Store
  Store
  Store
  Store
  Store
  Store

ஆடையை திருத்தினால் மனங்கள் திருந்துமா...?




  ணக்கத்திற்கும் போற்றுதலுக்குமுறிய குருஜி அவர்களுக்கு கும்பகோணத்திலிருந்து உங்களின் மிக தீவிரமான வாசகி மணிமேகலை எழுதுவது உங்களுக்கு கடிதம் எழுதுவதற்கு கிடைத்த இந்த வாய்ப்பையே பெரும் பேராக கருதுகிறேன். நீங்கள் எழுதுகிற ஒவ்வொரு கருத்தும் என்னை போன்ற சாதாரண மனிதர்களை பிரமிக்க வைத்து நமது பழைய பண்பாட்டின் ஒவ்வொரு தன்மையையும் கண்மணியை போல் காப்பாற்ற வேண்டும் என்ற உணர்ச்சியை ஏற்படுத்துகிறது. 

நீங்கள் அரசியல் எழுதுகிறீர்கள் இலக்கியம் எழுதுகிறீர்கள் ஆன்மிகம் எழுதுகிறீர்கள் சில நேரம் ஜோதிடமும் எழுதுகிறீர்கள் இவைகள் அனைத்துமே வேறு வேறு துறைகள் என்றாலும் உங்கள் வாயிலாக அவைகளை அறிகின்ற போது அவற்றிக்குள் மைய இழையாக நமது பாரத பண்பாட்டின் ஆத்மாவை என்னால் காண முடிகிறது. இந்த தேசத்தின் அனைத்து கூறுகளுமே ஆன்மீக மயமானது ஆற்றல் மயமானது என்பதும் புரிகிறது. 

தற்போதைய சூழலில் நமது தேசத்தில் நிகழ்கின்ற முக்கிய நிகழ்வுகளை பற்றி நீங்கள் அவ்வபோது ஆழம் செறிந்த கருத்துக்களை வெளியிடுவீர்கள். ஒசாமா பின்லேடன் மரணம் துவங்கி நரேந்திர மோடியின் தேசிய அரசியல் பிரவேசம் வரை உங்களது கருத்துக்கள் பதிவாகி இருக்கிறது. மிக குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் ஊழலுக்கு எதிராக பாபா ராம்தேவ், அன்னா ஹசாரே போன்றோர்கள் அறபோராட்டத்தை நடத்திய போது ஒட்டுமொத்த நாட்டு மக்களே இது காந்தியின் மறுபிரவேசம் இரண்டாம் சுகந்திர போர் என்றெல்லாம் நம்பியபோது காந்தியிடம் இருக்கும் தெளிவும் துணிச்சலும் இவர்களிடம் இல்லை என்று நீங்களும் உங்களை போன்ற ஒரு சிலர் மட்டுமே சொன்னீர்கள். அவற்றின் இன்றைய நடைமுறையை பார்க்கும் போது உங்களது தெளிந்த அறிவின் அனுபவம் பளிச்சென தெரிகிறது. 

இன்று நாட்டையே குலுக்கி கொண்டிருக்கும் மிக முக்கிய பிரச்சனை பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை தலைநகரத்தில் மருத்துவ மாணவி அநியாயமான முறையில் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யபட்டது துவங்கி பெண்களை பாதுகாப்பது பற்றிய பல முக்கிய விஷயங்கள் வாதம் செய்ய படுகிறது. பெண்களுக்கு எதிரான பாலியல் தாக்குதல்களுக்கு பல்வேறு காரணங்கள் சொல்லபடுகின்றன. ஒருவர் பெண்களின் ஆடை உடலை மறைத்து இருக்கவேண்டும் என்கிறார் வேறொருவர் பெண்கள் வெளியில் அதிகமாக நடமாட கூடாது என்கிறார். இன்னும் ஏரளாமான கருத்துக்கள் சொல்லபடுகின்றன. 

