Store
  Store
  Store
  Store
  Store
  Store

மரத்தில் தெய்வமா? மரமே தெய்வமா?

இந்து மத வரலாற்று தொடர் 52


    னிதன் உயிர்வாழ்வதற்கு சூரியன் அத்தியாவசியமான தேவை என்று சொல்வார்கள். சூரியன் எப்படி மனிதகுலம் வாழ்வதற்கு தேவையோ அதை விட ஆயிரம் மடங்கு தேவை பூமி பூமி இல்லை என்றால் சூரிய வெளிச்சம் தொடர்ந்து கிடைத்து என்ன பயன்? சூரிய வெளிச்சத்தை வாங்கி அதை மனிதனுக்கு தேவையான மூலபொருளாக உருமாற்றி கொடுக்கும் வேலை பூமியை மையமாக வைத்தல்லவா நடக்கிறது. எனவே மனிதன் வாழ்வதற்கு பூமியே மிகவும் அவசியமானது. 


மனிதன் வாழ்வதற்கு பூமி தேவை அந்த பூமி வாழ்வதற்கு என்ன தேவை மனிதனா? நிச்சயம் மனிதனாக இருக்க முடியாது. பத்துமாதம் வயிற்றில் சுமந்து பால் கொடுத்து வளர்த்த அன்னையின் வாயிற்றை கிழிப்பது போல மனிதன் இன்று பூமியை சிறிது சிறிதாக கொலை செய்து கொண்டிருக்கிறான். அதனால் மனிதன் இல்லா விட்டால் பூமி இன்னும் சிறப்பாக வாழும் என்றே சொல்லலாம். பிறகு எது பூமி வாழ்வதற்கு தேவையானது என்று ஆராயும் போது விஞ்ஞானம் மரங்கள் மட்டுமே பூமியின் வளர்ச்சிக்கு காரணமாக இருக்கிறது என்று சொல்கிறது. 


மரங்கள் பூமியை மட்டும் வாழ செய்ய வில்லை பூமியிலே வாழுகின்ற மனிதன் உள்ளிட்ட அனைத்து ஜீவன்களையும் வாழ வைக்கிறது. மரங்கள் இல்லாவிட்டால் கரியமலவாயு ஜீரணிக்க பட்டு பிராணவாயு கிடைக்காது. பிறகு எப்படி உயிர்கள் சுவாசம் செய்ய முடியும்? எனவே பூமியின் இதயமே மரங்கள் என்று துணிந்து சொல்லலாம். மரங்கள் இல்லா விட்டால் மனிதனில்லை மனித நாகரீகள் இல்லை இன்றைக்கு நாம் கண்முன்னால் காணுகின்ற எந்த வளர்ச்சியுமே இல்லை. 


மனித வாழ்க்கையின் அடிப்படை தேவைகளுக்கு மரங்கள் பலவகையில் உதவி செய்து வருகிறது. இன்று நாம் அதை மறந்து விட்டு கண்ணில் அகபடுகிற மரங்கள் அனைத்தையும் வெட்டி வீழ்த்தி கொண்டிருக்கிறோம். உணவு என்பது மனிதனுக்கு கண்டிப்பாக தேவை மரங்கள் அந்த உணவையும் உணவை பெறுவதற்க்கான வாய்ப்புகளையும் மனிதனுக்கு கொடுக்கிறது. உணவை போலவே உடையும் அவசியம். அந்த உடையை தருவதும் மரங்களே ஆகும். அடுத்ததாக மிக முக்கிய தேவையான தங்குமிடத்தை உருவாக்கி கொள்வதில் அந்த காலத்திலும் இந்த காலத்திலும் மரங்களே மூல பொருளாக இருக்கிறது. 


