Store
  Store
  Store
  Store
  Store
  Store

ஏசுநாதரும் ஒரு சித்தரே !

இந்து மத வரலாற்று தொடர் 46

         நீரின் மேல் நடப்பதும் நிலத்தை தோண்டி தன்னை புதைத்து கொண்டு பல வருடங்கள் சுவாசத்தை அடக்கி வாழ்வதும் நெருப்புக்குள்ளே சுகமாக திரிவதும் ஆகாயத்தில் பறவைகள் போல பறப்பதும் அவ்வளவு சாமான்யமாக யாருக்கும் கிடைக்கும் வாய்ப்புகள் அல்ல அரிதிலும் அரிதான இத்தகைய அமானுஷ்யமான சாதனைகள் தங்களுக்கு கிட்டிய போதும் அது வேண்டாம் அது தேவையற்ற சுமையே தவிர நிரந்தரமான சுகத்தை தரும் சாதனம் அல்ல என்று ஸித்துக்களை சித்தர்கள் ஒதுக்குவது ஏன்? 

கங்கைகரையில் வயது முதிர்ந்த சாது ஒருவர் தியானம் செய்து கொண்டிருக்கிறார். அவர் முகத்தில் தெரிகின்ற தேஜசை பார்த்து இவர் சிறந்த மனிதர் என்ற எண்ணம் தோன்றி வேறொரு சாது இவரை பார்த்து வணங்கி நிற்கிறார். தன் எதிரே நிற்கும் சாதுவை கண்ட முதிய சாது ஐயா நீங்கள் வணங்குகின்ற அளவிற்கு நான் பெரியவன் அல்ல இடையினும் இடையன் கடையினும் கடையன் உங்களை பார்த்தால் மகா யோகி போல தெரிகிறீர்கள் எனக்கு உங்கள் ஆசிர்வாதங்களை தாருங்கள் பதிலுக்கு வணங்கி நின்றார். 

முதிய சாது தன்னை வணங்குவதை பார்த்த புதிய சாதுவுக்கு கர்வம் வந்துவிட்டது பரவாயில்லை பெரியவரே நான் உங்களை விட தவத்தில் பெரியவன் என்றாலும் வயதில் சிறியவன் அதனால் நான் உங்களை வணங்கியது பாதகம் அல்ல என்று சொன்னார். முதிய சாதுவோ ஐயா நீங்கள் எத்தனை வருடமாக தவம் செய்கிறீர்கள் அந்த தவத்தால் நீங்கள் பெற்ற நன்மைகள் என்ன? என்று கேட்டார். அதற்கு அந்த சாது நான் இருபது வருடமாக தவம் செய்து வருகிறேன் அதன்பயனாக எனக்கு தண்ணீர் மீது நடக்கின்ற சக்தி கிடைத்திருக்கிறது என்று பெருமையாக சொன்னார். 

அப்படியா மிகவும் நல்லது என்று மட்டும் சொல்லிய முதிய சாது தியானம் செய்ய துவங்கி விட்டார். இது அந்த புதிய சாதுக்கு அவமரியாதையாக பட்டது. ஒருவேளை இவர் தான் தண்ணீரின் மீது நடப்பதாக சொல்லியதை நம்பவில்லையோ என்ற ஐயப்பட்டு ஐயா பெரியவரே இதோ இந்த கங்கை நதியின் மீது நடந்து காட்டுகிறேன் பாருங்கள் என்று கூறினார். பெரியவர் வேண்டாம் என்று தடுத்தும் இவர் கேட்கவில்லை. கங்கையின் இக்கரையில் இருந்து அக்கரைக்கும் அக்கரையில் இருந்து இக்கரைக்கும் தண்ணீர் மேலே தரையில் நடப்பது போல நடந்து காட்டினார். அதன் பிறகு அந்த பெரியவரை பார்த்து இப்போதாவது நான் சொன்னது உண்மை என நம்புகிறீர்களா என்று கேட்டார். 

மெதுவாக சிரித்து கொண்ட முதிய சாது ஐயா தவ சீலரே கங்கையை கடந்து செல்ல வேண்டுமானால் ஒடகாரனிடம் காலணா கொடுத்தால் கொண்டு விட்டுவிடுவான். அதற்கு போய் இருபது வருடங்களை செலவு செய்த்திருக்கிரீர்களே அந்த நேரத்தில் இறைவனின் தரிசனம் பெற முயற்சி செய்திருக்கலாமே என்று சொன்னாராம் . இந்திய ஞானிகளும் இந்துமத சித்தர்களும் ஸித்துகளை பற்றி இதே மாதிரியான எண்ணம் கொண்டவர்களாக இருந்தார்களே தவிர அவர்களின் நோக்கமும் முயற்சியும் இறைவனை மட்டுமே அடைவதில் குறியாக இருந்தது என்று சொல்லல்லாம். 

