Store
  Store
  Store
  Store
  Store
  Store

கள்ளி செடியும் கன்னிமார் தெய்வமும்

இந்து மத வரலாற்று தொடர் 51



     ன்று நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் வாழ்க்கை முறையை இன்னும் ஆயிரம் வருடங்கள் கழித்துவரும் சமூதாயம் எப்படி அறிந்து கொள்ளும்? அவர்களுக்கென்று நாம் வைத்து போகும் தகவல்கள் ஒருபக்கம் இருந்தாலும் அதையும் தாண்டிய சில பெளதிகமான ஆதாரங்களை வைத்தே உறுதியான தகவல்களை வைத்தே அவர்களால் பெற்றுக்கொள்ள முடியும். இன்றைய நவீன விஞ்ஞானம் வளர்ந்து கொண்டே வருவதனால் நாளைய மக்கள் நம்மை பற்றி அறிந்து கொள்வதற்கு வெகுவான சிரமங்களை எதிர்கொள்ள வேண்டிய சூழல் ஏற்படாது என்று துணிந்து நம்பலாம். ஆனால் நம் காலத்திற்கு முற்பட்ட கால மக்களின் வாழ்க்கை நிலையை முற்றிலுமாக அறிந்து கொள்ள நமக்கு போதிய ஆதாரங்களும் வசதிகளும் இல்லை என்று துணிந்து சொல்லலாம். 

சரித்திர காலம் என்று அழைக்கபடுகின்ற ஐயாயிரம் ஆண்டுகளின் வரலாற்றை நாம் ஓரளவு தெரிந்து கொள்ள அன்றைய மக்கள் ஏற்படுத்திய அரண்மனைகள் சமூதாய கட்டிடங்கள் கல்லறைகள் கூட பயன்படுகிறது. இவைகளை தாண்டிய சற்று தெளிந்த கால அறிவை ஆலயங்கள் நமக்கு நிறையவே தருகின்றன. ஒரு ஆலய அமைப்பை வைத்து அக்கால மக்களின் அறிவு கூர்மையை செயல்பாட்டு திறமையை மிக நன்றாகவே நாம் தெரிந்து கொள்கிறோம். வானளவு உயர்ந்து நிற்கின்ற கோபுரங்களை பார்த்து அவைகள் கட்டபட்டிருக்கும் விதங்களை அறிந்து வியப்படைவதோடு மட்டுமல்லாது நம்மை விட நமது முன்னோர்கள் சிறப்பான வாழ்க்கை வாழ்ந்ததற்கான அறிகுறிகளையும் காண்கிறோம். 

மிக தொனமை வாய்ந்ததான சிந்து சமவெளி நாகரீகத்தில் கூட தகவல்களை தருவதில் பட்டயங்கள் முத்திரைகள் சிற்பங்கள் போன்றவைகளை விட கட்டிடங்களும் நீர் நிலைகளுமே அதிகமான உதிவி புரிகிறது. மனிதன் நாடோடிகளாக வேட்டையாடுபவர்களாக இருந்த காலத்தில் தங்களுக்கென்று நிலையான குடியிருப்புகளை ஏற்படுத்தி கொள்ளவில்லை. ஓரிடத்தில் நிலையாக இருந்து வேளாண்மை உள்ளிட்ட தொழில்களை கற்று அதன் மூலம் தனது வாழ்க்கை தரத்தை சிறிதளவு மேம்படுத்தி கொண்ட பிறகே மனிதன் முறைப்படியான வாழும் இடங்களை ஆரம்பித்தான். 

இப்படி தனக்கென்று ஒரு இருப்பிடம் இல்லாமல் வாழ்ந்த மனிதன் தனது வழிபாட்டுக்காக நிலையான ஒரு இடத்தை தேர்ந்தெடுத்திருப்பான் என்று கனவிலும் நினைக்க முடியாது. தனது பயணம் நடைபெறும் இடத்தில் அது எந்தவையான இடமாக இருந்தாலும் பருவகால சூழலை அனுசரித்தே தனது வழிபாட்டு முறையை அமைத்து கொண்டு அதற்கிசைய வாழ்ந்திருப்பான் இதனால் அவனுக்கு வழிபாடு செய்வதற்காக நிரந்தரமான இடம் தேவைபட்டிருக்காது. தனக்கென்று ஒரு வீடு மனை என்று அமைத்து கொண்ட பிறகு கூட ஆதிகால மனிதன் தனிவொரு வழிபாட்டு கூடத்தை அமைத்து கொள்ளவில்லை என்றே தோன்றுகிறது. 

