( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........!! click here )வரும் ஞாயிறு அன்று அமிர்த தாரா தீட்சை அளிக்கப்படுகிறது appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846 

Share !
This Post

உஜிலாதேவி பதிவுகளை
மின்னஞ்சலில் பெற

உன்னை தொடரும் இரண்டு கண்கள்    ல்லவனாகவே வாழ்வதற்கு என்ன செய்ய வேண்டும்? என்று கேட்டால் அதற்கான வழிமுறைகளை சுலபமாக சொல்லலாம். சுலபமாக சொல்லிவிடலாமே தவிர அதை கடைபிடித்து நல்லவனாக வாழ்வது என்பது மிகவும் கஷ்டம். நம்மை பொறுத்தவரையில் நல்லவனாக வாழ்வதில் அவ்வளவாக சிரமம் இருப்பது கிடையாது. ஆனால் மற்றவர்களும் நம்மை நல்லவன் என்று புரிந்துகொள்ள வேண்டும், தெரிந்துகொள்ள வேண்டும் என்று முனையும் போது தான் சிக்கல்கள் உருவாகிறது.

நல்லவனாகவே வாழ்வதற்கு என்ன செய்ய வேண்டும்? என்ற இந்த கேள்வியை சற்று திருத்தி சிலரிடம் கேட்டுப்பார்த்தேன் எப்போதுமே நம்மை நல்லவன் என்று மற்றவர்கள் சொல்ல வேண்டும், அதற்கு நாம் செய்யக்கூடிய காரியம் என்ன? என்னென்ன மாதிரி நடந்தால் எப்போதும் நல்லவனாகவே இருப்போம் என்று கேட்டேன். பலரும் பலவிதமான பதிலை சொன்னார்கள். மற்றவர்கள் தவறு செய்தால் அந்த தவறை பெரிதுபடுத்தாதீர்கள் என்று சிலர் சொன்னார்கள். மற்றவனை நல்லவனா? கெட்டவனா? என்று ஆராய்ச்சி செய்து கொண்டிருக்காதீர்கள். நீங்கள் மற்றவர்களின் விவகாரங்களில் மூக்கை நுழைக்கும் போது தான் மற்றவர்கள் உங்களை சீண்டுகிறார்கள் எனவே ஒதுங்கி போங்கள் என்று வேறு சிலர் கூறினார்கள். இப்படி வித விதமான கருத்துக்கள் சொல்லப்பட்டன. அனைத்தையும் கேட்ட எனக்கு இத்தனை கருத்துக்கள் இருக்கின்றனவா என்று எண்ணத் தோன்றியதே தவிர எதையும் சிறந்ததாக எடுத்துகொள்ள முடியவில்லை.

இறுதியாக ஒரு நண்பர் வந்தார். அவர் அறிவாளிமட்டும் அல்ல நிலைமைக்கு ஏற்றவாறு எப்படி வாழ்வது என்பதில் நல்ல ஞானஸ்தரும் கூட! பெரிய அளவில் கற்பனைகள், அதீத கிளர்ச்சி மனப்பான்மை என்பவைகள் அவரிடம் கிடையாது. உண்மையை சொல்லப்போனால் எந்த காலத்திற்கும் ஏற்ற யதார்த்தவாதி அவர். எனது கேள்வியை நன்றாக உள்வாங்கிய அவர் சிரித்துக்கொண்டே எந்த மனிதனால் மிக திறமையாக தனது தவறுகளை மறைத்துக்கொள்ள முடிகிறதோ அவனால் மட்டுமே எந்த நேரத்திலும் நல்லவனாக இருக்க முடியும். என்று கூறினார். அவருடைய பதில் அதிர்ச்சி மிகுந்ததாக இருக்கலாம் ஆனால் உண்மை இல்லாதது இல்லை.

அன்றும் சரி, இன்றும் சரி ஒளிந்து மறைந்து ஆட்டம் போட்டு உத்தமன் போல் காட்டிக்கொள்ளும் பெரிய மனிதர்களும், சிறிய மனிதர்களும் சமூகத்தில் நிறையபேர் உண்டு. தனது மறைவான நாடகம் என்றாவது ஒருநாள் வீதியிலே அரங்கேறிவிடுமோ? என்று அவர்கள் அச்சப்படுவது கிடையாது. அப்படியே ஒருநாள் கெட்டிக்காரனின் பொய்யும், புரட்டும் எட்டுநாள் என்பது போல மற்றவர்கள் கையில் மாட்டிக்கொண்டால் கூட சிறிது கூட நாணம் இன்றி அந்த தவறுக்கு தங்க முலாம் பூசுவதற்கு முனைவார்களே தவிர மன்னிப்பு கேட்டு திருத்திக்கொள்ள மாட்டார்கள். நாம் செய்கின்ற தவறை யார் கானப்போகிறார் என்ற இறுமாப்பு நிறைய பேரிடம் உண்டு.

