( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........!! click here )வரும் ஞாயிறு அன்று அமிர்த தாரா தீட்சை அளிக்கப்படுகிறது appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846 

Share !
This Post

உஜிலாதேவி பதிவுகளை
மின்னஞ்சலில் பெற

நான் கண்ட மரணத்தை வென்ற சித்தர்


சித்தர் ரகசியம் - 6

   ப்பா பைத்தியம் சாமிகள் என்றொருவர், பாண்டிச்சேரியில் இருப்பதாக தொண்ணுறுகளின் ஆரம்பத்தில் கேள்விப்பட்டேன். அவர் நூறு வயதை கடந்தவர் என்றும், பல சித்துக்கள் தெரிந்தவர் என்றும் அவரைப்பற்றி அறிந்தவர்கள் கூறினார்கள். எனக்கு அவரை பார்க்கவேண்டும் என்ற ஆர்வம் வந்தது. அப்போது என்னிடத்தில் பாண்டிச்சேரி செல்வதற்கான சரியான வாகனவசதி கிடையாது. இருந்தாலும், ஆர்வத்தை அடக்க முடியுமா? எனது நண்பரும் அரகண்டநல்லூர் வேளாண்மை வங்கியின் செயலாளருமான நடேசப்பிள்ளை சுப்பிரமணியனிடம் புதுவை சென்று சுவாமிகளை தரிசனம் செய்து எனது நிலையையும் கூறி அவரை நான் காண்பதற்கு ஆர்வமாக உள்ளதையும் சொல்லி ஒருமுறை அவரை நம்மிடத்திற்கு வரமுடியுமா என்று கேட்டுப்பார் என அனுப்பி வைத்தேன். 

நண்பர் சென்று, அப்பா பைத்தியம் சாமியிடம் நான் சொன்ன தகவலை கூறி இருக்கிறார். அதை கேட்டவுடன் அவர் வாய்விட்டு சிரித்து என்னை வந்து பார்ப்பதற்கு நூறு பேர் காத்திருக்கும் போது நான் வந்து அவனை பார்க்க வேண்டுமென்று சொன்னானா? கடவுளின் சித்தம் அதுவானால் கண்டிப்பாக வருகிறேன் போ என்று பதில் சொல்லி அனுப்பி விட்டார். வருவேன் என்று சொன்னாரே தவிர எப்போது வருவேன், என்று வருவேன் என்ற விபரம் எதுவும் சொல்லவில்லை. வரமாட்டேன் என்று கூறுவதற்கு பதிலாக இப்படி கூறி அனுப்பி இருப்பார் என்று மனதை தேற்றிக்கொண்டு அதை மறந்தும் போய்விட்டேன். 

தொண்ணூற்றி எட்டாம் வருடம் அக்டோபர்மாதம் கடைசிவாரம் என்று நினைக்கிறேன். நல்ல மழை நேரம். நான் இருந்த சமிதியின் கட்டிடத்தைச்சுற்றி வெள்ளம் முட்டிகால் அளவு நின்றுகொண்டிருந்தது. இன்னும் சிறிது தண்ணீர் அதிகரித்தால் கட்டிடத்திற்குள் வந்துவிடும் அபாயமும் இருந்தது. ஆற்றில் வெள்ளம் நிரம்பி ஓடி கட்டிடத்திற்கு பின்னால் இருந்த வாய்க்கால் தண்ணீரை ஏற்றுக்கொள்ள முடியாமல் தேங்கி நின்றதனால் இந்த வெள்ள அபாயம் ஏற்பட துவங்கி இருந்தது. நானும் சமிதியில் வளரும் சில குழந்தைகள் மட்டுமே தனியாக இருந்தோம். இரவு மணி பத்து இருக்கும். வெளியில் சாலையில் கார் வந்து நிற்கும் ஓசை கேட்டது. சிறிது நேரத்தில் யாரோ கதவை தட்டினார்கள் பையன் சென்று கதவை திறந்தான். 