மனிதனின் தொன்மையான குறிப்புகள் என்று கருதபடுகின்ற வேதங்கள் நான்கிலும் கூட ஊர் பொது மையத்தில் வழிபாடுகள் நடந்ததாக கூறபட்டிருக்கிறதே தவிர சம்பிரதாய முறைப்படி ஒரு இடத்தில் வழிபாடு நடந்ததாக தெரியவில்லை அதாவது வேதகால மக்கள் தங்களுக்கென்று ஆலயங்களை அமைத்து கொள்ளவில்லை. ஆலயங்கள் அமைப்பதில் கூட அவர்கள் அக்கறைகொள்ள வில்லை. அப்போதைய வழிபாட்டு முறையில் புகழ்பெற்று விளங்கிய மிகபெரிய யாகங்கள் துவங்கி சிறியதான ஹோமங்கள் வரை ஊர் மைதானத்தில் அல்லது வயல்வெளியில் நடந்ததாகவே தெரிகிறது. 

வேதகாலத்திற்கு பிறகு வருகின்ற இதிகாச காலங்களிலும் புராண காலங்களிலும் மக்கள் கூட்டம் கூட்டமாக சென்று ஞானிகளையும் முனிவர்களையும் தரிசனம் செய்தார்கள் என்பதை அறிய முடிகிறதே தவிர ஆலயங்கள் அமைத்தார்கள் அதற்கென்று தனிதிருவிழாக்கள் கொண்டாடினார்கள் என்பதை காணமுடியவில்லை. இதிகாசங்களில் கூட அழகான அரண்மனைகள் வீடுகள் பூங்காக்கள் நீர்நிலைகள் என்பவைகள் மன்னர்களாலும் மக்களாலும் உருவாக்கப்பட்ட தகவல் இருக்கிறதே தவிர ஆலயங்களை எழுப்பியதாக எந்த செய்தியும் பதிவு செய்யப்படவில்லை. 

இதிகாச காலத்திலும் அதற்கு பிறகு வந்த சரித்திர காலத்திலும் சிறந்த வள்ளலாக கருதபடுபவன் மகாபாரத கர்ணன் இவன் செய்யாத தான தர்மங்கள் இல்லை ஏற்படுத்தாத தர்மசாலைகள் இல்லை. இவனை பார்த்தே பல மன்னர்களும் வணிகர்களும் தானம் கொடுப்பதில் ஆர்வம் காட்டினார்கள். ஆபத்தான நேரத்தில் ஒரு சிறிய வெல்ல துண்டை பரிசளித்தவனை கூட தர்ம பிரபு கர்ணனை போல இருக்கிறான் என்றே வறியவர்கள் வாழ்த்துவதிலிருந்து கர்ணனின் கொடை தன்மை என்னவென்று நமக்கு தெரியும். அத்தகைய சிறந்த வள்ளலான கர்ணன் கூட தனது வாழ்நாளில் எங்காவது ஒரு மூலையில் ஒரு கோவிலை கட்டினான் என்ற குறிப்பை கானமுடிய வில்லை. 

இன்றுவரையிலும் உதாரான அரசாங்கமாக திகழ்வது ராமனின் அரசாட்சி காலமாகும். இந்த நாட்களில் நாடு முழுவதும் தர்மங்கள் மட்டுமே நிகழ்ந்ததாக சொல்லபடுகிறது. ராமன் மிகசிறந்த அவதார புருஷன் மட்டுமல்ல தன்னிகர் இல்லாத மன்னனாகவும் இருந்தான். தன்னைவிட தகுதியில் தாழ்ந்த அரக்கனையும் வேடுவனையும் வானரர்களையும் பறவைகளையும் கூட தனது உறவினராக ஏற்றுகொண்ட மாண்பு ராமனிடமே இருந்தது. அந்த ராமன் கூட தனது வாழ்நாளில் எந்த கோவிலையும் அமைத்ததாக தெரியவில்லை. அதற்காக ராமனையும் கர்ணனையும் நாத்திகர்கள் என்று சொல்லிவிட முடியுமா? 