சொந்த அண்ணன்காரனின் சொத்தை அடித்து பிடித்து பிடுங்கி ஏப்பம் விடுவார்கள், பெற்ற தாய்-தந்தையருக்கு வாய்க்கரிசி போடுவதற்கு கூட பணம் கேட்பார்கள், கட்டிய மனைவியாக இருந்தாலும், பெற்ற பிள்ளையாக இருந்தாலும் தன் சுகத்திற்கு இழப்பு என்று வந்தால் அவர்களையும் கூட கொலை செய்வதற்கு தயங்க மாட்டார்கள். இப்படிப்பட்டவர்கள் மேடை ஏறி சத்தியம், தர்மம் பேசுவார்கள். ஏழைகளை அரவணைத்து, பாட்டாளி மக்களின் துயரத்தை போக்க போவதாக ஆர்ப்பரிப்பார்கள். பெண்களின் துயரவாழ்வு முடிவுக்கு வரமாட்டேன் என்கிறதே என்று அழுது ஆர்ப்பாட்டம் பண்ணுவார்கள். இவர்களின் கபட நாடகத்தை நம்புவதற்கு ஒரு கூட்டம் கைதட்டி வரவேற்பதற்கு ஒரு கூட்டம் எப்போதும் தயாராக இருக்கும். 

அவர்களிடம் தனியாக பேசும் போது கேட்டுப்பாருங்கள். உங்கள் நாடகங்கள் ஊருக்குள் தெரிந்துவிட்டால் என்ன செய்வீர்கள் என்று கேட்டால் எனது ரகசியம் யாருக்கு தெரியும்? யாரதை பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்? அப்படியே பார்த்தாலும் ஆதாரத்தை தந்துவிட முடியுமா? என் செல்வாக்கினால் அவர்களை சின்னாபின்னமாக்கி விடமாட்டேனா? என்னை வணங்குவதற்கு பத்துபேர் இருக்கிறான் என்றால் என் புகழை கண்டு அஞ்சி நடுங்குவதற்கு ஐம்பது பேர் இருக்கிறார்கள் என்று ஆணவமாக பதில் தருவார்கள். எவராலும் தன்னை வீழ்த்தி விட முடியாது என்ற இறுமாப்பு அவர்களுக்கு.

ஆனால் உலக சரித்திரத்தை புரட்டிப்பாருங்கள் உள்ளே ஒன்றும், வெளியில் வேறொன்றுமாக வாழ்ந்தவர்கள் யாரும் நிலைத்திருக்க மாட்டார்கள். சாதனையாளர்களுக்கு மத்தியில் சோதனையாளர்களாக மட்டுமல்ல பாதகமான ஆட்களாகவும் இவர்கள் கருதபடுவார்கள். இவர்களை பற்றி பேசும் சரித்திர ஏடுகள் அமங்கல வார்த்தையை மட்டுமே பயன்படுத்தும் என்பதை மறக்ககூடாது. ஊரார் கண்ணிலிருந்து, உற்றார் கண்ணிலிருந்து, உலகத்தவர் கண்ணிலிருந்து தப்பித்துக்கொண்டு நல்லவனாக வேடம் போடலாம். ஆனால் எப்போதுமே இருட்டுக்குள்ளும் பார்க்க முடியும் கண்கள் ஒன்று நம்மை கவனித்து கொண்டே இருக்கிறது. நமது ஒவ்வொரு செயலையும் அவதானித்து அவதானித்து நமக்கான வருங்கால பாதையை ஆயத்தபடுத்தி கொண்டிருக்கிறது என்பதை மறந்துவிட கூடாது. 

மீராபாயை பற்றி அறியாத இந்தியன் எவனும் இருக்க மாட்டான். கண்ணனுக்காகவே பிறந்து கண்ணனுக்காகவே வாழ்ந்து கண்ணனிடத்திலேயே தன்னை முழுமையாக அர்ப்பணித்தவள் அவள். ஒருகட்டத்தில் அந்த பக்த சிரோன்மணியை மணந்த கணவன் கூட தாயாக நினைத்து பாதத்தில் வீழ்ந்து வணங்கினான். அப்படிப்பட்ட மீராவின் மீது கயவன் ஒருவனுக்கு காதல் வந்தது. எப்படியாவது ஒருநாள் அந்த தெய்வ மகளை தொட்டு அனுபவித்துவிட வேண்டும் என்ற வெறி வந்தது. ஒருநாள் அவளிடமே சென்று உன்னோடு ஒரு இரவை நான் கழிக்க வேண்டும் உன்னை முழுமையாக அனுபவிக்க வேண்டும் வருவாயா என்று கேட்டான்.

