குருஜி அவர்களுக்கு வணக்கம். ஜெர்மன் நாட்டில் நாஸ்டர்டாமஸ் என்ற தீர்க்க தரிசி சில நூற்றாண்டுகளுக்கு முன்பு வாழ்ந்ததாகவும், அவர் இன்றுவரை உலகத்தில் நடந்து வருகின்ற பல சம்பவங்களை முன்கூட்டியே மிகச்சரியான முறையில் சொல்லி இருப்பதாகவும், இனி வருங்காலத்தை பற்றியும் அவர் பல விஷயங்களை கூறி இருப்பதாகவும் சமீபத்தில் அறிந்தேன். அந்த நாஸ்டர்டாமஸ் இந்தியாவை பற்றி இந்தியாவின் எதிர்காலம் பற்றி ஏதாவது கூறி இருக்கிறாரா? நமது நாட்டின் நிலை வருங்காலத்தில் எப்படி இருக்கும்? இதை மிகைப்படுத்தாமல் உள்ளதை உள்ளபடி உங்களால் மட்டுமே கூற முடியுமென்று நம்புகிறேன். தயவு செய்து வேலைவெட்டி இல்லாதவனின் வெற்று கேள்வி என்று புறக்கணித்து விடாதீர்கள் பதில் கூறவும்.
இப்படிக்கு,
நீலகண்டன்,
கனடா.
ஒவ்வொரு மனிதனுக்கும் தான் வருங்கலத்தில் எப்படி இருப்போம் என்பதை அறிந்து கொள்வதற்கு அடக்கமுடியாத ஆர்வம் இருப்பது போலவே தான் வாழுகிற நாடும் எப்படி இருக்கும் என்பதை அறிந்து கொள்வதற்கு ஆர்வம் இருக்கும். இதில் வியப்படைவதற்கு ஒன்றுமே இல்லை. ஆனால் ஒரு மனிதனை பற்றி ஜாதகம் கணித்து தெரிந்து கொள்வதற்கும், ஒரு நாட்டை பற்றி தெரிந்து கொள்வதற்கும் பெரிய இடர்பாடு சிக்கல் இருக்கிறது.
உதாரணமாக இன்ன வருடத்தில், இன்ன நேரத்தில் ஒருவன் பிறந்தான் என்பதை மிக சுலபமாக அறிந்து கணக்கு போட்டுவிடலாம். ஒரு நாட்டினுடைய பிறப்பை அப்படி போட முடியுமா? நமது இந்தியாவின் ஜாதகத்தை எழுதுவதாக வைத்து கொள்வோம் சுதந்திரம் பெற்ற நாளை இந்தியாவின் பிறந்தநாள் என்று எடுக்க முடியுமா?நிச்சயம் முடியாது காரணம் கணக்கிட முடியாத ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இந்தியாவின் வரலாறு துவங்கி விடுகிறது அந்த வரலாற்றின் அடிப்படையில் சுதந்திர நாள் என்பது ஒரு குறிப்பே தவிர தேசத்தின் பிறப்பு அல்ல. இதே போன்ற நிலை தான் எல்லா நாடுகளுக்கும்
அதனால் தான் பல நேரங்களில் தேசங்களை பற்றி அவைகளின் எதிர்காலங்களை பற்றி மிக துல்லியமாக கணக்கிட்டு கூற எவராலும் முடியவில்லை. ஆனால் சூரியமண்டலம் நட்சத்திர மண்டலம் ஆகியவற்றை ஆராய்ந்து விண்வெளி நிகழ்வுகளை கணக்கு போடுவது போல பூமியில் ஏற்படும் சில மாற்றங்களை வைத்து நாட்டில் ஏற்படக்கூடிய இயற்கை மாற்றங்களை கணித்து விடலாம். பூமியின் மாறுபாடு எந்தவிதத்தில் அமையுமோ அதே நேரம் வானத்தில் உள்ள கிரகங்களின் அமைப்பும் ஒரே மாதிரியாக அமையும் போது சில அறிய விஷயங்களை கைதேர்ந்த ஜோதிட விற்பன்னர்கள் கணித்து விடுகிறார்கள்.
