( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........!! click here )வரும் ஞாயிறு அன்று அமிர்த தாரா தீட்சை அளிக்கப்படுகிறது appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846 

Share !
This Post

உஜிலாதேவி பதிவுகளை
மின்னஞ்சலில் பெற

குரங்கை அடக்கினால் சிவனை காணலாம் !


சித்தர் ரகசியம் - 5

       சித்தர்கள் யார் என்று துவங்கி அவர்கள் நாத்திகர்களா? சுயநலக்காரர்களா? பெண்ணடிமைவாதிகளா? என்றெல்லாம் சர்ச்சையை பேசி கடைசியில் சம்மந்தமே இல்லாமல் முக்தியை பற்றி கூற துவங்கிவிட்டானே எதற்காக என்ற கேள்வி உங்களுக்கு வரக்கூடும் அந்த கேள்விக்கான பதிலை இங்கே இப்போதே கூறிவிடுவது சிறப்பு என்று கருதுகிறேன்.பதிலை கூறாமல் மெளடிகமாக மூடி மறைத்து நீட்டிக்கொண்டு போய் கடைசியில் கூறுவதற்கு அது ஒன்றும் சித்தர்மலை இரகசியமில்லை மிக கண்டிப்பாக சித்தர்களை பற்றி அவர்களது ரகசியங்களை பற்றி தெரிந்து கொள்வதற்கு முன்னால் அறிந்து வைத்திருக்க வேண்டிய விஷயங்களில் இவைகளும் இருக்கின்றன என்பதை தொட்டுக்காட்டவே அவைகளை பற்றிப்பேசினேன்.

இதுமட்டும் அல்ல சித்தர்கள் நாத்திகவாதிகள் போல கடவுள் வாதத்தை பல்முகநோக்கில் அலசி ஆராய்ந்ததற்கும் பெண்மோகம் என்ற காம எண்ணம் மனிதர்களை விட்டு அகலவேண்டும் என்று நினைத்ததற்கும் சாதாரண ஜனங்கள் மத்தியில் வாழாமல் காடுகளிலும் மலைகளிலும் சுயநலக்காரர்களை போல மறைந்து வாழ்ந்ததற்கும் மிக முக்கிய காரணம் இருக்கிறது. கடவுள் மீது வைக்கின்ற மூடத்தனமான பக்தி வெளிப்புற ஆச்சாரங்களின் மீது மட்டுமே மனிதர்களை அடிமைப்படுத்தி வைத்திருக்கும் புறத்தை தாண்டி அகத்தை தேடி போவதற்கு சடங்குகளும் சம்பிரதாயங்களும் தடையாக இருக்கும் என சித்தர்கள் விரும்பினார்கள் சித்தத்தை அடக்கி ஜீவனை ஒடுக்கி பரமாத்மாவை நாடுகிற போது மோகம் என்ற வெறி மனிதரை கீழ்நிலைப்படுத்திவிடும். எனவே அதில் எச்சரிக்கையாக இருக்க வேண்டுமென்று அறிவுறுத்தினார்கள். மூடத்தனமும் மோகத்தனமும் அண்டாமல் வாழ்வது என்றால் தனிமையை நாடு என்று வழிகாட்டினார்கள் இவைகள் எல்லாம் எதற்காக? மனிதன் பிறவாத நிலையாகிய முக்தியை அடையவேண்டும் என்பதற்காகவே

ஒருநாட்டினுடைய பண்பாட்டை அறிவு பலத்தையும் தெரிந்துகொள்ள வேண்டுமானால் அந்தநாட்டு மக்கள் கடவுளை பற்றியும் ஆத்மாவை பற்றியும் கொண்ட கருத்துக்கள் என்ன என்பதை அறிந்து கொண்டாலே போதுமென்று தற்கால மேலைநாட்டு அறிஞர்கள் கூறுகிறார்கள் இந்தியாவில் தொன்றுதொட்டு மக்கள் மத்தியில் இருக்கின்ற சிந்தனை நம்பிக்கை முடிவு மனிதன் பிறவி என்ற தளையிலிருந்து மீண்டு பிறக்காத நிலையை அடைந்து இறைவனோடு இறைவனாக ஐக்கியமாக வேண்டும் என்பது தான் இதே எண்ணத்தை வேதங்களும் கூறுகிறது பல நேரங்களில் வேதங்களையே விமர்சனம் செய்த சித்தர் இலக்கியங்களும் கூறுகிறது.

