( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........!! click here )வரும் ஞாயிறு அன்று அமிர்த தாரா தீட்சை அளிக்கப்படுகிறது appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846 

Share !
This Post

உஜிலாதேவி பதிவுகளை
மின்னஞ்சலில் பெற

அடம்பிடித்தால் சுகப்படாது !


    விழுப்புரத்திற்குள் கார் நுழையும் போது சரியாக மணி மூன்று. சென்னையில் கிளம்பும் போதே சாப்பிட்டு போக வேண்டும் என்று நினைத்து எல்லோரும் அவசரப்படுத்தியதால் சாப்பிட முடியவில்லை. போகும் போது வழியில் பார்த்துக்கொள்ளலாம் என்று சொல்லி விட்டார்கள். இதோ இங்கே நல்ல சாப்பாடு கிடைக்கும், அங்கே கிடைக்கும் என்று பேசி பேசியே மூன்று மணி நேர பயணம் முடிந்து விட்டது. இனி பொறுக்க முடியாது வயிற்றுக்குள் நடந்த போராட்டம் கண்களையும் சோர்வடையச்செய்ய ஆரம்பித்து விட்டது. ஏதாவது உணவு இல்லை என்றால் நிலைமை விபரீதமாகி விடும். சர்க்கரை நோயின் தாண்டவத்தை பற்றி எல்லோருக்குமே தெரியுமே?

அதுவும் நான் சின்ன பிள்ளையில் இருந்து வேளா வேளைக்கு சாப்பிட்டு பழகியவன். வயிற்றை காயப்போட்டே பழக்கம் இல்லை. காலையில் எழுந்தவுடன் ஒரு சொம்பு நிறைய மோர் குடிப்பேன். அதன் பிறகு தோட்டத்திற்கு சென்று குளித்து வந்தவுடன், கெட்டியான தயிர் போட்டு பழைய சாதத்தை அம்மா பிசைந்து தருவாள். இரவில் வைத்த புளிக்குழம்போ, மாங்காய் ஊறுகாயோ தொட்டுக்கொள்ள இருக்கும். காரமான ஊறுகாயை நாக்கில் நடுவில் தடவி பழைய சாதத்தை சுவைப்பதில் இருக்கின்ற சுகம் உலகில் வேறு எதிலும் கிடையாது. கனமான வயிற்றை தூக்கிக்கொண்டு பள்ளிக்கூடம் போவதற்கு சிரமமாகத்தான் இருக்கும். ஆனால் வேறு வழியில்லை போய்தான் ஆகவேண்டும். வீட்டில் இருந்தால் அப்பாவின் கையில் சுழலுகிற பிரம்புக்கு பதில் சொல்ல முடியாது.

காலை நேரத்து பழைய சாதம் சுகமாக தூக்கத்தை வரவழைக்கும். வகுப்பறையில் வாத்தியார் எதோ புரியாத பாஷையில் பாடம் நடத்துவது போல் பாதி தூக்கத்தில் தெரியும். நான் உறங்குவதை பார்த்து விட்டு எவனாவது ஒரு படுபாவி பயல் சார் மணிவண்ணன் குறட்டை விடுகிறான் சார் என்று வாத்தியாரிடம் போட்டு கொடுத்துவிடுவான். அந்த ஆள் பெண்டாட்டியாக என்னை நினைத்துக்கொண்டு தன் பலம் அனைத்தையும் என் மீது செலுத்தி அடித்து துவைத்து விடுவார். பெண்டாட்டி முன்னால் அவரால் துணி மட்டும் தான் துவைக்க முடியும்.

