Store
  Store
  Store
  Store
  Store
  Store

புரட்சியாளர்களை வென்ற சித்தர்கள் !


சித்தர் ரகசியம் - 4

   சுநாதரின் ஆன்மீக தகுதி என்ன? என்ற கேள்வியை கேட்க துணிகின்ற போது கிறிஸ்தவ சமயத்தை சார்ந்த பேரறிஞர்கள் அழகான விளக்கம் ஒன்றை தருகிறார்கள். பல்லாண்டுகாலம் தவமிருந்து பெற்ற ஒரு குழந்தையின் மீது தாயானவள் எத்தனை பற்றும் பாசமும் வைத்திருப்பாளோ அந்த அளவு பாசத்தை ஏசுவின் மீது இறைவனாகிய கர்த்தர் வைத்து அவரை பூமிக்கு அனுப்பினார். அதனால் ஏசுவினால் மட்டுமே நிறைவான நிலையை அடைய முடிந்தது. ஆப்ரஹாம், நோவா போன்றவர்கள் சிறந்த ஞானிகள் தான் கர்த்தரின் மீது மிகத்தீவிரமான நம்பிக்கையை வைத்தவர்கள் தான். ஆனாலும் அவர்களால் ஏசுவின் அளவிற்கு உயர்ந்த நிறை நிலையை அடைய முடியவில்லை. காரணம் ஏசு பெற்ற ஆசிர்வாதம் மிக உயர்ந்தது. ஏசு பெற்றதை போன்ற அருளை இறைவனின் அன்பை அவனால் கொடுக்கும் நிறைநிலை என்ற முக்தியை வேறு எவரும் எந்த காலத்திலும் பெற்றிட முடியாது என்பது கிறிஸ்தவ அறிஞர்களின் கருத்தாகும்.


நிறைவான நிலை என்பதை மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் பெற முடியும் அதற்காக பாடுபட முடியும் ஒருவனுடைய உழைப்பு, ஆர்வம் எந்த அளவிற்கு நிறை நிலையை நோக்கியதாக இருக்கிறதோ அந்த அளவிற்கு அவன் நிறைவுத்தன்மையை பெறுவான். என்று ஆசிய தத்துவங்கள் கூறுகின்றன அதாவது இறைவனின் அன்பு என்பது ஒருவருக்கு மட்டும் சொந்தமானது அல்ல. அனைவருக்குமே சமமானது தனிப்பட்ட மனிதரின் விழிப்பு நிலையே அவனை நிறைவானத்தன்மையை நோக்கி அழைத்துச்செல்கிறது என்பது இதன் பொருளாகும். இந்திய சித்தர்களும், இந்த கருத்தை மையமாக வைத்தே செயல்படுகிறார்கள் எனலாம். அகல் விளக்கிலிருந்து வருகின்ற வெளிச்சம் கவிஞனுக்கும் சொந்தம் கரப்பான் பூச்சிக்கும் சொந்தம் என்பது சித்தர்களின் முடிவு. சுருக்கமாக சொன்னால் நிறை நிலையை ஒவ்வொரு மனிதனும் அடைய முடியும் என்று சித்தர்கள் கூறுகிறார்கள்.

இப்போது நமக்கொரு சந்தேகம் வருகிறது. நிறை நிலை என்றால் என்ன? கை இருக்கிறது கால் இருக்கிறது உழைத்து சேர்த்த சொத்து சுகமிருக்கிறது கட்டிய மனைவி, பெற்றபிள்ளை, உற்றார், உறவினர், நண்பர்கள், அன்பர்கள் அனைவரும் இருக்கிறார்கள் எல்லோருக்கும் முடிந்தததை கொடுக்கிறோம். தேவையானதை கேட்டு பெறுகிறோம் பசி இல்லை, நோய் நொடியும் இல்லை நிறைவாகத்தானே வாழுகிறோம். அப்படி என்றால் சித்தர்கள் கூறுகிற நிறை நிலை என்பது இது தானோ? என்பது அந்த சந்தேகம். இந்த வாழ்க்கை மனிதர்கள் மட்டும் வாழுகிற வாழ்க்கை அல்ல. ஏன் எறும்பு, காக்கை, குருவி கூட இப்படி வாழுகிறது. சித்தர்கள் இந்த நிறைவை பற்றி பேசவில்லை. அவர்கள் பேசுவது வேறு நிறைவு. நல்ல வளமான ஆரோக்கியமான உடலை நிறைவு நிலை என்பார்கள். சிலர் கண்ணுக்கு தெரியாமல் வாழ்வது, காற்றிலே பறப்பது போன்ற சித்துக்களை கற்றுக்கொள்வது தான் நிறைவு என்பார்கள். சிலர் ஒழுக்கம் கெடாமல் உயர்ந்த வாழ்க்கையை கம்பீரமாக வாழ்வதே நிறைவு என்பார்கள். சிலர் கடல் பொங்கி எழுந்தாலும் கலங்கிடமாட்டோம் அண்டம் சிதறினாலும் அஞ்சிட மாட்டோம் என்று அஞ்சாமல் வாழ்வது நிறைவு என்பார்கள் சிலர்.