ஆதிகால மனிதன் குகைகளில் வாழ்ந்தான் அடுத்து வந்த மனிதன் காடுகளை திருத்தி நிலங்களாக சமைத்து வேளாண்மையை துவங்கிய பிறகு நிலையான வீடுகளை ஏற்படுத்தி ஒரே இடத்தில் தங்க துவங்கினான். அப்படி அவன் வீடுகளை கட்டி கொள்ள கல்லும் மண்ணும் உதவி செய்வதற்கு முன்பே மரங்கள் தான் பேருதவி புரிந்தன ஆதி மனிதனின் நாகரீக ஆயுதம் மரங்களிலிருந்தே தயாரிக்க பட்டது. வில்லும் அம்பும் ஈட்டியும் ஆரம்ப காலத்தில் மரமாகவே இருந்தது கல்லுக்கு பிறகு அந்த இடத்தை மரங்கள் பிடித்து கொண்டன. வேட்டை ஆடவும் பகையை ஒடுக்கவும் ஆயுதமாக பயன்பட்ட மரம் மனிதன் வீட்டில் பயன்படுத்திய தட்டுமுட்டு சாமானாகவும் இருந்தது. இடிக்கும் உரல் தண்ணீர் தெளிக்கும் பாத்திரம் குவளைகள் அனைத்துமே மரங்களே. 


வீட்டு உபயோக பொருளாக மரங்கள் இருந்த காலமுதல் அது மறைந்து உலோக பொருள்கள் பயன்பாட்டுக்கு வந்து விட்ட காலம் வரையிலும் மரங்களின் தேவை மிக அதிகமாக இருந்தன. அதன் பிறகு மரங்கள் தனிப்பட்ட உபயோகத்திற்கு என்ற நிலையிலிருந்து மாறி சமூக பயன்பாடு என்ற நிலை நோக்கி வளர்ந்தது. ஊரார் அனைவரும் ஒரே இடத்தில் கூடும் இடமாகவும் நீதி விசாரணை செய்கின்ற நீதி மன்றமாகவும் தண்டனை வழங்குகின்ற இடங்களாகவும் மரத்தடிகள் பயன்பட துவங்கின. மன்றம் பொதியில் முற்றம் என்ற வார்த்தைகள் மரத்தடிகளையே சுட்டி காட்டுகிறது என்பதை நினைவில் வைக்க வேண்டும். சங்க இலக்கியங்களில் சிறப்பு வாய்ந்த அகநானூறு புறநானூறு போன்ற நூல்களும் மணிமேகலையும் ஆலமுற்றம், வாகைமுற்றம், வன்னிமன்றம், மன்றவேம்பு போன்ற வார்த்தைகளால் சில இடங்களை சுட்டுகின்றன அந்த இடங்கள் அனைத்தும் குளிர்ந்த நிழல் தரும் மரத்தின் அடிவாரங்கள் என்பதை மறக்க கூடாது. 


இப்படி மரங்கள் மனித வாழ்க்கையோடு பின்னி பிணைந்து விட்டதனால் மரங்களே பல நோய்களிலிருந்து மனிதனை பாதுகாக்கும் மருந்துகளாக இருந்ததனால் ஆதி மனிதன் மரங்களை பற்றி மிக தீவிரமாக ஆராய்ந்தான். கண்களை மூடி தவத்தில் ஆழ்ந்த போது அயன வெளியில் உலாவி வருகின்ற வேத மந்திரங்கள் எப்படி ரிஷிகளின் இதய கமலத்தில் வெளிப்பட்டதோ அதே போலவே மரங்களிலிருந்து தெய்வீக சக்திகள் வெளிபடுவதையும் சில மரங்கள் தெய்வீக சக்திகளை தனக்குள் ஈர்த்து கொள்வதையும் உணர்ந்தான். இதனால் அவன் அவைகளை கடவுளின் வடிவமாக போற்றி வழிபட துவங்கினான். 


மரங்களை வழிபடும் பழக்கம் உலக முழுவதுமே இருந்தது என்றாலும் இந்தியாவில் இந்துக்கள் மத்தியில் இருக்கின்ற மரவழிபாடு முற்றிலும் மாறுபட்டது. மற்ற மக்கள் மரங்களை தெய்வீக குறியீடுகளாக கொண்டார்கள் என்றால் இந்துக்கள் மரங்களை தெய்வமாகவே கண்டார்கள். மிக குறிப்பாக அரசமரம், ஆலமரம், வேப்பமரம், கடம்பமரம், வாகைமரம், வன்னிமரம், வில்வமரம், கொன்றைமரம் ஆகிய மரங்கள் இறைவனோடு ஒருகினைக்க பட்டு வழிபட பட்டன. 