வரலாற்று கால மன்னர்களை விட தற்காலத்து வணிகர்களை விட ஆலயங்கள் எழுப்புவதற்கான அனைத்து வசதிகளும் இதிகாச காலத்து அவதார புருஷர்களுக்கு நிறையவே இருந்தது. ஆனாலும் அவர்கள் அப்படி செய்யாதற்கு என்ன காரணம் என்று சிந்திக்க வேண்டும். அக்காலத்து மக்களுக்கும் மன்னர்களுக்கும் தெய்வீகமான சிந்தனைகளை உருவாக்க வேண்டுமானால் அதற்கென்று தனிசின்னங்கள் தேவைப்படவில்லை காணும் பொருட்கள் ஒவ்வொன்றுமே இறைவனாகவும் இறைவனின் அம்சமாகவும் அவர்களுக்கு தெரிந்திருக்கிறது. அதனால் அவர்கள் மனதிற்கு எந்த இடம் உகந்த இடமாக தெரிந்ததோ அந்த இடத்தில் சர்வ சுகந்திரமாக இறை வணக்கத்தை செய்தார்கள். இது மட்டுமல்ல இறை வணக்கம் என்பது மனதிற்கும் இறைவனுக்கும் நடை பெறுகின்ற ஆலிங்கணமே தவிர பகட்டுக்காக நடக்கும் பகல்வேட கூத்துக்கள் அல்ல என்பதை தெளிவாக அறிந்து வைத்திருந்ததனால் ஆலயங்கள் அவர்களுக்கு தேவைப்படவில்லை. 

இடி, மின்னல், மழையை பார்த்து அஞ்சி நடுங்கிய ஆதிகால மனிதன் இயற்கைய வழிபடுவதில் மட்டுமே குறியாக இருந்ததனால் அவனுக்கு புறக்கருவிகளாக எந்த சாதனமும் தேவைப்படவில்லை மரணத்தை பற்றிய அச்சம் விலக விலகவே இறைவனின் அருள் கடாச்சியம் அச்சம் தரக்கூடியது அல்ல அரவணைத்து செல்ல கூடியது எனவே அவரை மகிழ்விப்பதற்காக வழிபாடு நடத்துவோம் என்று துவங்கியது தான் இன்றைய மதமென்று சிலர் வாதிடுகிறார்கள். இவர்களின் கூற்றில் ஐம்பது சதவிகிதம் சரியானது என்றும் மீதம் உள்ளவகைகளை முற்றிலும் சரியானது என்று சொல்ல முடியாது. 

காரணம் பயத்தின் காரணமாக இந்திய மதங்கள் தோன்றியிருந்தால் அவற்றில் இறைவன் கொடுக்கும் கடுமையான தண்டனைகளை பற்றி அதிகமான வெளிப்பாடுகள் இருக்கும். இறைவன் வருகையை பற்றிய கொடூர அறிவிப்புகள் நிறைந்திருக்கும். ஆனால் அப்படி எதுவும் இந்திய மதங்களில் இல்லை. வைதீக நெறியான சனாதன தர்மமும் சரி அதிலிருந்து தோன்றியதாக இருந்தாலும் கொள்கைகளாலும் கோட்பாடுகளாலும் வைதீக மார்க்கத்திற்கு சற்று மாறுபட்டதாக இருக்கின்ற ஜைனம், பெளத்தம், சீக்கியம் ஆகிய மதங்களும் சரி இறைவனை அன்பானாவனாக கருணையாளனாக அரவனைப்பவனாக வர்ணனை செய்கிறதே தவிர நீதி சொல்கின்ற ஒரு சிம்மாசனத்தில் அமர்ந்து தண்டனைகள் கொடுப்பவனாக காட்டவே இல்லை. 

இயற்கையை பார்த்த அச்சத்தினால் இயற்கையின் மூலமாக இருக்கும் இறைவனின் பெயரிலும் அச்சமே ஏற்பட்டிருக்க வேண்டும். ஆனால் இயற்கையை பார்த்தோ இறைவனை பார்த்தோ பாரத புத்திரன் பயபட்டதாக சொல்ல முடியாது. காரணம் மழைவருவது எப்படி? இடி இடிப்பது எப்படி? என்பவைகளை நம்மை போலவே அவர்களும் விஞ்ஞான மனோபாவத்தில் அறிந்தவர்களாக இருந்திருக்கிறார்கள். இதற்கான ஆதாரங்கள் வேத, புராண, இதிகாச நூல்களில் நிறையவே கிடைக்கிறது. 

