Store
  Store
  Store
  Store
  Store
  Store

மரணம் வருவது எப்படி...?



சித்தர் ரகசியம் - 11


   சித்தர் இரகசியம் தொடரை சற்று வேகமாக எழுதி வந்தேன். சொல்ல வருகின்ற கருத்து நன்றாக இருக்கிறது. படிப்பதற்கும் சுவாரசியமாக இருக்கிறது. என்று பல வாசகர்கள் சொன்னார்கள். ஒரு மரம் வளர்வதற்கு மண்ணும், தண்ணீரும் எந்தளவு அவசியமோ அதே அளவு ஒரு விஷயத்தை எழுதுவதற்கு வாசகர்களின் ஆதரவும், ஆர்வமும் அவசியமாகும். இந்த தொடரை பொறுத்தவரை கிடைத்த ஆதரவு மிகப்பெரியது. பல நேரங்களில் என் கருத்துக்களிலிருந்து முரண்பட்டு பல நல்ல விமர்சனங்களை செய்து வரும் டாக்டர்.அன்புராஜ் போன்ற வாசகர்களுக்கு கூட இந்த தொடர் ஆர்வத்தை ஏற்படுத்தி இருந்தது என்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சி தந்தது.

காய்த்த மரம் கல்லடிபடும் என்பது போல, பல நேரங்களில் ஏற்பட்ட சுற்றுச்சூழல் அமைப்புகள் துவங்கிய வேகத்தில் தொடரை எடுத்துச்செல்ல முடியாமல், அனாவசியமான தாமதத்தை உருவாக்கி விட்டது. இப்படி தாமதமாக நடக்க வேண்டுமென்று இறைவன் விரும்பி இருக்கிறான். அதனால் எந்த காலத்தில் எது நடக்குமோ, அது அந்த காலத்தில் மட்டுமே கண்டிப்பாக நடக்கும். அடுத்தடுத்து முயன்றாலும் இறைவனின் சித்தத்தை மீற இயலாது என்பதற்கு இந்த தொடர் நல்ல பாடமாக என்னை பொறுத்தவரை அமைந்திருந்தது.

சென்ற அத்தியாயத்தில் ஆத்மசுத்தி, காயசுத்தி போன்ற விஷயங்களைப்பற்றி பேச ஆரம்பித்தோம் என்று நினைக்கிறேன். மிக முக்கியமாக மனிதர்களின் சரீரத்தை நல்ல விதத்தில் கட்டமைத்துக்கொள்ள சித்தர்கள் கூறுகின்ற காயசுத்தி வழிமுறையை பற்றி முதலில் சிந்திப்போம் என்று ஆரம்பித்தும் இருந்தோம். இந்த இடத்தில் ஒரு கேள்வி வரலாம் இறைவனோடு இரண்டற கலப்பது தானே மனித பிறவியின் இறுதி லட்சியம் அதை வலியுறுத்த தானே சித்தர் பரம்பரை தோன்றியது. ஆத்மா வளர்ச்சியை பற்றி பேசுவதை விட்டு விட்டு உடல் வளர்ச்சியை பற்றி அதாவது காய சுத்தியை பற்றி பேசவேண்டிய அவசியம் சித்தர்களுக்கு ஏன் ஏற்பட்டது என்று.

சுவர் இருந்தால் தான் சித்திரம் எழுத முடியும் என்பார்கள். உடல் என்ற ஒன்று இருந்தால் தான் அதில் ஆத்மா வாசம் செய்ய முடியும். குடியிருக்கின்ற வீடு ஒழுகிக்கொண்டே இருந்தால் அதில் வசிப்பவன் நிம்மதியாக வாழ முடியுமா? தனது அன்றாட வேலைகளை தங்கு தடையின்றி செய்ய முடியுமா? நிச்சயம் இயலாது. இயல்பான வாழ்க்கையை நடத்துவதற்கு வீடு எப்படி அவசியமோ? அதே போல ஆத்மா இறைவனது திருவடியை நிரந்தரமாக சென்றடைய சரீரம் என்பது அவசியமானது. அதனால் தான் சித்தர்கள் சரீர போஷாக்கை பற்றி அதிகமாக பேசினார்கள் என்பதை மனதில் வைக்க வேண்டும்.