ஆலமரம் என்பது அரசனின் அரண்மனை போல பறந்து விரிந்து வளரும் தன்மையுடையது. பார்ப்பதற்கு எப்போதுமே பசுமையாக தழைத்து வளர்ந்திருப்பது சூறாவெளி காற்று சுழன்றடித்தாலும் அவ்வளவு சீக்கிரம் தரையில் சாயாதது. இதனால் இறைவனான பரமசிவன் இம்மரத்தில் உறைந்திருப்பதாக மக்கள் நம்பினார். கலித்தொகை என்ற சங்க இலக்கியம் இதனாலையே சிவபெருமானை ஆலமர் செல்லவன் என்று அழைக்கிறது. ஆலமர் செல்வன் என்றால் ஆலகால விஷத்தை உண்டவன் என்றும் ஆலமரத்தடியில் இருப்பவன் என்றும் இரண்டு பொருளை தரும். கலித்தொகை சொல்வது போலவே திருமுருகாற்றுபடையும் சிவபெருமானை ஆல்கெழுக்கடவுள் என்ற சிறப்பு பெயரால் அழைத்து மகிழ்கிறது. 


அகநானூற்றில் ஒரு காட்சி வர்ணனை வருகிறது. ஆலமரத்தடியில் நாள்தோறும் பூஜைகள் நடக்கிறது கூட்டம் கூட்டமாக மக்கள் கலந்து கொள்கிறார்கள் இப்போது அந்த ஊரில் மக்கள் யாரும் இல்லாமல் பாழ்வூராக ஊர் மாறிவிட்டது இதனால் ஆலமரத்திற்கு விளக்கேற்ற யாரும் இல்லை என்று அந்த வர்ணனை ஒரு சித்திரத்தை நமக்கு காட்டுகிறது. இதன் அடிப்படையில் பார்த்தால் ஊரில் உள்ள கோவில்களுக்கு எப்படி நித்திய பூஜைகள் நடைபெறுமோ அப்படியே மரத்திற்கும் நடைபெற்றிருக்கிறது. 


வேப்பமரத்தை வழிபடுகின்ற முறை சில ஆயிர வருடங்களாகவே பாரத திருநாட்டின் தென்பகுதியான தமிழகத்தில் நடந்து வருகிறது. இம் மரத்தில் காளிதேவி இருப்பதாகவும் காளியை வழிபட விரும்புபவர்கள் வேம்பை வழிபட்டாலே போதும் என்ற நம்பிக்கையும் தொன்று தொட்டு மக்கள் மத்தியில் நிலைத்திருக்கிறது. வேப்பமரத்தை போலவே பாலைமரமும் காளி வழிபாட்டிற்கு உகந்தது. பாலை மரத்தின் கிளைகளை எடுத்தே காளிதேவிக்கு பந்தல் அமைப்பது மரக்கால் நடுவது போன்ற சடங்குகள் நடத்தப்படும். அதனால் இன்மரத்தை தெய்வ பாலை என்றும் வலிய பாலை என்றும் பதிற்று பற்று என்ற சங்க நூல் சிறப்பித்து பேசுகின்றது. 


அரசியல் ரீதியான போர்களங்கள் இப்போதை விட பழங்காலத்தில் அதிகம் என்று சொல்லலாம். மன்னர்களின் அதீதமான மண்ணாசையும் தன்மான உணர்வும் பல போர்களுக்கு மூலமாக இருந்திருக்கிறது. இதனால் மக்கள் மத்தியில் போர்குணம் என்பதை மறைந்து போகாத வண்ணம் பேணி பாதுகாக்க பலவகையான நடவடிக்கைகளை அரசர்கள் செய்திருக்கிறார்கள். அப்படி செய்யப்பட்ட ஏற்பாடுகளில் மிகவும் முக்கியமானது வாகைமர வழிபாடாகும். வாகை என்ற வார்த்தையே வெற்றி என்ற பொருளை தருவதாகும். போரில் வாகை சூடிய வீரமறவர்கள் வாகை பூவை தலையில் சூடி வாகை மரத்தடியில் கொற்றவை என்ற காளியை வணங்கி இருக்கிறார்கள். 