இயற்கையை பார்த்த அச்சத்தினால் அவைகளை வணங்க இந்தியன் துணியவில்லை என்றால் பின் எதற்காக இயற்கை சக்திகளை அவன் வழிபட்டான் என்ற கேள்வி நியாயமாக தோன்றும். இதற்கான பதில்கள் வேதங்களில் மிக அழகாக கூறபட்டிருக்கிறது. கடவுள் ஒருவராக இருந்தாலும் உலகத்தில் நிகழ்கின்ற ஒவ்வொரு நிகழ்வுகளுக்கும் அதிகாரிகளாக கடவுளின் பல்வேறு அம்சங்கள் செயல்படுவதாக நம்பினான். அதாவது அதிகாரம் பொருந்திய ஒரே மனிதர் ஜனாதிபதி மட்டுமே என்றாலும் அவரின் அதிகாரத்தின் வெளிப்பாடாக பிரதம மந்திரி துவங்கி ஊர் தலையாரி வரை இருப்பது போல இறைவனது அருள் சக்தியின் அதிகார பரவலாக வெவ்வேறு தேவதைகள் இருப்பதை சொல்லலாம். உணவு வழங்கும் பூமியின் இயக்கத்திற்கு ஒரு தெய்வம், உயிர்வாழும் காற்றை தருவது ஒருதெய்வம், அக்கினியாக நிற்பது ஒருதெய்வம், மழையாக கொட்டுவதும் ஒருதெய்வம் என்று வகைபடுத்தி வணங்கினார்கள். அந்த வணக்கம் பக்தியின் நன்றியின் வெளிபாடே தவிர அச்சத்தின் அடையாளம் அல்ல. 

மழை தெய்வம் என்றால் அந்த மழையால் உருவாகும் அனைத்துமே தெய்வ அம்சம் பொருந்தியதாகும் அதனால் தான் ஆதிகால மக்களுக்கு காணுகின்ற பொருள் ஒவ்வொன்றுமே கடவுள் தன்மையை வெளிபடுத்துவதாக இருந்ததனால் இறைவனுக்கு என்று தனியாக அடையாளபடுத்தி காட்டவேண்டிய கோவில்கள் தேவை இல்லாமல் இருந்தது. காலம் செல்ல செல்ல மனித மனதில் எண்ணங்களும் ஆசைகளும் விருத்தி அடைய அவனது உணர்வுகளின் கூர்மை சிறிது தேய்த்து போக ஆரம்பித்த போதே நிலையான வழிபாட்டு கூடங்களை அமைக்க ஆரம்பித்தான். அதன் வளர்ச்சியே இன்றைய ஆலயங்கள். 

ஆரம்பத்தில் இயற்கையை வழிபட்ட மனிதன் அவனது கண்களுக்கும் கருத்துக்களுக்கும் அதிகபடியான தெய்வீக அதிர்வுகளை கொடுத்த மலைகள், மரங்கள் போன்றவற்றை பக்தி சிரத்தையோடு வணங்கினான். அப்படி அவன் வழிபாடு நடத்தியதன் தொடர்ச்சியாகவே இன்றைய மரங்களின் வழிபாடு வழி வழியாக நடந்து வருகிறது. சிவன், திருமால், சக்தி போன்ற தெய்வங்களை வழிபடுவதில் ஒரு மனிதன் எவ்வளவு அக்கறையோடும் ஈடுபாட்டோடும் இருக்கிறானோ அதே அக்கறையை மரங்களை வழிபடுவதிலும் செலுத்துகிறான். 

மரங்களை வழிபடும் மனிதர்கள் இன்று கூட இருக்கிறார்களா? அது இந்துமத வழிபாட்டு பிரிவுகளில் முக்கியமானதாக இன்றுவரை நீடிக்கிறதா? என்று சிலருக்கு தோன்றும். அவர்கள் ஆற அமர உட்கார்ந்து சிந்தித்து பார்த்தால் மரங்களை வழிபடும். தன்மையானது எந்த அளவு நமது வாழ்க்கையோடு பின்னி பிணைந்துள்ளது என்பதை புரிந்து கொள்வார்கள். அதற்காக நூலகங்களுக்கு சென்று பெரிய பெரிய ஆய்வு நூல்களை எடுத்து மண்டையை குடைந்து படிக்க வேண்டிய அவசியம் இல்லை. தாங்கள் வாழுகின்ற பகுதியையே சற்று உன்னிப்பாக கவனித்தால் போதும் மர வழிபாட்டின் முக்கியத்துவம் தெரிந்துவிடும். 