காமுகனின் காதல் மொழியை கேட்ட அந்த மாதர்குல மணிவிளக்கு அவனை காரி உமிழவில்லை. மாறாக இவ்வளவு தானே? இதில் ஒன்றும் சிரமம் இல்லை. நாளை இரவு கன்னிமாடத்திற்கு வா என்று சொன்னாள் வாய்பிளந்து போன அந்த ஓநாய் அடுத்தநாள் இரவு கன்னிமாடத்தில் கண்ணனை நினைத்து, கார்முகில்போல ஆகிபோன கன்னியர் திலகம் முன்பு நின்றான். தம்புரா எடுத்து எப்போதுமே தாமோதரனை இசையால் மீட்டி கொண்டிருக்கும் அந்த தங்கமகள் இப்போதும் அதையே செய்து கொண்டிருந்தாள் அவளை சுற்றி பத்து, பதினைந்து பக்தர்களும் இருந்தார்கள்.

இவனும் பஜனை இப்போது முடியும், இப்போது முடியும் என்று பொறுமையாக காத்திருந்தான். நேரமும் இசையும் நீண்டுகொண்டே சென்றதே தவிர நின்றபாடில்லை அவனால் அவசரத்தை அடக்க முடியாமல் மீராவிடமே கேட்டான். நான் நேற்று உங்களிடம் ஒரு விஷயம் கேட்டேனே என்னையும் வரச்சொன்னீர்களே மறந்து விட்டீர்களா என்றான்? மீரா சிரித்த முகம் மாறாமல், மறக்கவில்லை ஐயா இதோ வாருங்கள் இங்கேயே வைத்துக் கொள்ளலாம் என்றாள். அவன் பதறிவிட்டான் இங்கேயேவா? இத்தனைபேர் முன்னிலையிலா? வேண்டாம் வேண்டவே வேண்டாம் என்றான்.

அப்போது மீரா சொன்னாள் இத்தனைபேர் பார்த்துகொண்டிருக்கிறார்கள். இவர்கள் பார்த்துவிடுவார்கள் என்று பயப்படுகிறாயே ஆனால் உன்னையும் என்னையும் மற்றும் எல்லோரையும் கிருஷ்ணன் எப்போதுமே பார்த்துக்கொண்டே இருக்கிறான். அவனுக்கு தெரியாமல் அவன் அறியாமல் எப்படி ஆட முடியும்? எப்படி வேடம் போட முடியும்? சற்று நினைத்து பார் என்று பதில் சொன்னாள். அவன் யோசித்தான் ஆண்டவன் அறியாதது உலகத்தில் எது இருக்கிறது? அவனுக்கு தெரியாமல் எதை நம்மால் செய்ய இயலும்? ஊரையும், உலகத்தையும் மறந்தாலும் மறைத்தாலும் அவனிடம் மறைக்க முடியுமா? நான் ஏதும் செய்யவில்லை என்று அவனிடம் வாதம் பண்ண முடியுமா? ஒன்றும் இயலாது என்று நிஜமாக புரிந்து கொண்ட அவன் மீராவின் கால்களில் விழுந்து மன்னிப்பு கேட்டான். 

மீராவிடம் காதலை கேட்ட கயவனை போலதான் நம்மில் பலர் இருக்கிறோம். நமது தவறுகள் யாருக்கும் தெரியாது என்று தவறுதலாக நினைத்து கொண்டிருக்கிறோம். தவறுக்கும் தவறான தவறை செய்தால் கூட மாட்டிகொள்ளாதது வரை நல்லது என்று நினைக்கிறோம். உத்தமர்கள் போல் நடிக்கிறோம். இது தவறு சட்டத்தின் கண்களில் மண்ணை தூவி விடலாம், தர்மத்தின் கண்களில் மண்ணை தூவ எந்த மன்னவனும் இன்னும் பிறக்கவில்லை. நீ நுழைய முடியாத பாவ சந்துகளில் கூட தர்மத்தின் கண்கள் நுழைந்து உன் பாத சுவடுகளை அறிந்து கொள்ளும் உன் இரண்டு கண்கள் உலகத்தை பார்க்கலாம். உன் முகத்துக்கு பின்னால் இரண்டு கண்கள் உன்னை பார்க்கிறது என்பதை மறந்தால் மன்னிக்க படமாட்டாய் மாறாக தண்டிக்கப்படுவாய்.+ comments + 1 comments

Hmmm...


Next Post Next Post Home
 
Back to Top