பிறந்ததனால் ஏற்படுகின்ற மரணத்தை பற்றிய பயம் ஒவ்வொரு மனிதனின் மனதிலும் மிக ஆழமாக பதிந்திருக்கிறது. ஆத்மா என்பது பிறப்பதும் இல்லை இறப்பதுமில்லை அது எப்போதுமே அழியாதத்தன்மையோடு இருக்கிறது என்ற உண்மை தெளிவாக தெரிந்துவிட்டால் மரணபயம் என்பது ஏற்படுவதற்கு வழியே இல்லை.மரணபயம் இல்லாத நிலையை ஆத்ம விடுதலை என்று நான்கு வேதங்கள் கூறுகின்றன இதை அடைவதற்கு இறைவழிபாடு புலன்களில் ஒழுக்கம் மன ஒருநிலைப்பாடு ஆகியவைகள் தேவை என்று வேதங்கள் நம்புகின்றன. வேதங்களின் இந்த கருத்துக்களே இந்தியாவில் உருவான அனைத்து மதங்களும் அனைத்து தரப்பு ஞானிகளும் கடைசியாக உணர்ந்து வெளிப்படுத்துகிற செய்திகளாக இன்றுவரை இருந்துவருகிறது.

ஆத்மா என்பது அழிவற்றது, மரணம் இல்லாதது ஆனால் இந்த ஆத்மாவை தாங்கி நிற்கும் பெளதீக உடல் ஒரு காலத்திற்கு மேல் நிலைத்திருக்காது அழிந்து போகும் ஐம்பூதங்களின் சேர்க்கையால் உருவான சரீரம் அழிந்து போன பிறகு அதில் இதுவரை தங்கி இருந்த ஆத்மா கர்மபயன் என்ற வினைபயனுக்கு ஏற்றவாறு வேறொரு பிறப்பை நாடிச்செல்கிறது இப்படி மீண்டும் மீண்டும் பிறந்துகொண்டே இருக்கின்ற ஆத்மா தனது நிலையறிந்து பிறவாத நிலையை அடைய வேண்டும் அதுவே முக்தி என்பது வேதங்களின் உறுதியான இறுதிக்கருத்தாகும்.

மனிதனின் மனம் ஆசை எனும் செங்கல்களால் கட்டப்பட்ட மாளிகையாக இருக்கிறது. இந்த மாளிகைக்குள் காமம் என்ற மனைவியும், மோகம் என்ற மக்களும், கோபம் என்ற உலகப்பற்றும், லோபம் என்ற புலன் ஆசைகளும் உல்லாசமாக கூடி களித்து கொண்டிருக்கின்றன. இந்த பிசாசுகளை பிடித்து அடித்து கழுத்தை நெறித்து அப்புறப்படுத்தி விட்டால் சஞ்சலமற்ற மனது அமைதியான நீரோடை போல ஆகிவிடும். அதன்பிறகு ஆத்மாவிற்கு உடலை விட்டு உடல் தேடி போகும் வேலை இருக்காது பிறவாது இருக்கின்ற பெருநிலையை அடைந்துவிடும். இதன் பெயர் தான் பொய்மையிலிருந்து மெய்மைக்கான பயணம் இருளிலிருந்து ஒளிக்கான பிரவேசம் என்று வேதங்களுக்கு பின்னால் வந்த உபநிஷதங்களும் பறைசாற்றுகின்றன.