அமானுஷ்யமான இந்த சித்திகள் ஒரு மனிதனுடைய அகம்பாவத்தையும் ஆணவத்தையும் அதிகரிக்க செய்து இறைவனை மறந்து போகும் படி செய்துவிடும்.ஸித்துகளின் மீது மிக அதிகமாக ஈடுபாடு கொண்டவன் ஸித்துகள் என்ற எல்லையோடு மட்டுமே தனது ஆன்மீக பயணத்தை நிறுத்தி கொள்கிறான். அந்த எல்லையை தாண்டி அவனால் செல்ல முடியாமல் போகிறது. எனவே பணத்தின் மீதும் காமத்தின் மீதும் எச்சரிக்கையாக இருப்பது போலவே ஸித்துகளின் மீதும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதே நமது ஞானிகளின் உறுதியான கருத்துகளாக எப்போதுமே இருந்து வருகிறது. அதனால் தான் ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா 

அந்தராயான் வதந்த்யேதா 
யுஞ்ஜதோ யோகம் உத்தமம் 
மயா ஷம்பத்ய மானஷ்ய 
கால க்ஷபண ஹேதவ 

என்று பாகவதத்தில் மிக அழகாக சொல்கிறார். அதாவது சிறந்ததாகிய பக்தி யோகத்தை பெறுபவனும் என்னிடமே ஐக்கியமாகி விடுபவனாகிய யோகிக்கு காலத்தை வீணடிக்க கூடிய இந்த ஸித்துகள் இடையுறு செய்கின்றன. என்பதே கண்ணாபெருமானின் மிக தெளிவான கருத்தாகும். ஆனாலும் ஆன்மீக பயணம் மேற்கொள்ளும் ஆரம்பகட்ட யோகிகளுக்கு ஸித்துக்கள் என்பது மிகவும் அவசியமது என யோக சாஸ்திர நூல்கள் சொல்கின்றன. அது எதற்காக? 

வெகுதொலைவில் இருக்கின்ற ஒரு ஊருக்கு நாம் பயணம் செல்கிறோம் செல்லுகின்ற வழியில் இளைப்பாறுதல் கொள்வதற்கு சில தங்கும் இடங்கள் அவசியம் தேவை அப்படி பட்ட இடங்கள் இருந்தால் தான் களைப்பில்லாத பயணத்தை மேற்கொள்ள முடியும். மேலும் நாம் செல்வது சரியான பாதை இந்த வழியில் சென்றால் நிச்சயமாக இறுதி இலக்கை அடைந்துவிடுவோம் என்ற நம்பிக்கையின் ஆறுதலும் கிடைக்கும். 

இதை வேறு வகையிலும் சொல்லல்லாம். நீதி மன்றத்தில் இருக்கின்ற வழக்கு கண்டிப்பாக வெற்றி அடைந்தே தீருமென்று நம்புவதற்கு சில சாட்சிகளும் ஆதாரங்களும் தேவை அவைகள் உறுதியானதாக இருந்தால் வழக்கின் முடிவு வெற்றி மட்டுமே என்ற எண்ணத்தில் நிம்மதியாக இருக்கலாம். இறைவனை அடைவது என்ற வழக்கு கண்டிப்பாக வெற்றிகரமாக முடியும் என்பதை காட்டுவதே சாட்சியங்கள் ஆதாரங்கள் என்ற ஸித்துகள். 

இத்தகைய ஸித்துகளை பெறுபவர்கள் இவைகள் வெறும் சாட்சியங்கள் மட்டுமே இறுதி இலக்கு அல்ல என்பதில் உறுதியாக இருக்க வேண்டும். மாறாக ஸித்துகளின் மேல் ஏற்படுகின்ற கவர்ச்சியால் அதிலேயே நின்று விடுவார்களேயானால் முக்தி என்ற இலக்கு கிடைக்காமலே போய்விடும். அவர்களும் நம்மை போன்று பிறப்பு இறப்பு என்ற சம்சார வளையத்திற்குள் கிடந்தது அல்லல் பட வேண்டி வரும். இறை தரிசனம் பெற விரும்புவதே பிறப்பற்ற நிலையை அடைவதற்கே. அதை விட்டு விடுவது சாரத்தை விட்டு விட்டு சக்கையை பற்றி கொள்வதை போல அறியாமை நிலையாகி விடும். எனவே தான் சித்தர்கள் ஸித்துகளை தடையாகவும் இடையூராகவும் சில நேரங்களில் மலமாகவும் கூட வெறுத்து ஒதுக்கினார்கள். 

