( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........!! click here )வரும் ஞாயிறு அன்று அமிர்த தாரா தீட்சை அளிக்கப்படுகிறது appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846 

Share !
This Post

உஜிலாதேவி பதிவுகளை
மின்னஞ்சலில் பெற

பதவியை தரும் பெளர்ணமி வழிபாடு !       டிமாதம் என்பது அம்மனுக்கு திருவிழா. காரணம், அம்மன் ஆலயங்கள் இருக்குமிடம் ஒவ்வொன்றுமே கோலாகலத்துடன் காணப்படுகிற காலம் என்பது நமக்கு தெரியும். அம்மனால் மட்டும் ஆடி மாதம் புகழ்பெறவில்லை நமது குடும்பத்திலே வாழ்ந்த முன்னோர்களுக்கு அவர்களது மறுவுலக வாழ்க்கை அமைதியோடும், சாந்தத்தோடும் இருக்க வேண்டும் என்பதற்காக அவர்களை நன்றியோடு நினைத்து அஞ்சலி செலுத்தக்கூடிய ஆடி அமாவாசையும் இதே மாதத்தில் வருவதனால் ஆன்மீக சிறப்பு மிக்கதாக இந்த மாதம் திகழ்கிறது.

நமது இந்து மதத்தின் ஆதாரமான புனித நூல்கள் சதுர்மறை என்று போற்றப்படுகின்ற நான்கு வேதங்கள் என்று நமக்கு தெரியும். இந்த வேதங்கள் ஒருகாலத்தில் அதாவது மனிதன் தனது அறிவின் துணைகொண்டு கணக்கு போட முடியாத மிகவும் தொன்மையான காலத்தில் வைரமும், மரகதமும் மற்றும் பல உள்ள இரத்தினங்களும் ஒரே குவியலாக கிடப்பது போல ஒன்றாக இருந்தது. அப்படி ஒன்றாக இருந்த வேதங்களை தனித்தனியாக பிரித்தெடுத்து நான்கு வேதங்களாக வகுத்து உலகுக்கு தந்தவர் புகழ்பெற்ற இதிகாசமான மகாபாரதத்தை எழுதிய வியாசர். இதனாலேயே இவருக்கு வேத வியாசர் என்ற சிறப்பு பெயரும் உண்டு.

நமது மதத்தின் நம்பிக்கைப்படி வியாசர் ஒரு மீனவ பெண்ணின் மகனாக சாதாரண மனிதனாக பிறந்தாலும் கூட, அவர் இறைவனின் பரிபூரணமான அம்சங்கள் பொருந்திய அவதாரமாகவே கருதப்படுகிறார். பகவான் கிருஷ்ணர், பகவான் கல்கி என்று கடவுளுக்கு மட்டுமே கொடுக்கப்படுகிற பகவான் என்ற சிறப்பு பெயர் வேத வியாசருக்கும் பகவான் வியாசர் என்று கொடுக்கப்பட்டு வழிபடப்படுகிறார்.

வியாசரின் சிறப்புகளை வேதங்களை தொகுத்தவர், மகாபாரதத்தை எழுதியவர் என்பதோடு மட்டும் நிறுத்திவிட முடியாது. அறிவுக்கோயிலாக தத்துவ கோபுரங்களாக கருதப்படுகிற உபநிஷதங்கள் அனைத்தையும் இன்று நமக்கு முழுமையாக கிடைப்பதற்கு வழிவகுத்தவர் வியாசர் ஆவார். இதுமட்டுமல்ல இறைவனான பகவான் கிருஷ்ணர் அர்ஜுனனுக்கு குருஷேத்திர பூமியில் உபதேசித்த ஸ்ரீ மத் பகவத் கீதையை எழுத்துவடிவில் தந்தவரும் இவரே.

உலகளவில் தத்துவங்களில் சிறப்புமிக்கது என்று சொன்னால் அது இந்திய தத்துவங்களே ஆகும். அந்த இந்திய தத்துவங்களில் தலைமையானது வேதங்கள், உபநிஷதங்கள், பிரம்மசூத்திரம். இதற்கு அடுத்ததாகத்தான் பகவத் கீதையே வருகிறது அதாவது வேதங்களில் சொல்லப்பட்ட கருத்துக்களை எளிமைப்படுத்தியது உபநிஷதங்கள். உபநிஷதங்களின் கருத்துக்களை உள்வாங்கி எளிமையாக்கி தருவது பிரம்ம சூத்திரம். இந்த மூன்றினுடைய இறுதி வடிவமே பகவத் கீதை இப்படி கீதைக்கு முந்தியதாகவும், வேத வேதாந்தங்களுக்கு அடுத்ததாகவும் இருக்கிற பிரம்ம சூத்திரத்தை எழுதி உலகுக்கு தந்தவர் வியாசர்.

இவ்வளவு சிறப்பு மிக்க பகவான் வியாசர் ஆடிமாத பெளர்ணமியில் அவதாரம் செய்தார் அதனாலேயே இந்த பெளர்ணமியை வியாச பூர்ணிமை அல்லது குரு பூர்ணிமா என்று கொண்டாடுகிறார்கள். உலகெங்கும் உள்ள ஹிந்துமத ஆச்சாரிய பீடங்கள், திருமடங்கள் போன்றவற்றில் குரு பூர்ணிமா தனித்தன்மை வாய்ந்த விழாவாக கொண்டாடப்படுகிறது. அன்று ஒவ்வொரு மடத்திலும் ருத்ராட்சம் மற்றும் எலுமிச்சை பழங்களில் சகல தேவர்களையும் ஆவாஹனம் செய்து ஸ்ரீ கிருஷ்ணருக்கு முன்னால் பூஜிக்கப்படுகிறார்கள். துறவிகளும், சன்யாசிகளும் குரு பூர்ணிமை தினத்தை தங்களது சொந்த குருமார்களின் அவதார திருநாளாகவே கருதி கொண்டாடுகிறார்கள்.

சாது தரிசனம், பாவவிமோசனம் என்று சொல்வார்கள். ஆடிமாத, பெளர்ணமி தினத்தில் ஞானிகளையும், துறவிகளையும், குருமார்களையும் தேடிச்சென்று தரிசனம் செய்து அவர்களது பாதத்துளிகளை சிரசில் தரித்து கொள்வது மிகவும் சிறப்பானதாகும். இதனால் முன்னோர்களின் சாபம், முன்னோர்களின் பாவம் போன்றவை விலகுவதாக சாஸ்திரங்கள் கூறுகின்றன. அதுமட்டுமல்ல சிறந்த படிப்பு ஞானம் போன்றவைகளை பெறுவதற்கும் சாது தரிசனம் துணை செய்கிறது. இந்த தினத்தில் வடநாட்டில் கோகிலா விரதம் என்பது மிக விஷேசமாக கொண்டாடப் படுகிறது. இந்த விரதத்தை கடைபிடிப்பதனால் குடும்பத்தில் வளர்ச்சியும், அமைதியும் வருவதாக வடநாட்டு பக்தர்கள் நம்புகிறார்கள். மேலும் ஆடி பெளர்ணமியில் வியாசரை வழிபட்டால் பறிபோன பதவியும் திரும்ப கிடைக்கும் என்பதும் உண்மை.  ஆக ஆடி பெளர்ணமி தேடித்தருவது ஞானத்தையும், வளர்ச்சியும் என்பதை மனதில் வைக்க வேண்டும்.


 

Next Post Next Post Home
 
Back to Top