மனிதனாக பிறந்தது பாவம் அல்ல. மனிதப்பிறப்பு பாவத்தின் சம்பளம் அல்ல மிக உயர்ந்த பிறப்பு மனிதன் என்ற பிறப்பு ஏனென்றால் ஒரு உயிர் முக்தி அடைய வேண்டுமானால் அது மனிதனாக பிறந்தால் மட்டும் தான் முடியும். வானுலக தேவராக இருந்தாலும் கூட அவரால் முக்தியை அடைய முடியாது. தேவர்களும் வியர்வையும் கண்சிமிட்டுதலும் பசியும் உள்ள மனித உடல்பெற்று பிறக்க வேண்டும் அதன்பிறகே முக்தி என்ற முழு விடுதலையை அடைய முடியும். கர்மா என்ற விலங்கால் பிணைக்கப்பட்ட உயிரானது பிறப்பு வளர்ச்சி தேய்வு அழிவு என்ற சுழற்சியில் அகப்பட்டு தத்தளிக்கிறது கர்மாவின் விலங்கை நிஷ்கர்மா என்ற சம்மட்டி கொண்டு அடித்து உடைத்து விட்டால் வரம்பில்லாத சக்தி அளவிடமுடியாத அறிவு எண்ணிக்கையில் அடங்காத இன்பம் என்ற உத்தம நிலையை முக்தி நிலையை எட்டி விடலாம் என்று வேதங்கள் உபநிஷதங்கள் இவைகளின் காலத்திற்கு பிற்பாடு தோன்றிய ஜைனமகரிஷி, மகாவீரர் தெளிவு படுத்துகிறார்.

முக்தி என்றும் ஆத்ம விடுதலை என்றும் மற்றவர்கள் கூறுவதை ஆசிய ஜோதியான புத்தர் நிர்வாண நிலை என்று வேறொரு பெயர் கொண்டு அழைக்கிறார். ஒரு விளக்கு எரிந்துகொண்டிருக்கிறது அந்த விளக்கில் உள்ள தீபம் திடீரென மறைந்துவிட்டது. இப்போது அதன் தீ சுடர் என்னவாயிற்று? எங்கே போயிற்று என்று யாரும் கூறிவிடமுடியாது அதை போன்றுதான் நிர்வாணம் அடைந்தவர்களின் நிலையும் நிர்வாணத்திற்கு பிறகு எப்படி இருக்கும், என்ன கிடைக்கும் என்பதை கூற இயலாது. ஆனால் இந்த உலகத்தில் அனுபவிக்கின்ற அனைத்து விதமான இன்னல்களுக்கும் சரியான முற்றுபுள்ளி ஒரே இறுதி புள்ளி நிர்வாணம் மட்டுமே. நிற்காமல் ஒவ்வொரு வினாடியும் மாறிக்கொண்டே இருக்கும் இந்த உலகை இதில் நீங்காமல் படர்ந்திருக்கும் ஆசைகள் என்ற துயரத்தையும் நிலையில்லாத ஆத்மாவையும் உணர்ந்து தியானித்தால் ஆசை என்ற பாசக்கயிறுகள் அறுந்து நிர்வாணம் என்ற மகாபரிசு கிடைக்கும் என்று முக்தியை பற்றி புத்தர் சான்றிதழ் தருகிறார்.

அறிவு சிகரம் ஆதிசங்கரர், கருணை வடிவம் ராமானுஜர், பக்தி சாகரம் மத்வர் இவர்கள் தவிர்த்து ஆழ்வார்கள், நாயன்மார்கள், அருளாளர்கள் அனைவருமே இறைவனோடு மனிதன் காற்றில் கரைந்து மறைந்து போகும் கற்பூரத்தை போல இரண்டற கலந்து பிறவாத நிலையை பெற்றிடுவதே முக்தி என்று அறியாதவரும் அறிந்துகொள்ளும் வண்ணம் எளிமையாக தெளிவாக தத்துவச்செறி\வோடு முரசறைந்து சொல்கிறார்கள். உலகப்பொதுமறை ஈன்ற வள்ளுவனும், முக்தியின் அவசியத்தை தெள்ளத்தெளிவாக கூறுகிறார். இந்தியாவில் தோன்றிய அல்லது இந்திய கருத்துக்களால் தோன்றிய எல்லா ஞானிகளுமே, அறிஞர்களுமே முக்தி மட்டுமே இறுதி லட்சியம் என்று பட்டயம் தருகிறார்கள். இதில் சித்தர்கள் மட்டும் எப்படி விதிவிலக்காக இருக்க முடியும். மேலே நான் சொன்ன அனைத்து ஞானிகளையும் விட சித்தர்கள் ஒருபடி மேலே சென்று முக்தி என்றால் என்னவென்று விளக்குவதோடு இல்லாமல் முக்தியை அடைவதற்கான வழிமுறைகளை அதாவது புலன் ஒழுக்கம், மன ஒழுக்கம், சரீர ஒழுக்கம் இவைகளை பெறுவதற்கான வழிகளையும் நம்மை போன்ற சாதாரண ஜீவன்களும் கடைத்தேற வேண்டுமென்று கூறி சென்றிருக்கிறார்கள்.