குறிப்பாக சொல்வது என்றால் பெண்களுக்கு எதிரான கொடுமைகளை நிகழ்த்துபவர்களுக்கு மிக கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும் அதற்காக சட்டத்தையே திருத்த வேண்டும் என்ற கருத்துக்களும் பரவலாக இருந்துவருகிறது. இதில் குருஜியின் கருத்து எதுவாக இருக்கும் அவர் அதை பற்றி என்ன சொல்ல போகிறார் என்று நானும் சக உஜிலாதேவி வாசகர்களும் ஆர்வத்தோடு காத்திருந்தோம் ஆனால் இதுவரை நீங்கள் வாய்திறக்க வில்லை. அதற்கு என்ன காரணம் இது சம்மந்தமாக உங்களது கருத்து என்ன? என்பதை அறிந்துகொள்ள ஆர்வத்தோடு இருக்கிறேன். நான் அதிகபிரசங்கி தனமாக குழந்தையாக எதையாவது கேட்டிருந்தால் குருஜி அவர்கள் தயவு செய்து மன்னிக்க வேண்டும். உங்களிடம் கொண்ட அதிக ஈடுபாடும் உரிமையுமே இந்த கடிதத்தை எழுத தூண்டியது இதற்கு நீங்கள் கண்டிப்பாக பதிலளிக்க வேண்டுமென்று வற்புறுத்த எனக்கு தகுதி இல்லை. இருந்தாலும் உக்கள் பதிலை நான் எதிர்பார்ப்பதில் தவறு இல்லை என்று நினைக்கிறேன். 
இப்படிக்கு 

என்றும் உங்கள் உஜிலாதேவி வாசகி 
ஆர்.மணிமேகலை 
கும்பகோணம் 





     ரு குழந்தையை பெற்று வளர்ப்பவனுக்கு தான் அதன் அருமை தெரியும். தவழும் போதும் நிற்கும் போதும் நடை பழகும் போதும் புத்தக பையை தோளில் மாட்டிகொண்டு பாடசாலை போகும் போதும் என் பிள்ளையை பார் அதன் அழகை பார் என்று ரசித்து மகிழ்வதும் பெற்றவர்களின் தலையாய உணர்ச்சி. அதனால் தான் பாரதி உச்சிதனை முகர்ந்தால் கர்வம் ஓங்கி வளருதடி மெச்சி உனை ஊரார் புகழ்ந்தால் மேனி சிலிர்க்குதடி என்று சொன்னான். இந்த உலகத்திலையே மிக சிறந்த ஆனந்தம் குழந்தையை பெறுவது. அப்படி பெற்று வளர்த்து ஆளாக்கி தன் தோளளவு உயர்ந்து நிற்கும் பிள்ளையை பறிகொடுக்கும் போது ஏற்படும் புத்திர சோகம் இருக்கிறதே? அந்த சோகத்திற்கு முன்னால் உடலை அறுத்து அமிலத்தை ஊற்றும் வேதனை கூட மிக சிறியதே ஆகும். 

டெல்லியில் நடந்த வன்கொடுமையில் மாண்டுபோன அந்த மாணவியின் தாயும் தகப்பனும் எப்படி துடித்திருப்பார்கள்? ஆசை மகளை பற்றி கண்ட கனவு யாரோ நான்கு பொறுக்கிகளால் தரைமட்டம் ஆனதை நினைத்து எப்படி வருந்தி இருப்பார்கள். ஆயிரம் தண்டனை கொடுத்தாலும் ஆயிரம் ஆறுதல் மொழிகளை சொன்னாலும் அவர்களின் வேதனைக்கு மாற்று மருந்து கிடைக்குமா? ஒருபோதும் கிடைக்காது. இன்று இவர்கள் அழுகின்ற அழுகை நமது காதுகளில் ஒலிக்கிறது. ஆனால் இவர்களை போல எத்தனையோ பெறோர்கள் சமூகத்தில் இருக்கும் பல தீய நடவடிக்கைகளால் பாதிப்படைந்து சிந்துகின்ற கண்ணீர் வெளிச்சத்திற்கு வருவதில்லை. 

பாலியல் வன்முறை என்பது மிகபெரிய சமூக கொலை. அந்த கொலை ஏன் நடக்கிறது? எதற்காக நடக்கிறது? அதன் மூலம் என்ன? என்பதை ஆராய்ந்து அத்தகைய இடர்பாடு மீண்டும் நடக்காமல் தடுப்பதற்கு பலரும் பல ஆலோசனைகளை அவர்களுக்கு தெரிந்தமட்டும் சொல்கிறார்கள். இதில் எது சரி எது தவறு என்பதை சிந்திப்பதற்கு முன் அவர்களின் சமூக அக்கறையை பாராட்ட வேண்டும். அதை விட்டு விட்டு அவர்கள் சொன்னது சரியா? அப்படி அவர்கள் சொல்லலாமா? என்று விவாதிப்பது பிரச்சனைகளை வளர்க்குமே தவிர தீர்க்காது. 