காயசுத்தியில் முதலாவதாக வருவது தந்த சுத்தி என்ற பற்களின் பராமரிப்பு. சொத்தையாகி போனால் பிடுங்கி எறியக்கூடிய பற்களுக்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமா என்று சிலர் யோசிக்கலாம். ஒரு மனிதனது உடலில் பெருவாரியான நேரம் அதிகமாக வேலை செய்வது வயிறு தான் வயிற்றின் வேலையை குறைப்பதற்கு உதவி செய்வது பற்கள் மட்டுமே என்பதை மறக்க கூடாது. உணவை மென்று அரைத்து கூழாக்கி ஜீரணம் ஆவதற்கான மெல்லிய பொருளாக கொடுப்பது பற்களின் வேலை. உட்கொள்ளும் உணவை துண்டு துண்டாக அப்படியே குடலிடம் கொடுத்தால் அது செரிமானம் செய்வதற்கு வெகு நேரமாகி விடும் பல பொருட்கள் செரிமானம் ஆகாமல் வயிற்றிலேயே தங்கி விடும். ஒரே இடத்தில் குப்பை தேங்கி கிடந்தால் விஷ வாயு உற்பத்தி ஆவது போல் வயிற்றிலே கழிவு பொருட்கள் அதிகமாக தங்கினால் இரத்தம் கெட்டுவிடுகிறது. வராத நோயெல்லாம் தானே வர துவங்கி விடுகிறது.

எனவே சித்தர்கள் வேப்பம் பட்டை, கருவேலம் பட்டை, ஆலம்விழுது பட்டை அல்லது நாயுருவி, கடுக்காய்பொடி இவைகளில் ஏதாவது ஒன்றை தேர்ந்தெடுத்து தூளாக்கி கிராம்பு மற்றும் இந்துப்பில் கலந்து பல்விளக்கும் பழக்கத்தை உருவாக்க வேண்டும் என்கிறார்கள். காலை, மாலை இரண்டு வேளையிலும் பல் துலக்குவது அவசியம் என்பது சித்தர்களின் நெறியாகும். மிக குறிப்பாக நான் மேலே குறிப்பிட்ட ஐந்து பொருட்களையும் ஒன்றாக கலந்து பொடி செய்து கொண்டால் அதற்கு “பஞ்சமூல லவணம்” என்று பெயர். இதை வைத்து வாயை சுத்தப்படுத்தி வந்தால் ஈறுகளும், பற்களும் வலுப்படுவதோடு வாய்துர்நாற்றம், பல் அசைவு, பல்லில் உள்ள கறைகள் கிருமித்தொற்று போன்றவைகள் விலகி முக வசீகரம் ஏற்படும் என்கிறார்கள்.

அடுத்ததாக சுக்கு, மிளகு, திப்பிலி, கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய், ஜாதிபத்திரி, லவங்கபத்திரி, தாலிசபத்திரி, வெள்ளை மிளகு, வால்மிளகு, சீரகம், கருஞ்சீரகம், சந்தனம்,தேவதாரு கட்டை, விளாமிச்சைவேர், வெட்டி வேர், நன்னாரி வேர், வெந்தயம் ஆகிய பொருட்களை இடித்து வைத்துக்கொண்டு துரிசம், பவளபுத்து, சாம்பிராணி, பச்சை கற்பூரம் போன்றவற்றை தனித்தனியாக பொடி செய்து, கரிசலாங்கண்ணி கீரையை சாறு எடுத்து அவற்றோடு மேற்குறிப்பிட்ட பொருள்களை கலந்து தேங்காய் எண்ணெய் சேர்த்து மெல்லிய நெருப்பில் கொதிக்க வைத்து பத்திரப்படுத்தி கொள்ள வேண்டும். தினசரி காலையில் எழுந்தவுடன் உச்சந்தலை பிடரி போன்ற பகுதிகளில் சற்று அழுத்தி தேய்த்து அரைமணிநேரம் சென்ற பிறகு குளிக்க வேண்டும் என்று கூறுகிறார்கள். இந்த எண்ணெயை தேய்ப்பதனால் தலை சூடு, கண் எரிச்சல், பிடரி வலி, தலைவலி போன்றவைகள் நீங்கி மூளை தெளிவடையும் என்பதை உணர வேண்டும்.

