Store
  Store
  Store
  Store
  Store
  Store

தேசிய கட்சிகளுக்கு ஆண்மை இருந்தால் ...!



    தேசிய கட்சிகளான காங்கிரசும் பாரதிய ஜனதாவும் தமிழ்நாட்டில் தலைகீழாக நின்றால் கூட ஆட்சியை பிடிக்க முடியாது என்ற அனைவரும் அறிந்த உண்மையை அதிரடியாக அறிவித்து ஒரு சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறார் தமிழ்நாட்டு முதலமைச்சர் அவர் அப்படி கூறி இருப்பதன் காரணம் கர்நாடகத்தில் ஆட்சி செய்கின்ற கட்சியும் மத்தி அரசில் ஆளும் கட்சியும் காவேரி விஷயத்தை பொருத்தவரை தங்களது தேசிய மனநிலையை மாற்றி கொண்டு குறுகிய அரசியல் ஆதாயம் அடைவதற்காக தமிழ்நாட்டிற்கு மாறி மாறி துரோகம் செய்துவிட்டார்கள் இவர்கள் தேசியம் ஒருமைப்பாடு என்று பேசுவதெல்லாம் வெறும் கேலி கூத்து திண்ணை பேச்சி என்ற எண்ணத்தில் அவர் அப்படி பேசியிருக்கிறார்.

முதல்வர் அவர்கள் சொல்லுவதை மேலோட்டமாக பார்க்கும் போது வரப்போகிற நாடாளுமன்ற தேர்தலில் தனது கட்சியின் நிலைபாட்டை சூசகமாக அறிவிப்பதற்காகவே அப்படி பேசி இருக்கிறார் என்று தோன்றும். ஒருவகையில் அந்த தோற்றம் சரியானதே என்றாலும் அதனுள் மறைந்திருக்கும் கசப்பான உண்மைகளை நாம் எண்ணி பார்க்க வேண்டும்.

இந்தியாவில் உள்ள வேறு எந்த மாநிலமும் அனுபவித்து அறியாத பிரச்சனைகளை தமிழ்நாடு அனுபவித்து வருகிறது. மத்தியரசின் வளர்ச்சி திட்டங்கள் போனால் போகட்டும் என்ற ரீதியில் தமிழ்நாட்டிற்கு பிச்சை போடுவதாகவே அமைந்துள்ளது. ரெயில்வே துரையின் வளர்ச்சியாகட்டும் தகவல் தொழில்நுட்ப துறையில் அரசு சார்ந்த வளர்ச்சியாகட்டும் சுகாதாரம் வேளாண்மை போன்ற துறைகளில் காணவேண்டிய வளர்ச்சியாகட்டும் அவற்றில் ஐம்பது வருடகாலமாக தமிழ்நாடு போதிய அளவு நடுவண் அரசியிடம் இருந்து ஒத்துழைப்பை பெறவில்லை என்று உறுதியாக சொல்லலாம்.


இதற்கு காரணம் இங்கே உள்ள அரசியல்வாதிகள் மத்திய ஆட்சியாளர்களை வரம் கொடுக்கின்ற கடவுளாக பார்த்து கையெடுத்து கும்பிடுவதில் கவனம் செலுத்தினார்களே தவிர மத்திய அரசு தமிழ்நாட்டிற்கும் செய்வதற்கு கடமை பட்டிருக்கிறது என்பதை மறந்து அல்லது அந்த எண்ணமே இல்லாத மத்திய ஆட்சியாளர்களை இடித்து கேட்க தயங்கி இருந்ததே ஆகும் என்று சிலருக்கு தோன்றும்.

காங்கிரஸ் கட்சியை எதிர்த்து அரசியல் நடத்தி அதிகாரத்தை கைப்பற்றிய திராவிட கட்சிகள் நாளடைவில் எந்த வகையிலாவது காங்கிரசாருக்கு சலாம் போட்டு தங்கள் தவறுகளை வெளிவராமல் தடுப்பதில் கவனம் செலுத்தினார்கள். அல்லது மத்தியில் சில மந்திரி பதவிகளை தோப்புகரணம் போட்டாவது பெற்று நறுக்கென்று நாலு காசு சம்பாதிப்பதில் முனைப்பு காட்டினார்கள். பொதுவாக சொல்ல போனால் திராவிட கட்சிகள் மத்திய அரசை தங்களது சுகபோகத்தை பறிக்காமல் இருக்க என்னென்ன வகையில் திருப்தி படுத்தலாம் என்று நினைத்தனவே தவிர மாநிலத்திற்கு தேவையான சலுகைகளை உரிமையோடு பெற்று தருவதில் எந்த வகையிலும் கவனம் கொள்ளவில்லை.


