Store
  Store
  Store
  Store
  Store
  Store

திரும்பி நட! காந்தியை நோக்கி...,

யார் ஞானி 6

    ரு  மனிதனை பார்த்தவுடன் இவன், எப்படி பட்டவன் என்ற சிந்தனை நமக்கு வருகிறது. அவன் நல்லவனா? கெட்டவனா? என்பதை அறிந்த பிறகே அவனை பற்றிய ஒரு சித்திரத்தை நம்மால் உருவாக்க முடிகிறது. அப்படி உருவாக்கப்படுகிற சித்திரம் காலாகாலத்திற்கு அழியாமல் இருக்க வேண்டுமானால், அந்த குறிப்பிட்ட மனிதனால் ஏற்பட்ட நிகழ்வுகள் அனைத்துமே நல்லதாகவும், வல்லதாகவும் இருக்க வேண்டும். அதனால் தான் மாமனிதர்களை பற்றி யோசிக்கிற போதே அவரது கொள்கை, கோட்பாடுகள் என்னவென்று அறிந்து கொள்ள விரும்புகிறோம். சந்தேகத்திற்கே இடமில்லாமல் காந்தி மிகப்பெரிய சிருஷ்டி அவரது சிந்தனைகளும், செயல்பாடும் இன்னது தான் என்று கூறுகின்ற கொள்கைகள் இருக்கிறது அவற்றை அறிந்து கொள்வதற்கு ஆர்வம் மேலிட குருஜியிடம் காந்திஜியின் கொள்கைகளான காந்தியம் பற்றி விளக்க முடியுமா? என்று கேட்டேன். 

குருஜி:-

       காந்தி என்ற மஹானின் அரசியல் நடவடிக்கைகளை, சமூகத்திற்கு அவர் ஆற்றிய தொண்டுகளை அவர் தனது சொந்த வாழ்வில் மேற்கொண்ட வாழ்க்கை முறைகளை ஒன்றாக தொகுத்து காந்தியம் என்ற பெயரில் அழைப்பது நவீன சிந்தனைவாதிகளின் வழக்கமாக இருக்கிறது. காரணம் தற்போதைய சிந்தனாவாதிகள் பலருக்கும் கொள்கைகள் என்று வந்துவிட்டால் அதற்கு ஒரு பெயர் வைக்க வேண்டும். அதற்கென்று சில சட்டதிட்டங்களை வகுக்க வேண்டும். அப்போது தான் அவர்கள் அதை ஏற்றுக்கொள்வார்கள். இது இந்திய பண்பாட்டுக்கு அந்நியமான பழக்கமாகும். ஆனால் காந்தியை பொறுத்தவரை இந்த அளவுகோலை வைத்து அவரை நெருங்குவோமானால் நாம் பெரிய தவறை செய்தவராவோம். ஆகாயம் என்பது எப்படி பறந்து விரிந்ததோ, கடல் என்பது எப்படி கணக்கிட முடியாத ஆழம் கொண்டதோ அதே போன்றதே காந்தியின் சிந்தனை அதை எந்த அளவுகோலாலும் நிறுத்தி பார்க்க முடியாது. 

காந்தியின் கொள்கைகள் புதியன அல்ல. அது காந்தி ஒருவரால் மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டதும் அல்ல. காந்தி என்ற மகாபுருஷர் தோன்றுவதற்கு பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே அந்த சிந்தனைகள் இந்த தேசத்தின் ஆத்ம சங்கீதமாக இசைத்து கொண்டே இருந்ததாகும். அவரிடமிருந்த ஆன்மீக பலம், கருணை உணர்வு, எளிமையும், ஒழுக்கமும் நிறைந்த வாழ்வு, பயன்கருதாத தொண்டு, சத்தியத்தை மட்டுமே கடவுளாக தரிசனம் செய்த தத்துவ நோக்கு இவை அனைத்தும் கலந்து புராதானமான சிந்தனை மரபை அவர் மூலமாக புதிய வடிவில் வெளிப்பட்டது என்றுதான் சொல்ல வேண்டுமே தவிர, அதை ஒரு புதிய தத்துவம், சித்தாந்தம் என்று கூற முடியாது. ஆனாலும் அந்த பழைய தத்துவத்தை காந்தியின் பெயரில் காந்தியம் என்று அழைப்பது இன்னும் சிறப்பானதாகவே இருக்குமென்று நான் கருதுகிறேன். அதனால் நாமும் அதை காந்தியம் என்றே அழைப்போம். 

இந்த உலகில் வாழ்ந்த, அல்லது இன்று வாழ்ந்து கொண்டிருக்கின்ற மற்ற தலைவர்களை போல காந்தி, பெரும் தலைவர்கள், பேரறிஞர்கள், அரசியல் மேதைகள், தத்துவ சித்தாந்திகள், விஞ்ஞானத்தின் முன்னோடிகள் போன்றோர்களை பார்த்து தனது வாழ்வையும் சிந்தனையையும் உருவாக்கவில்லை. மாறாக வறுமையில் வாடி அடுத்தவேளை சோற்றுக்கு வழிதெரியாமல் தவித்து ஒவ்வொரு மணித்துளியும் மிக கடினமாக உழைத்து பாடுபட்டு கொண்டிருக்கும் ஏழை எளிய அடித்தட்டு மக்களிலிருந்தே தனது சிந்தனையை துவங்கி தனது பணியையும் அங்கிருந்த படியே துவக்கினார். 