ஆலமரம் போற்றப்பட்ட அளவிற்கு சங்ககாலத்தில் அரசமரம் போற்றப்பட வில்லை என்றே சொல்லலாம். சங்ககாலத்திற்கு பிறகே அரசமரத்தின் சிறப்புகளை தென்பகுதி மக்கள் உணர்திருக்கிறார்கள். அதுவரையில் அரசமரத்தை வழிபடுவதில் வடஇந்திய மக்களுக்கு மிக அதிகமான ஈடுபாடு இருந்திருக்கிறது. பகவத் கீதையில் பகவான் ஸ்ரீ கிருஷ்ணன் மரங்களில் நான் அரசமரம் என்று சொல்கிறார். ஆலமரம் அரசமரம் இரண்டிற்கும் அதிகவேருபாடுகள் கிடையாது. தாவர குடும்பத்தை பொறுத்தவரை இரண்டுமே ஒரே இனத்தை சேர்ந்தவைகள் இரண்டுக்கும் உள்ள பெரிய வித்தியாசம் ஆலமரத்திற்கு விழுதுகள் உண்டு அரசமரத்திற்கு அது கிடையாது. அரசமரம் ஆதிகாலத்தில் சில அரசுகளின் முத்திரை சின்னமாகவும் இருந்துள்ளது. சிந்து சமவெளியில் கிடைத்துள்ள பல முத்திரைகளில் அரசமர உருவம் பொறிக்கப்பட்டுள்ளதை காணலாம். எனவே அரசமரம் உயர்வானது வழிபட கூடியது என்ற எண்ணம் பன்னெடுங்காலமாகவே மக்கள் மத்தியில் இருக்கிறது. இதன் விளைவே குளக்கரை, ஆற்றாங்கரை, ஊரின்நடுபகுதி, ஆகிய இடங்களில் அரசமரத்தை நட்டு அங்கே விநாயகரை உட்கார வைத்து வழிபாடு நடக்கிறது. 


சிவன், சக்தி, விநாயகர் வழிபாடு போலவே முருக வழிபாடும் மரங்களோடும் சம்மந்தபடுத்தபட்டு உள்ளது. கடம்பமரம் முருகனுக்கு உகந்த மரம் கடம்ப மரத்தின் வாழுகின்ற தேவசேனாதிபதியாகிய முருகனை வழிபட்டால் கொடியமணம் படைத்த விரோதிகள் வீழ்வார்கள் என்ற எண்ணமும் கடம்பமரத்தடியில் வீரமரணம் அடைந்த வீரர்களை புதைத்து நடுகல் நட்டு அவர்களை வழிபட்டால் வெற்றி கிடைக்கும் என்ற எண்ணமும் மக்கள் மத்தியில் இருந்ததாக குறுந்தொகை என்ற பழந்தமிழ் நூல் நமக்கு தகவல் தருகிறது. கடம்பமரம் எப்படி முருகனோடு சம்மந்தபட்டதோ அதே போலவே வேங்கை மரமும் முருகனோடு சம்மந்தப்பட்டதாகும். வேங்கையாக நின்ற முருகனை வழிபட்டால் பயிறு விளையும். பயிர்களை நோய்கள் அண்டாது என்றும் மக்கள் நினைத்தார்கள். இதையே எரிமருள் வேங்கை கடவுள் காக்கும் குறுகார் கழனி. என்று நற்றிணை சொல்வதை அறிய முடிகிறது. அதுமட்டுமல்ல முருகபெருமானான வேங்கை மரம் பூக்க தொடங்கும் வளர்பிறை காலம் இல்லறம் துவங்குவதற்கு சரியான நேரம் வேங்கை மரத்தடியில் திருமணம் செய்தால் அந்த திருமணம் வாழையடி வாழையாக தழைத்திருக்கும் என்றும் மக்கள் நம்பியதாக கலித்தொகை கூறுகிறது. 


தனிவொரு மரத்தை மட்டுமின்றி நிறைய மரங்கள் அடர்ந்து நிற்கும் காடுகளையும், புதர்களையும் புனிதம் நிறைந்ததாக மக்கள் கருதினார்கள். இதனாலையே மக்கள் அடர்த்தியாக வாழுகின்ற ஊர்களுக்கு மரங்களின் பெயர்களை வைத்தார்கள். உதாரணமாக பாண்டிய நாட்டின் தலைநகரமான மதுரைக்கு ஆதிகால பெயர் கடம்பவனம். நடராஜா பெருமான் ஆனந்த கூத்தாடும் தில்லை என்ற சிதம்பரத்திற்கு ஆதி பெயர் தில்லைவனம். புன்னை வனம் என்பது இன்றைய மயிலாப்பூர் இது தவிர திருக்குற்றாலம், திருவிடைமருதூர், திருபாதிரிபுலியூர், திருக்கச்சி ஏகம்பம் என்பவைகளும் மரத்தின் பெயர்களே இப்படி நிறைய ஊர்களின் பெயர்கள் மரத்தின் பெயராக வருவதை அறிகின்ற போது மரம் மதத்திற்கு ஆற்றியுள்ள பங்குபணி மிக அதிகம் என்றே சொல்லலாம். 