பத்தரை மணிக்கு பெல் அடித்தவுடன் வீட்டை நோக்கி ஓடிவிடுவேன். காலையில் சாப்பிட்டது செரித்து விடும். ஸ்கூட்டர் ஓட்டுவது போல் கைகளை நீட்டி திருகிக்கொண்டு ஓடும் போது காலியான வயிறு காற்றை போல கூட வரும். அம்மா தோட்டத்துக்கு போயிருப்பாள். வீட்டில் பாட்டி மட்டுமே இருப்பாள். பாட்டிக்கு நான் என்றால் கொள்ளை பிரியம் சட்டிப்பானையில் இருப்பதை எல்லாம் உருட்டி புரட்டி எனக்கு ஏதாவது தராமல் அனுப்ப மாட்டாள். சொம்பு நிறைய கருப்பட்டி காப்பியை குடித்து விட்டு கால்சட்டை பைகளில் முறுக்கு அல்லது காரசேவு நிரப்பி கொண்டு பள்ளிக்கூடத்திற்கு வருவேன். டீச்சர் பாடம் எடுக்க என் பற்கள் ரைஸ்மில் இயந்திரம் போல் பண்டங்களை அரைத்துக்கொண்டிருக்கும். எப்போதடா மதிய சாப்பாட்டிற்கு விடுவார்கள் என்று காத்துக்கொண்டிருப்பேன்.

மதியம் வீட்டிற்கு வந்ததும், சம்பா அரிசி சாதமும் கமகம என்று மணக்கும் கருவாட்டு குழம்பும் நாக்கில் நீர் சுரக்க வைக்கும். குறைந்தது மூன்று முறையாவது சாப்பிடவில்லை என்றால் மனசு கேட்காது அப்பாதான் திட்டுவார் சாப்பாட்டு ராமனாய் வளராதே புத்தி வளராது என்பார் நீங்கள் சும்மா இருங்க புள்ள சாப்பிடும் போது இப்படியா பேசுறது இந்த வயசுல நொறுங்க தின்னாத்தான் நூறு வயசு வாழ முடியும் என்று அம்மா எனக்காக பரிந்து பேசுவாள். எனக்கு எதுவும் காதில் விழாது குழம்பில் கிடக்கும் கத்திரிக்காயை எடுத்து தூக்கி பிடித்து நுனிநாக்கால் தொட்டு சுவை பார்த்து அதன் பிறகு அதில் ஒட்டி கொண்டிருக்கும் மசாலா நீரை கண்களை மூடி கொண்டு உரித்து துளித்துளியாக சாப்பிடுவேன்.

மாலையில் கடலை, பொரி, பணியாரம் என்று ஏதாவது வயிறு நிறைய கிடைக்கும் தெருவில் உள்ள புழுதி எல்லாம் உடம்பு முழுக்க பூசிக்கொள்ளும் அளவிற்கு உருண்டு புரண்டு விளையாடி விளக்கு வைக்கும் நேரத்தில் வீட்டுக்கு வருவேன். ஐயா போகும் போது இருந்த அழகென்ன இப்போ இருக்கும் அழகென்ன புலிவேசம் போட்டவன் போல் வந்து நிக்கான் பாரு என்று பாட்டி கிண்டல் செய்வாள். துணிகளை அவிழ்த்து போட்டு கிணற்றடியில் போய் நிற்பேன் தண்ணீர் இறைத்து தலையில் ஊற்றி குளிக்க வைத்து ஈரம் போக தலைதுவட்டி உடம்பு முழுவதும் பவுடர் போட்டு கொஞ்சநேரம் படி அதன்பிறகு சாப்பிட்டு படுக்கலாம் என்று அம்மா சொல்வாள். இப்போதே சாப்பிடலாமே என்று சிணுங்கி கொண்டே படிக்க உட்காருவேன் படிப்பில் எங்கே கவனம் போகும்.

இரவு சாப்பாட்டிற்கு என்ன செய்திருப்பார்கள் சாதமா? இட்லி, தோசை இப்படி ஏதாவது இருக்குமா? என்று யோசிப்பேன். அப்போதெல்லாம் மற்றவர் வீடுகளில் இட்லி, தோசை என்பது தீபாவளி பொங்கலில் மட்டும் தான் பார்க்க முடியும். எங்கள் வீட்டில் அப்படி இல்லை. அம்மா விருப்பம் வந்துவிட்டால் எப்போது வேண்டுமென்றாலும் செய்வாள். ஆனால் இதுவரை காலையில் இட்லி, தோசை போட்டதே இல்லை. நானும் சாப்பிட்டது இல்லை. இப்போது காலம் மாறிவிட்டது இட்லி, தோசை என்பது கூட பழையகாலத்து உணவு என்று தள்ளி வைத்து விட்டார்கள். என்னால் மட்டும் அது முடியவே முடியாது. ஆவிபறக்கும் இட்லியில் வெங்காய சாம்பாரை சுடச்சுட ஊற்றி சாப்பிடுவதிலும், ஆட்டுக்கறி குழம்பில் தோசையை தோய்த்து சாப்பிடுவதும் யாருக்கும் கிட்டாத உன்னத அனுபவம்.