ராஜீவ் காந்தியோடும் சரி அவருக்கு பிறகு வந்த காங்கிரஸ் பிரதமர் நரசிம்மராவோடும் சரி ஜெயலிதா முதல்வராக இருந்தபோது நல்ல நட்புடனே இருந்தார். தனது நட்பையும் செல்வாக்கையும் பயன்படுத்தி பல விஷயங்களை சாதித்திருக்கலாம். ஆனால் அவருக்கு அப்போது தமிழகத்தின் நலன் என்பதே கண்ணில் படவில்லை தனது சொந்த நலனும் தோழியின் நலனுமே கண்முன்னால் நின்று நர்த்தனம் ஆடியது.

மத்திய அரசியலில் யாருக்குமே கிடைக்காத ஒரு அறிய வாய்ப்பு கருணாநிதிக்கு கிடைத்தது அவரும் அவரது அரசியல் ஆசானான அண்ணாதுரையும் ஆரம்ப காலத்தில் வடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது என்று கூறியே அரசியல் நடத்தினார்கள். அப்படி ஒரு மாயையை ஏற்படுத்தியே பதவிக்கும் வந்தார்கள் தங்களால் எந்த நல்லதையும் செய்ய முடியாத போது அதற்கு காரணம் மத்திய அரசு சரியான ஒத்துழைப்பு தரவில்லை என்று காரணம் கூறியும் கால நேரத்தை கடத்தி அரசியலை நடத்தினார்கள்.

வடக்கில் சரியான பலத்தோடு நாம் இருந்தால் தமிழ்நாட்டில் வானத்தை வில்லாக வளைத்து விடலாம் மணலை கயிறாக திரித்து விடலாம் என்று வார்த்தை ஜாலம் விளையாடிய கலைஞர் அவர்கள் நிஜமாகவே அப்படி ஒரு வாய்ப்பு சோனியாகாந்தி காலத்தில் கிடைத்த போது தனது மகனுக்கும் மகளுக்கும் பேரனுக்கும் மந்திரி பதவி வாங்குவதில் கவனம் செலுத்தினாரே தவிர தமிழ்நாட்டிற்கு நியாயமாக கிடைக்கவேண்டிய எந்த உரிமையையும் பெற்று தருவதற்கு எண்ணி கூட பார்த்ததில்லை.

திராவிட கட்சிகளில் நிலைமை இப்படி என்றால் தேசிய கட்சிகளின் நிலைமையோ இதை விட பரிதாபம் என்றே சொல்ல வேண்டும். காமராஜருக்கு பிறகு தமிழ்நாட்டு காங்கிரசின் தலைமை பொறுப்பில் இருந்த எவருக்கும் தமிழ்நாட்டை பற்றிய அக்கறையும் இருந்தது இல்லை மாநில உரிமையை எந்த வகையிலாவது பெறவேண்டும் என்ற துணிச்சலும் இருந்தது இல்லை. தங்களை தங்ககளது கோஷ்டியை வலுபடுத்துவதில் செலுத்திய கவனத்தில் கடுகளவு கூட நாட்டு நலனை சிந்திக்க வில்லை.

காங்கிரஸ் தலைமையில் இருப்பவர்களை துதிபாடி பதவிகளை பெற்று தான் வளரவேண்டும் அதே நேரம் தனது எதிரிகள் எந்த வகையிலும் வளர்ந்து விட கூடாது என்ற போட்டா போட்டி தமிழ்நாட்டு காங்கிரஸ் தலைவர்களுக்கு இருந்ததை அறிந்த மத்திய தலைவர்கள் இவர்களை கதர்வேட்டி கட்டிய கோமாளிகளாகவே நடத்தினார்கள். அறுபத்து ஏழுக்கு பிறகு எந்த தமிழ்நாட்டு தலைவர்களின் கருத்துக்களை டெல்லி தலைவர்கள் காது கொடுத்து கேட்காமல் போனதற்கு இதுவே முக்கிய காரணம்.

தமிழ்நாட்டு காங்கிரஸ் தலைவர்களில் செயல்வேகம் மிக்கவர்கள் என்பவர்கள் ஒன்று நல்ல முறையில் டெல்லிக்கு காவடி தூக்குபவர்களாக இருந்திருக்க வேண்டும் அல்லது ஒரு அடிமை போல டெல்லி சொல்லும் அனைத்து சொல்லுக்கும் தலையாட்டுவர்களாக இருந்திருக்க வேண்டும். இந்த தலைவர்களின் தகுதியை மனதில் வைத்தே திராவிட கட்சிகளின் எதாவது ஒன்றின் தயவை பெற்று நாடாளுமன்ற தேர்தலில் அதிக இடங்களை பெற்றால் போதும் மற்றப்படி தமிழ்நாட்டை பற்றி அதிகம் சிந்திக்க வேண்டாம் என்ற மனோபாவம் மத்தியில் உள்ளோர்களுக்கு வளர்ந்து விட்டது.

