Store
  Store
  Store
  Store
  Store
  Store

ஜாதியை மாற்றிக் கொள்ளலாம் வாருங்கள் !

இந்துமத வரலாறு கேள்வி பதில் 1

     இதுவரையில் இந்துமத வரலாறு தொடர்பதிவில் குருஜி எழுதிய பல விஷயங்களுக்கு விளக்கம் கேட்டு நிறைய மின்னஞ்சல்களும் கடிதங்களும் வந்திருந்தன அவைகள் ஒவ்வொன்றிற்கும் தனித்தனியாக பதில் சொல்வதாக இருந்தால் தொடர்ந்து எழுதி வருகின்ற விஷயங்களுக்கு சுவாரஸ்யம் இல்லாமல் ஆகிவிடும் என்பதனால் பதிவு முடிந்த பிறகு அந்தந்த கேள்விகளுக்கு பதிலளிப்பதாக முடிவு செய்தோம். அந்த வகையில் தேர்ந்தெடுக்க பட்ட சில கேள்விகளை இங்கு தருகிறோம். 


       நீங்கள் கூறிவரும் இந்துமத வரலாற்றை படிக்கிறபோது அறிவுப்பூர்வமான விஷயங்கள் பல இந்துமதத்தில் இருப்பது தெரிய வருகிறது இவ்வளவு அறிவுப்பூர்வமான விஷயங்களை கூறிய நமது முன்னோர்கள் ஜாதி என்ற ஒன்றை ஏன் ஏற்படுத்த வேண்டும் அதற்காக வர்ணாஸ்ரம தர்மம் என்ற ஒரு வழக்கத்தை உருவாக்க வேண்டும் என்பதை தயவு செய்து விளக்க வேண்டுகிறேன் காரணம் நமது மதத்தை குறை கூறுகிற பலர் இங்குள்ள ஜாதி வித்தியாசங்களை காட்டி பரிகாசம் செய்கிறார்கள் அதற்கு எங்களால் பதில் கூற இயலாமல் மெளனமாக போக வேண்டிய நிலை இருக்கிறது.

இப்படிக்கு 
துரைசாமி
திண்டுக்கல் 



      ந்து மதம் என்பதே ஜாதிகள் நிறைந்த மோசமான அமைப்பு. மனிதருக்கு மனிதர் வித்தியாசம் பாராட்டும் அந்த அமைப்பில் நல்ல விஷயங்கள் எப்படி இருக்க கூடும்? எங்கள் மதத்தில் உள்ள ஜாதி வேற்றுமைகளுக்கு உங்களால் விளக்கம் கூற இயலுமா? பேசாமல் பழைய பொருள்களை ஒதுக்குவது போல இந்து மதத்தையும் ஒதுக்கி விட்டு வேலையை பாருங்கள். அது இதுவென்று சொல்லி இளைஞர்களின் மனதை கெடுக்காதீர்கள்.

இப்படிக்கு 
அருள்மேரி 
தூத்துக்குடி 

  
       நீங்கள் கடவுள் ஜாதிகளை படைத்துள்ளார் என்று கூறும் மதத்தின் சொந்தக்காரர்கள் கடவுள் படைப்பில் ஏற்றத்தாழ்வுகள் கிடையாது சமத்துவமான சமூகம் உருவாக காரணமாக இருக்கும் மார்க்கத்தை கடைபிடிக்க துவங்குங்கள்.

இப்படிக்கு 
ராஜமுகமது 
துபாய்            



     மேலே குறிப்பிட்ட கேள்விகளை படிக்கும் போது அவைகள் பொய்யான கற்பனையான தகவல்களின் அடிப்படையில் வேண்டுமென்றே இட்டுக்கட்டப்பட்ட கேள்விகள் என்று நமக்கு தோன்றாது அவற்றில் இருக்கும் வெளிப்படையான உண்மைகளை பலகாலமாக நாம் அனுபவித்து வருகிறோம் பிறப்பால் நீ தாழ்ந்தவன் நான் உயர்ந்தவன் என்ற வாதங்கள் இந்த நாட்டில் எப்போதுமே இருந்து வருகிறது வாதங்கள் வாதங்களாக இருந்தால் எவரும் அதை பற்றி கவலைப்பட போவதில்லை ஆனால் அந்த வாதங்களை நடைமுறை வாழ்வோடு இணைத்து பல கொடுமைகள் நாடு முழுவதும் நடந்து வருகிற போது கவலைப்படாமல் இருப்பது என்பது மனித தன்மையற்ற செயலாகும். 

