( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........!! click here )வரும் ஞாயிறு அன்று அமிர்த தாரா தீட்சை அளிக்கப்படுகிறது appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846 

Share !
This Post

உஜிலாதேவி பதிவுகளை
மின்னஞ்சலில் பெற

கலப்பு மணத்திற்கு சாஸ்திரம் தடையா?


   மீப நாட்களில் தமிழ்நாட்டில் ஒரு கூட்டத்தார் தோன்றி இருக்கிறார்கள். இந்த கூட்டம் பழையது என்றாலும், இதன் கோஷம் புதியது. அதாவது, ஜாதிவிட்டு ஜாதி திருமணம் செய்துகொள்ள கூடாது என்று இவர்கள் முழங்குகிறார்கள். அதோடு மட்டுமல்ல ஒரு குறிப்பிட்ட ஜாதியார் தங்கள் ஜாதி இளைஞர்களையும், இளம் பெண்களையும் வலியச்சென்று காதலித்து தங்களது இனத்திற்கு சாதகமாக மாற்றிக்கொள்கிறார்கள் என்றும் குற்றஞ் சாட்டுகிறார்கள்.

இதைவிட மிகவும் முக்கியமான வேறொரு குரலும் கேட்கிறது. ஒரு குறிப்பிட்ட மதத்தார், மற்ற மதத்தினரை தங்கள் மதத்திற்கு  மாறச்செய்வதற்காக காதலை பயன்படுத்துவதாகவும், மதம் மாறி மணம்முடிக்க விரும்புபவர்களை மிக கட்டாயமாக தங்களது சொந்த மதத்தில் இணைத்துக்கொள்ள மூளைச்சலவை செய்வதாகவும் அந்த எச்சரிக்கை குரல் அபாயமணி அடிக்கிறது.

இவைகளை எல்லாம் கேட்கும் சில மனிதாபிமானிகள், ஜாதியின் பெயராலும் மதத்தின் பெயராலும், சமூகத்தின் நல்லிணக்கம் குலைந்துவிடக்கூடாது மக்கள் மத்தியில் வன்முறைத்தீயானது பற்றி எரியக்கூடாது என்ற நல்லெண்ணத்தில் இந்துமதத்தின் மீது ஒரு பெரிய பழியை தூக்கிப் போடுகிறார்கள் இந்து மதம் தான் மனிதனை பிறப்பால் உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்று பேதம் கற்பிக்கிறது. பாவம் செய்தவன் கீழ்க்குலத்தான், புண்ணியம் செய்தவன் மேற்குலத்தான் என்று போதனை செய்கிறது இது மட்டுமல்ல தாழ்ந்த ஜாதியை சேர்ந்தவன், உயர்ந்த ஜாதியில் திருமணம் செய்யக்கூடாது என்று சாஸ்திரத்தின் பெயரால் சட்டமும் வகுத்திருக்கிறது என்கிறார்கள்.

இந்துமதத்தின் அரிச்சுவடியை அறியாத அப்பாவிகள் மனிதாபிமானிகளின் இந்த கூற்றுக்கு செவி கொடுப்பார்கள். உண்மையாகவே இந்து மதம் மனிதர்களை பேதப்படுத்துகிறது பிரித்து வைக்கிறது என்று நம்ப ஆரம்பிப்பார்கள். அப்படி நம்பினால் நம்பட்டும் என்று விட்டுவிடுவது அழகல்ல. இந்து மதத்தில் ஜாதிவிட்டு, ஜாதி திருமணம் செய்வது பற்றி உண்மையாகவே என்ன கூறி இருக்கிறது என்பதை உலகத்தாருக்கு எடுத்துக் காட்ட வேண்டியது நமது கடமையாக இருக்கிறது.

இந்துமதம் மற்ற மதங்களை போல சர்வாதிகாரம் நிறைந்ததல்ல. யாரையும் சுயசிந்தனை செய்யாதே என்று தடைபோடுவதும் இல்லை. எந்த மனிதனின் சொந்த சுதந்திரத்தில் தலையிடுவதும் அதன் வேலையில்லை. இந்த உலகில் எதையும் அனுமதிக்ககூடிய ஒரு மதம் இருக்கிறது என்றால் அது இந்துமதம் ஒன்றாகத்தான் இருக்க வேண்டும். மற்ற மதங்களுக்கு நீக்கு போக்கு இல்லாத கொள்கைகளும் கோட்பாடுகளும் உண்டு. அவற்றில் இருந்து தவறி நடப்பவர்களை அந்த மதங்கள் தங்களுக்குள் வைத்துக்கொள்வதும் இல்லை. தண்டனை கொடுக்காமல் விட்டுவிடுவதும் இல்லை.