சாப்பிடுவதில் மட்டுமே கவனம் செலுத்திய அந்த காலம் முற்றிலுமாக மறைந்து விட்டது. பிறந்த ஊரை விட்டு விட்டு சென்னைக்கு வந்து காய்ந்து போன ரொட்டியும், வேந்தும் வேகாத சாதமும், உப்பு இல்லாத சாம்பாரும் நாக்கை செத்துப்போக செய்துவிட்டது. மனிதன் உயிர் வாழ்வதற்கு உணவு முக்கியமானது அல்ல. பணமே முக்கியமானது என்ற நிலை வந்த பிறகு சுவை உணர்ச்சியையும் இரக்க உணர்ச்சியையும் ஒரு சேர குழிதோண்டி புதைத்து விடவேண்டியது தான். சாப்பிட வேண்டிய காலத்தில் சாப்பிடாமல் இரவு-பகல் பாராமல் கண்விழித்து உழைத்து உடலை அசைக்காமல் மூளையை மட்டும் அசைத்து ஒரே இடத்தில் கிடந்ததனால் சர்க்கரை நோய் சாரைப்பாம்பாக சுற்றிக்கொண்ட பிறகு எதை சாப்பிடுவது? எப்படி சாப்பிடுவது யார் சாப்பிட விடுகிறார்கள்.

சென்ற வருடம் ஊருக்கு சென்றிருந்தேன். அம்மாவிடம் ஆசை ஆசையாக ஆப்பம் செய்து, தேங்காய் பால் ஊற்றிக்கொடு என்று கேட்டேன். என் அம்மா சுடுகின்ற ஆப்பம் உலகத்தில் எந்த மூலைக்கு போனாலும் கிடைக்காது. பட்டுபுடவையில் தங்க ஜரிகை இருப்பது போல ஆப்பத்தை சுற்றி மெல்லிய பகுதியும், நடுவில் தாஜ்மகாலின் கொண்டையை போல உப்பலான பகுதியும் பார்ப்பதற்கு கண்ணை பறிக்கும் வெள்ளி மின்னல் போல் பளிச்சென்று இருக்கும் ஆப்பத்தில் தேங்காய் பால் ஊற்றி ஊறவைத்து இரண்டு விரல்களால் சிறு சிறு விள்ளல்களாக்கி பால் வாயில் ஊற ஊற தொண்டைக்குள் அழுத்தினால் அடடா தேவர்கள் கடைந்த அமுது கூட இந்த சுவை வருமா? என்று தோன்றும்.

அம்மா எனக்காக ஆப்பம் சுட ஆரம்பித்தாள். அடுப்பங்கரையில் அம்மாவின் பின்னால் நின்று ஆப்பம் பிறக்கின்ற அழகை பார்த்து ரசித்துகொண்டிருந்தேன் அப்போது எங்கிருந்தோ வந்தாள் என் பெண்டாட்டி என்ற ராட்சஸி ஆப்பம் யாருக்கு போடுகிறீர்கள் இவருக்கா? அதுவும் தேங்காய் பால் ஊற்றியா? உங்கள் மகனுக்கு உடம்பு முழுவதும் சர்க்கரை நோய் பரவிக்கிடக்குது அவர் உட்காரும் இடத்தில் எறும்பு மொய்க்காதது தான் பாக்கி. இதில் நீங்கள் வேறு ஆப்பம் சுட்டு கொடுத்தால் ஆள் நடமாடமாட்டார் படுத்துக்கொள்வார் என்று அந்த அரக்கி கர்ண கொடூரமான குரலில் என் கனவை நசுக்கினாள். இப்படி சொன்ன பிறகு எந்த தாயால் தான் பிள்ளைக்கு ஆசையாக ஊட்டி கொலை செய்ய முடியும். போடாபோ என்று அம்மா துரத்தி விட்டாள்.