இந்துமதம் தவிர்த்த பெளத்த மதத்திலும், ஜைன மதத்திலும் கூட அரசமரவழிபாடானது சிறப்புற்று திகழ்கிறது. ஜைன மதத்தின் தீர்த்தங்கர்களான ரிஷபதேவர், மகாவீரர் ஆகியோர்களின் உருவங்களை செதுக்கிய சிற்பிகள் அவர்கள் உருவத்திற்கு மேலேயோ கீழேயோ அரசமரத்தை மறந்துவிடாமல் செதுக்கியிருக்கிறார்கள். இதை பார்க்கும் சில அறிஞர்கள் கெளதம புத்தர் போதி மரம் என்ற அரசமரத்தடியில் தான் ஞானம் பெற்றார். அவரது ஞானத்தை நினைவு படுத்தும் வகையில் புத்தமதத்தினர் அரச மரத்தை போற்றி புகழ ஆரம்பித்த பிறகே மற்ற மத பிரிவுகளில் அரசமரம் முக்கிய பங்கு வகிக்க துவங்கியது என்று சொல்கிறார்கள். இது ஏற்க தக்க கூற்றாக இல்லை. காரணம் சிவபெருமானின் அவதாரங்களில் ஒன்றான தஷ்ணமூர்த்தி அவதாரம் அரமரத்தடியில் இருப்பதும் கண்ணன் தன்னை அரமரமாகவும் இருப்பேன் என்று சொன்னதும் புத்தமத காலத்திற்கு முற்பட்டதே ஆகும். வேண்டுமானால் அரசமர வழிபாடை உள்நாட்டில் மட்டுமல்ல வெளிநாடுகளிலும் பரப்பியதற்கு புத்தமதம் ஒரு காரணமாக இருந்தது என்று துணிந்து சொல்லலாம். 


மெளரிய பேரரசின் புகழ்பெற்ற அரசரான சாம்ராட் அசோகர் புத்த மதத்தை பல நாடுகளிலும் பரவ செய்தவர். இவர் இலங்கையில் அந்த மதத்தை பரப்புவதற்கு அச்சாரமாக புத்த கயாவில் உள்ள அரசமர கிளை ஒன்றை தனது மகன் மூலமாக கொடுத்தனுப்பிய வரலாற்று குறிப்பு இருக்கிறது. இலங்கையில் உள்ள சிங்கள மக்கள் புத்த மதத்தை தழுவிய பிறகு இந்த மர வழிபாடு பல வகையிலும் அந்த நாட்டில் சிறப்புற்று வளர்ந்தது. இருந்தாலும் கூட அசோகர் அனுப்பிய அரசமர கிளை இலங்கைக்கு வருவதற்கு முன்பே அங்கு அரசமரத்தை வழிபடும் பழக்கம் இருந்ததாக தெரிகிறது. புத்தமதம் பரவுவதற்கு முன்பாக சிங்கள மக்கள் நாக வழிபாட்டையும் யக்ஷவழிபாட்டையும் செய்பவர்களாக இருந்தார்கள். அவர்கள் இவ்வழிபாடுகளை அரசமரத்தடியில் செய்வதாக பாளி இலக்கியங்களும் மஹாவம்சமும் தெரிவிக்கின்றன. 


இலங்கையின் சரித்திரத்தை கூறும் மஹாவம்சத்தில் வழிபாட்டிற்குரிய மரமாக கடம்ப மரமும், கடம்ப வனமும் குறிப்பிட படுகின்றன. இந்த வனத்தில் மஜே என்ற யக்ஷகடவுளின் கோவில் இருந்ததாக தெரிகிறது. அந்த யக்ஷகோவிலே பிற்காலத்தில் துபாராம புத்தமடமாக உருவாக்கபட்டதான தகவலும் அந்த நூலில் இருக்கிறது. மஹாவம்சத்தில் சுட்டிகாட்டபடும் மஹாமேஹவனம் என்ற பகுதியிலேயே அசோகர் மகன் கொண்டுவந்த அரசமர கிளையை நட்டு வழிபாடு நடத்தியதற்காண விவரங்களும் உள்ளன. 