இதை சரியான முறையில் விளக்கம் கொடுக்க வேண்டுமானால், மற்ற மதங்கள் பொதுவாக ஒரு சட்டையை தைத்து வைத்திருக்கிறது. அந்த சட்டையை தான் அனைவரும் அணியவேண்டும் என்றும் வற்புறுத்துகிறது. ஒல்லியாக இருப்பவனுக்கும் அந்த சட்டை தான். குண்டானவனுக்கும் அந்த சட்டை தான். நெட்டையாக இருந்தாலும், குட்டையாக இருந்தாலும், கூன்விழுந்து கிடந்தாலும் அந்த சட்டையைத்தான் போட்டுக்கொள்ள வேண்டும். சட்டையின் அளவை பொறுத்து போடுபவன் மாறிக்கொள்ள வேண்டுமே தவிர சட்டை மாறாது.

இந்து மதம் யாருக்கும் சட்டை தருவதில்லை. துணி தருகிறது. அவனவன் தனது அளவுக்கு ஏற்றவாறு, தனது விருப்பத்திற்கு ஏற்றவாறு சட்டையை வடிவமைத்துக்கொள்ளலாம். சட்டை என்பது போடுபவனின் சுகத்திற்கு தானே தவிர சுமையாக இருப்பதற்கு இல்லை என்ற ஞானம் இந்து மதத்திற்கு நிறையவே உண்டு. எனவே அப்படி சுதந்திரக்கொள்கையை தனக்குள் வைத்திருக்கின்ற மதமானது ஜாதிவிட்டு ஜாதி திருமணம் செய்யக்கூடாது என்ற சாஸ்திரத்தை வகுத்திருக்குமா? என்பதை யோசித்துப்பார்க்க வேண்டும்.

இந்து மதத்தின் ஆதார நூல் வேதங்கள் என்று நாம் சொல்வோம். வேதங்கள் அல்ல. மனுதர்ம சாஸ்திரமே ஹிந்து மதத்தின் ஆதாரச்சுவடி என்று மாற்று கருத்து உடையவர்கள் கூறுவார்கள். காரணம் மனுதர்ம சாஸ்திரத்தில் தான் தீண்டாமையை பற்றி கூறுகிறார்கள். ஜாதியைப்பற்றி பேசுகிறார்கள். எனவே அதுவே ஹிந்து மதத்தின் சட்ட நூல் என்று வாதிடுகிறார்கள். அது தவறு என்று நம்மால் கூற இயலும். நிரூபிக்க முடியும். ஆனால் இப்போது அதற்கு நேரமும் இல்லை, இந்த இடம் ஏற்றதும் இல்லை. எனவே அவர்கள் கூறுகிறபடி மனிததர்மத்தையே சட்ட நூலாக எடுத்து அதில் இந்த கலப்பு மணத்தை பற்றி என்ன கூறப்பட்டிருக்கிறது என்பதை பார்ப்போம்.


நல்ல குணமும், நல்ல பண்பும், நல்ல திறமையும் எங்கிருந்தாலும் அதை ஏற்றுக்கொள்ள வேண்டும். அதற்கு ஆக்கமும், ஊக்கமும் வழங்க வேண்டும். இது மனுதர்மத்தின் வார்த்தை. மனுதர்மம் இன்னும் சொல்கிறது ஞானியாக இருப்பவன், தாழ்ந்த குலத்தில் பிறந்திருந்தாலும் அவனை குருவாக ஏற்றுக்கொண்டு அவனிடமிருந்து கற்க வேண்டியதை கற்றுக்கொள். உனக்கு முக்தி கிடைக்க இறைவனின் பாதார விந்தங்கள் கிடைக்க, வழிகாட்ட கூடியவன் ஒரு சண்டாளனாக இருந்தாலும் கூட அவனுக்கு தொண்டு செய்து அவன் காட்டும் வழியில் செல் என்கிறது. இப்படிப்பட்ட மனுதர்மம் கலப்பு மணத்தை மறுத்து நிற்குமா?