இதனாலையே கழுதை தேய்ந்து கட்டெறும்பாக ஆனதை போல் காங்கிரஸ் இன்று தமிழ்நாட்டில் முற்றிலுமாக கரைந்து ஒரு எலும்பு கூட்டை போல் ஆகி விட்டது. இது காங்கிரஸ் கதை என்றால் பாரதிய ஜனதாவின் கதை இதை விட பரிதாபமானது காங்கிரஸ் பெயராவது தமிழ்நாட்டில் இருக்கும் கடைகோடி மனிதனுக்கும் தெரியும் பாஜக பெயர் இன்னும் பலருக்கு தெரியாது. பாஜக என்றாலே ராமருக்கு கோவில் கட்டும் கட்சி என்று தான் பலர் நினைக்கிறார்கள்.

இத்தனைக்கும் பாஜக தனது அரசியல் பணியை தமிழ்நாட்டில் இன்று நேற்று துவங்கவில்லை சற்றேற குறைய என்பதாம் ஆண்டு முதலே துவங்கி விட்டது எனலாம். மத்தியில் ஆட்சி பொறுப்பை பெற்ற பிறகும் சில எம்.எல்.ஏ - க்களை தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு அனுப்பிய பிறகும் தமது கட்சி கட்டுமானத்தை அடிமட்டத்திலிருந்து அது  வளர்க்க துவங்க வில்லை. உண்மையை சொல்ல போனால் நேற்று துவங்கப்பட்ட இந்து மக்கள் கட்சியை விட பாஜக வின் தொண்டர்பலம் மிக குறைவே ஒரு போராட்டம் என்றால் அர்ஜூன் சம்பத்தால் குறைந்தது ஆயிரம் பேரையாவது திரட்ட முடியும் இல.கணேசன்இ பொன் இராதகிருஷ்ணன் இவர்களால் அந்த அளவு கூட்டம் கூட்ட முடியுமா என்றால் முடியாது என்றே சொல்லலாம்.

இதற்கு காரணம் என்ன? காங்கிரஸ் கட்சியில் உள்ள கோஷ்டி பூசல்கள் தமிழ்நாட்டு பாரதியஜனதா கட்சியிலும் நடக்கிறது. காங்கிரஸ் கட்சியில் கூட தான் தலைவராக வரவேண்டும் எனதற்கு கோஷ்டி சேற்கிறார்களே ஒழிய பாரதிய ஜனதா கட்சியை போல் வேறொருவரும் தலைவராக வந்து விட கூடாது என்பதற்காக கோஷ்டி சேர்க்கவில்லை இன்னுமொரு விபரீதமான நிலைப்பாடு பாஜக வில் இருக்கிறது நன்றாக செயல்படுகிறவர்கள் புதிதாக கட்சிக்கு வந்தால் அவரை வளர விட்டுவிட கூடாது அவர் வளர்ந்தால் தங்களுக்கும் பாதிப்பு என்ற எண்ணத்தில் அனைவரும் கூட்டு சேர்ந்து வந்தவரை துரத்துவதில் முனைப்பு காட்டுகிறார்கள். இது டெல்லி தலைவர்களுக்கு தெரியாதது அல்ல இருந்தாலும் அவர்கள் தங்களுக்குள் நடக்கும் பங்காளி சண்டையை பார்ப்பதில் கவனம் செலுத்துகிறார்களே தவிர கட்சி வளர்வதை பற்றி கவலைப்படுவது இல்லை.

நிலைமை இப்படியே போனால் மலடி பெற்ற மகன் கொம்பு முளைத்த குதிரையில் ஏறி ஆகாயத்துக்கு பறந்து சென்று தாமரை பூவை பறித்து வந்தால் தான் தமிழ் நாட்டில் தேசிய கட்சிகள் வளரும் என்று சொல்லும் அளவிற்கு நிலைமை போகும். மாநில கட்சிகள் வந்தால் என்ன? தேசிய கட்சிகள் வந்தால் என்ன? எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தானே? என்று சில நல்ல மனிதர்கள் நினைக்கிறார்கள் அவர்கள் நினைப்பு சரிதான் என்றாலும் வேறு சிலவற்றை கவனத்தில் கொள்ள வேண்டிய அவசியம் இருக்கிறது.


இந்தியாவின் வடக்கு எல்லையில் மட்டுமே ராணுவ பாதுகாப்பும் கண்காணிப்பும் அதிகமாக இருக்கிறது தெற்கு பகுதியில் பகைநாடுகள் எதுவும் இல்லை என்பதனால் அங்கே பாதுகாப்பை போதுமான அளவு பலப்படுத்தவில்லை எனவே தெற்கு எல்லை  வழியாக ஊடுருவினால் இந்தியாவின் அமைதியையும் ஒருமை பாட்டையும் சீர்குலைத்து விடலாம் என்று சில அந்நிய சக்திகள் கணக்கு போட்டு செயல்பட்டு வருகின்றன. தங்களது செயல்களை இலங்கை அரசாங்கத்தின் தோழமையோடு செய்து முடிக்கலாம் என்ற கணக்கும் அவைகளுக்கு இருக்கின்றன.

