ட பிறகே சாலை என்ற அந்தஸ்தை பெற்று தார்ச்சாலையாகவோ சிமென்ட் சாலையாகவோ மாறுகிறது. இந்த விதி சாலைகளுக்கு மட்டுமல்ல சமயங்களுக்கும் பொருந்தும். முதலில் ஒரு வழிபாட்டு முறை மக்களால் பல காலம் பின்பற்ற பட்ட பிறகே அது சாஸ்திர அங்கிகாரத்தை பெற்று ஆதாரபூர்வமான எழுத்து வடிவத்தை அடையும். அது போலவே சிவவழிபாடு இருந்த காலத்திலேயே ஆகமங்களும் இருந்திருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது சரியான அணுகுமுறை ஆகாது. 

இன்றைய வரலாற்று ஆய்வாளர்களும் இந்திய பண்பாடுகளையே வெறுத்து ஒதுக்கும் சில மேல்நாட்டு அரிதார அறிஞர்களும் கூட இந்த உலகில் முதல்முதலாக நூல்வடிவமாக தொகுக்க பட்ட ஒரு கருத்து தொகுப்பு வேதங்கள் என்று சொல்கிறார்கள். அதை மறுப்பேதும் இல்லாமல் ஒத்தும் கொள்கிறார்கள். நான்கு வேதங்களில் ரிக் வேதம் என்பதே முதலாக வந்தது எனவே மனிதனின் முதல் நூல் ரிக் வேதமே என்ற முடிவிற்கும் வந்து விட்டார்கள். பல வகையிலும் இது தான் உண்மை என்று நம் கண்ணுக்கு நன்றாக தெரிகிறது. ஒருவேளை ஆகமங்கள் மூத்ததாக இருந்து சிலர் சதி வேலையில் ஈடுபட்டு வேதங்களை முதலாவதாக நிறுத்தி விட்டார்களோ? என்று சந்தேகப்பட வேண்டிய அவசியமே கிடையாது. காரணம் வேதங்களின் மொழி நடைக்கும் ஆகமங்களின் மொழி நடைக்கும் பெரிய வித்தியாசம் இருக்கிறது. அதன் அடிப்படையில் பார்க்கும் போது வேதங்களின் மொழிநடையே முன்னது மூத்தது என்ற முடிவிற்கு வரவேண்டியது உள்ளது. எனவே லிங்க வழிபாடு வேதகாலத்திற்கு முற்பட்டதாக இருந்தாலும் கூட ஆகமங்கள் மிகவும் பிற்காலத்தில் எழுந்தது என்பதில் எந்த மாற்றமும் கிடையாது. 

உங்களது அடுத்த சந்தேகம் மந்திரங்கள் என்பது வடமொழியில் இருக்கிறதா? தமிழில் இருக்கிறதா? என்பது முதலில் மந்திரங்கள் என்றால் என்னவென்று அடிப்படையை புரிந்து கொள்ளுங்கள். மந்திரங்கள் கவிதைகளை போல ஒரு சுலோகம் அல்ல அவைகள் ஒரு ஒலி அதாவது சப்தங்களின் கூட்டு வடிவம். இன்னும் எளிமையாக சொல்வது என்றால் அவைகள் அண்ட வெளியில் உள்ள ஓசைகளின் குறியீடு. அந்த குறியீடுகளை இன்னெதென்று காட்டுவதற்கு மொழிகள் பயன்படுகிறதே தவிர மந்திரங்கள் எந்த மொழியை சேர்ந்ததும் அல்ல அதற்கும் மொழிக்கும் சம்மந்தமே இல்லை வடமொழியில் எழுதபட்டாலும் தென்மொழியில் எழுதபட்டாலும் அவைகள் மந்திரங்களே ஆகும்.எனவே மந்திரங்களை மொழி என்ற கூட்டுக்குள் அடைத்து அது இன்ன மொழிக்கு சொந்தமானது என்று சொல்வது தவறு. ஆப்பிரிக்க மொழியில் அது எழுதபட்டாலும் கூட அது அந்த மொழிக்கு சொந்தமானது அல்ல. 