கலப்பு மணம் பற்றி மனுதர்மம் கூறுவதை நேராகவே பார்ப்போம். ஒரு நல்ல பெண்மணி உன் மனதிற்கு பிடித்தவளாக இருந்தால் அவள் எந்த குலத்தில் பிறந்திருந்தாலும் அவளை பத்தினியாக ஏற்றுக்கொள் என்கிறது. உன் மனதிற்கு பிடித்த வீரமும், பண்பாடும் நிறைந்த ஆண்மகன் எவனாக இருந்தாலும் அவன் எந்த இனத்தை சேர்ந்தவனாக இருந்தாலும் அவனை வாழ்க்கை துணைவனாக ஆக்கிக்கொள் என்று மனுதர்மம் அனுமதி தருகிறது.

நமது பூர்வ குருமார்களும் சாஸ்திரமும் கூறுவது என்னவென்று தெரியாமலே சில புத்திசாலிகள் நமக்கு விளக்கம் கொடுக்கத்துவங்கி விடுகிறார்கள். அதன் விளைவுதான் இந்து மதம் கலப்புமனத்திற்கு விரோதமானது என்ற விபரீதமான விளம்பரம். ஜாதிவிட்டு ஜாதி திருமணம் செய்வதும், செய்யாமல் இருப்பதும் அவரவர் சொந்த விஷயம். அதில் இந்து மதம் தலையிடுவது இல்லை. அதை போல் நமது மதம் இந்து மதத்திற்கு மாறினால் தான் திருமணம் நடக்கும் என்று மத மாற்ற வேலையும் செய்வது இல்லை. இதை நினைவில் வைத்துக்கொண்டாலே இந்து மதத்தின் பெருமைகள் தெரியும்.


+ comments + 2 comments

ஆனால் உண்மையில் யாரோ முதலில் ஆரம்பித்த ஜாதி பிரிவுகள் இன்று ஆலமரமாய் விரிந்து நிற்கிறது. இன்று மற்ற எல்லோரும் ஜாதி பார்க்க ஆரம்பித்து விட்டனர். அன்றும் மனு தர்மத்தை பற்றி பேசினார்கள் இன்றும் பேசுகிறார்கள். அனால் ஜாதி பிரிவினை இன்றும் ஒழிந்த பாடு இல்லை. அதனால் கலப்பு திருமண எதிர்ப்பு என்பதும் அதிகமாகி விட்டது என்பது தான் நிதர்சன உண்மை.

இதில் வேடிக்கை என்னவென்றால் அமேரிக்கா சென்ற ஒரு கூட்டத்தினர் அங்கும் மேல் ஜாதி கீழ் ஜாதி கொள்கைகளை பரப்ப ஆரம்பித்து விட்டனர். இது எங்கு பொய் முடியுமோ தெரியவில்லை.

இப்போது தனி மனித விருப்பு வெறுப்புகளுக்கு மதிப்பில்லை. சாஸ்திரங்களை அவரவர்களுக்கு சாதகமாக மாற்றிகொள்வது எப்படி என்பதை தெரிந்து வைத்திருக்கிறார்கள். அது தான் இன்றைய நிலைமை.

ஸ்ரீராம்
06:19

குருஜியின் கருத்துக்கள் அருமை! உயர் சாதி தாழ்ந்த சாதி என்பது இந்து மத்ததில் இல்லை என்பதே உண்மை!

மகாபாரதத்தில் பலராமர் போரில் ஈடுபடாது எங்கே சென்றார் என்னும் நிகழ்வில் இதுகுறித்த மாபெரும் உண்மை வெளிப்படும்!

அந்தணர் அல்லாதோர் பிற சாதியினரைத் திருமணம் செய்வது என்பது எப்போதோ இருந்திருக்கிறது. அப்படித் திருமணம் செய்தவரின் சந்ததியினர் இரண்டு குலங்களில் ஏதோ ஒன்றைத் தேர்ந்தெடுக்கும் உரிமையும் அக்குழந்தைகளுக்கே இருந்தது!

அனுலோமா அல்லது பிரதிலோமா எனப்பட்டது அதுவே!!

இந்து மதத்தின் உண்மை தெரியாதவர்கள் பிதற்றல் வெறும் சாதி அரசியல் நடத்தவே அன்றி உண்மையில் சமுதாய நன்மைக்கு அல்ல!

இவர்களை விட ஈவேரா எவ்வளவோ மேல்!

அன்புடன்
ஸ்ரீராம்


Next Post Next Post Home
 
Back to Top