மகாத்மா காந்தியின் வாழ்க்கையின் பெருங்காலம் வெள்ளை வணிகர்களை அரசியல் மேதாவிகளை எதிர்த்து போராடுவதிலேயே கழிந்தது என்றாலும், அவரது உண்மையான நோக்கம் ஏகாதிபத்தியத்திடமிருந்து நாட்டிற்கும், மக்களுக்கும் விடுதலை வாங்கி கொடுப்பது மட்டுமல்ல. கட்டாயத்தாலும், மதி மயக்கத்தாலும் ஆசையாலும் இந்திய மக்கள் தங்களது சுய தன்மையை இழந்து வெள்ளைக்கார துரைமார்களின் பழக்கவழக்கங்களையும். பண்பாடுகளையும் நாகரீகத்தையும் வழிபாட்டு முறையையும் பின்பற்றி எல்லாவகையிலும் ஐரோப்பிய அடிமைகளாக இருப்பதிலிருந்து விடுதலை அடைய வேண்டுமென்று போராடினார். துரைமார்களின் துரைத்தனத்தால் கையளவு இருக்கும் வெள்ளை கொக்குகள் சுகமாகவும் பெருவாரியான இந்தியர்கள் தாழ்ந்து கிடப்பதையும் மனித மனங்கள் ஜாதி என்ற மாய பிசாசுக்கு மயங்கி ஏற்றத்தாழ்வு கற்பித்து மனிதனை மனிதனே இழிவு படுத்துவதையும் கண்டார். 

வெறும் அரசியல் விடுதலையால் மட்டுமே இந்தியாவின் இந்த கோரமுகம் எழிலார்ந்த முகமாக மாறிவிடாது. அரசியல், பொருளாதாரம், பண்பாடு ஆகிய மூன்றிலிருந்தே முழுமையான மாற்றத்தை விடுதலையை அடையவேண்டுமென்று பாடுபட்டார். இன்றுவரை அவரது கனவில் அரசியல், ஒன்றிலிருந்து மட்டுமே அந்நிய ஆதிக்கத்தை நம்மால் விரட்ட முடிந்திருக்கிறது. மற்ற அனைத்திலும் அடிமைகளாகவே இருந்து வருகிறோம் என்பதை மனசாட்சி படி ஒத்துக்கொள்ள வேண்டும். ஐந்து வருடத்திற்கு ஒருமுறை தேர்தல் நடத்துகிறோம் நமது பிரதிநிதிகளை நாமே தேர்வு செய்கிறோம். அமைச்சர்களாகவும் ஆட்சி நடத்துகிற அதிகாரிகளாகவும். நம்மவர்களே இருக்கிறார்கள். என்பதனால் மட்டும் நமது விடுதலை பரிபூரணமாகி விட போவதில்லை.

குழந்தைகள் பெறுகிற கல்வியும், அரசியல் மற்றும் பொருளாதார நடவடிக்கைகளும் அனைத்து மக்களும் ஒளிவுமறைவு இல்லாமல் அறிந்துகொள்ள, தாய் மொழியிலேயே நடை பெற வேண்டும். பொருட்களை உற்பத்தி செய்கின்ற ஆற்றலும், அதை பகிர்ந்து கொள்ளும் முறையும் சொந்த ஜனங்களிடமே இருக்க வேண்டும். எவரிடமும் யாரும் கையேந்தி நிற்கக்கூடாது. பொருளாதாரத்தில் அந்நியர்களை அண்டி இல்லாமல் சுய காலில் மக்கள் நிற்க வேண்டும். அதற்கு பாரதீய முறையிலான தொழில்கள் பெருகவேண்டும் சொந்த தேவைகளை முழுமையாக பூர்த்தி செய்த பிறகு ஏற்றுமதியை பற்றி சிந்திக்க வேண்டும் என்பது காந்தியின் மிக முக்கியமான விருப்பமாகும். எதற்கெடுத்தாலும் அந்நிய நாடுகளை நம்பி வாழ்வதும், அந்நிய பொருட்களை தேவையில்லாமல் உபயோகபடுத்துவதும் காந்தியின் பார்வையில் தேசபக்தியாக தெரியவில்லை. சொந்த உற்பத்தியில் வாழ்வதே தேச பக்தி என்பது காந்தியின் உறுதியான எண்ணமாகும். 

சீடர்;-

  அப்படி என்றால் எல்லா தரப்பு மக்களும் செய்கின்ற கைத்தொழிலே இந்தியர்களுக்கு போதும் பெரிய தொழில்கள் எதுவும் தேவையில்லை என்று காந்தி நினைக்கிறாரா? 