மதம் என்பது மனிதனை பண்படுத்தி செழுமையாக்கி அவனுக்குள் இருக்கிற அழுக்காறு வெகுளி என்பவைகளை தூய்மையாக்கும் ஒரு கருவியாக இருக்க வேண்டுமே தவிர தவறான பாதையில் அழைத்து செல்வதாக இருக்க கூடாது. மனிதருக்கு மனிதர் உயர்வு தாழ்வு கற்பித்து அதன் மூலம் சுகம் காணுவது ஒரு மதத்தின் ஆதாரமான கருத்து என்றால் அதை பற்றி நாம் மறுபரீசீலனை செய்ய வேண்டும் அந்த வகையில் இந்து மதத்தின் மேல் குறை காண்பவர்களும் குற்றம் சொல்கிறவர்களும் ஜாதி என்ற விஷயத்தை மிக பிரதானப்படுத்தி இந்து மதம் என்றாலே ஜாதிகளை உருவாக்கி வளர்த்து வருகிற ஒரு அமைப்பு என்ற எண்ணத்தை ஏற்படுத்தி வருகிறார்கள்.

நமது மதத்தில் உள்ள சில சாஸ்திர நூல்களை மேலோட்டமாக படிக்கும் போது அதில் சொல்லப்பட்டுள்ள ஜாதி பற்றிய சிந்தனைகள் நமக்கே கூட அதிர்ச்சி தருவதாக இருக்கிறது. ஆனால் இந்து மதத்தை மட்டுமல்ல மற்ற மதங்களையும் ஆராய்கிற போது நேரடியான மேம்போக்கான எண்ணங்களின் அடிப்படையில் ஆராயக்கூடாது ஆழமான முறையில் ஆராய வேண்டும் என்பதை மனதில் வைக்க வேண்டும். அறிவியல், வரலாறு போன்றவற்றை கூறுகிற போது பயன்படுத்துகிற வார்த்தைகளை நேரடியான முறையில் அர்த்தபடுத்திக்கொள்ளலாம். ஆனால் தர்மம், தத்துவம், மதம் என்று வருகிற போது ஒரு வார்த்தைக்கு பல பொருள் இருப்பதையும் இடத்திற்கு ஏற்றவாறு அவைகளின் பொருள்களில் மாறுதல்கள் உண்டு என்பதையும் மறந்துவிட கூடாது. 

அதே வகையில் தான் வர்ணாசிரம தர்மம் என்பதையும் நாம் சிந்திக்க வேண்டும் இப்போது நான் கூறப்போகிற விஷயங்களை வர்ணாசிரம தர்மங்கள் பற்றி நாம் இதுவரை கொண்டிருக்கின்ற அனைத்துவிதமான கருத்துக்களையும் நம்பிக்கைகளையும் சற்று விலக்கிவைத்து விட்டு யதார்த்தமான முறையில் சிந்தித்து பார்ப்பீர்கள் என்றால் அதற்குள் இருக்கின்ற சத்தியமான உண்மை எவ்வளவு தெளிவானது என்று உங்களுக்கு புரியும் ஒன்றை பற்றி இது இப்படிதான் என்ற முடிவோடு அணுகி ஆராய்கிற போது தான் சிக்கல் ஏற்படுகிறது.