இந்த நிறைவுகள் எதுவுமே நிறைவுகள் அல்ல. உலகுக்கும், உயிர்களுக்கும் காரணமான மூலப்பரம்பொருளை கண்ணுக்கு தெரியாமல் கருத்தினுள் நிறைந்து நிற்கும் இறைவனை இறைவன் தன்மையை முழுமையாக உணர்ந்து நெஞ்சத்தில் நிறுத்தி ஒவ்வொரு வினாடியும் ஆனந்தத்தை அனுபவிப்பததே உண்மையான நிறைவு என்பது சித்தர்கள் மிக கடைசியாக உண்மையை சாரமாக்கி கூறும் செய்தியாகும். ஏதாவது ஒரு காலத்தில் மற்ற நிறைநிலைகள் அதாவது உடல் மனது ஆன்மா இவைகள் மூலம் பெறுகின்ற நிறை நிலைகள் கலங்கி நிற்கலாம். அழிந்தும் போகலாம். ஆனால் ஆண்டவனில் ஆனந்திக்கும் நிறைவு நிலை எப்போதுமே சாஸ்வதமாக நிலைத்து நிற்கும் என்பது சித்தர்களின் கருத்து இங்கே கூறப்படும் நிறைவு நிலை என்பதை முக்தி என்ற தத்துவத்தோடு இணைத்து சிந்தித்தால் சித்தர்களின் சித்தாந்தம் எவ்வளவு விசாலமானது என்பது நமக்கு தெரியும்.

இந்த உலகத்தில் பல புரட்சிகள் நடந்திருக்கின்றன. மிகப்பெரிய தொழில் புரட்சி என்பது இங்கிலாந்து நாட்டில் நடந்தது ஒரு மிகப்பெரும் அலையானது புறப்பட்ட வேகத்தில் எதிரே இருக்கின்ற எல்லாவிதமான சரக்குகளையும் எப்படி புரட்டி போட்டுவிடுமோ அப்படி புரட்டி போட்டது தொழில் புரட்சி. தொழில் புரட்சியால் ஏற்பட்ட முதலாளி - தொழிலாளி என்ற வர்க்க பேதங்களால் வெடித்து உருவானது தான் காரல்மார்க்ஸ் கண்ட பொதுவுடைமை புரட்சி. இந்த இரண்டு புரட்சிகளின் விளைவாகவே பத்தொன்பதாம் நூற்றாண்டும் இருபதாம் நூற்றாண்டும் உலகம் அலைகழிக்கப்பட்டது எனலாம். இன்று அந்த புரட்சி அலைகள் ஓய்ந்து விட்டன. இன்னும் தெளிவாக சொல்லப்போனால் அந்த அலை வீசியதற்கான சிறிய சுவடுகள் தான் நம் கண்ணெதிரே இன்று தென்படுகிறது. மாபெரும் புரட்சிகளான இவைகள் மறைந்து போனதற்கு என்ன காரணம்?