குருஜி;-

    காந்தியை பற்றி பேசுபவர்கள் பலர் அவர் பெரும் தொழில்களை விரும்பவில்லை என்ற மாதிரியே பேசுகிறார்கள் இது மிகவும் தவறு. பெரிய முதலீட்டில் நிறையபேருக்கு வேலை கொடுக்கும் பலருக்கும் பயன்படும் பெரும் தொழில்களை காந்தி வேண்டாமென்று எப்போதும் சொல்லவில்லை. அதற்காக சிறிய கைத்தொழில்களை முற்றிலுமாக விட்டுவிட்டு, அனைவரும் பெரும் தொழில்களுக்காக ஏங்க ஆரம்பித்தால் நாடு முழுவதும் வேலை இல்லா திண்டாட்டமும் வறுமையுமே தாண்டவமாடும். எனவே சிறிய தொழில்களை கபளீகரம் செய்கிற பெரும் தொழில்களும் வேண்டாம், மனிதர்களுக்கு வேலை கொடுக்காமல் சகலமும் இயந்திரமயமாக இருக்கும் நவீன தொழில்களும் வேண்டாம் என்கிறார். அவர் அப்படி கூறுவது சமூக வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போடுவது போல நமக்கு தோன்றும். ஆனால் மனிதன் கடின உழைப்பு இல்லாமல் இருந்தால் எத்தகைய விபரீதங்கள் ஏற்படும் என்பதை அனுபவிக்கும் போது காந்தியின் வாக்கில் உள்ள சத்தியம் இன்னதென்று தெரியும். 

பெரிய தொழில்கள் இல்லாத நாடுகள் முன்னேறாது. மின்சாரம், மருத்துவம் விஞ்ஞான ஆய்வு போன்றவைகளை சிறிய அளவில் செய்தால் போதிய வளர்ச்சியை அடைய முடியாது. அதே நேரம் இவைகள் மட்டுமே போதும் மற்றவைகள் வேண்டாம் என்றால் தற்கொலை செய்வதற்கு சமமானதாகவும் ஆகிவிடும் உதாரணத்திற்கு கடந்த பதினைந்து வருடமாக தொழில் படிப்புகளில் காட்டப்படுகின்ற ஆர்வத்தை மற்ற துறை படிப்புகளில் யாரும் காட்டுவது இல்லை. வேளாண்மை துறை என்பதோ மிகவும் மெலிந்துபோன துறையாகிவிட்டது எல்லோருமே பொறியாளர்களாக இன்று வளர்ந்து வருவதனால் மற்ற வேலைகளை கவனிப்பதற்கு திறமையான ஆள் கிடைக்காமல் நிர்வாகம் தடுமாறுகிறது. இதன் பாதிப்புகளை இப்போதே நாம் உணர ஆரம்பித்து விட்டோம். விபரீதமான இந்த போக்கு இன்னும் சிறிது காலத்தில் நமது கழுத்தை நெறித்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. அப்போது நாம் வேறு வழியே இல்லாமல் காந்தீய பாதைக்கு தான் திரும்பி வரவேண்டும்.

மனிதர்களில் ஏற்றத்தாழ்வு காண்பது போலவே தொழில்களிலும் ஏற்றத்தாழ்வுகளை காண ஆரம்பித்தோம், கற்பிக்க ஆரம்பித்தோம். எளிய வேலைகளை செய்பவர்களை ஏவலர்கள் என்று எய்த்து பிழைக்கவும் ஆரம்பித்தோம். இதன் விளைவு தொழிலாளர்கள் கிராமங்களை விட்டு விட்டு நகரங்களை நோக்கி குடிபெயர ஆரம்பித்து விட்டார்கள். கிராமங்கள் உயிரே இல்லாத எலும்புக்கூடுகளை போல மாற ஆரம்பித்து விட்டது. ஜன சமூகத்தின் பெருக்கத்தால் நிரம்பி வழியும் நகரம் சுகாதார சீர்கேட்டுக்கும் பண்பாட்டு சீரழிவிற்கும் வித்தாகிவிட்டது. பூமி எங்கும் வெப்பம் கூடி விட்டது, பனி உருக ஆரம்பித்து விட்டது. நாடுகள் கடலில் மூழ்க துவங்கி விட்டன என்று கூப்பாடு போடுகிறோமே? இந்த கூப்பாட்டின் ஆரம்ப கட்டமே நகரங்களின் விரிவாக்கத்தில் இருக்கிறது என்பதை முற்றிலுமாக மறந்து விட்டோம். இதனால் தேசத்தின் ஒரு பகுதி தட்டி கேட்பதற்கு யாருமே இல்லாத வனாந்தரமாகி விட்டது இன்னொரு பகுதியோ செழுமையாக தெரிகிறது. இதை வளர்ச்சி என்று சொல்வது மூடத்தனம். வீக்கமென்று வேண்டுமானால் கூறலாம். அளவுக்கு அதிகமாக வீங்கினால் மரணம் சம்பவிக்கும் அதற்குள் திருந்த வேண்டும் இல்லை என்றால் எதுவும் இல்லை. 



Contact Form

Name

Email *

Message *