நமது முன்னோர்கள் நம்மை விட அறிவார்ந்தவர்கள் பொறுப்பு மிக்கவர்கள் எதையும் தான்தோன்றித்தனமாக கூறாதவர்கள் என்பது நமக்கு தெரியும் அப்படிப்பட்ட நமது முன்னோர்கள் தர்மம் என்ற வார்த்தைக்கு எவ்வளவு உயர்ந்த அந்தஸ்து கொடுத்திருந்தார்கள் என்பது நாம் அறியாதது அல்ல கால நேர சூழலுக்கு மாறாமல் நிரந்தரமாக நன்மை தரக்கூடியதாக எது இருக்கிறதோ அதுவே தர்மம் என்று நமது முன்னோர்கள் கண்டிருக்கிறார்கள். அப்படிப்பட்ட முன்னோர்கள் நாம் கருதுவது போல பிறப்பால் ஏற்றத்தாழ்வுகளை கற்பித்து மனிதாபிமானம் அற்ற முறையில் இருக்கிற ஒரு தத்துவத்தை தர்மம் என்ற வரிசையில் அழைப்பார்களா என்பதை சிந்திக்க வேண்டும் வர்ணாசிரம தர்மம் என்று அவர்கள் இதற்கு பெயர் சூட்டியதற்கே நுட்பமான காரணம் உண்டு. 

வர்ணாசிரம தர்மம் என்று ஒரே வார்த்தையில் இதை நாம் அழைத்தாலும் இதனுள் மூன்று விதமான வார்த்தைகள் இருக்கிறது. முதலில் உள்ளது வர்ணம். வர்ணம் என்றால் நிறமோ ஜாதியோ அல்ல ஒரு மனிதனின் இயல்பான குணத்தை வர்ணம் என்று சொல்லலாம். அடுத்து வரும் ஆஷ்ரம என்ற பதத்திற்கு பருவ நேரம் என்று பொருள் கொள்ளலாம். தர்மம் என்றால் நிலையானது எப்போதும் மாறாதது என்பது நமக்கு தெரியும் அதாவது எப்போதும் மாறாத இயல்பான பருவம் அல்லது நேரம் அல்லது இயல்பு என்ற பொருளை வர்ணாசிரம தர்மம் என்ற வார்த்தைக்கு மிக எளிமையான கொடுக்கலாம் அப்படி கொடுத்தால் அது தவறுதலானது அல்ல அதற்கு காரணம் இருக்கிறது. 

இந்த மனித சமூகம் இருக்கிறதே இது முன்னேறுவதற்கு அடிப்படையாக என்ன தேவை? அல்லது இந்த சமூகம் நீடித்து வாழ்வதற்கு என்ன தேவை? என்று சிந்தித்துக்கும் போது ஒரு மனிதனோ மனித கூட்டமோ உடம்பால் ஜீவித்திருப்பதற்கு உற்பத்தி என்பது மிகவும் அவசியம் அதாவது உணவு மற்றும் அத்தியாவசிய பொருள்களை உற்பத்தி செய்வதற்கு உற்பத்தியாளர்கள் கண்டிப்பாக தேவை இப்படி உற்பத்தியாளர்கள் உருவாக்கிய பொருள்களை எல்லோருக்கும் தேவைக்கு ஏற்றபடி விநியோகம் செய்வதற்கு விநியோகஸ்தர்கள் இல்லாமல் இருந்தால் நிலைமை சீர்கெட்டு விடும். உதாரணமாக இரும்பை உற்பத்தி செய்பவன் அந்த இரும்பை வைத்து பசியாற முடியுமா? அவனுக்கு உணவு உண்ண தானியங்கள் தேவை அந்த தானியத்தை மற்ற கருவிகளின் உதவிகள் இல்லாமல் உருவாக்கிவிட முடியுமா? எனவே ஒருவனுக்கு தேவையானதை மற்றவனிடம் இருந்து பெற்று உற்பத்தி பொருளை பரவலாக கிடைப்பதற்கு விநியோகஸ்தர்கள் இல்லாமல் முடியாது. இந்த இருவருமே ஒரு சமூதாயத்தின் ஆதாரக்கூறுகளாக இருக்கிறார்கள். 