பிறந்தவர்கள் அனைவரும் இறக்க வேண்டும் என்பது விதி. மரணத்திலிருந்து யாரும் தப்ப முடியாது. மரணத்திற்கு பல காரண காரியங்கள் இருக்கிறது. ஆனால் பொதுவாக பெருவாரியான உயிர்கள் உடலை விட்டு பிரிந்து போவதற்கு எது காரணமாக இருக்கிறது என்பதை பற்றி நம்மில் பலர் சிந்திப்பது கிடையாது. ஆற்றில், குளத்தில் விழுந்து சாகிறவன் விபத்துகளில் இறந்து போகிறவர்கள், படுகொலை செய்யப்படுபவர்கள் இவர்களுடைய உயிர் எதனால் பிரிகிறது என்பது ஓரளவு நமக்கு தெரியும். ஆனால் நோய்பட்டு இறப்பவர்களுடைய உயிர் எதனால் போகிறது என்று கேட்டால் அதற்கு ஒரே பதில் கபம் என்ற சளியால் போகிறது என்று மட்டும் தான் கூறமுடியும். ஒருவருக்கு இதய நோய் வரலாம், புற்றுநோய் வரலாம் வேறு எந்தவிதமான நோய்களும் வரலாம். இந்த நோய்களின் இறுதி வடிவம் அதாவது உயிரை பறிக்கும் நிலை கப வடிவம் என்று தான் கூறவேண்டும்.

அதனால் தான் சித்தர்கள் நுரையீரலில் உருவாகும் கோழையை யமன் என்ற பெயரில் அழைத்தார்கள். உடம்பில் சளியானது சேர சேர உடல் இயக்கம் குறைகிறது. இரத்த ஓட்டம் தடைபடுகிறது. எலும்புகள் வலுவிழக்கிறது. நாடி நரம்புகள் எல்லாம் தளர்ந்து போய் நடமாடும் பிணமாக மனிதன் ஆகிவிடுகிறான். எனவே சளித்தொல்லை இல்லாமல் வாழுகிற மனிதன் தான் நிஜமான ஐஸ்வர்யவனாவான் எனலாம். இந்த சளித்தொல்லையை முற்றிலுமாக நீக்குவதற்கு சித்தர்கள் கபசுத்தி என்ற பெயர் கொடுத்து கரிசாலை நெய் என்ற அற்புதமான மருந்தையும் கூறி இருக்கிறார்கள். கரிசாலை நெய்யை பற்றி பேசாத சித்தர்களே இல்லை என்று சொல்லலாம் சித்தர்களின் மருத்துவ முறையில் மணிமகுடமாக இருப்பது கரிசாலை நெய் என்றால் அது மிகையில்லை.