உண்மையான சித்தர்கள் எவரும் தங்களிடம் உள்ள மாயா சக்திகளை பயன்படுத்தி உலகத்தவரை தன்பால் ஈர்க்க விரும்புவது இல்லை. காரணம் அவர்களுக்கு உலகத்தவரின் போக்குகளை பற்றி எந்த கவலையும் அக்கறையும் கிடையாது. மோதும் மட்டும் மோது ஓடுமட்டும் ஓடு எப்படியோ ஓடி ஆடி முட்டி மோதி கடேசியில் வரவேண்டிய இடம் இது என்று தீர்க்கமாக ஒருநாள் தெரிந்து கொள்வாய் அதுவரை பட்டறி கெட்டறி என்பதே சித்தர்களின் சித்தாந்தமாகும். 

இதை படிக்கும் போது நம்மில் பலருக்கு சித்தர்களின் ஸித்துவேலைகள் பலவற்றை கேள்வி பட்டிருக்கிரோமே சில நேரங்களில் கண்களாலும் பார்த்திருக்கிறோமே சித்தர்கள் ஸித்துக்களை வெறுக்கிறார்கள் என்றால் இதை அவர்கள் செய்து காட்ட வேண்டிய அவசியம் என்ன? என்ற கேள்வி சர்வ சாதாரணமாக தோன்றும். இந்த கேள்வியை தவறு என்று யாரும் சொல்லிவிட முடியாது. காரணம் சில மகா புருஷர்களின் வாழ்க்கையை பார்க்கும் போது அவர்கள் வாழ்வில் பல ஸித்துகள் நடைபெற்று இருப்பதை அறிய முடிகிறது. 

திருமூலர் கூடுவிட்டு கூடுபாய்ந்ததும் அருணகிரிநாதர் கிளி வடிவத்தில் வாழ்ந்ததும் நமது காலத்திலேயே ரமண மகரிஷி பல வருடங்கள் பாதாள குகையில் அன்ன ஆகாரம் எதுவும் இல்லாமல் தவம் செய்ததும் கற்பனைகளோ கட்டுகதைகளோ அல்ல ரத்தமும் சதையுமான உண்மைகள் பறந்து விரிந்த பாரத திருநாட்டில் மட்டுமல்ல நம் நாட்டை கடந்த பல பகுதிகளிலும் சித்தர்களும் சித்த புருஷர்களும் அதி அமானுஷ்யமான காரியங்கள் பலவற்றை செய்திருக்கிறார்கள் அவைகள் எல்லாம் ஏன் என்ற நியாயமான கேள்வியும் நமக்கு தோன்றும். 

அத்தகைய சித்தர்களில் ஸித்து விளையாட்டை மிக நுணுக்கமாக அணுகி ஆராய வேண்டும். இந்த ஸித்துகள் எதுவும் தங்களை முன்னிலை படுத்த அவர்களால் நிகழ்த்த பட்டது அல்ல தவிர்க்க முடியாத சில காரணங்களுக்காக உலகத்தையும் உலக மக்களையும் ஆன்மீக பயணம் என்பது போலியானது அல்ல கற்பனையான மாயா உலகத்திற்கு செல்வதும் அல்ல இந்த உலக வாழ்வானது எந்த அளவு உண்மையோ அதே அளவு உண்மையானது இறையனுபவம் என்பதை நம்மை போன்ற சாதாரண ஜனங்களுக்கு சில ஆதாரங்கள் மூலம் காட்டுவதற்காகவே ஆகும். 

பட்டினத்தார் கூட தனது வாழ்வில் பல அற்புதங்களை நிகழ்த்தி உள்ளார். தன்வினை தன்னை சுடும் ஓட்டப்பம் வீட்டை சுடும் என்று விஷம் நிறைந்த அப்பத்தை வீசி எறிந்து வீட்டு கூரையை நெருப்பு பிடிக்க வைத்ததும் ஈரமான வாழை மட்டைகளால் தாயாரின் சிதைக்கு நெருப்பு மூட்டியதையும் நம்மால் மறக்கவே முடியாது. தான் இத்தகைய சாதனைகளை செய்தேன் அதற்காக அனைவருமே என்னை கடவுளாக போற்றுங்கள் என்று எந்த இடத்திலும் பட்டினத்தார் சொல்லவில்லை மாறாக உலகம் நிலையில்லாதது பணம் பொருள் பதவி அழிய கூடியது இன்று ஓரிடத்திலும் நாளை வேறோரிடத்திலும் உருண்டு செல்ல கூடியது இவைகளை நிரந்தரம் என்று நம்பி வாழ்நாளை வீண்நாளாக ஆக்கிவிடாதீர்கள் என்று எச்சரித்து நம்மை இறைவன்பால் செல்ல வைக்கிறார் என்பதை மனதில் வைக்க வேண்டும். 