பெண்களின் ஆடை பிரச்சனையை பற்றி வலுவாக விவாதிக்கபடுகிறது. உடலின் பாகங்கள் கவர்ச்சியாக வெளியில் தெரியும் வண்ணம் நாகரீக பெண்கள் உடையணிகிறார்கள் அதை தடுக்க வேண்டும் என்ற வாதமும் ஆடை அணிவது என்பது அவரவர் சொந்த விருப்பம் அதில் கட்டு திட்டங்கள் போடுவது அடிப்படை உரிமையை பறிக்கும் செயல் என்றும் சிலர் வாதத்திற்கு எதிர்வாதம் செய்கிறார்கள். ஆடைகள் என்பது ஒரு தேசத்தின் பண்பாட்டை பொருத்து மட்டும் அமைவது அல்ல. சீதோஷ்ண நிலையை பொருத்தும் அமைகிறது. வெப்பம் மிகுந்த நாட்டில் உடலை முழுவதும் மறைக்குபடியாக ஆடை அணிவதும் குளிர் பகுதிகளில் அரைகுறை ஆடை அணிவதும் நடைமுறைக்கு உதவாது. 

ஆடைகளில் கவர்ச்சி என்பது நமது நாட்டை பொறுத்தவரை பல வருடங்களாக பல்வேறுபட்ட மாறுதல்களை அடைந்து கொண்டே வருகிறது. இதற்கு ஆதாரமாக நமது பழங்கால ஓவியங்களையும் சிற்பங்களையும் எடுத்து கொள்ளலாம். அதில் காட்டபட்டிருக்கும் ஆடைகளில் பல தற்போது மறைந்து விட்டாலும் அவற்றை மூலமாக கொண்டே பல ஆடைகள் இன்றும் வடிவமைக்க படுகிறது என்பதை மறுக்க முடியாது. எனவே ஆடைகளை திருத்தினால் பாலியல் கொடுமை தீர்ந்துவிடும் என்பது ஒரு சிறு கருத்தே தவிர முழுமையான தீர்வாகாது. 

அதே போலவே பெண்கள் வீட்டிற்குள்ளேயே இருக்க வேண்டும் வெளியில் வரக்கூடாது பொது காரியங்களில் பங்கெடுத்து கொள்ள கூடாது. என்று சொல்லப்படும் கருத்துக்களும் நடைமுறைக்கு உகந்தது அல்ல. மகாபாரத காலம் துவங்கி மன்மோகன் சிங் காலம் வரையிலும் பெண்களின் பங்களிப்பு இல்லாமல் எதுவும் நடக்கவில்லை என்பதை புரிந்துகொள்ள வேண்டும். வேலு நாச்சியார், ஜான்சி ராணி, தில்லையாடி வள்ளியம்மை போன்ற பெண்களின் சமூக தொண்டுகள் ஆண்களின் தொண்டுகளுக்கு சளைத்தது அல்ல. எனவே பெண்களை வீட்டில் அடைப்பது நாட்டு வளர்ச்சியை தாளிட்டு பூட்டுவதற்கு சமமாகும். 

எனவே பெண்கள் மீதான பாலியல் தாக்குதலுக்கு வெளிக்காரணங்களை ஆராய்வதை விட்டு விட்டு உள் காரணங்களை ஆராய்ந்து பார்க்க வேண்டும். நான் அடிக்கடி கண்ணகியும், சீதையும் கற்புக்கரசிகளாக இருந்தது அதிசயம் இல்லை. காரணம் அப்போது அவர்களை மனம் தடுமாற செய்யும் எவைகளும் நாட்டில் கிடையாது. இன்று நமது தாயும் சகோதரியும் மனைவியும் கற்புடையவர்களாக இருப்பதே அதிசயம் ஏனென்றால் இவர்கள் கெட்டுப்போவதற்கு எல்லாவிதமான காரணிகளும் நாடு முழுவதும் நிறைந்திருக்கிறது என்று சொல்வேன். சினிமா, டிவி, பத்திரிக்கை போன்ற ஜனரஞ்சக ஊடங்கங்கள் ஆபாசத்தை மட்டுமே தங்களது மூல பொருளாக கொண்டு பணியாற்றுகின்றன என்பதே எனது தாழ்மையான கருத்தாகும். 

