Store
  Store
  Store
  Store
  Store
  Store

பெண்கள் வேதம் படிக்கலாம்...



     குருஜி அவர்களுக்கு நமஸ்காரம். ஒருவருட காலமாக உங்களது படைப்புகளை தவறாமல் படித்து வருகிறேன். துன்பப்படுகிறவர்களுக்கு சாமரமாகவும், தைரியம் இல்லாதவர்களுக்கு கேடயமாகவும் உங்களது கருத்துக்கள் திகழ்கிறது. சரியோ தவறோ மனதில் பட்டதை சொல்கிறேன் என்ற துணிச்சலுடன் எழுதுகிறீர்கள் பாருங்கள் அந்த மனோபாவத்திற்கு முதலில் தலை வணங்க வேண்டும். 

நான் எனது சொந்த வாழ்க்கையை பற்றி எந்த கேள்வியும் உங்களிடம் கேட்கப்போவதில்லை அதற்காக எனது வாழ்வில் சிக்கல்களே இல்லை என்ற பொருள் கிடையாது. வருகிற சவால்களை எதிர்கொண்டு சமாளிக்கும் திறனை இறைவன் எனக்கு தருவான் என்று நம்பிக்கையோடு இருப்பதனால் உங்களை சொந்த கேள்விகள் கேட்டு தொல்லைப்படுத்த விரும்பவில்லை.

மாறாக நமது மதம் சார்ந்த ஒரு கேள்வியை உங்களிடம் கேட்கப்போகிறேன் அதற்கு உங்களால் மட்டுமே சரியான பதிலை தரமுடியும் என்று நினைக்கிறேன் கிறிஸ்தவத்தின் புனித நூலான பைபிளை அந்த மதத்தை சார்ந்த ஆண், பெண் மட்டுமல்ல சாராதவர்களும் படிக்கலாம். இஸ்லாத்தின் அல்குரானை ஆண், பெண் பேதமின்றி யார் வேண்டுமானாலும் படிக்கலாம். ஆனால் நமது மதத்தின் புனித நூல்களான வேதங்களை ஒரு குறிப்பிட்ட இனத்தார் மட்டுமே படிக்க வேண்டும் அதிலும் குறிப்பாக பெண்கள் படிக்கவே கூடாது என்ற தடை இருக்கிறதே இது சரியானதா? இதை போக்குவதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்? 

இப்படிக்கு, 
கஸ்தூரிரங்கன், 
பெங்களூர். 


        வேதங்களில் மிகவும் மூத்தது ரிக் வேதமாகும். மிகவும் இளையது அதர்வண வேதமாகும். அதர்வண வேதத்தை மக்கள் வேதம் என்று அழைப்பதும் உண்டு. காரணம் மற்ற மூன்று வேதங்களும் இறைவனுக்கும், மனிதனுக்கும் உள்ள உறவு முறைகளை விவரித்து பேசுகிற போது அதர்வண வேதம் மட்டுமே மனிதனுக்குள்ள பிரச்சனைகளை மையபடுத்தி வாதாடுகிறது. அப்படிப்பட்ட அதர்வண வேதம் எப்படி துவங்குகிறது தெரியுமா? நான்கு ஜாதியினருக்கும் பொதுவான இந்த வேதம் உங்களை வாழ்த்துகிறது என்றே துவங்குகிறது. 

எனவே வேதங்களில் எந்த இடத்திலும், எந்த பகுதியிலும், எந்த ரிஷியும் இதை இன்னார் தான் ஓத வேண்டும் இன்ன ஜாதியினர் தான் கற்க வேண்டும், கற்பிக்க வேண்டும் என்று சொல்லவும் இல்லை. சொல்ல நினைக்கவும் இல்லை ஆனால் பிற்காலத்தில் நிகழ்ந்த அரசியல் மாற்றங்களும் மனிதனின் பேராசை மனங்களும் வேதங்கள் ஒரு குறிப்பிட்ட ஜாதியினருக்கு மட்டுமே என்ற நிலை உருவாகி விட்டது. அந்த நிலையே இப்போதும் தொடர்கிறதா? என்பதை ஆராய்ந்து பார்த்து நமது மதத்தை குறை சொல்ல நினைப்பவர்கள் குறை சொல்லலாம். 

ஒருவர் சொல்ல, ஒருவர் கேட்க என்று மனித நினைவாற்றலிலேயே வேதங்கள் தங்கியிருந்த காலம் இப்போது இல்லை. புத்தக வடிவாக, ஒலி நாடாக்களின் வடிவாகவும் வேதங்கள் வந்து விட்டன. ஆர்வமும், விருப்பமும் கொண்ட யார் வேண்டுமானாலும் வேதங்களை படிக்கலாம். அலசி ஆராயலாம். சர்வ சுதந்திரமாக விமர்சனங்களை சொல்லலாம். ஆனால் என்னவோ தெரியவில்லை வேதங்களையும் வேத பாடசாலை நடத்துபவர்களையும் குறை சொல்லியே காலம் தள்ளுகிற ஒரு கூட்டத்தார் இவைகளை கருத்தில் கொள்வதில்லை. 

பெண்கள் விஷயத்திற்கு வருவோம். வேதங்களை வேறு சாஸ்திரங்களை பெண்கள் படிக்க கூடாது பிரம்மா வித்தையை கற்றுக்கொள்ளும் தகுதி பெண்களுக்கு கிடையாது என்று இந்துமதத்தில் விதி இருப்பதாக குறை கூறுபவர்கள் சற்று நிதானமாக சிந்திக்க வேண்டும். பகவத்கீதை என்பது தலைசிறந்த தர்மசாஸ்திரம் என்பதை யாரும் மறுக்க இயலாது. அதன் பெருமை பூமா தேவிக்கு நாராயணர் போதிப்பதாகவும் குரு கீதை என்ற புகழ்பெற்ற சாஸ்திரத்தை பார்வதி தேவிக்கு சிவபெருமான் உபதேசிப்பதகவும் பிரகதாரண்ய உபநிசதத்தை யாக்ஞவால்கியர் மைத்ரேக்கு உபதேசித்ததாகவும் ஆதாரங்கள் இருக்கின்றன. 

சாஸ்திரங்களை பெண்கள் கற்க கூடாது என்றால் மேலே குறிப்பிட்ட சாஸ்திரங்களும் தத்துவங்களும் பெண்களுக்கு கற்பிக்கப்பட்டதாக கூறப்படுவது முரண்பாடாக தோன்றவில்லையா? ரிக் வேதத்திலும், யஜுர் வேதத்திலும் பல சூத்திரங்களை உருவாக்கியதே பல பெண் ரிஷிகள். இவைகளுக்கெல்லாம் அசைக்க முடியாத ஆதாரங்கள் இருக்கிறது. அவைகளெல்லாம் பலரின் கண்களுக்குப்படுவதே இல்லை. எப்படியாவது குறை சொல்ல வேண்டும் என்ற நோக்கத்தோடு மட்டுமே செயல்படுகிறார்கள் எனது கருத்துப்படி பெண்கள் சாஸ்திரங்களை கற்கலாம் பிரம்மவித்தையை அறிந்து கொள்ளலாம் ஏன் வேதங்களையே கற்று மற்றவர்களுக்கு போதிக்கலாம். இதனால் எந்த அபசாரமும் ஏற்படாது. மாறாக ஆண்களால் நிகழ்த்தி காட்ட முடியாத சாதனையை பெண்களால் காட்ட முடியும். 




Contact Form

Name

Email *

Message *