இங்கே உற்பத்தியாளர்கள் என்பவர்களை வர்ணாசிரம தத்துவ நோக்கில் சூத்திரர்கள் என்று அழைக்கிறோம். சூத்திரம் என்றால் ஒன்று உருவாக காரணமாக இருப்பது என்பது நமக்கு தெரியும். எனவே ஒரு பொருள் உற்பத்தியாக சூத்திரன் காரண கர்த்தாவாக அமைகிறான். அதே போலவே சூத்திரன் தயாரித்த பொருள்களை நாலாபக்கமும் கிடைக்க வழி செய்பவன் வைசீகன் அதாவது வியாபாரி விநியோகஸ்தன் என்று இவனை அழைக்கலாம். ஒரு சமூகம் முழுமையான சமூகமாக வளர வேண்டுமானால் இந்த இருவர் இருந்தால் மட்டும் போதாது காரணம் இவர்கள் இருவர் மட்டுமே இருக்கிறார்கள் என்றால் பல குழப்பங்கள் உருவாகி விடும். உதாரணமாக என்னிடம் பச்சை மிளகாய் மட்டும் இருக்கிறது உணவருந்த அரிசி இல்லை என்றால் அந்த அரிசியை வைத்திருப்பவன் ஒரு பிடி அரிசிக்கு நாலு வண்டி மிளகாய் கேட்டாலும் நான் கொடுத்தே ஆகவேண்டும். இப்படி ஒரு சமூகம் இருந்தால் அது நாளடைவில் நலிந்து போய்விடும் இல்லாமலே மறைந்து போய்விடும். 

எனவே உற்பத்தியும் விநியோகமும் சமமான நோக்கில் நடைபெறுவதற்கு ஒரு பாதுகாவலன் வேண்டும் அவன் தனது ஆற்றலால் வலிந்தவனையும் மெலிந்தவனையும் ஒரே பாங்கில் நடத்தி சமூக நிர்வாகத்தை குளறுபடி இல்லாமல் பாதுகாத்து கொள்ள வேண்டும். எனவே இந்த இடத்தில் நிர்வாகி என்பவன் கண்டிப்பான தேவையாகி விடுகிறான் இந்த நிர்வாகிக்கு வேறொரு பெயர் தான் சத்திரியன் இப்போது உற்பத்தியாளனும் விநியோகஸ்தனும் வந்துவிட்டார்கள் அவர்களை சரியான முறையில் இயக்குவதற்கு நிர்வாகியும் வந்துவிட்டான் சமூதாய தேவை இத்தோடு முற்றுப்பெறுகிறது என்று விட்டுவிட இயலாது. ஒரு சமூதாயம் நின்ற இடத்திலிருந்து அசையாமல் இருக்கிறது என்றால் அது நாளடைவில் நலிந்து போய்விடும். அப்படி நலியாமல் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுகமாக வளர வேண்டுமானால் வளர்வதற்கு புதுப்புது திட்டங்களை வகுத்து கொடுக்க அறிவாளி என்றொருவன் அவசியமாகிறான் மற்ற மூன்று பேரும் உடலை வருத்தி காரியமாற்றுகிற போது  அதற்கான திட்டமிட்டு கொடுப்பவன் தனது மூளையை பயன்படுத்த வேண்டும் அப்படி பயன்படுத்தி புதுப்புது வழிவகைகளை ஏற்படுத்தி கொடுப்பவனை வர்ணாசிரம தர்மம் பிராமணன் என்கிறது.