நமது நாட்டில் பொதுவாக சிவவாக்கியர், பிரம்ம முனி, இடைக்காடர், சட்டை முனி, அகப்பேய் சித்தர், தேரையர், பாம்பாட்டி சித்தர், குதம்பை சித்தர், அழுகுணி சித்தர், திருமூலர், கருவூரார், காலாங்கி நாதார், கொங்கணர், போகர், அகத்தியர், பட்டினத்தார், ரோமரிஷி, மாசித்தர் என்று பதினெட்டு சித்தர்களை பற்றி அதிகமாக பேசுகிறோம். இந்த பட்டியலில் உள்ள பெயர்கள் அல்லாது வேறுவொரு பதினெட்டு பெயர்கள் அடங்கிய பட்டியலும் இருக்கிறது அவை தவிர்த்த வேறு சில பட்டியல் கூட இருக்கிறது. பல இடங்களில் பதினெட்டு சித்தர்கள் என்ற எண்ணிக்கையும் மீறி அதிகபடியான சித்தர்கள் கூறபடுகிறார்கள். வடலூர் வள்ளலார் கூட சித்தர்கள் வரிசையில் வருகிறார். மகாகவி பாரதி கூட நானும் ஒரு சித்தன் என்று தன்னை தானே சித்தராக பிரகடன படுத்தி கொள்கிறார். 

இவைகளை பார்க்கும் போது சித்தர்களின் எண்ணிக்கை பதினெட்டு அல்ல அவைகளையும் தாண்டி எண்ணில் அடங்காத ஏராளமான அருளாளர்களை சித்தர்களின் எண்ணிக்கையில் சேர்த்து கொண்டே போகலாம் என்று தெரிகிறது. காரணம் சித்தம் அடக்கிய ஸித்துகள் பெற்ற அனைவருமே சித்தர்கள் எனும் போது சித்தர்களின் எண்ணிக்கை இவ்வளவு தான் என்று வரையற செய்து விட முடியாது. 

நீரின் மேல் நடப்பது, காற்றை கட்டளை போட்டு நிறுத்துவது, ஐந்து அப்பங்களையும் சில மீன்களையும் மட்டுமே வைத்து கொண்டு ஐயாயிரம் பேர்களுக்கு விருந்து பரிமாறியது கொடுக்க கொடுக்க குறையாத திராட்சை ரசத்தை உருவாக்கியது தனது வஸ்திரத்தை தொட்ட மாத்திரத்திலேயே நோய்கள் விலகும் படி செய்தது இப்படி நிறைய ஸித்துகளை ஏசுநாதர் வாழ்வில் கூட காண முடிகிறது. அவரால் உலகில் நிகழ்த்த பட்ட அற்புதங்களை காணும் போது அது அவர் இந்திய ஞானிகளிடம் பல காலம் தங்கி கற்ற யோக மார்க்கத்தின் வழி என்பதை நம்மால் தெளிவாக தெரிந்து கொள்ள முடிகிறது. அதன் அடிப்படையில் பார்க்கும் போது பதினெட்டு சித்தர்கள் வரிசையில் ஏசு நாதரையும் சேர்த்து கொள்ளல்லாம் என்றே நமக்கு தோன்றுகிறது. 

சித்தர்களாலும் சித்தர்களின் சித்தாந்தங்களாலும் இந்து மதத்தில் மிக சிறந்த மறுமலர்ச்சி ஏற்பட்டது என்றே சொல்ல வேண்டும். அந்த மறுமலர்ச்சியின் விளைவாகவே தொன்மை வாய்ந்த இந்துமதம் நவீன காலத்திய சவால்களை ஏற்றுக்கொண்டு வீர நடைபோட்டு வருகிறது என்று துணிந்து சொல்லல்லாம். அத்தகைய சித்தர்களின் சித்தாந்தம் என்னவென்று ஓரளவாவது அறிந்து கொண்டால் மட்டுமே இந்து மதத்தின் உண்மையான வடிவத்தை ஓரளவு தரிசனம் செய்யலாம். எனவே நமது அடுத்த பதிவில் சித்தர்களின் சிந்தனைகளை சிறிது சிந்திப்போம்.



Contact Form

Name

Email *

Message *