முன்பு ராணி, குமுதம், ஆனந்த விகடன் போன்ற பத்திரிக்கைகளில் ஜெயராஜ், லதா போன்ற புகழ்பெற்ற ஓவியர்கள் வரைகின்ற படத்தை பார்த்து இவற்றில் சற்று தூக்கலாக ஆபாச நெடி வீசுகிறதே என்று கூட சிலர் சொல்வார்கள். ஆனால் இன்று வருகின்ற பெருவாரியான ஜனரஞ்சக பர்த்திரிக்கைகளில் வருகின்ற ஓவியங்களும் புகைப்படங்களும் காந்தியை கூட தடுமாற செய்துவிடும். சிறிது கூட சமூக அக்கறை இல்லமல். வக்கிரமான உணர்சிகளை தூண்ட கூடிய விதத்தில் அவைகள் வருகின்றன. அவற்றை பார்க்கும் பெரியவர்களின் கற்பனைகளே நீல நிறத்தில் விரிவடையும் போது சிறுவர்களை பற்றி கேட்க வேண்டாம் அன்று இரசியமாக விற்கப்பட்ட மஞ்சள் பத்திரிக்கைகளை தேடி பிடித்து தான் படிப்பார்கள். இன்று அதே பத்திரிக்கைகள் வேறு பெயரில் வந்து ஒன்றுமே தெரியாத. இளைஞர்களின் மனதை சின்னாபின்னமாக்கி சீரழித்து விடுகிறது. கவர்ச்சிப்படம் போட்டு வியாபாரம் செய்பவர்களுக்கு பணம் தான் பெரியதாக தெரிகிறதே தவிர கீழான உணர்சிகள் மேலோங்கினால் பிணங்கள் விழுமே என்ற உண்மை தெரிவதில்லை. 

பத்திரிக்கையாவது கடையிலிருந்து வாங்கி வந்தால் தான் வீட்டில் உள்ளவர்களுக்கு தெரியும் ஆனால் எந்தவிதமான சிரமமும் இல்லாமல் நமது வரவேற்று அறையில் உட்கார்ந்திருக்கும் தொலைக்காட்சி பெட்டி வழியாக வருகின்ற ஆபாசத்தை தடுக்கவே முடியாத அளவு போய்விட்டது. ஆபாசமான நடனங்களும் நடை உடை பாவனைகளும் குழந்தைகளின் மனதை வெகுவாக கெடுக்கிறது. சினிமா, இன்டர்நெட் போன்றவைகளும் இத்தகைய சீரழிவுகளுக்கு பெரும் தொண்டு ஆற்றுகின்றன. கலை என்ற பெயரில் காமம் சொல்லாமல் கொள்ளாமல் வீட்டுக்கு வந்து அமரும் போது எத்தனை நாட்கள் பிள்ளைகளின் கண்களை துணிபோட்டு மறைப்பது. 

கருத்து சுகந்திரம் படைப்பு சுகந்திரம் என்பவைகள் மிகவும் தேவையானதே அதில் ஐயமில்லை ஆனால் ஒருவரின் கருத்தும் படைப்பும் மற்றவனுக்கு உணர்சிகளை தூண்டிவிட்டு பின்விளைவுகளை பாராத செயல்களை செய்ய ஊக்கபடுத்தினால் அது பெரிய தவறு. எனவே படைப்பாளிகள் முதலில் பொறுப்புகளை உணர்ந்து நடந்துகொள்ள வேண்டும். பணத்தை போட்டு தொழில் நடத்துகிறோம் அதில் நியாய தர்மத்தை பார்க்க முடியுமா? என்று கேட்பவர்களை பார்த்து எங்கள் பிள்ளைகள் மட்டுமல்ல உங்கள் பிள்ளைகளும் கூடவே உங்கள் படைபாற்றளால் கெடுகிறதே அதை நிறுத்த கூடாதா? என்று பலநேரம் உபதேசம் செய்து கொண்டிருக்க. முடியாது. எனவே ஆபாச காட்சிகளை கலை என்ற பெயரில் விற்பனை செய்பவர்களை முதலில் சட்ட ரீதியாக தண்டிக்க வேண்டும். 