விழுப்புரம் மாவட்டம் கள்ளகுறிச்சி வட்டத்தில் தோட்டபாடி என்ற ஒரு கிராமம் இருக்கிறது. அந்த கிராமத்தின் அருகிலேயே பூண்டி, நைனார் பாளையம் போன்ற கிராமங்களும் உள்ளன. இந்த மூன்று கிராம மக்களும் ஒருங்கிணைந்து கன்னிமார் தேவதைகளுக்கு வழிபாடு நடத்துவார்கள். இதன் வழிபாட்டு முறை மிகவும் சிக்கலானது மூன்று கிராமங்களும் ஒன்று கூடி செய்தால் மட்டுமே செய்ய கூடியது என்பதனால் வருடா வருடம் நடப்பதில்லை சில நேரங்களில் பத்து இருபது வருடங்கள் சென்று கூட நடைபெறும். 

கன்னிமார் தேவதைகளை வழிபடுகின்ற இடம் தொட்ட பாடி கிராமத்தின் கிழக்கு பகுதியல் அமைந்துள்ளது. இந்த பகுதி தமிழக வனத்துறைக்கு சொந்தமான பகுதி. அதிஷ்டவசமாக இன்றைய காலத்தில் கூட பல மரங்கள் அங்கு இருக்கின்றன. அந்த வனத்திற்குள் தான் வழிபாடும் நடக்கும். தேவதைகளுக்கு பூஜைகள் செய்கின்ற பகுதியில் சிலைகளோ திரிசூலம் வேல் போன்ற சின்னங்களோ கிடையாது. ஒரு பெரிய கள்ளி செடி மட்டுமே இருக்கிறது. அதற்கு பக்கத்தில் பெரிய கல் ஒன்று கிடக்கிறது. அந்த கல்லை வேறொரு கல்லால் அடித்தால் கணீர் என்ற வெண்கல மணியின் ஓசை வரும். அதனால் அந்த கல்லை. கிராம மக்கள் கிணீர்கல் என்றே அழைக்கிறார்கள். 

கள்ளி செடியும் கல்லும் இருக்கின்ற இந்த பகுதிக்கு விறகு பொறுக்குவதற்கு கூட பெண்கள் செல்ல மாட்டார்கள் பூஜை நடைபெறுகின்ற காலத்தில் கூட பெண்களுக்கு அங்கே அனுமதி இல்லை. இதில் வேடிக்கை என்னவென்றால் அங்கு வழிபட படுவது கன்னிமார் என்ற பெண் தேவதை வழிபடும் தெய்வமே பெண்ணாக இருக்கும் போது வழிபடுவதற்கு பெண்களுக்கு அனுமதி இல்லை அந்த அளவு கன்னிமார் தெய்வம் துஷ்டதெய்வமாக அந்த பகுதியில் கருதபடுகிறாள். காட்டின் எந்த மூலையிலிருந்து பார்த்தாலும் உயரமான அந்த கள்ளி செடி தெளிவாக தெரியும். தூரத்திலிருந்து பார்த்து பெண்கள் கன்னத்தில் போட்டு வணங்கி கொள்ள வேண்டியது தான். பெண் தெய்வத்தை பெண்கள் வணக்குவதை தடை செய்வது நியாயமா? முறையா? என்ற ஆராய்ச்சிக்கு இப்போது நாம் போக வேண்டிய அவசியம் இல்லை. மரத்தை இறைவனின் அம்சமாக வழிபடுகிற தன்மை இன்றும் இருக்கிறது என்பதை சுட்டி காட்டவே இதை இங்கே தெரிவித்தேன். 

மரங்களை வழிபடுவது நமது தமிழ்நாடு முழுக்க இருக்கிறது என்றே சொல்ல வேண்டும். வேப்பமரத்திற்கு பாவாடை கட்டி வழிபடுவதும் ஓங்கி வளர்ந்த ஒற்றை பனைமரத்தில் முனிஸ்வரனை வழிபடுவதும் நாம் அறியாதது அல்ல. அதை விட்டு விட்டு அரசமரத்தடி விநாயகர் வன்னிமர சிவன் துளசிமாட கிருஷ்ணன் போன்ற வழிபாடுகளை ஆழ்ந்து நோக்குவோம் என்றால் மர வழிபாட்டின் தெளிவு நமக்கு பிறக்கும். இதுவரை ஆதிகால வழிபாட்டு முறையின் ஒரு பகுதியான மர வழிபாட்டின் சிறு கூரை மட்டுமே பார்த்தோம். இனி அதன் ஆழமான விபரங்களை பார்ப்போம்.



Contact Form

Name

Email *

Message *