மணலில் தண்ணீர் சேர்த்து சேறாக்கி சிறுவர்கள் உணவு சமைத்து விளையாடுவார்கள். அந்த விளையாட்டை போன்றது தான் உலக வாழ்க்கை என்பது. வயிற்றில் பற்றி எரிகின்ற பசி என்ற நெருப்பை மண்சோறால் எப்படி அணைக்க முடியாதோ அப்படியே இந்த உலகத்தில் நாம் பெறுகின்ற அனுபவங்கள் ஆத்ம பசியை அணைக்காது என்று திருமந்திரத்தில் திருமூலர் கூறுகிறார். நாம் உயிர் பெற்றிருப்பது  எதற்காக? உடம்பை பெற்றது எதற்காக? உலகத்தின் நாலு திசையும் ஓடி முக்தர்கள், ஞானிகள், அறிஞர்கள், குருமார்கள் இவர்களிடம் காத்துக்கிடந்து பெற்ற கல்வி எதற்காக? இறைவனின் திருவடியை எப்படி பற்ற வேண்டும் பிறவாத பெருநிலையை எப்படி அடையவேண்டும்? என்பதை தெரிந்து கொள்வதற்காகவே என்று அதை திருமந்திரத்தில் திருமூலர் நமக்கு பாடம் எடுக்கிறார்.

முப்பத்தாறு தத்துவங்களின் விரிவாக கிடக்கிற மாயா உலகத்திலிருந்து விடுபட்டு சிவபோகத்திற்குள் ஆத்மா ஒடுங்க வேண்டும் சிவத்தில் ஜீவனும், ஜீவனில் சிவமும் கலந்து இன்புறும் உன்னத நிலையே முக்தி இதை விட்டு விட்டு இளமை எழில்கொஞ்சும் கன்னியரின் மென்னுடலை தொட்டு அனுபவிப்பதே முக்தி என்று சில முட்டாள்கள் கருதுகிறார்கள். இவர்கள் உலகத்தில் வாழுகின்ற வாழ்க்கை மட்டுமே முதலும் முடிவானது என்று கருதும் உலகாயதர்கள் செத்தபிறகு சொர்க்கத்தில் ராஜ போகங்களை அனுபவிக்கலாம் என்று சிலர் நினைக்கிறார்கள் இதற்காக பூமியில் சடங்குகளையும் தொழுகை முறைகளையும் வகுத்து வைத்து காத்திருக்கிறார்கள் இவர்களுக்கும் வாழும் போதே அனுபவித்து விட்டு சாவோம் என்ற உலகாயதர்களுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை.

ஆனால் சித்தர்கள் சொர்க்க சுகம் பெரியதல்ல. உலக சுகமும் ஒரு பொருட்டல்ல. ஜீவ சுகமே சாஸ்வதமானது அதற்கு ஆணவம், கர்மம், மாயை என்ற மும்மலங்களை விலக்கி சுத்த ஆத்மாவாக சிவனடியை பற்றிக்கொண்டு வாழ்வதை சிறப்பென்று கருதினார்கள். மும்மலங்கள் அறுபடவேண்டுமானால் மனமென்னும் மாயக்குரங்கை வசப்படுத்த வேண்டும். அப்படி வசப்படுத்த மனம் வாழுகிற சரீரத்தை முதலில் செம்மையாக்கி வசப்படுத்தினால் மட்டுமே மனதை கைப்பிடிக்குள் கொண்டுவர முடியுமென்று நினைத்தார்கள். அதற்காக உடலை உறுதியாக்க, மனிதனின் ஆயுளை நீட்டிக்க, ஆரோக்கியத்தை மேம்படுத்த பல வழிகளை கண்டார்கள். நடைமுறைப்படுத்தி வெல்லவும் செய்தார்கள். அதை நம்மை போன்றவர்களுக்கு சொல்லவும் செய்தார்கள். அந்த வழிகளை பற்றி சிறிதளவாவது தெரிந்து கொண்டால் தான் சித்தர்களின் ரகசியம் நமக்கு தெரியவரும். அதை இனிவரும் பதிவுகளில் தொடர்ந்து சிந்திப்போம்.+ comments + 6 comments