ஒல்லியாக உயரமாய் ஒருமனிதர் வந்து அப்பா பைத்தியம்சாமி உங்களை பார்ப்பதற்காக வந்திருக்கிறார். அவரை அழைத்து வரட்டுமா? என்று கேட்டார் எனக்கு என்னையே நம்ப முடியவில்லை. இத்தனை வருடம் கழித்து தான் சொன்னதை மறக்காமல் மனதில் வைத்து ஒருவர் வந்திருக்கிறார் என்றால் அவரை எந்த வார்த்தைகளால் பாராட்டுவது? வணங்குவது என்று எனக்கு தெரியவில்லை. ஆனந்தத்தின் உச்சிக்கே சென்ற நான் தலையை மட்டுமே ஆட்டினேன் சிறிது நேரத்தில் சுவாமி அவர்களை ஒரு நாற்காலியில் உட்கார வைத்து மூன்றுபேர் தூக்கி கொண்டுவந்து என் முன்னால் உட்கார வைத்தார்கள். நன்றாக நடப்பேன். இரண்டு நாட்களாக கால் வீங்கி விட்டது. அதனால் நடக்க முடியவில்லை. வேறொன்றும் இல்லை என்று ஒரு குழந்தையை போல சாமிகள் சொன்னார். 

நானும், அவரும் வெகுநேரம் பல விஷயங்களை பற்றி பேசிக்கொண்டிருந்தோம். கடைசியில் நான் அவரது வயதைப்பற்றி கேட்டேன். தனக்கே உரிய பாணியில் கடகடவென்று சிரித்த அவர், அரவிந்தர் பாண்டிச்சேரிக்கு வரும்போது நானும் அங்கிருந்தேன் என்றார். அவர் சொன்ன காலத்திற்கும், தற்போதைய காலத்திற்கும் கணக்குப்போட்டு என் தலை சுற்றியது. நூறு வயதை மட்டுமல்ல, அதையும் தாண்டி சில பத்து வருடங்கள் அவர் வயது எனும் போது வியப்படையாமல் எப்படி இருக்க முடியும்? ஒருவேளை இவர் தன்னை பெரியதாக மற்றவர்கள் கருதவேண்டும் என்பதற்காக இப்படி கூறுகிறாரோ என்ற ஒரு சந்தேகம் எனக்கு தோன்றியது. அதை கவனித்த அவர் நீ நம்பவில்லை என்றால் கைதட்டி சித்தர் என்ற ஒருவர் திருக்கோவிலூர் வெள்ளைப்பிள்ளையார் கோவிலுக்கு பின்புறம் சமாதியாகி இருக்கிறார். அவருடைய வாரிசுகள் ரிஷிவந்தியத்தில் இருக்கிறார்கள். அவர்களிடம் கைதட்டி சித்தரோடு நான் எடுத்த புகைப்படம் இருக்கிறது வேண்டுமானால் பார்த்துக்கொள் என்று கூறினார்.

அதற்குமேலும் அவர் சொற்களில் நான் நம்பிக்கை காட்டவில்லை என்றால் என்னைவிட முட்டாள் யாரும் இருக்க மாட்டார்கள். பிற்காலத்தில் சுவாமிகள் சொன்னது முற்றிலும் சரி என்பதை விசாரித்து தெரிந்து கொண்டேன். எனவே அப்போது அவரிடம் ஒரு கேள்வி கேட்டேன். பல சித்தர்கள் பலநூறு வருடங்கள் வாழ்வதாக கேள்விப்பட்டிருக்கிறேன். திருமூலர் கூட, மூவாயிரம் ஆண்டுகள் வாழ்ந்ததாக அறிந்தும் இருக்கிறேன். நூற்றாண்டை கடந்து மனிதனால் வாழமுடியும் என்பதற்கு நேரடி சாட்சியாக இதோ நீங்களும் இருக்கிறீர்கள். இப்படி அதிகநாள் வாழ்வதற்கும், மனிதன் ஆன்மீக முன்னேற்றம் அடைவதற்கும் ஏதாவது சம்மந்தம் இருக்கிறதா? குறைந்தநாள் வாழ்ந்தால் ஆன்மீகத்தில் முன்னேற முடியாதா? ஆமாம் என்று நீங்கள் பதில் சொன்னால் ஆதிசங்கரரும், சுவாமி விவேகானந்தரும் மிக குறுகிய காலம் தானே பூமியில் வாழ்ந்தார்கள். அவர்கள் ஆன்மீகத்தில் முன்னேற வில்லையா? என்று கேட்டேன்.

