Store
  Store
  Store
  Store
  Store
  Store

எப்படி சாப்பிட்டால் செல்வம் சேரும்?


ன்புள்ள குருஜி அவர்களுக்கு வணக்கம். சமீபத்தில் எனது நண்பன் ஒருவனின் வீட்டிற்குச்சென்றிருந்தேன். அவனது தாய்-தந்தையர் மிகவும் வற்புறுத்தி கேட்டதனால், மதிய உணவு அங்கேயே எடுத்துக்கொண்டேன். உணவு நன்றாக இருந்தது. ஆனால் அவர்கள் சாஸ்திரம், சம்பிரதாயம் என்றெல்லாம் சொல்லி என்னை அப்படி உட்கார், இப்படி சாயக்கூடாது என்று மிகவும் கஷ்டப்படுத்தி விட்டார்கள். சாப்பிடுவதற்கு கூட சாஸ்திரம் இருக்கிறதா என்ன? தயவு செய்து விளக்கம் தாருங்கள்.

இப்படிக்கு,

பரமேஸ்வரன்,

மும்பை.
  சாப்பாடுதானே என்று வெகு சாதாரணமாக பேசிவிட்டீர்கள். நமது இந்தியர்களின் வாழ்வில் சாப்பாடு என்பது வயிற்றுப்பசியை மட்டும் தீர்க்கும் நிகழ்வு அல்ல. அது ஒரு மனிதனின் தகுதியை, பண்பாட்டை தீர்மானிக்க கூடிய நிகழ்வாகவும் இருக்கிறது. நந்த வம்சத்து மன்னர்கள் தனக்கு சரியான இருக்கை தந்து, உணவு உண்ண அனுமதிக்காமல் அவமானப்படுத்தி விட்டான் என்று தானே சாணக்கியர் நந்த வம்சத்தையே அழித்து மெளரிய சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கினார் இது மறந்து போய்விட்டதா என்ன?

பகவான் கிருஷ்ணன் கூட, தமது கீதையில் எதை சாப்பிட வேண்டும்? எதை சாப்பிடக்கூடாது என்று விளக்கம் தருகிறார். காரமான உணவு உணர்ச்சி கொந்தளிப்பையும், கெட்டுப்போன உணவு சோம்பேறித்தனத்தையும், அறுசுவைகளும் சமமாக இருக்கும் உணவே நல்ல மனநிலையை உருவாக்கும் என்று உணவின் தன்மையை முதன்முதலாக உலகுக்கு வெளிப்படுத்திய மருத்துவ மேதையே கிருஷ்ணன் தான். ஆண்டான் அடிமை என்ற நிலை மாறி எல்லோரும் சமம் என்று காட்டுவதற்கு காந்திஜி கூட, சமபந்தி போஜனத்தை நடைமுறைப்படுத்தினார் என்று பார்க்கும் போது சாப்பாட்டின் முக்கியத்துவம் எத்தகையது என்பது நன்றாக தெரியும்.

உணவை சமைப்பதற்கு மட்டுமல்ல, அதை பரிமாறுவதற்கு கூட நம்மிடத்தில் மரபு உண்டு. முதலில் சாதம் வைத்து விட்டு, பிறகு கூட்டு- பொரியல் வைத்தால் அது வைஷ்ணவ மரபு. கூட்டு- பொரியல் வைத்து விட்டு கடைசியில் சாதம் பரிமாறினால் அது சைவ மரபு என்றும் பலர் கூறுகிறார்கள். இதுமட்டும் அல்ல, இன்னும் நிறைய விதி முறைகள் இருக்கிறது. உணவு உண்ணும் போது ஆண்கள் கண்டிப்பாக ஒற்றை துணி அணியாமல், ஒரு சிறு துண்டையாவது உடலை மறைக்க போர்த்திக்கொள்ள வேண்டும் என்கிறார்கள்.

சாப்பிடுவதற்கு முன்பு கைமட்டும் கழுவினால் போதாது. காலையும் சேர்த்து கழுவ வேண்டும். அப்படி செய்தால் அதாவது காலில் தண்ணீர் பட்டவுடன், கொதிப்பான நிலையில் மூளை இருந்தாலும், அது ஒரு சமநிலைக்கு வந்து, உணவு நேரத்தில் வீணான கோபதாபங்களை மறக்கடிக்கச்செய்து, புத்தியை சரிபடுத்தி விடும். சாப்பிடும் போது கைகளை தரையில் ஊன்றி சாப்பிடக்கூடாது. மார்பளவு உயரத்தில் அல்லது நடுவயிறு உயரத்தில் உணவை வைத்து உண்ணக்கூடாது. அதாவது நாகரீகம் என்ற பெயரில் சாப்பாட்டு மேஜையில் சாப்பிடக்கூடாது என்றெல்லாம் ஐதீகம் உண்டு.

அரைவயிறு சோறு, கால்வயிறு தண்ணீர், மீதம் கால்வயிறு காற்று என்பது சரியான உணவாகும். முழு வயிற்றையும் சோற்றால் நிரப்பக்கூடாது. அப்படி நிரப்பினால் மூச்சிரைப்பு, நெஞ்சுவலி போன்றவைகள் வரும் என்கிறார்கள். சாப்பிட்ட உடன் குளிக்ககூடாது. ஒவ்வொரு சாப்பாட்டு வேளைக்கு முன்னால் குளிப்பது நலம். குறைந்தபட்சம் முகம் அலம்பிக்கொண்டு சாப்பிட உட்கார வேண்டும் என்கிறார்கள்.

கிழக்கு நோக்கி அமர்ந்து உண்டால் ஆயுள் விருத்தி, மேற்கு நோக்கி அமர்ந்தால் செல்வ விருத்தி, தெற்கு நோக்கி அமர்ந்தால் புகழ் விருத்தி என்று கூறும் நமது சாஸ்திரங்கள், வடக்கு நோக்கி அமர்ந்து சாப்பிட்டால் மனம் பரபரப்பு அடைந்து சண்டை போடத்தோன்றும் என்கிறது. கணவனோடு சண்டைபோட மனம் வரவில்லை என்றால், இரண்டு நாட்கள் வடக்கு திசைபார்த்து சாப்பிட்டு பாருங்கள். மனம் பரபரப்பு அடைந்து மனுஷனை ஒரு பிடி பிடிக்கலாம்.


 

Contact Form

Name

Email *

Message *