இந்த நெய்யை சற்று முயற்சி செய்தால் யார் வேண்டுமானாலும் செய்யலாம். கரிசலாங்கண்ணி கீரையை வேரோடு பிடுங்கி வந்து நன்றாக கழுவி அம்மியில் வைத்து அரைக்க வேண்டும். இந்த இடத்தில் கவனிக்க வேண்டிய பகுதி கீரையை அம்மியில் அரைக்க வேண்டுமே தவிர நமது சவுகரியத்திற்காக மிக்ஸியில் போட்டு அரைக்ககூடாது. கையின் வேகத்திற்கு கல் சுழன்று வந்து அரைத்தால் அரைபடும் பொருளின் இயற்கை தன்மை கெடுவதில்லை. மின்சார இயந்திரத்தின் அதீத வேகத்தில் அரைபடும் பொருளின் ஜீவன் போய்விடுகிறது. சக்கை மட்டுமே மிஞ்சுகிறது. இதற்கு உதாரணமாக சொல்வது என்றால், கையால் அரைக்கும் தேங்காய் சட்டினி சுவையும், மிக்ஸியில் அரைக்கும் சட்டினியின் சுவையும் ஒப்பிட்டாலே போதுமானது.

அரைக்கப்பட்ட கீரை விழுதை உருண்டையாக பிடித்தால் ஒரு தேங்காய் அளவு வரவேண்டும். அதாவது அந்த அளவிற்கு கீரை தேவை இந்த விழுதை சுத்தமான பசுநெய்யில் போட்டு கலக்கி ஐந்துகிராம் அளவிற்கு சீனி காரத்தை போட்டு விறகு அடுப்பில் ஏற்றி மிதமான நெருப்பில் மெழுகு பதமாக காய்ச்சி வடிகட்டி பத்திரபடுத்தி கொள்ள வேண்டும். இந்த மெழுகை சூரியன் உதிக்கும் முன் எழுந்து வலது கை பெருவிரலால் தொட்டு வாயை நன்றாக திறந்து உள்நாக்கில் பின்புறம் உள்ள மேல்நோக்கி அமைந்த துவாரத்தில் தடவி அரைமணிநேரம் காத்திருக்க வேண்டும். இந்த நேரத்தில் ஊர்த்துவ நாடி, சுழுமுனை நாடி என்றெல்லாம் சித்தர்களால் சொல்லப்படும் சூட்சம நாடிக்குள் அடங்கி கிடக்கும் கோழை நூல் நூலாக வெளியே வந்து விழும். இப்படி நாற்பத்தி எட்டு நாட்கள் தொடர்ந்து செய்தால் உடம்பில் உள்ள தேவையற்ற சளி வெளியேறி, ஆரோக்கியமான நுரையீரல் உடல் முழுவதும் நல்ல பிராணக்காற்றை தரும். இந்த முறையை மூன்று வருடத்திற்கு ஒருமுறை செய்து வரவேண்டும். இத்தோடு ஆறுமாதத்திற்கு ஒருமுறை பதிக்கு மருந்து உண்டு குடலை சுத்தப்படுத்தி கொள்ள வேண்டும்.

இவைகள் தான் தினசரி நமது உடம்பை பராமரிக்க சித்தர்கள் கூறிய நித்திய சுத்தி என்ற காயசித்தி முறையாகும். இது தவிர குளிர்ந்த நீரில் மட்டுமே குளிப்பது, இரசாயன பொருட்களை உடல் அழுக்கை நீக்க பயன்படுத்தாமல் இருப்பது, மசாலா பொருட்களை தவிர்த்து கீரைகள், காய்கறிகள் போன்றவற்றை உண்பது, மாமிச போஜனத்தை எந்த நிலையிலும் ஏற்காமல் இருப்பது, போன்ற வழிவகைகளும் கூறுகிறார்கள். அவர்கள் கூறுகிற அனைத்தையும் பட்டியல் போட்டுச்சொன்னால் எதைச்செய்வது எதை விடுவது என்ற குழப்பம் வந்துவிடும் எனவே மிக முக்கியமானதை மட்டுமே இங்கே சொன்னேன். நம்மால் முடிந்தவரை இந்த முறைகளை பயன்படுத்தினால் நல்லது என்று நினைக்கிறேன்.


Contact Form

Name

Email *

Message *