பட்டிகாட்டான் மிட்டாய் கடையை முறைத்து பார்ப்பது போல வகை வகையான உணவுகளை முறைத்து பார்க்கிறேன் எனது கனவில் குதுப்பு மீன் குழம்பும், ஆட்டு இரத்த வருவலும் வந்து வந்து போகிறது. நாக்கில் நீர் சொட்டச்சொட்ட இரவு முழுக்க அலைகிறேன். எந்த உணவையும் என்னால் தொட முடியவில்லை கனவில் உண்டால் சுவை தெரியாது என்பதை பிறகு தான் புரிந்து கொள்கிறேன். எப்படியோ கஷ்டப்பட்டு விழுப்புரத்துக்குள் சென்று ஒரு ஓட்டல் முன்னால் காரை நிறுத்தினார்கள் வேக வேகமாக இறங்கி சாப்பாட்டு மேஜை முன்னால் சென்று உட்கார்ந்தேன் சூடாக சாப்பாடு இருந்தால் போடு மீன் குழம்பு இருந்தால் ஊற்று என்றேன்.

சப்ளையர் என்னை வேடிக்கையாக பார்த்தார். சார் இது பிராமணாள் ஹோட்டல் கறி மீன் எல்லாம் இங்கு கிடையாது என்றான். நாசமா போச்சி வேறு என்னதான் இருக்கிறது? என்று கேட்டேன் மூன்று மணிக்கு வந்து உட்கார்ந்து கொண்டு சாப்பாடு கேட்டால் எப்படி சார் கொடுக்க முடியும்? எல்லாம் விற்று தீர்ந்து விட்டது. வடையும், போண்டாவும் வேண்டுமானால் சூடாக இருக்கிறது ஒரு செட் சாப்பிட்டு ஸ்ட்ராங்காக ஒரு காப்பி சாப்பிடுங்க பேஷா இருக்கும் என்றான் அவன். நான் முறைத்தேன் என் முறைப்பின் காரணத்தை புரிந்து கொண்டவன் போல, எதையும் வேளா வேளையில் செய்யணும் சார். கால நேரத்தை பார்த்து  ஏற்றதை சாப்பிட கத்துக்கணும் இது தான் வேணும்னு அடம்பிடிச்சா வாழ்க்கை சுகப்படாது என்றான்.

அவன் சொல்வது சரியாகப்பட்டது. சுவையான உணவு வேண்டுமென்றால் நான் கிராமத்திலேயே இருந்திருக்க வேண்டும். வயலில் உழைத்து வாய்காலில் குளித்து கொண்டிருந்தால் சர்க்கரை நோயும் வராது, ஒரு கூட்டு புடலங்காயும் வராது. அதை விட்டு விட்டு பணம் வேண்டுமென்று பட்டணம் வந்தேன். தேடி வந்த பணம் கிடைத்தது கையில் இருந்த சுகம் போனது. அது போன பிறகு போய்விட்டதே என்று வருத்தப்படுவது எதற்கு? இப்படி வருத்தப்பட்டு கொண்டே வாழ்வதற்காக பிறந்தோம் வாழும் காலம் மிகவும் சொற்பம் இதில் சாப்பாடு இல்லையே நல்ல ஆடை இல்லையே? அழகான மனைவி இல்லையே? அறிவான பிள்ளை இல்லையே என்று இல்லாததை கிடைக்காததை நினைத்து வறுத்தப்படுவது ஏன்? குழம்பிபோன அர்ஜுனனுக்கு கண்ணன் கீதை சொன்னது போல என் சாப்பாட்டு மோகத்தை உடைப்பதற்கு சப்ளையர் நல்ல பாதை ஒன்றை சொன்னார்.

நான் அவனை பார்த்து சிரித்தேன். இருப்பதைக்கொடு கொடுத்ததை சுவைக்க பழகி கொள்கிறேன் என்றேன். அவன் கிருஷ்ண பரமாத்மா போல் ஒரு சிரிப்பு சிரித்தான் அடடா அதில்தான் எத்தனை அழகு. குழிப்பனியாரத்தில் வெல்லபாகு ஊற்றியது போல.


Next Post Next Post Home
 
Back to Top