அதற்கு அவர் உடனடியாக பதில் கூறவில்லை. சுற்றி வளைத்து பல காரியங்களை பேசி விட்டு இறுதியாக விஷயத்திற்கு வந்தார். உன்னை நீ முழுமையாக இறைவனிடம் ஒப்படைத்த பிறகு உனது இயக்கம் உன் கையில் கிடையாது. இறைவன் உனக்கு விதித்திருக்கும் வேலை முடியும் வரை நீ வாழ்ந்திருக்க வேண்டும். ஒருவனுக்கு பத்துவருடத்தில் வேலை முடிகிறது. வேறொருவனுக்கு நூறு வருடமானாலும் வேலை முடிவதில்லை. அதற்காக முடித்தவன் மேலானவன், முடிக்காதவன் கீழானவன் என்றில்லை. எல்லோரும் சமமே. இறைவனின் காரியத்தை நடத்தி செல்ல சரீரம் என்ற ரதம் வாழ்வின் கடைசி முனை வரை ஓடி வரவேண்டும் பாதியில் நின்றுவிட்டது என்றால், நீ அடுத்த ரதத்தில் ஏறவேண்டும். அதாவது இன்னொரு பிறப்பை நீ அடையவேண்டும். இந்த பிறவியிலேயே காரியத்தை முடித்து கடவுளிடம் செல்ல வேண்டுமானால் உடம்பை பாதுகாக்க வேண்டும் மரணத்தை தள்ளிப்போடவேண்டும். 

சித்தர்கள் பலர் மரணத்தை தள்ளி போட்டிருக்கிறார்கள். அதை வென்றும் இருக்கிறார்கள் அப்படிப்பட்ட சித்தர் பரம்பரை இன்றும் தொடர்கிறது. இனிமேலும் தொடரும் மரணம் இல்லாத பெருவாழ்வு என்பது ஆத்மாவை மட்டும் குறிப்பது அல்ல, உடலையும் குறிக்கிறது. இது ஊத்த சடலம். உப்பிருந்த பாண்டம் என்று சிலர் வெறுத்து ஒதுக்கினாலும் கூட அந்த ஊத்த சடலம் சில தேவைகளுக்கு தேவைப்படுகிறது. அதனால் தான் திருமூலர் உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேன் என்கிறார். எல்லாம் சரி அதிக நாள் வாழ்வதை பற்றி கேட்கிறாயே அதிகம் நாள் வாழ்வது எப்படி என்று உனக்கு தெரியுமா? எல்லாம் போகட்டும் மரணம் என்றால் என்னவென்று நீ அறிந்திருக்கிறாயா? இன்றுவரை மரணத்தை பற்றி நீ யோசித்ததுண்டா? என்று என்னிடம் மிக தீர்க்கமாக கேள்விகளை கேட்டார். அன்று முதல் சிந்திக்க துவங்கினேன் மரணம் என்றால் என்னவென்று? + comments + 8 comments

சித்திகள் கைவரப்பெற்றவர்கள் சித்தர்கள்.....அவரை அடையாளம் காண்பது அரிது....சிலருக்கு மட்டுமே அந்த பாக்கியம் உண்டு .....

சிலிர்ப்பு

நல்ல நம்பிக்கை,நல்ல யோகாசனம்,தியானம்,அதிக ஆசை இல்லாமை,உணவுமுறைகள்,ஆகியவைகளே சித்தர்களை பல நூரு ஆண்டுகள் வாழ வைத்தது!

ஓம்
1950 வாக்கில் திருநெல்வேலி மாவட்டம் கோடாரங்க்குளம் கிராமத்தில் ஒரு கிறிஸ்த்தவ சாமியார் பித்தனைப்போல் அலைந்து திரிவார். அவர் தலையினை இடப்புறமும் வலப்புறமும் ஆட்டுவார். கட கட வென ஒலி எழும்பும். பானைக்குள் கற்களிட்டுக் குலுக்கினாற்போல் தோன்றும்
அவருடைய வயதினை கணிக்கவியலாத தோற்றம்.. பல நீண்டநாள் நோய்கள் அவரால் நிவர்த்திக்கப்பட்டன. ரிஷிமூலம் என்பதுபோல் எங்கிருந்தார் வந்தார் என்பதும் எங்கு போனார் என்பதும் தெரியவில்லை.
அன்புடன் வெ.சுப்பிரமணியன்

திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளையில் பேருந்து நிலையத்திற்கு அருகே ஒரு சித்தரின் சமாதி உள்ளது. தம்பான் என்பது அவரது திருநாமம். சாக்கடையைக் கூட அவரே சுத்தம் செய்வார். ஆனால் அவரது உடலில் எப்பொழுதும் சந்தண வாசம் இருந்து கொண்டே யிருக்கும். பஜாரில் தனது கடைக்கு வர மாட்டாரா என அனைவரும் விரும்புவார்கள்.யார் கடைக்கு அவர் வந்தாலும் அன்று கல்லாப் பெட்டி நிறைந்து விடும். அற்புதமானவர்.

I have believe it......

19:26

Good experience

19:27

Good experience


Next Post Next Post Home
 
Back to Top