( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........!! click here )வரும் ஞாயிறு அன்று அமிர்த தாரா தீட்சை அளிக்கப்படுகிறது appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846 

Share !
This Post

உஜிலாதேவி பதிவுகளை
மின்னஞ்சலில் பெற

சகோதரனை பலமாக்கும் பெளர்ணமி !


   மாதம் தோறும் பெளர்ணமி வருகிறது. அதன் பிறகு நிலவு தேய்ந்து அமாவாசையும் வருகிறது. இதே போன்றது தான் மனித வாழ்க்கையும் துவக்கமும் முடிவும். பூர்ண சந்திரனாக பிறக்கும் மனிதன் அமாவாசை சந்திரனை போல இருந்த இடம் தெரியாமல் மறைந்து போகிறான். இயற்கையின் ஒவ்வொரு நிகழ்வுமே மனித வாழ்க்கையின் நிலையாமையை விளக்கிய வண்ணமே இருக்கிறது. ஆனால் மனிதன் தான் தனது நிலையாமையை மறந்து தான் காலம் காலமாக சாஸ்வதமாக வாழப் போவதாக நினைத்துக்கொண்டிருக்கிறான். 

மனிதனின் நினைவு மட்டுமல்ல படைப்பாளியின் மனதும் கூட சில நேரங்களில் இப்படி மாறிவிடுகிறது. சில நல்ல விஷயங்கள் மறந்தும் போய்விடுகிறது பெளர்ணமியில் உள்ள குறிப்பாக மாதங்கள் தோறும் வருகிற பெளர்ணமியின் சிறப்புகளை பற்றி எழுதி வந்தேன். ஆடி மாத பெளர்ணமி வரை ஆடி அசைந்து வந்துவிட்டேன். அதன் பிறகு என்னவோ ஒரு வித மறதி பெளர்ணமியை பற்றி எழுதியதே நினைவில்லாமல் போய்விட்டது எனது எழுத்துக்களை தொடர்ந்து படித்து வரும் கெளஹாத்தியை சேர்ந்த மாதவன் என்ற வாசகர் தொடர்ந்து எழுதியதை ஒரு நல்ல விஷயத்தை ஏன் நிறுத்தி விட்டீர்கள்? சிரமத்தை பார்க்காமல் எழுதுங்கள் என்று நாலைந்து முறை தொலைபேசியில் கூப்பிட்டு சொன்னார். அதன் பிறகுதான் எதுவரை எழுதியிருக்கிறோம் என்று பார்க்கவே சொன்னேன். 

இப்போது நாம் ஆவணி மாதத்து பெளர்ணமியை பற்றி சொல்ல வேண்டும். ஆவணி மாதம் என்றாலே பருவ நிலையிலும் சரி கிராமங்களில் உள்ள மக்களின் மனநிலைகளிலும் சரி ஒரு வித சிலிர்ப்பு இருக்கும். ஆடி மாதத்தில் துவங்கும் கிராமத்து திருவிழாக்கள் ஆவணி முடியும் வரை தொடரும் கரகாட்டம், நையாண்டி மேளம், கணியான் கூத்து என்று தெற்குபகுதி கிராமங்கள் பரபரப்பாக இருப்பதை நான் அனுபவித்திருக்கிறேன். என் சொந்த ஊரில் ஆவணி மாதத்தில் தான் மாரியம்மன் கோவில் திருவிழாவிற்கு வரி போடுவார்கள். ஊர் பெரிய மனிதர்கள் அனைவரும் கூடி தலைக்கு ஒன்றாக பேசி சண்டைபோடும் அழகிருக்கிறதே அதை பார்ப்பதற்கு கண்கள் நூறு வேண்டும். 

இந்த இடத்தில் சண்டையை பற்றி நான் பேசுவதற்கு காரணம் இருக்கிறது ஒரு காலத்தில் தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் கொடிய போர் நடந்தது. போரின் போக்கு அசுரர்களுக்கு சாதகமாக இருந்தது. தேவர்களின் தலைவன் இந்திரன் மிகவும் கவலைப்பட்டான். தனது குருவான விருஷபதியை அழைத்து அடுத்த கட்டமாக என்ன செய்வது என்று ஆலோசிக்க ஆரம்பித்தான். அந்த நேரத்தில் அங்கே வந்த இந்திராணி, இந்திரன் கைகளில் ஒரு இரக்க்ஷையை கட்டி குருவின் அருளால் நீங்கள் வெற்றி பெறுவீர்கள் என்று சொன்னாளாம். குருவின் முன்னால் மனைவியிடம் இருந்து வந்த மங்களச்சொல் இந்திரனுக்கு புதிய சக்தியை கொடுத்ததாம். அந்த யுத்தத்தில் அவன் வெற்றியும் பெற்றானாம். 