12:48

தங்களின் இந்த படைப்பு என்போன்ற வாசகர்களுக்கு மனிதபிறப்பின் மகத்துவத்தை உணர்த்துகிறது...

Anonymous
11:37

Kaanal neer vaazhkkai. Ungal amudha mozhigal taagam theerkkum thanneer

யோக சுத்திரம் ”சித்த விருத்தி நிரோத” என்று சொல்வதை சித்தர்கள் அழகு இலக்கிய நடையில் ”மனம் என்னும் குரங்கை வசப்படுத்த வேண்டும்” என்று அற்புதமாகச் சொல்கின்றார்கள். தங்களின் பதிவு மிகவும் அற்புதமானது .இரண்டு முறை படித்துவிட்டேன். திருமந்திரம் ஒரு ஜீவ ஞானச்சுரங்கம்.வற்றாதது. அமுதமானது.

கல்லூரியில் என்கூடப்படித்த ஒரு கத்தோலிக்க சமயத்தையும் அரேபிய மதத்தைச் சார்ந்த தோழர்கள் இருவரும் திரும்ந்திரம் படித்து விட்டு வியப்பின் எல்லைக்கே சென்று விட்டார்கள். இன்று இருவர் வீட்டிலும் திருமந்திரம் புத்தகம் முழுவடிவில் உளள்து. இநது சமயத்தை பெரிதும் நேசிக்கிக்றனர்.

Dear
tell about sridi saibaba?

மனிதனின் மனம் ஆசை எனும் செங்கல்களால் கட்டப்பட்ட மாளிகையாக இருக்கிறது. இந்த மாளிகைக்குள் காமம் என்ற மனைவியும், மோகம் என்ற மக்களும், கோபம் என்ற உலகப்பற்றும், லோபம் என்ற புலன் ஆசைகளும் உல்லாசமாக கூடி களித்து கொண்டிருக்கின்றன. இந்த பிசாசுகளை பிடித்து அடித்து கழுத்தை நெறித்து அப்புறப்படுத்தி விட்டால் சஞ்சலமற்ற மனது அமைதியான நீரோடை போல ஆகிவிடும். அதன்பிறகு ஆத்மாவிற்கு உடலை விட்டு உடல் தேடி போகும் வேலை இருக்காது பிறவாது இருக்கின்ற பெருநிலையை அடைந்துவிடும். இதன் பெயர் தான் பொய்மையிலிருந்து மெய்மைக்கான பயணம் இருளிலிருந்து ஒளிக்கான பிரவேசம் என்று வேதங்களுக்கு பின்னால் வந்த உபநிஷதங்களும் பறைசாற்றுகின்றன.

MELA ULLA "காமம் என்ற மனைவியும்" ENRA VARTHAI PENGALAGA PIRANTHAL AVARGALUKKU ATHMA KIDAIYATHU ENRA PORULAI KODUKIRATHAA? AL LATHU AANGALUKKU MATTUMA aanma ENRA IRAVA PORUL IRUKIRADHA?

மேலே சொன்ன வார்த்தை " காமம் என்ற மனைவியும்" ஆன்ம என்பது ஆண்களுக்கு மட்டுமே , அப்போது பெண்கள் ஆன்ம என்ன செயயும் அவர்களின் முக்தி எப்படி அடையும் ?????

K.C.Ramesh


Next Post Next Post Home
 
Back to Top