அந்தவகையில் பாஸ்கரா, ஆரியபட்டா, போன்ற விண்வெளி மேதைகளை குறிப்பிடலாம். இவர்கள் கணக்கின் மூலமாகவே சூரியனுக்கும், பூமிக்கும் உள்ள தூரம் பூமியின் எடை போன்றவற்றை இன்றைய விஞ்ஞானிகளே வியந்து போகிற வண்ணம் கண்டறிந்து கூறி இருக்கிறார்கள். ஆனால் நீங்கள் குறிப்பிடும் நாஸ்டர்டாமஸ் ஒரு ஜோதிடரோ, கணித சாஸ்திரியோ அல்ல. அவரை குறி சொல்லுபவர் தனது நுணுக்கமான ஆழ்மனத்தின் எண்ணங்களை கண்டறிந்து வெளியிடுபவர் என்று வேண்டுமானால் சொல்லலாம். இவர் தாம் எழுதிய பாடல் போன்ற ஒரு நூலில் மறை பொருளாக பல விஷயங்களை கூறி இருக்கிறார்.
அந்த பாடல்களின் பொருள் இதுதான் என்று இதுவரையில் யாராலும் அறுதியிட்டு கூறமுடியவில்லை. ஒரு சம்பவம் நடந்து முடிந்த பிறகு அவருடைய பாடலை ஆராய்ந்து அவர் இதை பற்றிதான் குறிப்பிடுகிறார் என்று இதுவரை சொல்லபட்டிருக்கிறதே தவிர நடக்கப்போவதை மிக உறுதியாக இது இப்படிதான் நடக்குமென்று யாரும் கண்டறிந்து சொல்லவில்லை நடந்து முடிந்த பிறகு ஒரு விஷயத்தை தெரிந்து என்ன ஆகப்போகிறது?
இருந்தாலும் மனிதர்களின் ஆர்வம் அவர்களை விட்டுவிடுவது இல்லை நாஸ்டர்டாமசின் பாடல்களை துருவி துருவி ஆராய்ந்து நடக்க போகும் சில விஷயங்களை பலர் கூறி இருக்கிறார்கள் அதில் முக்கியமாக இந்தியாவை பற்றி இன்றைய சூழலில் தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு விஷயம் இருக்கிறது. வர்த்தகத்தின் அடிப்படையில் இந்தியாவிற்கும், அமெரிக்காவிற்கும் மிக நெருங்கிய கூட்டுறவு ஏற்படும் சீனாவின் உலகளாவிய மேலாதிக்கத்தை இந்தியா கட்டுப்படுத்தும் ஆசியாவின் மிகப்பெரும் சக்தியாக இந்தியா எழுந்து நிற்கும். இந்த நிலைக்கு இந்தியாவை அழைத்து செல்ல இங்கே ஒரு பிரம்மச்சாரி தலைவர் வருவார் பதவியில் அமருவார் நாட்டை நல்ல பாதையில் நடத்துவார் என்று நாஸ்டர்டாமஸ் கூறி இருக்கிறாராம்.
இதை கேட்பதற்கு இனிமையாகத்தான் இருக்கிறது. ஆனால் யார் இந்த பிரம்மச்சாரி தலைவர் என்று தான் தெரியவில்லை. இந்த விஷயத்தை நான் படித்து தெரிந்த காலத்தில் வாஜ்பாய் அவர்களின் அரசியல் பிரவேசம் இந்திய தலைமை நோக்கியதாக இருந்தது அந்த பிரம்மச்சாரி இவராக இருக்கலாமோ என்று நான் நினைத்தேன் ஆனால் அவரது சகாப்தம் ஐந்து ஆண்டில் முடிந்து விட்டது. இப்போது புயலாக வீசி கொண்டிருக்கின்ற நரேந்திரமோடி கூட பிரம்மச்சாரி தான் அவரை எதிர்க்கும் ராகுல்காந்தியும் பிரம்மச்சாரியே இவர்களில் யார் இந்த நாட்டின் கெளவரத்தை தூக்கி நிறுத்த போகிறார்கள்? என்று நமக்கு தெரியவில்லை ஒருவேளை இவர்கள் இருவருமே இல்லாமல் ஸ்ரீமத் பாகவதத்தில் கூறி இருப்பதை போல தெற்குபகுதியிலிருந்து வருங்காலத்தில் நல்ல தலைவர் யாராவது வருவார்களோ என்னவோ? கடவுளுக்கே வெளிச்சம்.