உங்களது நாங்காவது சந்தேகத்தில் விஸ்வாமித்ர மகரிஷி தமிழர் என்று நீங்கள் குறிப்பிட்டிருப்பது எனக்கு விளங்கவில்லை காரணம் அவர் தமிழகத்தை சார்ந்தவர் என்று நான் எதிலும் படிக்கவில்லை அவர் கெளசிக மன்னனாக இருந்து உலகத்தை நேசிப்பவர் என்ற பொருள்பட விஷ்வாமித்ரராக மாரியதாகத்தான் நான் அறிந்திருக்கிறேனே தவிர நீங்கள் நம்புகிறப்படி நான் அறியவில்லை. எந்த ஆதாரத்தை வைத்து உங்கள் நம்பிக்கை அவர் தமிழர் என்று இருக்கிறது என்பதும் எனக்கு புரியவில்லை. ஒருவேளை உங்களிடம் அதற்கான ஆதாரங்கள் இருந்தால் சொல்லுங்கள் அது சரியா தவறா என்பதை நான் பகுத்தறிந்து ஏற்றுகொள்ள முயற்சி செய்கிறேன். மேலும் காயத்திரி மந்திரம் தமிழில் மட்டுமல்ல உலக மொழிகள் அனைத்திலும் இன்று இருக்கிறது. ஆனாலும் அது ஆதியில் எழுதப்பட்டது சமஸ்கிருதத்தில் என்பதை ஒத்துகொள்ள வேண்டும். பொதுவாக மந்திரங்கள் மகரிஷிகள் என்பவையெல்லாம் மொழிகளுக்கும் இனங்களுக்கும் ஏன் மதங்களுக்கும் கூட அப்பாற்பட்டவைகள் என்று சொல்ல வேண்டும். வானமும் பூமியும் தண்ணீரும் காற்றும் எப்படி எல்லோருக்கும் பொதுவானதோ அப்படியே இவைகளும் இவர்களும் பொதுவானவர்கள். அதை பாத்தி கட்டி பிரிக்கும் போது தேவையற்ற சச்சரவுகள் எழும்பும். 

பொதுவாக நமது மதத்தார்கள் மத்தியில் உள்ள மிகபெரிய பிற்போக்குத்தனம் என்னவென்றால் நான் வழிபடும் கடவுளே முதலானது மற்றவைகள் பின்னது என் கருத்துக்கள் மட்டுமே உயர்ந்தது மற்றவைகள் தாழ்ந்தது என்று நினைப்பதாகும். உண்மையில் மதங்களில் உயர்ந்தது தாழ்ந்தது என்று எதுவும் கிடையாது. நான் வழிபடும் தெய்வம் எனக்கு எப்படி உயர்வானதோ அதே போலவே என் பக்கத்து வீட்டு மனிதன் வழிபடும் தெய்வம் அவனுக்கு உயர்ந்தது அதை தாழ்த்தி சொல்ல எனக்கும் உரிமை இல்லை அவனுக்கும் உரிமை இல்லை. மதசண்டை என்பதே என் வழி தான் சரியானது அதை நீ ஏற்றுக்கொண்டே ஆகவேண்டும் நீயும் என் வழியிலேயே வரவேண்டும் என்று எதிர்பார்க்கும் போது நிகழ்கிறது. அவரவர் வழி அவரவர்க்கு சரியானது என்பதை ஒப்புகொண்டால் உலகத்தில் மத பூசல்கள் எப்போதுமே ஏற்படாது. ஆனால் மனிதனின் இயல்பு உண்மையை ஏற்றுகொள்ள தயங்குகிற வண்ணமே இருக்கிறது. இதன் மூலமே மனிதகுலம் பல அழிவுகளை சந்திக்கிறது. அது மாறவேண்டும். ஒரே வீட்டில் பூஜையும் நமாசும் ஜபமும் ஒற்றுமையாக எப்போது நடக்குமோ அப்போதே இந்த உலகத்தில் அமைதி தேவதை நிரந்தரமாக குடிகொள்ளும். அந்த நாள் இறைவன் அருளால் மட்டுமே வரும். அதுவரை கண்டிப்பாக வரும் என்று நம்பி காத்திருப்போம்.




Contact Form

Name

Email *

Message *