கெளதம புத்தர் தமது வாழ்நாளில் ஒருமுறை கூட இலங்கைக்கு செல்லவில்லை என்பதை இந்திய புத்தமத இலக்கியங்கள் மறைமுகமாகவும் நேர்முகமாகவும் சொல்லும் போது கூட இலங்கையின் மஹாவம்ச நூல் புத்தர் இரண்டுமுறை இலங்கைக்கு வந்ததாக தகவல் தருகிறது. அப்படி இரண்டாவது முறை இலங்கை விஜயத்தை அவர் மேற்கொண்ட போது நாக தீபம் என்ற பகுதியில் ராஜத்தானா என்ற மரத்தை நட்டதாகவும் அந்த மரம் தன்னை வழிபடும் மனிதர்களுக்கு வேண்டிய வரங்களை கொடுப்பதாகவும் கூறுகிறது. 


மரங்களை வழிபடும் இந்த தன்மைகளை கூட்டி கழித்து பார்க்கின்ற போது நமக்கு ஒரு உண்மை தெளிவாக தெரிகிறது. ஆதிகால மனிதன் மரங்களையே தெய்வமாக கருதினான் அதற்கு அடுத்ததாக வந்த மனிதன் மரத்தில் தெய்வம் வாழ்வதாக கருதினான் அதற்கு பிறகு மரத்தின் அடியில் தெய்வத்தை பிரதிஷ்டை செய்து வழிபட துவங்கினான் என்பதை அறிந்து கொள்ளலாம். கடவுள் வழிபாட்டிற்கு கோவில்கள் என்ற தனியான இடத்தை தீர்மானம் செய்த பிறகு மரவழிபாடானது ஸ்தலவிருஷமாக மாற துவங்கி விட்டது. 


இன்றும் ஸ்தலவிருச்சங்கள் கடவுளை போலவே பக்தி சிரத்தையோடு வணங்க படுவதை காணலாம். மேலும் இறைவனது பிரசாதமாக ஆலய மரத்தின் இலைகளும் வழங்க படுவதும் வேண்டுதல்களை கடவுள் நிறைவேற்றிய பிறகு நன்றிகடனாக மரங்களில் காப்பு கட்டி வழிபடுவதும் இன்றுவரை தொடர்ந்தே வருகிறது. மனித அறிவு எட்டிபார்த்து கணக்கு போட முடியாத காலம் தொட்டு இன்று வரையிலும் மரங்களை இறைவனின் அம்சமாக கருதி வழிபடும் வழக்கம் இந்துக்கள் மத்தியில் குறைந்து விடவில்லை. வளர்ந்தே வருகிறது. மரங்கள் மனித வாழ்வின் அகத்திலும் புறத்திலும் ஒரு அங்கமாகவே திகழ்ந்து வருகிறது. 


இங்கே நாகவழிபாட்டையும் மர வழிபாட்டையும் தனியாக சுட்டி காட்ட வேண்டிய அவசியம் ஏன் ஏற்பட்டது என்றால் இந்து மதம் என்பது பிரபஞ்ச சக்தி அனைத்தையும் உணர்ந்தது இறைவனின் அருள்கடாச்சியம் என்பது சகல பொருள்களிலும் வெளிபடுகிறது என்பதை தெளிவாக்குகிறது என்பதற்காகவே சொல்ல வேண்டிய நிலை வந்தது. இந்துமதம் கற்றறிந்த மேதாவிகள் முற்றும் துறந்த ஞானிகள் முழு நேரமும் இறை பக்தியிலேயே காலம் கழிக்கும் பக்தர்களையும் தாண்டி மிகவும் சாதாரணமான மக்களின் வாழ்க்கையோடும் பின்னி பிணைந்துள்ளது என்பதை இதன் மூலம் அறிந்து கொள்ளலாம். மேலும் நாகரீகமான மக்கள் மத்தியில் மட்டும் இந்து மதத்தின் தாக்கம் இருக்கவில்லை சமூதாயத்தில் வளர்ச்சி அடையாத மனிதர்கள் மத்தியிலும் இந்துமதத்தின் தாக்கம் மிக அற்புதமான முறையில் இருக்கிறது. அவற்றை இனி பார்ப்போம்.


Contact Form

Name

Email *

Message *