இது தான் இந்து மதம் கூறுகிற வர்ணாசிரம தர்மம் இதில் ஒருவன் உயர்ந்தவன் என்றோ இன்னொருவன் தாழ்ந்தவன் என்றோ கூற இயலாது. அவனவன் நிலையில் அவனவன் உயர்ந்தவனாக இருந்தால் தான் மனித சமூகமானது காலங்களை வென்று உலகத்தில் வாழமுடியும். இத்தகைய கட்டுக்கோப்பு இல்லாத எந்த சமூகமும் வளர முடியாது. மேலும் உற்பத்தியாளன், விநியோகஸ்தன், நிர்வாகி, திட்டமிடுபவன் என்ற பிரிவுகள் உலகம் முழுவதற்கும் பொதுவானதே தவிர ஒரு குறிப்பிட்ட இனத்தாருக்கோ மதத்தாருக்கோ பொதுவானது அல்ல. அதன் அடிப்படையில் பார்க்கும் போது வர்ணாசிரம தர்மம் என்பது இல்லாத மதமோ நாடோ இல்லை என்றே துணிந்து கூறலாம் இப்படி எல்லாவற்றிற்கும் பொதுவானதாக நிலையானதாக எப்போதும் மாறாத தன்மையுடையதாக வர்ணாசிரமம் என்பது இருப்பதனால் தான் அதற்கு தர்மம் என்ற பெயரை நமது முன்னோர்கள் வைத்தார்கள். எனவே தர்மம் என்ற இவைகள் எதுவும் அவமானங்கள் அல்ல வெகுமதியே என்பதே முதலில் நாம் உணர வேண்டும்.

நமது இந்துமதம் வகுத்து கொடுத்த வர்ணாசிரம தர்மம் என்பது இது தான். இதில் தவறு இருப்பதாக யாரும் குறை கூற இயலாது பிரச்சினை எங்கே வருகிறது என்றால் நான் திட்டமிடுகிறவன் அறிவை பயன்படுத்துகிறவன் அதனால் எனக்கு முக்கியத்துவம் வேண்டும் என்று ஒருவன் கேட்டால் அதில் தவறு இல்லை காரணம் ஓர் நிர்வாகத்தில் வாயிற்காப்பவனுக்கும் இயக்குனருக்கும் ஒரே மாதிரியான சம்பளமும் மரியாதையும் கொடுக்க முடியாது அதற்காக நான் இயக்குனர் எனக்கு கொடுக்கிற மரியாதையை என் மகனுக்கும் என் பேரனுக்கும் கொடு என்று சொல்லுகிற போது தான் பிரச்சனை வருகிறது. அடிப்படைத்தத்துவமான வர்ணாசிரம தத்துவம் பிரச்சனைக்குறியதாக ஆகிப்போனதற்கு மதமோ தர்மமோ அதை வெளிபடுத்தியவர்களோ உருவாக்கியவர்களோ காரணம் அல்ல அவர்கள் உருவாக்கியதில் பயணம் செய்த அடுத்த தலைமுறையினரே அவர்களின் சுயநலமே காரணம் என்று அடித்து கூறலாம். 


இதை படிக்கிற போது அடிப்படையான ஒரு கேள்வி எழும்பும் நீங்கள் என்ன சொல்கிற வருகிறீர்கள் என்றால் வர்ணம் ஜாதி என்பது பிறப்பால் வருவது அல்ல குணத்தால் வருவது என்கிறீர்கள் அப்படி என்றால் ஒருவன் தனது குணத்தை மாற்றி கொள்வதன் மூலம் தனது வர்ணத்தை அதாவது ஜாதியை மாற்றிக்கொள்ளலாமா? என்று உங்களுக்கு தோன்றும் நிச்சயம் அப்படி மாற்றிக்கொள்ளலாம் அப்படி மாற்றி கொண்டதற்கு வலுவான ஆதாரம் இருக்கிறது. கெளசிகன் என்பவன் மன்னன் சத்திரிய குலத்தை சார்ந்தவன் இவன் தியானம், தவம், யோகம் என்ற சாத்வீக வழிமுறைகளை மேற்கொண்டு விஸ்வாமித்திரன் என்ற மகரிஷியாக உயர்ந்து நின்றான் அதாவது சத்திரிய குலத்தில் பிறந்தாலும் தனது செயலால் பிராமணன் ஆனார் எனவே வர்ணாசிரம தர்மம் என்பது மிக உயர்ந்த தர்மம் அதை சாதாரண கண்களால் பார்த்து விட்டு விமர்சனம் செய்வது அறிவுடமையாகாது என்பதே என் கருத்து.

Contact Form

Name

Email *

Message *