விடுதலை புலிகளை ஒழித்து கட்டியதில் இலங்கை அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு செய்ததினால் இலங்கை இந்திய அரசோடு விசுவாசம் காட்டுமென்று மன்மோகன் சிங் அரசாங்கம் தப்பு கணக்கு போடுகிறது. இந்தியாவின் மீது பாகிஸ்தான் படையெடுத்த போதும் சீனா பெரும் தாக்குதல் நடத்திய போதும் அதை பற்றி ஒரு சிறு கண்டனம் கூட தெரிவிக்காத நாடு இலங்கை. அந்த நாட்டின் சிங்கள அரசியல்வாதிகளின் மனம் எப்போதுமே சீனாவையும் பாகிஸ்தானையும் நாடுமே தவிர இந்தியாவை வேண்டா வெறுப்பான தோழனாகவே பார்க்க பழகி இருக்கிறது.

இதன் விளைவாக அமைதி பூங்காவான தமிழ்நாட்டில் சீனாவின் ஆசி பெற்ற தீவிரவாத அமைப்புகள் நிழல் மறைவில் செயல்பட துவங்கி விட்டன. இந்த நேரத்தில் இந்திய அரசு நமது கட்சிகளுக்கு தான் தமிழ்நாட்டில் எதிர்காலம் இல்லையே அதற்காக எதற்கு சலுகைகளை காட்ட வேண்டும்? தமிழகத்தின் உரிமைகளை நியாப்படி எதற்கு கொடுக்கவேண்டும்? என்ற மனோபாவத்தை தொடர்ந்து கடைபிடித்தால் தமிழ்நாட்டில் சிறு குழுக்களாக செயல்படும் தமிழ் தேசிய வாதிகள் சீனாவின் கைப்பாவையாக மாறி விபரீதமான விளைவுகளை ஏற்படுத்தவும் வாய்பிருக்கிறது.

நமது திராவிட கட்சிகள் ஆரம்ப காலத்தில் தங்களை வளர்த்து கொள்ள ஆங்கிலேயன் கட்டிவிட்ட ஆரிய திராவிட கதைகளை உண்மையானதாகவும் சரித்திர பூர்வமானதாகவும் தானும் நம்பி மக்களையும் நம்ப வைத்து வடக்கு தெற்கு என்ற பேதங்களை மிக ஆழமாகவே ஏற்படுத்தி இருக்கிறார்கள். இந்த நிலையில் தமிழ் தேசியவாதிகள் கையில் எடுக்கும் பிரிவினை கோசத்தை நியமான முறையில் இவர்களால் எதிர்கொள்ள முடியாது எதிர்கொள்ளவும் மாட்டார்கள்.

இதனால் ஐம்பது வருடமாக தமிழன் கொண்டுள்ள அரசியல் சிந்தனையை மாற்ற வேண்டிய இக்கட்டான சூழல் இன்று இருக்கிறது. இந்த காலத்தின் கட்டாயத்தை உணர்ந்து அதை செயல்படுத்த வேண்டிய கடமையும் பொறுப்பும் தேசிய கட்சிகளுக்கும் தேசிய  அமைப்புகளுக்கும்  இருக்கிறது. ஆனால் அவைகள் இதை உணர்ந்ததாக தெரியவில்லை சிறுபிள்ளைகள் விளையாடுவது போல பதவிக்காக விளையாடி கொண்டிருக்கிறார்கள். அதனால் தான் நமது முதல்வர் அவர்கள் தலைகீழே நின்றாலும் உங்களால் வளர முடியாது என்று முகத்தில் அடித்தார் போல் பேசி இருக்கிறார்.

உண்மையாகவே தேசிய கட்சிகளுக்கு நாட்டின் மீது அக்கறை இருந்தால் தாங்களும் வளருவோம் தங்களாலும் வளர முடியும் என்ற ஆண்மை இருந்தால் முதல்வரின் பேச்சை ஒரு சவாலாக எடுத்து கொண்டு செயல்பட வேண்டும். அது முடியாவிட்டால் நியாய தர்மங்களுக்கு கட்டுப்பட்டு அரசியலை விட்டு விலகி விடவேண்டும். இந்த இரண்டில் எது செய்தாலும் அது தமிழ்நாட்டிற்கு அல்ல அல்ல இந்தியாவிற்கு அவர்கள் செய்த தொண்டாகவே இருக்கும்.



Contact Form

Name

Email *

Message *