அப்படி இந்திராணி தேவர்களின் தலைவனுக்கு ரக்க்ஷை கட்டிய மாதம், இந்த ஆவணி மாதம் பெளர்ணமி தினம். அன்று அதனால் தான் ரக்க்ஷாபந்தன் என்ற திருவிழா வடநாட்டிலும் தற்போது தென்னாட்டிலும் கொண்டாடப்படுகிறது. இந்திரனுக்கு அவன் மனைவி தானே கங்கணம் கட்டினால் ரக்க்ஷாபந்தன் அன்று ரக்க்ஷை கட்டுவது சகோதரனுக்கு அல்லவா? இது எப்படி மாறிப்போனது? என்று நீங்கள் நினைக்கலாம். நானும் நினைத்து பார்த்தேன், பலரிடமும் கேட்டு பார்த்தேன்  அவர்களுக்கும் தெரியவில்லை, எனக்கும் புரியவில்லை. ஆனாலும் ரக்ஷாபந்தனுடைய மூலக்கதை இங்கே இருந்து தான் துவங்குகிறது. 

புனிதமான வேதங்களிலும், புராணங்களிலும் உள்ள பூஜை முறைகளையும் மந்திரங்களையும் முறைப்படி சொல்லி இந்திராணி கட்டிய கயிறு என்பதனால் அது சக்தி மிகுந்ததாக ஆகி விட்டது. நமது சகோதரிகளும் முறைப்படியான தெய்வ நம்பிக்கையும், ஒழுக்கமும் உடையவர்கள். அவர்கள் அன்று நம் சகோதரன் நன்றாக இருக்க வேண்டுமென்று இறைவனிடம் பிரார்த்தனை செய்து கட்டினால் இந்திராணி கட்டிய ரக்க்ஷையை விட இது சக்தி மிகுந்ததாகவே இருக்கும். 

சிரவணமாத பெளர்ணமி தினமன்று போற்றப்படும் இந்த ரக்ஷாபந்தன் திருவிழா அன்று ஒரு பெண் முன்பின் தெரியாத ஆண்மகன் ஒருவனுக்கு கூட இதை கட்டலாம். அப்படி கட்டினால் அன்றுமுதல் அவன் அவளின் சகோதரனாக மாறி விடுகிறான். அவளது பூஜா பலனும் இறைவனிடம் அவள் பெறுகிறான். அன்பான வரங்களும், அவள் சகோதரனுக்கும் உரியதாகிறது. வடநாட்டினர் போல் தமிழ் நாட்டினர் உடம்பு முழுவதும் வண்ணப்பொடிகள் தூவி ஹோலி பண்டிகையாக ரக்ஷாபந்தனை கொண்டாடவில்லை என்றாலும் தங்கள் சகோதரர்களுக்காக கோவில்களில் வேண்டுதல் தீபம் ஏற்றும் நாளாக கொண்டாடலாம். 

ஆவணிமாதத்தில் வீடுகளை சுத்தப்படுத்தி மாக்கோலமிட்டு, மலர்களால் அலங்கரித்து அதன் நடுவில் தீபம் ஏற்றினால் மகாலஷ்மி நமது வீட்டுக்கு வருவாள் என்பது ஐதீகம். இந்த ஐதீக விழாவே மாவலி சக்ரவர்த்தி பூமிக்கு வரும் திருநாளாக ஓணம் பண்டிகை என்ற பெயரில் கேரளாவில் கொண்டாடப்படுகிறது. மேலும் ரிக், யஜுர் வேதங்களுக்கு உபகர்மா எனப்படும் ஆவணி அவிட்டம் இந்த மாதத்தில் தான் வரும். இன்று அந்தணர்கள் மட்டுமல்ல, பூணூல் தரித்திருக்கும் அனைத்து ஜாதியினரும் புதிய பூணூல் அணிந்து கொள்வது மரபாக இருக்கிறது. 

ஆவணிமாத பெளர்ணமியில் பிரார்த்தனை செய்தால் சகோதரர்கள் வாழ்வார்கள் வழிபாடு செய்தால் வீட்டுக்கு லட்சுமி வருவாள். பழையன கழிந்து புதியன கிடைக்கும். ஆக மொத்தத்தில் பெளர்ணமியில் நிலா மட்டுமல்ல, வாழ்வும் வெளிச்சமாக இருக்கும். அடுத்து மிகவும் முக்கியமான புரட்டாசி மாத பெளர்ணமியை பற்றி சிந்திப்போம்.


 

Next Post Next Post Home
 
Back to Top