ஒரு மனிதனை அறம் சார்ந்த மனிதனாக உருவாக்குவதற்கு சமய நம்பிக்கை என்பதும் ஈடுபாடு என்பதும் அவசியமான தேவையாக இருக்கிறது. எனவே போலியாக மதசார்பின்மை என்பதை மாற்றிவிட்டு மதங்களை பற்றிய வழிபாட்டு முறையிலான தெளிவை இளைஞர்கள் மத்தியில் அரசாங்கம் வளர செய்ய துணை செய்ய வேண்டும். அரசு என்பது மதசார்பற்றது என்றால் எல்லா மதங்களையும் சமமாக பார்ப்பது என்பதே பொருளாகும். ஏனோ தெரியவில்லை நமது நாட்டில் மட்டும் தான் மதசார்பின்மை என்பதற்கு கடவுள் மறுப்பு என்ற அர்த்தம் காட்ட படுகிறது. இப்படி பேசுவதை விட்டு விட்டு பள்ளிபருவம் முதற்கொண்டே சமயங்களை பற்றிய விழிப்புணர்ச்சியும் ஈடுபாடும் வருமாறு செய்ய வேண்டும். நாம் நமது பெற்றோர்களிடம் இருந்து பெற்ற பாடத்தை இன்றைய தலைமுறையினரும் பெறவேண்டுமானால் அவர்களை ஒழுக்கம் சார்ந்த வழியில் நடத்துவதற்கு மதம் அவசிய தேவை இதை உணர்ந்து நமது அரசாங்கம் வாரத்தில் ஒருநாளாவது அனைத்து மதங்களை பற்றிய உயர்ந்த கருத்துகளை மாணவர்களுக்கு சொல்ல வேண்டும். 

அன்பும் அஹிம்சையும் அரவணைப்பும் சிறுவயது முதற்கொண்டே ஒருவருக்கு தெரியுமேயானால். அவர் வளர்கின்ற போது ஓரளவாவது மனம் போன போக்கில் போகாமல் அறிவு போன போக்கில் போகவேண்டுமானால் ஆன்மீக கருத்துக்களை சிறுவயது முதற்கொண்டே குழந்தைகளுக்கு கொடுத்தால் ஓரளவாவது பிரச்சனைகள் தீர்ந்துவிடும் என்று நம்புகிறேன். ஒரு மனிதனை தண்டனைகள் மட்டுமே திருத்துவது இல்லை. அப்படி திருத்துவதாக இருந்தால் இன்று நாட்டில் குற்றங்களே நடைபெறாது. தண்டனையை காட்டி ஒருவனை தடுப்பது பெரிய அபாயத்தை ஏற்படுத்தும் பல நாள் கட்டுப்பட்ட மனம் திடீர் என்று பேயாட்டம் போட துவங்கி விடும். கெட்ட சிந்தனையே வராமல் தடுத்து விட்டால் குற்றங்கள் குறைந்துவிடும் தண்டனைக்கு இடமிருக்காது. 

எனவே பெண்களுக்கு எதிரான கொடுமைகள் முடிவிற்கு வரவேண்டும் என்றால் அறம் சார்ந்த படிப்பு ஆன்மீகம் சார்ந்த படிப்பு மனிதனுக்கு தேவை அதை சரியான முறையில் அரசாங்கம் கொடுத்தால் கண்டிப்பாக தவறு செய்பவர்களின் எண்ணிக்கை குறையும். அதை விட்டு விட்டு குற்றம் நடக்கும் போது மட்டுமே குதிப்பதும் ஆளாளுக்கு கருத்துக்கள் சொல்வதும் மிக சிறந்த அறியாமையாகும். நடப்பதற்கு முன்பே தடுக்கும் வழியை காணுபவனே சிறந்த மனிதன் என்பது என் கருத்து அப்படி ஒரு சமுதாயம் உருவானால் மட்டுமே மறைந்து போன பாலியல் கொடுமைகளுக்கு உள்ளான ஆத்மாக்கள் நம்மை வாழ்த்தும்.


Contact Form

Name

Email *

Message *