கேள்வி பெரியதாக இருந்தாலும் இதற்கான பதில் மிக சுலபமானது எளிமையானது. நாம் காலிலே போடுகின்ற காலணிகளை பத்தாயிரம் ரூபாய் கொடுத்து வாங்கினாலும் அதை ஒரு வருடத்திற்கு மேல் உபயோகிக்க முடியாது. தேய்ந்து அறுந்து பழையதாக போய்விடும். ஆனால் அறுபது ஆண்டுகள் ஆனாலும் அதற்குமேல் காலம் போனாலும் நமது பாதங்கள் தேய்வதில்லை பழுதாகி போவதில்லை பழையதாக துருப்பிடிப்பதும் இல்லை. காரணம் பாதங்கள் என்பது இறைவன் தந்த சொத்து பாத அணிகள் என்பது நமது கண்டுபிடிப்பு. மேற்கண்ட புரட்சிகளும் மனித கண்டுபிடிப்புகளே ஆகும். இந்த புரட்சிகள் சில சட்டங்களாலும் திட்டங்களாலும் மனிதனையும் நாட்டையும் மாற்றிவிடலாம் என்று           குழந்தைத்தனமாக கற்பனை செய்கிறது. மனிதன் என்பவன் மனத்தால் மாறாத வரை எந்த மாற்றமும் ஏற்படாது என்பதை புரட்சிக்காரர்கள் ஏற்றுக்கொள்வதில்லை அதனால் அவர்கள் தோற்றுப்போனார்கள்.

மனித சமூகம் மாறவேண்டுமானால் மனிதன் மாறவேண்டும். மனிதனின் மனம் மாறவேண்டும் அப்போது மட்டுமே நடக்கும் பாதைகள் ஒவ்வொன்றும் தர்மத்தின் பாதையாக இருக்கும் தர்மவழியில் நடப்பவனால் மட்டுமே இறைவனை உணர முடியும். அதனால் தான் சித்தர்கள் மூடப்பழக்கவழக்கங்களை இன்னதென்று சுட்டிக்காட்டி தடுத்து நிறுத்தினார்கள் கடவுள் என்றால் யார்? என்று மிக கடினமான வார்த்தைகளால் சத்தமிட்டு சொன்னார்கள் அவரை அடைவதற்கு தடைகளாக இருந்த காமத்தை, மோகத்தை, குரூரத்தை வெறுத்து ஒதுக்குங்கள் என்று கட்டளை போட்டார்கள். நாம் கட்டளைகளை மட்டும் பிடித்து கொண்டு சித்தர்களை பார்த்தால் ஆழ்ந்த தத்துவத்தை உணராதவர்களாகவே போய்விடுவோம். சித்தர்கள் இறுதி முடிவாக கூறும் முக்தி நிலையின் முதல்படியை கூட நம்மால் தீண்ட முடியாது.

முக்தி முக்தி என்று மீண்டும் மீண்டும் சொல்லப்படுவதை கேட்கிறோம். இந்த வார்த்தைக்கு அர்த்தம் என்ன? எல்லாம் அறிந்த சித்தர்கள் மனிதரின் இறுதி லட்சியம் முக்தி என்று கூறுவதற்கு காரணம் என்ன? என்று நமக்கு தோன்றும் நமது இந்திய ஞானிகளும், சித்தர்களும் இரண்டுவிதமான முக்திகளை காட்டுகிறார்கள். ஒன்று நீர், நெருப்பு, நிலம், காற்று, ஆகாயம் என்ற ஐந்து பூதங்களின் கலவையால் உருவான இந்த உடலை விட்டுவிடாமல் இதிலேயே தங்கி கொண்டு அடைகின்ற ஜீவன் முக்தி மற்றொன்று கூண்டுக்குள் அடைபட்டு கிடக்கின்ற பறவை விடுதலை பெற்று சிறகடித்து பறப்பதை போல உடல் என்ற கூண்டை உடைத்து ஜீவன் பறவை அடைகின்ற விதேக முக்தி அதாவது உடல் இருக்கும் போது இறை அனுபவத்தை பெற்றால் அது ஜீவன் முக்தி இல்லாத போது பெற்றால் அது விதேக முக்தி இந்த இரண்டுவகை முக்திகளே ஒவ்வொரு ஜீவனும் பெறவேண்டும் என்று சித்தர்கள் விரும்புகிறார்கள்.

முக்தி நிலையை பற்றி பேசாத பெரியவர்கள் இல்லை. இந்தியாவில் முக்திக்கு கொடுக்கப்படுகின்ற விளக்கங்களை எல்லாம் ஒன்று சேர்த்து திரட்டினால் அது இமய மலையை விட பெரியதாக இருக்கும். இந்திய பெருங்கடலை விட ஆழமாக இருக்கும். அதிலும் குறிப்பாக சித்தர்கள் முக்திக்கு கூறி இருக்கின்ற விளக்கங்கள் பொருள் பொதிந்ததாகும். அவைகளை அடுத்து வரும் பதிவுகளில் சற்று விரிவாகவே அலசி ஆராய்வோம்.



Contact Form

Name

Email *

Message *